ஈ.வே.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்...: 33

அறிக்கை விடுவதற்கு ஒப்புக் கொண்ட அண்ணா அறிக்கையை எழுதினார்: ""வெறுப்புணர்ச்சி தலை தூக்குவதும் பலாத்காரச் சூழ்நிலையை மூட்டிவிடுவதும், திட்டமிடுவதும், வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும். பொதுக்குழு கூடும்
ஈ.வே.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்...: 33

அறிக்கை விடுவதற்கு ஒப்புக் கொண்ட அண்ணா அறிக்கையை எழுதினார்:

""வெறுப்புணர்ச்சி தலை தூக்குவதும் பலாத்காரச் சூழ்நிலையை மூட்டிவிடுவதும், திட்டமிடுவதும், வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும். பொதுக்குழு கூடும் முன்பே பலர் வன்முறையில் பேசியும், செயல்பட்டும், திட்டமிட்டும், நடந்து கொண்டதாகக் கேள்விப்பட்டு மெத்த வேதனைப்படுகிறேன்.

அத்தகைய தீய சக்திகளைக் கண்டிப்பது என் கடமை. தோன்றாமல் இருக்கச் செய்வதும் அழித்தொழிப்பதும் கழகத் தோழர்களின் கடமை. தோழர் சம்பத், தனக்கெதிராக இத்தகைய வன்முறை திரட்டப்பட்டதாக கூறியது கேட்டு நான் வேதனைப்படுவதுடன், எவர் இத்தகு தீய செயலில் ஈடுபட்டிருப்பினும் வன்மையாகக் கண்டிக்கிறேன். நம்முடைய நடவடிக்கைகள் எதிலும் இனி இத்தகைய முறை தலைதூக்க இடமளிக்கக் கூடாது என்று கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்வதுடன் உறுதியான நடவடிக்கைகள் மூலம் இத்தகைய நிலைமை ஏற்படாதபடி தடுக்க உறுதி கொண்டுள்ளேன் என்பதையும் அறிவித்துக் கொள்கிறேன்''

அண்ணாவின் நல்லிணக்க அறிக்கையைத் தொடர்ந்து சம்பத் தனது நல்லுணர்வுகளை வெளிப்படுத்தி ஓர் அறிக்கையினை வெளியிட்டார். அது வருமாறு:

"வேலூர் பொதுக்குழு செயற்குழுக் கூட்ட நடவடிக்கைகளுக்குப் பின் கழகத் தோழர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பமான நிலை, கழகத்தில் உள்ள பொறுப்பான அனைவருக்குமே பெருத்த வேதனையை அளித்து வருகிறது.

கழகக் கட்டுக் கோப்பு கலையும் நிலை ஏற்பட்டு, நம்மை எல்லாம் துயரத்தில் ஆழ்த்திய நிலை மாறி மீண்டும் புது ஆர்வத்தோடு அனைவரும் ஒன்று சேர்ந்து கழக லட்சியங்களுக்காகப் பாடுபடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

வேதனையான நிலைக்கு கழகத்தை ஆட்படுத்தியதில் எனக்கும் ஒரு பங்கு ஏற்பட்டுவிட்டதை  எண்ணி வருந்துகிறேன். நாமனைவரும் பெரிதும் போற்றியும் மதித்தும், நமது தலைவராகக் கொண்டுள்ள அண்ணாவின் தலைமையிலும் நமது கழகம்  புதிய வலுவினைப் பெற்றுத் திகழும். கழகத்தில் அரசியல் எதிரிகள் ஏமாற்றம் அடையத் தக்க வகையில், நமது ஒற்றுமை பலமான அடிப்படையில் கட்டப்படுகிறது. அண்ணா அவர்களது சீரிய தலைமையில் நாமனைவரும் ஒன்றுபட்டு, கழகத்தின் வெற்றிக்கும் பெருமைக்கும் தோழமை உணர்வோடு பாடுபடுவோமாக'.

அண்ணா சென்னை வந்ததுமே, நடிகர்கள் படையெடுத்தனர். ""எங்களை வன்முறையாளர்களும் திரைத்துறையில் தொடர்பு கொண்டவர்களும் என்று அறிக்கை விடுத்ததற்கு நீங்கள் வருத்தம் தெரிவித்து அறிக்கை விடவேண்டும். இல்லையேல் நாங்கள் கட்சியை விட்டே விலகிக் கொள்கிறோம்'' என்று அவர்கள் மிரட்டினர்.

இத்தகைய போக்கால், கழக மேடைகளில் வெளிப்படையான தாக்குதல்கள் ஆரம்பமாயின. போட்டிக் கூட்டங்கள் போடும் அளவுக்கு பிளவு நாடறியத் தெரியலாயிற்று.

கல்யாண வீடு வெற்றிலை பாக்கு  

பம்மல் தி.மு.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சம்பத் பேசுகையில், ""கல்யாண வீட்டிற்கு வெற்றிலை பாக்கு போல் அரசியல் கட்சியில் கருத்து வேறுபாடு முக்கியமே'' என்று கூறினார். பொதுக்கூட்டம் நாகல்கேணியில் எலன்மேரி அம்மையார் தலைமையில் நடைபெற்றது. அப்போது சம்பத் பேசியதாவது:

""இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளைக் கண்டு அச்சமேற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வேலூரில் ஏற்பட்டதெல்லாம் கழகம் எப்படி முற்போக்குடன் செல்வது என்பது மட்டுமல்ல,  அதனை எப்படி விரைவாக்குவது என்பதுதான். இந்தக் கருத்து வேறுபாடுகளை மாற்றார் சொல்வதைவிட, நாம்தான் அதிக குழப்பம் அடைகின்றோம். நம் குழப்பம் தீர யாராவது தெளிவேற்படுத்துவார்களா? என ஏங்குகிறோம். நமக்கு நல்ல தெளிவும் நல்ல லட்சியப் பிடிப்பும், இருக்குமானால் மாற்றார் நம்மைக் கண்டு அஞ்சுவார்கள்.

சம்பத் கோபித்துக் கொண்டு காசிக்கா போய் விடப் போகிறான்? போகாதே என்பதற்கு... சில சமயம் நான் நினைப்பதுண்டு. ஒருகால் நான் வெளியில் போகத்தான் வேண்டுமென இவர்கள் உள்ளுர எண்ணிக் கொண்டுதான் போகாதே போகாதே என்கிறார்களோவென்று. அதைத்தான் நான் பல கூட்டங்களிலும் கூறியிருக்கிறேன். சம்பத் வெளியில் போய்விடுவான் என்று யாரேனும் கருதினால் அவர்கள் பரிதாபத்திற்குரியவர்களாவார்கள்'' என்று குறிப்பிட்டார்.

 திருச்சிக் கூட்டத்தில் வன்முறை 1961 பிப்ரவரி 25 அன்று சம்பத்துக்கு திருச்சி மாவட்டத்தில் பல இடங்களில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு டவுன் ஹால் திடலுக்கு வந்தார்கள். அங்கே மக்கள் வெள்ளம் திரண்டிருந்தது. தலைமை தாங்கியவர் பேசி முடிந்ததும் கண்ணதாசன் பேச எழுந்தார். உடனே கீழே இருந்து ஒருவர் மாலை போடுகிற பாவனையில் மேடை மேல் ஏறினார்.

அவர் கையில் ஜரிகை மாலை இருந்தது. உடனே மடியிலிருந்து ஒரு செருப்பை எடுத்தார். கண்ணதாசனின் சட்டையைப் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டபடி செருப்பை ஓங்கியதும் கண்ணதாசன் காலால் அவரை எட்டி உதைத்தார். அந்த வெறியர் கூட்டத்திற்குள் போய் விழுந்தார். உடனே பொதுமக்கள் அவரைப் பிடித்து நன்றாக உதைத்து, அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். அங்கேயும் காவல்துறையினர் அவரை அடித்து உதைத்து உள்ளே தள்ளினர்.

இப்படிப்பட்ட வன்முறைப் போக்குகளைக் கண்டித்து மறுநாள் முதல் தாம் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சம்பத் கூறினார். ஒரு சிலரைத் தவிர அனைவரும் அதனை ஆதரித்தனர். பத்திரிகைகளுக்குச் செய்தி தரப்பட்டது.

பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுக்குமுன்பே சம்பத், காஞ்சிபுரத்திலிருந்த அண்ணாவோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அண்ணாவோ திடுக்கிட்டார். எவ்வளவோ தடுத்துப்பார்த்தார். உண்ணாவிரதம் இருக்கவில்லை என்றால் பல இடங்களில் தமது தோழர்களுக்கு உயிர்ப் பாதுகாப்பு இருக்காது என்று சம்பத் கருதினார்.

உண்ணாநோன்பு ஏன்?

உண்ணாவிரதம் தொடங்கிய சம்பத் தான் வெளியிட்ட நீண்ட அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளதாவது:

""வேலூரில் தென்பட்டது என்ன? நடைபெற்றது என்ன? என இனி யாரும் விளக்கம் கேட்க வேண்டிய அவசியமின்றி திருச்சிச் சம்பவம் விளக்கமளித்துவிட்டது. 20.2.61 அன்று திருச்சி பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற சம்பவம் கழகத்தைப் பீடித்துள்ள நோய் எத்தகையது என்பதை வெளிப்படுத்தும் ஒன்றாகும்.

உண்ணாவிரதத்தை தடுக்க அண்ணா நடவடிக்கை:

கழகத்தில் நல்ல நிலை ஏற்படுவதாகவும், கழகம் காலிகள் வசமாகாமலும் இருக்க சம்பத் உண்ணாநோன்பு தொடங்கினார். சம்பத் தம்மைத்தாமே வருத்திக்கொண்டு உண்ணாநோன்பு மேற்கொண்டார்.

காஞ்சியிலிருந்து அண்ணா விரைந்து வந்தார். உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வற்புறுத்தினார். திருச்சி நிகழ்ச்சிக்குக் காரணமானவர்களைக் கண்டித்துக் கட்சியை விட்டு விலக்கவேண்டும் என்ற சம்பத்தின் கோரிக்கையைத் தமது சகாக்களுடன் கலந்து பேசுவதாகச் சொல்லி அன்று ஒரு முடிவும் சொல்லாமல் போனார்.

அடுத்த நாளும் அண்ணா வந்து சம்பத்தைப் பார்த்தார்.

உண்ணாவிரதம் 3ஆம் நாளும் தொடர்ந்தது.

அன்று மாலை 6 மணிக்கெல்லாம், ""சிறுநீரும் கெட்டு உயிர்க்கே ஆபத்தான நிலைமை ஏற்பட்டுவிட்டதாகவும், உடனே உண்ணாநோன்பை நிறுத்தாவிடில் பேராபத்து நிச்சயம்'' என்றும் சம்பத்தைப் பரிசோதித்த டாக்டர் கிருஷ்ணன் கூறினார்.எல்லோரும் கண் கலங்கினர்.

தேவராஜ் முதலியார் இல்லத்தில் அண்ணா மிகுந்த களைப்போடு அப்போதுதான் கண்ணயர்ந்தார். செய்தியைச் சொன்னதும் அண்ணா பதற்றத்தோடு எழுந்தார்.

""வன்முறைப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். திருச்சி நிகழ்ச்சிக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து அவர்களைக்  கட்சியைவிட்டு விலக்குகிறேன்'' என்று அண்ணா உறுதி சொன்னார்.

உண்ணாநோன்பை நிறுத்த சம்பத் சம்மதித்தார். கண்ணீரைத் துடைத்தவாறு அண்ணா சம்பத்தைத் தூக்கி நிறுத்தி, தம் கையாலேயே பழரசத்தை ஊட்டிவிட்டு நெற்றியில் முத்தமிட்டு இதில் வெற்றி பெற்றது ""சம்பத்துதான்'' என்று கூடியிருந்த கூட்டத்தினர்க்குச் சொன்னார்.

நடக்காத கூட்டங்கள்

 தலைமைக் கழக அறிக்கை தவிர, கழகத்தின் ஒற்றுமை முயற்சியில் வேறு எந்த முன்னேற்றமும் இல்லாது இருந்தது. இது குறித்து சம்பத் கவலை தெரிவித்தார். அண்ணா ஒரு யோசனை கூறினார். அண்ணா, சம்பத், கருணாநிதி, கண்ணதாசன் ஆகிய நால்வருமே எல்லா மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் செய்வது என்றும், இந்த ஒற்றுமையை கீழ்மட்டத் தொண்டர்கள் வரை நிலைநாட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதில் அண்ணா தெளிவாக இருந்தார். அண்ணாவின் திட்டம் சம்பத்திற்கும் ஏற்புடையதாக இருந்தது. விரிவான சுற்றுப் பயணத்திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஒரே ஒரு கூட்டம் மாயவரத்தில் நடைபெற்றது. சிலர் ஒப்புக்கொண்டு கூட்டத்துக்குப் போகவில்லை.

இதனிடையே ஒற்றுமைக்காக நடத்தவிருந்த அனைத்துக் கூட்டங்களையும் ஒத்திவைப்பதாகவும், ஏப்ரல் 9ஆம் தேதி சென்னைக் கூட்டம் மட்டும் நடைபெறும் என்றும் அண்ணாவின் பேரில் அறிவிப்பு வந்தது. இதனால் சம்பத் மிகவும் வேதனையுற்றார். அவரது ஆதரவாளர்கள், அண்ணாவை நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தனர். "இதுவும் ஒரு அரசியலா? இவரும் ஒரு தலைவரா?' என்று அண்ணா மீதான அவநம்பிக்கையை கண்ணதாசன் வெளிப்படுத்தினார். மிச்ச சொச்சமென்று அண்ணாவிடம் வைத்திருந்த கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தி.மு.க. வரலாறு வெளியீட்டு விழா

பல்வேறு குழப்பங்களுக்கிடையே டி.எம். பார்த்தசாரதி எழுதிய "தி.மு.க. வரலாறு' நூல் வெளியீட்டு விழா சென்னை நேப்பியர் பூங்காவில் 1961 ஏப்ரல் 7-இல் நடைபெற்றது. இவ்விழாவிற்கு அண்ணா வரவில்லை. சம்பத் கலந்து கொண்டு நூலை வெளியிட்டுப் பேசினார்.

""இதுகாறும் நிகழ்ந்துள்ள வரலாறு மட்டுமல்ல, இனி எதிர்காலத்தில் இந்த இயக்கம் ஆற்ற வேண்டிய பெரும் பணிகள், அதற்கு மிக மிடுக்கான தோற்றத்தை அளிக்கும் என்று நம்புகிறேன். நிகழ்ந்த வரலாற்றை நூலாகப் படைத்திருக்கிறார் டி.எம். பார்த்தசாரதி.   நாளைய தினம் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுமானால்  வரலாற்றில் எழுதி இருப்பது உண்மை என்று கூறுகின்ற துணிவு பெற்றவராக இந்நூலாசிரியர் இருத்தல் அவசியம். தி.மு.க. வரலாறு இனி திருத்தப்படாததாக இருக்க வேண்டும். அரசியல் கட்சியின் வரலாறுகளுக்கு ஆபத்து வருவதுண்டு. நாட்டின் வரலாறுகளுக்கே இந்த ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது. அத்தகைய நிலை இதில் ஏற்படாது என்று நம்புகிறேன்...''

 இவ்வாறு சம்பத் உரையாற்றினார்.



 சம்பத் விலகல்

1961 ஏப்ரல் 9 - இல் சம்பத் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். அனைத்து மாவட்டங்களிலிருந்தும் முக்கிய பிரமுகர்கள் வந்து குழுமியிருந்தனர். நீண்ட நேரம் விவாதித்தனர். கண்ணதாசன் போன்றவர்கள், ""விவாதமே தேவையற்றது  விலகிவிடுவதே சாலச் சிறந்தது'' என்று கையில் பதவி விலகல் கடிதங்களுடன் வந்திருந்தார். அனைத்துத் தோழர்களோடும் சம்பத் விவாதித்தார். அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்தனர். அனேகமாக எல்லாத் தோழர்களுமே விலகிவிடுவதுதான் சிறந்தது என்று கருத்துக் கூறினர்.

ஆவேசப்பட்ட தோழர்கள் மத்தியில் சற்றும் சலனம் இன்றி சம்பத் நிதானமாகத் தமது கருத்துகளை எடுத்துவைத்தார். மேலும் சற்றுப் பொறுமை காட்டலாம் என்பது அவர் கருத்தாயினும், இதற்கு மேலும் எதுவும் நடக்கப் போவதில்லை  சமாதானத்துக்கான கதவு சாத்தப்பட்டுவிட்டது என்றே கருதினார். இறுதியாக அக்கூட்டத்தில் சம்பத் தமது விலகலை அறிவித்தார். பலத்த கரவொலி எழுப்பித் தோழர்கள் வரவேற்றனர். அனைவரும் கட்சியை விட்டு விலகினர்.

எந்த மதியழகனைப் பொதுச் செயலாளர் ஆக்குவதற்காக இவ்வளவு பிரச்னைகள் எழுந்ததோ,  அந்த மதியழகன் தேர்தல் அருகில் வரும் நேரத்தில் ராஜினாமா செய்தால் வரவேண்டிய பதவி போய்விடுமே என்று கலங்கினார். அரை மனதாக ராஜினாமாவிற்கு ஒப்புக் கொண்டார். ஆனால் அங்கிருந்த தோழர்கள் அனைவரும் பட்டம் பதவிகளைவிட லட்சியமே பெரிது என்று உறுதி காட்டினர்.

அன்று மாலைப் பத்திரிகைகள் அனைத்திலும் "சம்பத் விலகல்' தலைப்புச் செய்தியாக வந்தது. ராஜினாமா செய்த எண்ணற்ற தோழர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. அவை வருமாறு:

கண்ணதாசன், கே.ஏ. மதியழகன், மேயர் முனுசாமி, க. ராசாராம், எம்.பி. சுப்பிரமணியம், நடராசன், டி. இருசப்பன், களம்பூர் அண்ணாமலை, கே. செல்வராஜ், என்.எஸ். இளங்கோ, திருச்சி சாம்பு, கோவை செழியன், எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், செல்லப்பா, பழ. நெடுமாறன், முனுஆதி, சென்னை மாவட்டச் செயலாளர் தி. மணிவண்ணன், சேலம் மாவட்டச் செயலாளர் பி.எம். குப்புசாமி, வாழப்பாடி ராமமூர்த்தி, கோவை மாவட்டச் செயலாளர் உடுமலை நாராயணன், சிற்றுளி சுப்பிரமணியம், குள்ளம்பட்டி ராமலிங்கம், ஆர்.எஸ். பாண்டியன், பொறையார் ஜம்பு, கரு. தமிழழகன், கரூர் சோமு, ராஜமாணிக்கம், டாக்டர் லோகாம்பாள், தேசியமணிகண்ணன், கரிகாலன், கண்ணப்பா வள்ளியப்பன், கண்ணப்பா, என். விவேகானந்தன், மதுரை திருமாறன், தென்றல் தியாகன், ம.ரா. தேவராசன், விருதை ராமசாமி, மதுரை இளங்குமரன், பெரியவர்கள் கே. கோவிந்தசாமி, வ. சங்கரநாராயணன், சென்னை மாநகராட்சி துணை மேயர் என்.எஸ். தேவராசன், கவுன்சிலர்கள் இரா. சம்பந்தம், முருகேசன், சீனிவாசப்பா, சாமுண்டீஸ்வரன், கோ.சி. மணி மற்றும் டி.கே. பொன்னுவேலு, பெ. குமாரசாமி, பி.ஈ. நடராஜன், சி.கே. நாராயணன், அரு. சங்கர், என்.பி.டி. திராவிடமணி, ஏ.கே. வில்வம், அருண்மொழி, உ. பில்லப்பன், மதுரை வே. செüந்தரராசன், அ. ரத்தினம், திண்டுக்கல் சமதர்மம் அழகிரிசாமி, செல்வராஜன், இ.பி.சி. யாகூப், பழக்கடை பாண்டி, வேலூர் கற்பகவியல், கருத்தோவியன், தெள்ளூர் தர்மராஜன், டி.எம். பார்த்தசாரதி, அ.ச. நடராசன், சென்னை இராவணன், பி.சி. கணேசன், திருவாரூர் விஸ்வநாதன், டி. வெங்கடாசலம், இரா. தியாகராஜன் (சின்னகுத்தூசி), கோவிந்தராஜன், சி.சே. சவியே, டி.கே.

கோபாலகிருஷ்ணன், ஆர். சந்தானம், மு. யூசுப் ரகமதுல்லா, சீர்காழி சோமு, தஞ்சை பெரியசாமி, மாயவரம் டி.பி. ஆறுமுகம், பூவை ராமனுஜம், நெல்லை புகாரி, கேப்டன் நடராஜன், நாகர்கோயில் அர்ஜுனன், அருப்புக்கோட்டை எம்.எஸ். ராமசாமி, திண்டிவனம் தங்கமணி, வடவோடை சந்தானம், செங்கல்பட்டு வகாப், வேதகிரி, மதுராந்தகம் மனோ பாலு, செங்குன்றம் தேவராஜன், குரோம்பேட்டை கார்மேகம், எஸ்.எம்.  காதர், திருப்பத்தூர் சோ. பரமசிவம், கோவை செல்லப்பா, ஆனைமலை வேங்கடகிருஷ்ணன், பூந்தமல்லி பி. பாலசுப்பிரமணியம், திருக்கோவிலூர் ரங்கநாதன், சிதம்பரம் சி.பி. கனகசபை, பகவதி பாண்டியன், கலந்தை பாண்டியன், என்.எஸ். பெருமாள், ஏ.டி. அரசு, திருச்சி மு.பெ. முத்துக்கருப்பன், எஸ். நடராஜன், காரைக்குடி கே.ஆர். சுப்பையன், தங்கவேலன், பெரி சிவனடியான், வழக்கறிஞர்கள் நடனசபாபதி, கோ. முத்துகிருஷ்ணன், பெரியகுளம் அனீபா, நாமக்கல் குப்புசாமி, அழகப்பா கல்லூரி மாணவர் மு.ப. சுவாமிநாதன், அண்ணாமலை மாணவர் ம. ராமநாதன், சட்டக்கல்லூரி மாணவர் சு. சோமசுந்தரம், கணியூர் சபியுல்லா, வழக்கறிஞர் கு.வெ. கிருஷ்ணசாமி, தவுட்டுப்பாளையம் வேல்சாமி, விருதுநகர் உத்தண்டன், சேலம் வி. சிவப்பிரகாசம், குலதெய்வம் ராஜகோபால், சேலம் எஸ்.ஆர்.

மீனாக்குமாரி, நாகை நகரசபைத் தலைவர் மரக்காயர், மதிமாறன், சித்தலவாய் சுந்தரராஜு, சென்னிமலை நாச்சிமுத்து, உதகை பொன்னழகன், வடுகபட்டி சண்முகம், நெய்வேலி சீத்தாராமன், இரா. நாராயணசாமி, அ. ஆடலரசு, எஸ்.என். கலியப்பெருமாள், திருப்பூர் எம்.பி. கோவிந்தசாமி, பம்பாய் தாராவி தோழர்கள் ஆனந்தராவ், க.கோ. தாசன், எஸ்.எஸ். அன்பழகன், மாதுங்கா திலகன், பிச்சையன், அசோகன், சுப்பையா, சென்னை பி.எ. கங்காதரன், திருச்சி டி.எச். கலீல், ப. மணியழகன், விருகம்பாக்கம் இரா. வாசன், குடந்தை ம.

வெங்கடாசலம், முகவை ம. கேசவன், பரமக்குடி சீனிவாசன், முத்துச்சாமி, மலையமான், பரிதிமோகன், தர்மபுரி டி.சி. பொன்னுரங்கம், கிருஷ்ணகிரி என்.ஏ. சாமி, அரூர் கிட்டியப்பன், அறந்தாங்கி துளசிராமன், பேராவூரணி கலாநேசன், பல்லடம் சுவாமிநாதன், இராமநாதபுரம் கேசவன், சிவகாசி செந்தமிழ்ச்செல்வன், நிறைமதி, புலவர் கோவைவாணன், திருக்கழுக்குன்றம் எம்.எஸ். அமீது, காஞ்சிபுரம் திருவேங்கடம், விசயன் அரங்கநாதன், சென்னை கன்னியப்பன், சாமி, பாண்டியன், மணியரசு, மு. நீலகண்டன், ராயபுரம் வேணுகோபால் என்ற மாறன், வையம்பட்டி டி.கே.வி.கே. சாமி, நெல்லை கிருஷ்ணன், லால்குடி அருணகிரிநாதன், முசிறி சுப்பிரமணியன், ஆவடி ஸ்ரீராமுலு, திருவண்ணாமலை முனிராஜ், அண்ணாமலை மற்றும் எண்ணற்றோர் தி.மு. கழகத்திலிருந்து விலகி சம்பத் அவர்களைப் பின்தொடர்ந்தனர். விலகியோர் பட்டியல் ஒவ்வொரு நாளும் நாளும் நீண்டது.

சம்பத் இதுகுறித்து விளக்குகையில், ""அண்மையில் வேலூர் பொதுக்குழுவுக்குப்பிறகு, கட்சியில் உள்ள கலைத்துறையைச் சார்ந்தவர்கள் கட்சியின் மீது தங்களுக்குள்ள முழு ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தி கட்சியின் தன்மை இன்னும் வெகுகாலத்திற்கு இப்படித்தான் இருக்கும் என்பதைக் காட்டிவிட்டனர்.

இன்று கட்சியின் அமைப்பு அவர்கள் கரத்தில் முழுவதும் சிக்கிவிட்டது. கழகத்திற்கும் கலைத்துறைக்கும் உள்ள உறவுபற்றி ஒருவர் பேசுகிற பேச்சை வைத்தே, அவரது கட்சிப்பற்றும், தூய்மையும் கணக்கிடப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.



பதவி விலகியது ஏன்?

""அண்ணாதுரை அளித்த எல்லா உறுதி மொழிகளும், என்னுடைய உண்ணாநோன்பினை கைவிடச் செய்வதற்கானதொரு முயற்சியே என்றும் வேறு உருப்படியான காரியம் எதற்குமல்ல என்றும் பின்பு நான் கண்டபோது வேதனை அடைந்தேன்.

திட்டமிட்டு எனது சகாக்கள் பழிவாங்கப்படுவதைப் புதுடில்லியிலிருந்து திரும்பியதும் நான் கண்டேன்.

எங்களைப் பிரித்து வைத்து நடத்தும் முறையில் அவர்களின் ஒவ்வொரு போக்கும் அமைந்துள்ளது.  அதாவது, என்னுடைய சகாக்களுக்கு எதிராக இன ஒதுக்கல் கொள்கை அனுசரிக்கப்படுகிறது.

ஆகவே, இந்தச் சூழ்நிலையில் கழகத்தில் நீடிக்க விரும்பாமல் எங்கள் உறுப்பினர் பதவியுட்பட கழகத்தில் தாங்கும் எல்லா பொறுப்புகளையும் துறக்கிறோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.

சம்பத் விலகல் பற்றி அண்ணா ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது சம்பத் விலகல் குறித்து அண்ணா குறிப்பிட்டார்: ""சம்பத், கழகத்தில் என்ன புண் இருக்கிறது என்று கருதினாலும் அவை விரைவில் நீக்கப்படும் என்பதை சம்பத்துக்கும் நாட்டு மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். புண் ஆறியதும் சம்பத் சேருவார் என்று நம்புகிறேன்''

 ஆனால் அப்படியொரு நிகழ்ச்சி நடைபெறவேயில்லை.

(முற்றும்)

பி.கு. : ;மிகப் பெரிய நூலில் சில பகுதிகள் மட்டும் இதுவரை வெளியிடப்பட்டன. விரிவை நூலில் காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com