Enable Javscript for better performance
நாகிரெட்டி நினைவுகள்: எம்.ஜி.ஆரின் முதலாளி- Dinamani

சுடச்சுட

  
  11kd10

  கே.வி.ரெட்டியும் சக்கரபாணியாரும் வழக்கமான வெற்றிப்பாதையில் பயணித்து வெற்றிப்படியை நிர்மாணித்தனர். சக்கரபாணியார் யூனிட் தயாரித்த படம் மிஸ்ஸியம்மா. கே.வி. ரெட்டி இயக்கிய படம் மாயாபஜார். இந்த இரு படங்களும் விஜயாவின் கொடியை வெற்றிச் சிகரத்தில் பறக்கவிட்டன...

  மிஸ்ஸியம்மா, மாயாபஜார் படங்களைப் பற்றி என் தந்தையார் சொல்லக் கேட்போம்...

   

  மிஸ்ஸியம்மா

  பாடல்கள், இசை, தீவிரமான கருத்து (அது இல்லாவிட்டால்) மனதை வருடும் நிகழ்வுகள் போன்ற அனைத்தையும் ஒருமுகப்படுத்தி தென்னிந்திய ரசிகர்களுக்கு "மிஸ்ஸியம்மா' கொடுத்த விருந்து வேறு எந்த நிறுவனமும் அதுவரை கொடுக்காத ஒரு படைப்பு. இப்படம், சந்தையில் காணாமல் போகும் ஒரு பெண்ணின் கதையுடன் துவங்குகிறது. அதேசமயம், கிராமத்தில் ஜமீன்தார் பெயரில் பள்ளி விளம்பரம் வெளியிடப்படுகிறது. இந்த விளம்பரத்தை ஒரு வேலையில்லாத பட்டதாரி பார்த்துவிடுகிறான். அதேசமயம் டேவிட் என்பவரிடம் கடன்பெற்ற மேரி என்ற கிறிஸ்துவ பெண்ணிடம், அந்த பட்டதாரி நாம் இருவரும் கணவன் மனைவியாக நடித்து விளம்பரம் செய்யப்பட்ட பள்ளியில் பணிக்கு அமரலாம் என்று கூறுகிறான். அந்த பெண் தயங்குகிறாள், ஆனால் டேவிட் அவளைத் தொடர்ந்து வற்புறுத்துவதால் அவள் அந்த ஆலோசனையை ஏற்கிறாள்.

  அவர்கள் இருவரும் பள்ளியில் தம்பதியாகப் பணிக்குச் சேர்ந்தபின் நடைபெறும் காட்சிகள் என்றும் மறக்க இயலாதவை.

   

  விஜயாவின் மிஸ்ஸியம்மா தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாரிக்கப்பட்ட முதல் பொழுதுபோக்குச் சித்திரம். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியுமே நகைச்சுவை அம்சத்தையே பிரதிபலிக்கின்றது. ஓர் இந்து ஜமீன்தாரின் மகள் காணாமல் போய்விடுவாள். பின் இவள் ஒரு கிறிஸ்துவ பெற்றோர்களால் மேரி என்ற பெயரில் வளர்க்கப்படுகிறாள். மேரிக்கு இந்து பெயரே பிடிக்காது. ஆனால் சூழ்நிலை அவளை ஓர் இந்து பள்ளியில் பணியமர வைக்கிறது. அவள் அந்த வேலையிலிருந்து வெளியேறத் துடிப்பாள்.

  எந்த விதத்திலும் ஒத்துப்போகாத அவர்கள் கணவன் மனைவியாக நடிப்பார்கள். இப்பள்ளியின் ஆசிரியர்கள், ஜமீன்தாரால் உறவினர்போல நடத்தப்படுவர். இதுதான் மிஸ்ஸியம்மாவின் தலைகீழ் உலகம்.

  இதுபோன்ற காட்சிகளை வடிவமைக்கும்போதும், பாத்திரங்களைப் படைக்கும்போதும் கதை சொல்லும் போக்கில் வசனங்கள் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. ஒவ்வொரு உரையாடலிலும் கிண்டல் எதிரொலித்தது.

  சக்கரபாணியின் கதையும் எல்.வி. பிரசாத்தின் இயக்கமும் இணைந்து செயலாற்றிய இப்படம் ஓர் இனிய அனுபவத்தை அளித்தது. சதுரமான துவாரத்தில் வட்டமான ஆப்பிளை செருகுவது போன்றது இப்படம். விளைவு படம் முழுவதும் சிரிப்பலைகளை உணர முடிந்தது.

  சென்னை ராக்ஸி தியேட்டரில் மிஸ்ஸியம்மா படத்தைக் காணவந்த கர்ப்பிணிப் பெண் படத்தைப் பார்த்து, சிரித்து சிரித்து மகிழும்போது அங்கேயே பெண் குழந்தையைப் பிரசவித்தார். அந்தக் குழந்தைக்கு பெயர் "மிஸ்ஸியம்மா' என்றே சூட்டி மகிழ்ந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

  சக்கரபாணி எழுதிய இந்தக் கதை உண்மையில் ஒரு வினோதமானது. இந்த கதையில் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் காசுக்காக தம்பதியாக ஒரு குடும்பத்திற்கு வந்து சேருகிறார்கள்.

  சக்கரபாணி பாணியிலான பொழுதுபோக்கு கலப்படமின்றி மனதை திறந்து சிரிக்கும்படி அமைந்திருக்கும். அவர் பிரசுரித்த கதைகள் சந்தமாமா குழந்தைகளுக்கு கனவுகள் போன்று கல்மிஷமின்றி, சோகமின்றி, சிக்கலின்றி வாழ்க்கை வாழ்வதற்குத்தான் என்ற இலக்கைக் கொண்டிருக்கும்.

  "மிஸ்ஸியம்மா'வின் கலப்படமற்ற நகைச்சுவைக் காட்சிகள் திரையில் வினோத நடவடிக்கைகளில் மட்டுமின்றி மனங்கவர்ந்த இசையுடனும் இருந்தது.

  சக்கரபாணி, தொழில் என்று வரும்போது மிகவும் கண்டிப்பானவர். உதாரணத்திற்கு "மிஸ்ஸியம்மா' படத்தில் பானுமதி நடிக்க, இரண்டாவது ஷெட்யூல் ஷுட்டிங் நடைபெறும் நிலையில்...

  கதைப்படி பானுமதி கிறிஸ்தவப் பெண். ஜெமினி கணேசன் இந்து இனத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் வேலை கிடைக்க வேண்டுமென்பதற்காக, கணவன் மனைவி என்று பொய் சொல்லி நடிப்பதாக உள்ள காட்சியில், சக்கரபாணிக்கும் பானுமதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

  இத்தனைக்கும் பானுமதியும் ஓர் எழுத்தாளர். சக்கரபாணியும் ஓர் எழுத்தாளர். "தர்மபத்தினி' பட காலத்திலிருந்தே இவர்கள் ஒருவரையொருவர் இலக்கிய வழியால் நன்கறிவார்கள். இருந்தாலும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதில் தீவிரமாக இருந்தவர் சக்கரபாணி.

  சக்கரபாணி, பானுமதியைக் கூப்பிட்டு, ""இனி உன்னை வைத்துப் படம் எடுக்க முடியாது'' என்று சொல்லி பேசிய தொகையைக் கொடுத்து அனுப்பிவிட்டார். அதன்பின், அப்போது இரண்டாம் கதாநாயகியாக நடித்து வந்த சாவித்திரியைக் கதாநாயகியாக்கி "மிஸ்ஸியம்மா' தயாரிக்கப்பட்டது. சக்கரபாணி அந்த அளவிற்கு தைரியசாலி.

  "மிஸ்ஸியம்மா' தமிழில் ஜெமினி கணேசன் நடித்த வேடத்தை தெலுங்கில் என்.டி. ராமாராவ் ஏற்றிருந்தார். தமிழில் நகைச்சுவை வேடத்தில் தங்கவேலு நடிக்க, அந்த வேடத்தை தெலுங்கில் பிரபல நடிகர் ஏ.நாகேஸ்வரராவ் ஏற்று நடித்தார். அப்போது அவர் நடித்த "தேவதாஸ்' படம் பெரும் சாதனை புரிந்திருந்தது. இந்த வேடம் தேவைதானா? என்று கேட்கப்பட்டபோது, ""சோகமயமான கதாபாத்திரத்தில் நடித்து சாதனை புரிந்திருந்த என்னால் நகைச்சுவை வேடத்திலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த நகைச்சுவை வேடத்தை ஏற்றேன்'' என்று பெருந்தன்மையுடன் கூறினார் ஏ.நாகேஸ்வரராவ்.

  எல்.வி. பிரசாத் குழந்தை உள்ளம் கொண்டவர், குழந்தைகளை நேசித்த அவர் என்னைப் பொருத்தவரையில் தென்னகத்தின் சாந்தாராம். அவருடைய சுவாசமே சினிமா. தாம் ஈடுபட்டிருந்த சினிமாத் தொழிலில் ஆர்வத்துடன் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட சினிமாத் தொழிலாளி அவர். அந்த அர்ப்பணிப்புதான், ஒரு திரையரங்கில் வாயிற்காப்போனாக வேலை செய்த அவரை படவுலகில் ஜாம்பவனாக உயர்த்தி... உயரிய தாதா சாகேப் பால்கே விருதையும் பெற்றுத் தந்தது.

  எல்.வி. அவர்கள் அந்த நாளில் வாகினி ஸ்டூடியோவுக்கு வாய்ப்பு தேடி சைக்கிளில் வருவார். ஒருநாள் அவர் சைக்கிளை மெயின்கேட் அருகே சாய்த்து நிறுத்திவிட்டு, ஷூக்களை கழற்றி வைத்துவிட்டு, உள்ளே வந்தார். இதைக் கவனித்த நான், ""நீங்கள் சைக்கிளை ஏன் அங்கேயே விட்டுவிட்டு வெறுங்காலுடன் வருகிறீர்கள்... அப்படியே வரலாமே?'' என்றேன்.

  அதற்கு எல்.வி. அவர்கள் சொன்ன பதிலைத்தான் இன்று படவுலகில் இருப்பவர்க்கும் இனி ஈடுபட விரும்புபவருக்கும் சொல்ல விரும்புகிறேன்.

  எல்.வி. சொன்ன அந்த பதில்: ""நான் இப்போது கோவிலுக்குள் வருகிறேன். கோவிலுக்குள் பாதணியுடன் செல்லலாமா அது தப்பில்லையா?''

  அப்போதே எல்.வி. என் நெஞ்சில் நிலைத்துவிட்டார். அவரே படத்தின் இயக்குநர் என்று தீர்மானிக்கப்பட்டு விஜயாவின் முதல் படமான செüகார் (தெலுங்கு) இயக்கினார். அடுத்து கல்யாணம் பண்ணிப்பார் (தமிழ், தெலுங்கு), மிஸ்ஸியம்மா (தமிழ், தெலுங்கு), கடன் வாங்கி கல்யாணம் (தமிழ், தெலுங்கு), படங்களை இயக்கி விஜயாவின் பெயரை பாமர மக்களிடையே உச்சரிக்க வைத்தார்.

  மிஸ்ஸியம்மா படத்தை இந்தியில் தயாரிக்க விரும்பியபோது, அப்போதைய சூழல் விஜயாவுக்கு இசைந்து வராததால், அந்தக் கதையை இந்தியில் படமாக்கும் உரிமையை ஏவி.எம். அவர்களுக்கு ஒரே ஒரு நிபந்தனையுடன் கொடுத்தோம் அப்படத்தை எல்.வி. பிரசாத் அவர்களே இயக்க வேண்டும் என்று. அதற்கு ஏவி.எம். அவர்களும் ஒப்புக்கொள்ள எல்.வி. பிரசாத் "மிஸ்மேரி' இந்திப் படத்தை இயக்கினார். அதன்பின் படிப்படியாக அவர் வேறு கம்பெனி படங்களை இயக்கியும், தாமே தயாரிப்பாளர் ஆகவும் உயர்ந்தார்.

  ஒரு படத்தின் பட்ஜெட்டுக்குத் தகுந்தாற்போல் படமெடுத்து தயாரிப்பாளரின் இயக்குநராகவும் விளங்கினார் எல்.வி. பிரசாத்.

  பின்னாளில் அவர் வளர்ந்த நிலையிலும் என்னைவிட (வயதில் 4 வருடம்) மூத்தவரான அவர், பிரசாத் ஸ்டூடியோ கட்ட ஆரம்பித்த நாளில் இருந்து எல்லா நிகழ்ச்சிகளுக்கும் என்னை அழைத்து பெருமைப்படுத்தி மகிழ்வார்.

  மாயாபஜார்

   

  இப்பொழுது நாம் மாயாபஜாருக்குச் செல்வோம். பிரம்மாண்டத்திற்கு ஒரு படம் மாயாபஜார். ஏற்கெனவே பல மொழிகளில் ஆறு தடவை படமாக்கப்பட்ட "சசிரேகா பரிணயம்' கதை ஏழாவது தடவையாக விஜயாவினால் மாயாபஜார் (வத்சலா கல்யாணம்) என உருவாக்கப்பட்டது. இப்படம் கே.வி. ரெட்டியால் இயக்கப்பட்டது. விஜயாவின் டெக்னீஷியன்கள் அனைவரும் இப்படத்தில் இருந்தனர்.

  கே.வி.ரெட்டி மகாபாரதத்திலிருந்து கதாபாத்திர சாராம்சத்தை எடுக்க, மிகச்சிறந்த திரைக்கதையுடனும் அரிய தொழில்நுட்ப வல்லமையுடனும் படம் வழங்கப்பட்டது. இது புராணப்படங்களுக்கு ஒரு புத்துணர்வூட்டியது. ரெட்டியின் கதை, வசனம் மிக கச்சிதமாக இருந்ததை நிரூபிக்க இதோ ஒரு கேள்வி. மாயாபஜார் படத்தில் பாண்டவர்களின் மூத்தசகோதரர் தர்மராஜாவாக யார் நடித்தார் என்று உங்களால் அடையாளம் காண முடியுமா?

   

  பதில்: இந்த படத்தில் தர்மராஜா கதாபாத்திரமே இல்லை. அவ்வளவு ஏன்? பஞ்ச பாண்டவர்கூட கிடையாது. கடோத்கஜன், வத்ஸலா. அபிமன்யு லக்கண குமாரன் கதாபாத்திரங்களுடன் கிருஷ்ண பரமாத்மா நடத்தும் நாடகத்தையும் சேர்த்து உருவாக்கப்பட்டது. படத்திற்கு எது தேவையில்லையோ அதையெல்லாம் நீக்கிவிட்டார் கே.வி.ரெட்டி. ஃபிலிமின் ஓர் அடிகூட அவர் வீணாக்கமாட்டார். எடிட்டிங் என்றால் வெட்டி ஒட்டுவது மட்டுமே அங்கு இருக்கும்.

  மாயாபஜாரின் துவக்கக் காட்சியிலேயே மாயாஜாலம் நம்மை ஈர்த்துவிடும். காற்றில் பறக்கும் அம்புகளின் ஜாலங்கள் அவரது கண்டுபிடிப்புதான். இந்தப் படம் இதற்கு அடுத்து தயாரிக்கப்பட்ட பல புராணப்படங்களுக்கு ஒரு முன்னோடி உத்தியாக அமைந்தது.

  அதுமட்டுமின்றி, கே.வி.ரெட்டி இந்தப் படத்தில் மகிழ்ச்சியையும் களிப்பையும் காண்பித்திருந்தார். இது புராணப்படங்களில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

  உண்மையில் இந்தப்படம் முற்றிலும் அழகுடனும் சிருங்காரத்துடனும் எழுதப்பட்டிருந்தது.

  கடோத்கஜனாக நடித்த எஸ்.வி. ரங்காராவ் நடிப்பிற்கு ஓர் இலக்கணமாகத் திகழ்ந்தார். அவரது உச்சரிப்பு, செய்கைகளை, அவர் எதிரிகளை சந்தித்த விதம், சாவித்திரியும் அவரும் புரியும் நகைச்சுவை இவை அனைத்தையும் மார்க்கஸ் பார்ட்லேயின் கேமரா கலைக்கு நிகராகச் சொல்லலாம். நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் புராணப்படம் எடுப்பதில் சிறந்தவர் கே.வி. ரெட்டி என்பதை இது நிரூபித்தது.

  மாயாபஜாரின் "மாயாஜாலம்' யாராலும் மறக்க இயலாதது.

  நேர்த்தியான எடிட்டிங், கடோத்கஜன் உணவு முழுவதையும் திருமணத்திற்கு முன் விழுங்கிவிட்டு, காற்றில் பறக்கும் காட்சி, அம்புகள் சண்டையிடும் காட்சி போன்றவை பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின. அதுபோல ஒவ்வொரு பாடலும் பாடல் காட்சியும் மகத்தான வரவேற்பினைப் பெற்றது.

   

  மாயாபஜார் கிருஷ்ணர் வேடத்தில் நடித்த என்.டி. ராமாராவின் படம் இன்றும் ஆந்திர மாநிலத்தில் கிராமப்புறங்களில் வைத்து வணங்கப்படுகிறது என்றால் அதற்குக் காரணம் கே.வி. ரெட்டியும், சக்கரபாணியும்தாம்.

  மாயாபஜார் படத்தில் கிருஷ்ணர் வேடத்தில் நடிக்கும்போது, ஆரம்பத்தில் என்.டி. ராமாராவுக்கு ஈடுபாடு வரவில்லை. அவருக்கு அதில் ஈடுபாட்டைக் கொண்டுவர அவர் கிருஷ்ணர் வேடத்தில் மேக்கப் போட்டு படப்பிடிப்பு தளத்தில் நுழையும்போது கிருஷ்ணருக்கு கற்பூர ஆரத்தி காண்பிப்பதுபோல காட்டக்காட்ட, அவருள் கிருஷ்ண பக்தி வளர்ந்து, நடிப்பில் மட்டுமல்ல, நிஜத்திலும் கிருஷ்ணராகவே மாறிவிட்டார். அந்த அளவுக்கு வேடப் பொருத்தமும் உடல் வளமும் என்.டி. ராமாராவுக்கு அமைந்திருந்தது.

   

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai