Enable Javscript for better performance
தொழுநோயாளிகளுக்கு உதவும் இராமகிருஷ்ணர் மடம்!- Dinamani

சுடச்சுட

  

  தொழுநோயாளிகளுக்கு உதவும் இராமகிருஷ்ணர் மடம்!

  Published on : 12th May 2013 11:32 AM  |   அ+அ அ-   |    |  

  தொழு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.  கைவிடப்பட்ட தொழுநோயாளிகளின் புண்களுக்கு மருந்திட்டு அவர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடத்திற்கு வழிசெய்துவருகின்றது சென்னை, மயிலாப்பூரில் செயல்படும் இராமகிருஷ்ணர் மடம்.

  அரசு தொழுநோய் தடுப்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் சிவாவோடு இணைந்து சீனிவாசன், மாதவன், வசந்தா, சரவணன், ராஜேஷ் போன்ற எண்ணற்ற தன்னார்வத் தொண்டர்கள் தொழு நோயாளிகளின் வாழ்வை மறுசீரமைப்பதில் முனைப்புடன் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.

  இராமகிருஷ்ணர் மடத்திற்கு வந்து பயன்பெற்றிருக்கும் தொழுநோய் தாக்கி குணமடைந்தவர்கள் சிலரைச் சந்தித்தோம்.

  சந்திரசேகரன், ""இராமகிருஷ்ணர் மடத்திற்கு வந்தபின்தான் வாழ்விலேயே ஒரு பிடிப்பு எனக்கு ஏற்பட்டது. உற்றார் உறவினரின் உதாசீனத்துக்கு இடையில் கெüரவமான ஒரு வாழ்க்கையை எனக்கு மடம் ஏற்படுத்தித் தந்திருக்கின்றது. மாற்றுத் திறனாளிகளுக்கான பென்ஷனை எனக்கு மடம்தான் பெற்றுத் தந்திருக்கின்றது'' என்றார்.

  சையத் ஃபசருல்லா, ""மாற்றுத் திறனாளிகளுக்கான பென்ஷனை மடம்தான் எங்களுக்குப் போராடி வாங்கிக் கொடுத்திருக்கிறது. தொழுநோயாளிகளுக்கு வீடு கிடைப்பதில் தொடங்கி வேலையும் கிடைக்காது. ராமகிருஷ்ணர் மடத்தின் சார்பாக சிறுசிறு தொழில்களைச் செய்வதற்கு பண உதவி செய்து, எங்களுக்குள் பல சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்தித் தந்திருக்கின்றது. இதன்மூலம் நான் பிளாஸ்டிக் பொம்மைகளை வாங்கி விற்பனை செய்கிறேன். காலத்திற்கு ஏற்றாற்போல் பல வியாபாரங்களையும் செய்து, பொருளீட்டிவருகிறேன். இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த மாற்றுத்திறனாளிக்கான விருது பெறும் பட்டியலில் நானும் இடம்பெற்றிருக்கிறேன்!'' என்றார்.

  பக்தவத்சலு, ""மடத்திற்கு வந்தபின்தான் பல ஆண்டுகளாக ஆறாமல் இருந்த புண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தது. தமிழகம் முழுவதும் பல கோயில்களுக்குச் சென்று உழவாரப் பணி செய்துவருகிறேன் என்றார்.''

  தொழுநோயால் பாதிக்கப்பட்ட ராதாகிருஷ்ணனுக்கு வேலை போகிறது. திருமணம் தடைபடுகிறது. மூன்று முறை தற்கொலைக்குத் துணிகிறார். இவருக்கு ராமகிருஷ்ணர் மடத்தின் விழிப்புணர்வுப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. அதன்பின் தன்னம்பிக்கையோடு வாழ்வில் நடைபோடுகிறார். தற்போது தொழுநோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய தம்பியின் குழந்தைகளை படிக்கவைத்து வருகிறார்.

  - இவ்வாறாக ஒவ்வொருவருக்குப் பின்னாலும் ஒரு சோகக் கதை. ஆனால் தற்போது ராமகிருஷ்ணர் மடம் என்னும் நாரில் தொடுத்த சந்தோஷ மலர்களாய் மணம் வீசுகிறார்கள் இவர்கள்.

  இந்த மாற்றத்துக்குக் காரணமானவர்கள் தன்னலமற்ற சில தன்னார்வத் தொண்டர்களே. தொழு நோய் துறையிலேயே பணிபுரிந்து ஓய்வு பெற்ற சீனிவாசன், ""குணமடைந்த நோயாளிகளுக்கு கை, கால் விரல்களில் குறைபாடு இருப்பதைக் கண்டு, தொழுநோய் குணமாகவில்லையோ என்ற அச்சம் பலருக்கு ஏற்படுகிறது. இது தேவையில்லாத அச்சம். புண்களுக்கு அரசு மருத்துவமனைகளில் மருந்து கிடைப்பதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை, கிங்ஸ் இன்டிடியூட்டைச் சேர்ந்த டாக்டர் குணசேகரன் "ஆம்னியான்' (பனிக்குடத்தின் திரவத்தைக் கொண்டு பக்குவப்படுத்தப்பட்ட மருந்து) மருந்து சிகிச்சை அளித்துவருகிறார். இதனால் நாள்பட்ட புண்கள்கூட குணமாகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையும் மதியம் 2 மணியிலிருந்து 4 வரை இந்த சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இவர்களோடு டாக்டர் சுப்பிரமணிய பாரதியாரும் டாக்டர் செல்லம்மாளும் சிகிச்சையளிக்கின்றனர்'' என்றார்.

  தன்னார்வலர் மாதவன், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.சி.ஆர். செருப்புகளையும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உணவையும் அளித்துவருகிறார்.

  தன்னார்வலர் வசந்தாவுக்கு 76 வயது. இந்த வயதிலும் மடத்திற்கு வரும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு அளிப்பது, அவர்களுக்கு ஒழுக்கத்தை வலியுறுத்துவது போன்ற பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

  தனியார் கணிப்பொறி நிறுவனங்களில் பணிபுரியும் சரவணனும் ராஜேஷும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு அன்பர் பீட்டர் என்பவரால் இலவசமாக அளிக்கப்படும் "டிவைன் நோநி' எனப்படும் ஊட்டச்சத்து பானத்தைப் பகிர்ந்து அளிப்பது, நோயாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி, ஆங்கிலப் பயிற்சி, கணினிப் பயிற்சி அளிப்பது போன்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

  தொழுநோயாளிகளுக்கு உதவும் பணியில் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து ஈடுபட்டுவரும் சிவா, ""இராமகிருஷ்ணர் மடத்தின் தலைமைப் பொறுப்பில் தபசியானந்தர் இருக்கும்போது அவரின் அன்னையார் அவருக்கு அளித்த 300 ரூபாயில் ஒரு ரூபாய்க்கு சாக்லேட் வாங்கிக் கொண்டு மீதி 299 ரூபாயைச் சேர்த்து தொடங்கப்பட்ட நிதியில் தொடங்கப்பட்டது தொழுநோயாளிகளுக்கு உதவும் மடத்தின் இந்த மருத்துவப் பிரிவு. ஏறக்குறைய 1200 பேர் இதுவரை பயனடைந்துள்ளனர். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு; நோய் குணமாகி ஊனமடைந்திருப்பவர்கள் வேறு. திரைப்படங்கள், ஊடகங்கள் போன்றவற்றின் தவறான காட்சிப்படுத்துதலால் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன. மிகக் குறைந்த அளவுக்கு பரவும் தன்மையுள்ள நோய்தான் இது. தடுப்பு மருந்து இல்லைதான். ஆனால் எளிய சிகிச்சையின் மூலம் குணமாக்கிவிடலாம். நோய் முற்றினால்தான் நரம்புகள் பாதிக்கப்பட்டு கை, கால் விரல்கள் பாதிக்கப்படும். உணர்வில்லாத தேமல்தான் தொழுநோய்க்கான முதல் அறிகுறி. தொழுநோயாளிகளை கெüரவமாக நடத்தவேண்டும். அவர்களுக்கான பாதுகாப்பு திட்டத்தை அரசு உறுதிசெய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான பென்ஷனையே இப்போதுதான் தொழுநோயாளிகளுக்கு அரசு கொடுக்கத் தொடங்கியிருக்கின்றது. தொழுநோயாளிகளுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தால் அவர்களாலும் வாழ்க்கையில் முன்னேறமுடியும். எங்களின் சுய உதவிக் குழுக்களின் மூலம் 100 சதவிகிதம் கடனை அவர்கள் திருப்பி வங்கிக்குச் செலுத்தியிருக்கின்றனர். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிப்படுத்தக் கூடாது என்பதால்தான் அவர்களுக்கு செம்மஞ்சேரி குடிசை மாற்றுப் பகுதியில் இருக்கும் வீடுகளில் குடிவைத்திருக்கிறோம்...'' என்கிறார் தொழுநோயாளிகளிடையே நம்பிக்கையை விதைக்கும் சிவா!

  இராமகிருஷ்ணர் மடத்தின் தர்மிஷ்டானந்தா, ""தொழுநோயாளிகளுக்கு உதவும் விஷயத்தில் பொது மக்களும் தங்களின் பங்களிப்பைச் செலுத்துவதற்கு முன்வரவேண்டும். தமிழகம் முழுவதும் இருக்கும் அன்பர்கள் தொழுநோயால் பாதித்தவர்களை ஓரிடத்தில் சங்கமிக்கவைத்து எங்களுக்கு தகவல் கொடுத்தால் கூட போதும். இராமகிருஷ்ணர் மடத்தின் சார்பாக அவர்களுக்கு வேண்டிய சிகிச்சைகள், நல உதவிகள் ஏற்படுத்தப்படும். தொழுநோயாளிகளுக்கு செய்யப்படும் சேவை இறைவனுக்குச் செய்யும் சேவை...''

  என்கிறார் அமைதியான புன்னகையுடன்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai