புதிய வார்ப்புகள்

புதிய வார்ப்புகள்

இந்நூற்றாண்டின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு இணைய தளங்கள். அதுநாள் வரையில் படிப்பாளியாக இருந்த மிஸ்டர் பொது ஜனத்தை படைப்பாளியாக்கிய பெருமை சமூக வலைத்தளங்களுக்கே உண்டு. இணையத் தளங்களின் வருகை இல்லையென்றால் சமகால தமிழ் இளைஞர்களுக்கு தமது தாய் மொழியில் எழுத வாய்ப்பே கிடைத்திருக்காது எனலாம். எழுதியதை பிறர் பார்வைக்கு கொண்டு செல்லும் எளிமையும் இந்த வெற்றிக்கு ஒரு காரணம். உலக அரசியலிலிருந்து உள்ளூர் அரசியல்வாதி வரைக்கும், ஹாலிவுட்டிலிருந்து கோலிவுட் வரைக்கும், செவ்வாய் கிரகத்திலிருந்து செவ்வாய்ப்பேட்டை வரைக்கும் சகட்டுமேனிக்கு எழுதக் கூடியவர்கள். சமூகம், அரசியம், சினிமா, கலை, இலக்கியம் என்று எட்டுத்திக்கும் பாயும் "ஆகச்சிறந்த எழுத்து' இவர்களது.
இனி தமிழில் உள்ள சில வலைத்தள எழுத்தாளர்கள் பற்றி....

1. கலையகம்
""அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்'' என்கிறார் இலங்கையைச் சேர்ந்த கலையரசன். நெதர்லாந்தில் வசித்துவரும் இவருடைய கட்டுரைகள், சிங்கள அரசின் சட்டையைப் பிடித்திழுத்து "சுளீர்' என்று அடிக்கும் சாட்டையடி.
*இந்த தடவை நடந்த வட மாகாண சபைத் தேர்தலிலும், தமிழ் மக்கள் படுதோல்வி அடைந்துள்ளனர். வழமை போல சிங்கள முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளான ராஜபக்சவும், தமிழ் முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வெற்றி பெற்றுள்ளனர். இரண்டு வேறு மொழிகளைப் பேசும் இரு பிரிவினர், தமக்குள் முரண்பாடுகள் இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்கு தேர்தல் எனும் நாடகம் உதவுகின்றது. ஈழப்போரில் தோற்கடிக்கப்பட்ட தமிழ் மக்கள், மீண்டும் வட மாகாண சபைத் தேர்தலிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். எப்போதும் இறுதி வெற்றி சிங்கள -தமிழ் தரகு முதலாளிகளுக்கானது என்ற விதியை மட்டும் யாராலும் மாற்ற முடியவில்லை.

2. பிச்சைப் பாத்திரம்
இலக்கிய ரசனையுடன் எழுதி வருபவர் சென்னையைச் சேர்ந்த சுரேஷ் கண்ணன். பல்வேறு தலைப்புகளில் எழுதினாலும் சினிமாதான் இவரது எழுத்தின் அடையாளம். பிற்போக்குத் தனமான முற்போக்கு வாதிகளை ஓட ஓட விரட்டக்கூடிய துணிச்சல்காரர்.
தமிழ் ஸ்டுடியோ - திரையிடல் நிகழ்ச்சி.
தமிழ் ஸ்டுடியோ இந்திய சினிமா நூற்றாண்டையொட்டி நிகழ்த்தும் நூறு திரைப்படங்களின் திரையிடல் வரிசை நிகழ்ச்சிக்கு தினமும் செல்ல வேண்டும் என்று நினைப்பேன். இன்றுதான் வாய்த்தது.
திரையிடலுக்கு முன்பாக, இந்தியன் பனோரமா ஐஊஊஐ விழாவில், தேர்வுப் பட்டியலில் "தங்கமீன்கள்' தமிழ் திரைப்படம் தோந்தெடுக்கப் பட்டிருப்பதை, நடுவர் குழுவின் தலைவராக இருக்கும் லெனின் தெரிவித்தார். மலையாளத்திலிருந்தும் வங்காளத்திலிருந்தும் அதிக படங்கள் தேர்விற்காக அனுப்பப்பட்டிருக்கும் சூழலில் தமிழிலிருந்து வெறுமனே ஆறே திரைப்படங்கள் அனுப்பப்பட்டிருந்ததாக வேதனையுடன் தெரிவித்தார். (அதில் ஒன்று "எதிர்நீச்சல்' என்ற போது கூட்டம் சிரித்தது. "ஏன் தன்னிச்சையாக சிரிக்கிறீர்கள்?' என்று கேட்டு விட்டு லெனினும் சிரித்தார்).
மலையாளத்திலிருந்து ஆறு படங்களும் இந்தி மற்றும் வங்காளத்திலிருந்து தலா ஐந்து படங்களும் இறுதிப் பட்டியலில் இருக்கும் போது தமிழிலிருந்து ஒரே ஒரு படம்.

3. நிசப்தம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்த வா. மணிகண்டன், ஜல்லியடிக்காமல் எழுதக்கூடிய மிகச் சிலரில் ஒருவர். பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இவர், சினிமா, அரசியல், கலை இலக்கியம் என்று மிகைப்படாத எழுத்துக்குச் சொந்தக்காரர்.
உனக்கு எப்பொழுது வேலை போகும்?
ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போகும் போதும் யாராவது வயிற்றைக் கலக்கிவிட்டுத்தான் திருப்பி அனுப்புகிறார்கள். இந்த முறை ஒரு ஆசிரியர். அவருடன் கூடவே அவரது நண்பர் ட்ரங்கன் மங்கி ஆசாமியும் இருந்தார். நல்ல ஆசிரியர்தான். அவரிடம் ட்யூசன் படித்திருக்கிறேன். பெயரை மறக்காமல் ஞாபகம் வைத்திருந்தார். வழக்கமான விசாரிப்புகள்தான்.
"தம்பி உங்கள் வேலை எப்படி? நிரந்தரம்தானே?' என்கிற ரீதியில் ட்ரங்கன் மங்கி ஆசாமியின் கேள்வி வந்து விழுந்தது. ஐ.டி.யில் என் வேலை நிரந்தரம்தான் என்று யாரால் சொல்லிவிட முடியும்? அவருக்கும் அது தெரிந்திருக்க வேண்டும். இருந்தும் கேட்கிறார். இந்தக் கேள்வியை அவர் நல்ல எண்ணத்தில் கேட்பது போலவும் தெரியவில்லை. எரிச்சலை முகத்தில் தேக்கிக்கொண்டு "தெரியாதுங்க. ஆனால் ஆண்டவன் புண்ணியத்தில் உங்ககிட்ட வந்து தட்டு நீட்டும் நிலைமை வராதுன்னு நம்புறேன்' என்று சொல்லிவிட்டு அவரின் முகத்தைப் பார்க்காமலேயே ஆசிரியரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். அடுத்த முறை வேறொரு ஐ.டி.க்காரனை சந்திக்கும்போது இந்தக் கேள்வியைக் கேட்கமாட்டார் என நம்புகிறேன். இன்னொரு சக ஐ.டி. அடிமைக்கு என்னால் முடிந்த உதவி இது. அவ்வளவுதான்.

4. மெட்ராஸ் பவன்
சென்னை ஸ்லாங்கின் சோலோ சொந்தக்காரர் சிவகுமார். அதிரி புதிரி எழுத்துகளில் ரசிக்க வைக்கும் பதிவுகளைத் தருபவர். மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் எழுத்தில் "என்னமோ கீது' என்று கூர்ந்து பார்க்க வைப்பவர்.
ஒரே பேஜாரா கீதுப்பா
இந்த கச்சி பேஜார் பண்ணுதுன்னு அந்த கச்சிக்கு ஓட்டு போட்டேன். அவன் ஊரை அடிச்சி ப்ரீத்தி மிக்சில போட்டான்னு இன்னொருத்தனுக்கு ஓட்டு போட்டேன். அந்த பொறம்போக்கு மொட்ட மாடில காயப்போட்ட கீஞ்ச ஜட்டிய கூட மிச்சம் வக்காம உருவிட்டானே. சாந்தரம் ஒரு ரேட்டுக்கு வித்த தக்காளி மறுநாள் காத்தால டபுளா எகுருது. இந்தக் கொடுமைய தட்டிக் கேக்க கண்டிப்பா எங்க ஆளுங்க வரத்தான் போறாங்க. அவ்ளோதான். கோச்சடையான், பில்லா-2, டுப்பாக்கி எல்லாம் ரிலீஸ் ஆவட்டும். அப்பதாண்டா எங்களுக்கு மூணு வேள சோறு, தொட்டுக்க ஹாட் சிப்ஸý அல்லாம் தப்பாம கெடைக்கும். அப்படியே எங்கள காப்பாத்த ஒருத்தனும் வராங்காட்டியும், கடேசி டைம்ல கமுக்கமா வந்து கரிக்டா காப்பாத்த ஒருத்தர் இருக்காருடா. ஒண்ணா நம்பர் ஓநாய்களுக்கு ஓயாம ஓட்டை போட்டுட்டு ஒத்த வெரல சூப்பிட்டு திரியற அல்லாருக்கும் அவரு நெருப்பாறுடா.

5. ஃபிலாஸபி பிரபாகரன்
ஃபிளாசபியில் பிஎச்டி வாங்கியவர் போல் எழுதக்கூடியவர் ஃபிளாசபி பிரபாகரன். பிறந்தது சாத்தூர் என்றாலும் வளர்ந்தது சென்னை. கிண்டியில் மென்பொருள் நிறுவனத்தில் பணி. நகைச்சுவையை தனது வலைத்தளத்தில் தொங்க தொங்க தோரணம் கட்டக் கூடியவர்.
காமன் மேனின் சில உதாரணங்கள்
*சைனா மொபைலில் "கலாசலா' பாடலை அலறவிடும் சக பயணி
*கோபிநாத் எழுதும் தன்னம்பிக்கை புத்தகங்கள் படிப்பவர்
*ஃபேஸ்புக்கில் லைக் ஃபார் சமந்தா, கமெண்ட் ஃபார் காஜல் வகையறா ஃபோட்டோக்களை ஷேர் செய்பவர் (அ) அப்படி யாரேனும் ஷேர் செய்திருந்தால் அதற்கு கர்ம சிரத்தையுடன் தனது வாக்கை பதிவு செய்பவர்.
*ஐந்து வருடத்திற்கு ஒருமுறை அம்மாவிற்கும் அய்யாவிற்கும் மாறி மாறி வாக்களிப்பவர்.
*ஏதாவது டீக்கடை வாசலில் ஓசி பேப்பர் படித்துக்கொண்டே "இவங்கள எல்லாம் புடிச்சு ஜெயில்ல போடணும் சார்' என்று அறச்சீற்றம் கொள்பவர்.
இப்படி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

6. சும்மா
தேனம்மை லக்ஷ்மணன் என்ற பெயரில் எழுதி வரும் இவர், தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். கவிதை, கதை, கட்டுரை, சமையல், கோலம் மற்றும் ஆன்மிகம் என்று வாழ்வின் பல பக்கங்களில் ரசிப்புடன் பயணித்துச் செல்கிறது இவரது வலைத்தளம்.
புரட்டாசி மாதமும், ராமர் பட்டாபிஷேகமும்:
புரட்டாசி மாதம் பெருமாளுக்குரிய மாதமாகும். செட்டிநாட்டுப் பக்கங்களில் ஒரு சாரார் புரட்டாசி விரதமும், சிலர் கார்த்திகை விரதமும் கடைப்பிடிப்பார்கள்.
சிவ கோத்திரத்தைச் சார்ந்த இவர்களில் பெருமாளை வணங்குபவர்கள் புரட்டாசி மாதம் விரதம் இருந்து காலையில் நீராடி பெருமாளை வணங்கி அன்றே செய்த உணவை வாழை இலையில் உண்பார்கள். சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கி உணவு படைத்துவிட்டு சொந்தங்கள், உறவினர்கள் ஆகியோரோடு உணவருந்துவார்கள்.
கார்த்திகை மாதக்காரர்கள் கார்த்திகை மாதத்தில் திங்கட் கிழமைகளில் முருகப் பெருமானைவணங்கி உணவு படைத்து ஊரோடு உணவிட்டு தாமும் உண்டு மகிழ்வார்கள். புரட்டாசி மாதக்காரர்களுக்கு மூன்றாவது சனிக்கிழமையும், கார்த்திகை மாதக்காரர்களுக்கு மூன்றாவது சோம வாரமும் விசேஷம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com