சுடச்சுட

  
  kd2

  65 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் நேக் சந்த் ஸôய்னா என்னும் மனிதன் காட்டில் ஒரு சிறு பகுதியைச் சீர் செய்து தனக்கென்று ஒரு பூங்கா அமைக்கத் தொடங்கினான். குர்தாஸ்புர் என்னும் பகுதி அவன் பிறப்பிடம். 1947-இல் இந்தியா- பாகிஸ்தான் என்று தோற்றம் கண்டபோது குடும்பத்துடன் அகதியாய்ச் சண்டிகர் நகருக்கு இடம் பெயர்ந்தான். அப்போது ஸ்விட்ஸர்லாந்து நாட்டில் பிறந்து ஃபிரான்ஸ் நாட்டின் குடிமகனான கட்டடக் கலைஞர் லீ கொர்பௌ

  ஸீர் (கஉ இஞதஆஞமநஐஉத) என்பவரின் மேற்பார்வையில் சண்டிகர் நகரை நவீன வடிவம் கொண்டதாக மாற்றும் பணி நடந்துகொண்டிருந்தது. 1951-இல் நேக் சந்துக்குப் பொதுப்பணித் துறையில் (டரஈ) சாலை அமைப்பதை மேற்பார்வை செய்யும் பணி கிட்டியது.

  கட்டடம் எதுவும் அமைவதற்கு வாய்ப்பில்லாத நிலப்பகுதி என்று அடையாளப்படுத்தப்பட்ட காட்டில் தான் தேர்ந்தெடுத்த பகுதியில், பழைய கட்டடங்களின் உடைபாடுகளை தினசரி அலுவல் முடிந்தபின் சிறிது சிறிதாகக் திரட்டினான். அவற்றைக் கொண்டு மனம்போன போக்கில் சிற்பங்களை வடிக்கத் தொடங்கினான். பணி விதிகளுக்கு அது தடையானதால், இரவில் முற்றும் தனிமையில் தனது படைத்தலைத் தொடர்ந்தான். இவ்விதம் ஒன்றல்ல இரண்டல்ல 18 ஆண்டுகள் அவனது சிற்பம் படைத்தல் தொடர்ந்தது. நிலப்பரப்பின் எல்லையும் விரிந்துகொண்டே சென்றது- 12 ஏக்கர்.

  1975-ஆம் ஆண்டு அது அதிகாரிகளின் கண்டுபிடிப்புக்கு உள்ளானது. அரசின் ஒப்புதல் இல்லாத அந்தப் படைப்பை முற்றாய் அழித்துவிட முடிவெடுத்தது அரசு. ஆனால் மக்கள் ஆதரவு கலைஞரின் பக்கமே இருந்தது. எனவே 1976-இல் அந்தப் பகுதியை முறையாகப் பார்வையாளர் காண அரசு வழி செய்தது. அத்துடன் அவனது படைப்புக்கு முழுநேரமும் செலவு செய்ய உத்தரவு பிறப்பித்து, அதற்கு ஊதியமும் கொடுத்தது. 50 பேரை அவனுக்கு உதவியாகவும் அமர்த்தியது. 1983-இல் இந்திய தபால் தலையில், அவனது படைப்பு இடம் பெற்றது. 1984-இல் நேக் சந்துக்குக் பத்மஸ்ரீ விருதும் கிட்டியது.

  தி ராக் கார்டன் (பஏஉ தஞஇஓ எஅதஈஉச) என்று அழைக்கப்படும் அந்தப் பகுதி இன்று 25 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கியது. இன்றைய உலகின் அதிசயங்களில் ஒன்றாக இரு கருதப்படுகிறது.


  "இருபதாம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்' (அரவக்கோன்) நூலிலிருந்து


  -------------------------------------------------

  1973-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதியன்று இரவு எம்.ஜி.ஆர்., யுஎன்ஐ மற்றும் பி.டி.ஐ. நிறுவனங்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்; நிருபரை அனுப்பி வையுங்கள் என்று கூறினார்.

  அப்போது இரவு 8 மணிக்கு மேல் இருக்கும். என்றாலும் எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்று, செய்தி நிறுவனங்களும் நிருபர்களை அனுப்பி வைத்தன.

  நிருபர்கள் வந்ததும் எம்.ஜி.ஆர்.,""அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கை அண்ணாயிஸம் ஆகும். இதை நாட்டு மக்களுக்குத் தெரிவியுங்கள்''என்றார்.

  திடீரென்று தொலைபேசியில் அழைத்து ஒரு வரியில் செய்தி சொல்கிறாரே என்று நிருபர்கள் இருவரும் திகைத்தார்கள்.

  எம்.ஜி.ஆர்.,""ஏன் திகைக்கிறீர்கள்? காந்தியிஸம், கம்யூனிஸம், மாவோயிஸம், மார்க்ஸிஸம் என்றெல்லாம் கொள்கைகள் இல்லையா? அவற்றைப் போன்றது தான் அண்ணாயிஸமும்'' என்றார்.

  மறுநாள் எல்லாப் பத்திரிகைகளிலும் இந்தச் வெளிவந்தது. உடனே பத்திரிகையாளர்கள் பலர் எம்.ஜி.ஆரின் தியாகராய நகர் இல்லத்துக்குப் படையெடுத்துச் சென்றார்கள்.

  ""அண்ணா திமுகவின் கொள்கை அண்ணாயிஸம் என்று கூறியிருக்கிறீர்களே, அண்ணாயிஸம் என்றால் என்ன?''என்று கேட்டார்கள்.

  அதற்கு எம்.ஜி.ஆர். அளித்த பதிலும் சுருக்கமானதுதான்.

  ""காந்தியிஸம், கம்யூனிஸம், காப்பிட்டலிஸம் எனப்படும் முதலாளித்துவம் ஆகிய மூன்று கொள்கைத் தத்துவங்களிலும் உள்ள நல்ல அம்சங்களையெல்லாம் திரட்டினால் என்ன கிட்டுமோ அதுதான் அண்ணாயிஸம்''

  எம்.ஜி.ஆரின் அண்ணாயிஸ விளக்கத்தைச் சிலர் பாராட்டினர். சிலர் புரியவில்லை என்றனர். சிலர் குறை கூறினர். ஆனால் தமிழ்நாட்டு மக்களோ தங்களுக்குத் தாங்களே ஒரு விளக்கத்தைக் கூறிக்கொண்டு அதை ஏற்றனர்; தேர்தலில் வெற்றிக் கனியைத் தந்தனர்.

   

  -"உலகளாவிய எம்ஜிஆர் விழா & மாநாடு - மலேசியா 2010' மலரிலிருந்து


  -------------------------------------------------

  ஒருநாள் பகல், 2 மணிக்கு வ.ரா. அவர்கள் வழக்கம் போல் வரும் ரிக்ஷா வண்டி வந்தது. ரிக்ஷா வண்டிக்காரர் சொன்ன விஷயம் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

  ""பெரிய ஐயா இறந்து போயிட்டாருங்க...''என்று கண்ணீர்ப் பெருக்கோடு சொல்லி, ""அம்மா,உங்களைக் கையோடு இட்டாரச் சொன்னாங்க'' என்று தெரிவித்தார்.

  நான் உடனே புறப்பட்டு, காரில் வ.ரா. அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். ஸ்டூடியோவுக்குச் சென்றிருந்த என்.எஸ்.கே.யும், மதுரம் அம்மையாரும் இந்தச் செய்தி கேட்டவுடன் வ.ரா. அவர்கள் வீட்டுக்கு வந்தார்கள். இதற்குள் வ.ரா. அவர்களின் எழுத்தாள அன்பர்கள் மற்றும் அரசியல் துறை நண்பர்கள் அனைவருக்கும் நேரிடையாகவும், தொலைபேசி மூலமும் செய்தி அனுப்பினோம். மாலைக்குள் ஏராளமான எழுத்தாளர்களும் உற்றார் உறவினர்களும் வந்து கூடிவிட்டார்கள்.

  வ.ரா. அவர்களின் தம்பி திருவேங்கடம் அவர்கள் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் எல்லாரிடமும் வந்து தெரிவித்தார். ""இதுவரை வ.ரா. என் தமையனார் அவர்கள் சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டு குல ஆசாரத்தையெல்லாம் விட்டு ஒதுங்கியே வாழ்ந்து இன்று மறைந்துவிட்டார். அவர்களின் இறுதிச் சடங்கையாவது குலவழக்கப்படி மரியாதை செய்து எரியூட்டுவதற்கு எங்களை அனுமதியுங்கள்'' என்று கூற, யாரும் குறுக்கிடாமல் சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டன. முதல் முதலில் பூணூல் அணியாதிருந்த அவரது உடலில் பூணூல் அணிவிக்கப்பட்டது. பிறகு நெற்றியில் திருமண் சாத்தினார்கள்.

  "திரும்பிப் பார்க்கிறேன்' நூலில் எஸ்.வி. சஹஸ்ரநாமம்

  -------------------------------------------------

  1897-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் மகாமகம் நடந்தது. திருவாவடுதுறை ஆதீன கர்த்தராக விளங்கிய அம்பலவாண தேசிகர் தம்முடைய பரிவாரங்களுடன் கும்பகோணம் பேட்டைத் தெருவில் உள்ள மடத்தில் விஜயம் செய்திருந்தார். பல தேசங்களிலிருந்தும் பிரபுக்களும் வித்துவான்களும் வந்து கூடினர்.

  அப்போது தினந்தோறும் அம்பலவாண தேசிகருடைய முன்னிலையில் வித்துவான்களுடைய உபந்யாசங்களும் சம்பாஷணைகளும் நடைபெற்றன.

  ஒருநாள் மிகச்சிறந்த வித்துவான்களைப் பூஜித்து உத்தம சம்பாவனை செய்வதாக ஏற்பாடாகியிருந்தது. அம்பலவாண தேசிகர் ஆறு ஆசனங்களைப் போடச் சொல்லிப் பிரசித்தமான ஸம்ஸ்கிருத வித்துவான்கள் ஐவரை ஐந்து ஆசனங்களில் அமரச் செய்தார். அவர்கள் அமர்ந்த பிறகு என்னை நோக்கி,""அந்த ஆசனத்தில் இருக்க வேண்டும்...'' என்று ஆறாவது ஆசனத்தைச் சுட்டிக் காட்டினார்; எனக்கு துணுக்கென்றது.

  வாழ்நாள் முழுவதும் சாஸ்திரப் பயிற்சியிலே ஈடுபட்டு, எழுத்தெண்ணிப் படித்துத் தாம் கற்ற வித்தைக்கு ஒளியை உண்டாக்கிய அந்தப் பெரியவர்கள் எங்கே- நான் எங்கே நான் யோசனை செய்து நிற்பதை அறிந்த தேசிகர்,""என்ன யோசிக்கிறீர்கள்? அப்படியே இருக்க வேண்டும்...''என்றார்.

  ""இவர்களுக்குச் சமமாக இருக்க எனக்குத் தகுதி இல்லையே!''என்றேன்.

  தேசிகர்,""தகுதி உண்டென்பதை இந்த உலகம் அறியும். இவர்களைப் போன்ற மகா வித்துவான்கள் இந்த நாட்டில் தேடிப் பார்த்தால் ஒருவேளை கிடைத்தாலும் கிடைப்பார்கள். தங்களைப் போன்ற ஒருவர் அகப்படுவது அரிது!''

  என்று அன்பொழுகக் கூறி வற்புறுத்தவே அந்த மகா மேதைகளுடைய வரிசையில் பணிவோடு அமர்ந்தேன். இரட்டைச் சால்வையும் ஸம்மானமும் பெற்றேன்.

  மணிமேகலையில் மேற்கொண்ட உழைப்பே அந்தப் பெருமைக்குக் காரணம் என்று எண்ணி இறைவன் திருவருளை வாழ்த்தினேன்.

  "என் சரித்திரம்' மகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் நூலிலிருந்து

  -------------------------------------------------

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai