முகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்
ஒன்ஸ்மோர்
By தொகுப்பு: கேசி | Published On : 24th August 2014 10:02 AM | Last Updated : 24th August 2014 10:02 AM | அ+அ அ- |

பழந்தமிழக அரசியலில் அரபு நாட்டுக் குதிரைகள் பிரதான அங்கமாக விளங்கின. அவற்றைக் கொண்டு வந்து பழக்கி, பேணி, தமிழ் மன்னர்களுக்குப் பயன்படச் செய்த அரபிகள் "இராவுத்தர்கள்' எனப் பெயர் பெற்றனர். அவர்கள் தமிழர்களோடு மண உறவு கொண்டு தமிழகக் குடிகளாகவே மாறியது வரலாற்றில் சிறப்பு அம்சமாகும்.
குதிரைகள் தமிழ்நாட்டிற்குப் புதுமையானவை அல்ல. குதிரைகளின் வண்ணம், வடிவு, தன்மை ஆகிய இயல்புகளைக் கொண்டு அவற்றுக்கு பாடலம், கோடகம், கிவுளி, வண்ணி, பரி, கந்துகம், புரவி, கனவட்டம், துரதம், கற்சி, அச்சுவம், துரங்கம், யவனம், குரகதம், வையாளி எனப் பல பெயர்கள் தமிழ் இலக்கியங்களில் சூட்டப்பட்டுள்ளன. திருவிளையாடற் புராணத்தில் பல வகையான பரிகளையும் அவற்றின் இயல்புகளையும் அவை எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவை என்பதையும் விவரமாகக் குறிப்பிடுவதுடன் யவனம் என்ற வகைப் புரவி மக்கத்தில் உள்ளவை என பாகுபடுத்திப் பாடியுள்ளார்.
தமிழ் மன்னர்களின் நால்வகைப் படைகளில் குதிரைப்படை என்பது ஒரு பிரிவு என்பது எல்லோருக்கும் தெரியும். சோழர் படைகளுக்கான குதிரைகள் பாரசீக, அரபு நாடுகளில் இருந்து பெரும்பாலும் கொங்கண, கேரளக் கடற்கரைப் பட்டினங்களில் கரை இறக்கப்பட்டு கொங்கு நாடு வழியாக சோழநாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன. இன்னும் கோழிக்கோடு நகரில் "குதிரை வட்டம்' என்ற பகுதியும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் "குதிரைப்பாளையம்' என்ற ஊரும் இருப்பது நினைவுகூறத்தக்கது. இத்தகைய வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை "குதிரைச் செட்டிகள்' என கல்வெட்டுகளும் இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன.
பிற்காலப் பாண்டியப் பேரரசு காலத்தில் ஆண்டுதோறும் பதினாயிரம் குதிரைகள் காயல்பட்டினம், தேவி பட்டினம் ஆகிய துறைகளில் கரை இறக்கப்பட்டன. அங்கிருந்து அவை நெல்லைக்கும், மதுரைக்கும் நடத்திச் செல்லப்பட்டன. அந்த வழிகளில் "குதிரை வழிக்காடு' (முதுகுளத்தூர் மாவட்டம்) "குதிரை வழிக்குளம்' (திருச்செந்தூர் பரமன்குறிச்சி) இன்றும் இருந்து வருவது ஆராயத்தக்கது. இந்தக் குதிரைகளைப் பாண்டியனுக்காகப் பெற்று வரச் சென்ற வாதவூரர், வரலாற்றில் இறைவன் "கோட்டமிலா மாணிக்கவாசகர்முன் "குதிரை ராவுத்தனாக' வந்து நின்றதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருப்பெருந்துறையில் உள்ள ஆலயத்தில் முகப்பு மண்டபம், குதிரை வீரர் சிற்பங்களுடன் அமைக்கப்பட்டு இருப்பதுடன், "இராவுத்தர் மண்டபம்' என வழங்கப்படுதல் குறிப்பிடத்தக்கது!
("வரலாற்று வெளிச்சத்தில் போர்த்துக்கீசியர்கள், குஞ்ஞாலிகள்' என்ற நூலில் செ.திவான்)
மனிதர்கள் கடவுளிடம் சென்று பல புகார்களைக் கூறியபடியே இருந்தார்கள். அது சரியில்லை, இது சரியில்லை, இதைக் கொடு, அதைக் கொடு, தன்னை ஏமாற்றுகிறார்கள், சோதனை வருகிறது, வேலையில்லை, கடன் தொல்லை, புது வீடு வேண்டும், காசு வேண்டும், உன் ஆசீர்வாதம் வேண்டும், வழக்காளியும் - எதிரியும் தங்கள் பக்கம் வெல்வதற்காக நேர்த்தி, உன்னை நம்பி புது வியாபாரம், சாவியை உன் காலடியில் வைக்கிறேன், உன்னை நம்பி முதல் போடுகிறேன், என்னைக் கவனித்துக் கொள், என்னைச் சுகப்படுத்து... இப்படி ஏகப்பட்ட புகார்கள், வேண்டுகோள்கள்.. ஒவ்வொரு புகாரையும் எடுத்துச் சரிசெய்து கொடுத்தால் அடுத்தவரைப் பாதிக்கிறது, பின்பு வேறொரு புதிய பிரச்னையுடன் வருகிறார்கள்!
இவ்வளவு தொல்லைகளில் இருந்தும் விடுபட என்ன செய்யலாம்? எங்கு செல்லலாம்? இமயமலை உச்சிக்குப் போகலாமா? ம்ஹும். அங்கு மலை ஏறுபவர்கள் வந்து விடுவார்கள். சந்திரனில் போய் இருப்போமா... அங்கே மனிதனை அனுப்பி சில காலம் தங்க வைக்க ரஷ்யாவும், அமெரிக்காவும் போட்டா போட்டி போட்டுக்கொண்டு அனுப்பும் விஞ்ஞானிகள் அங்கு என்னைக் கண்டதும் பிரயாண நிறுவனம் ஆரம்பித்து சந்திர மண்டல இன்பச் சுற்றுலா யாத்திரை ஆரம்பித்து விடுவார்களே!
மனிதர்களிடமிருந்து தப்ப யாரும் பார்க்க முடியாத இடம், யாரும் தேட முடியாத இடம், யாரும் யோசிக்க முடியாத இடம் என்று கடவுள் நெடுநேரம் யோசித்தும் அவருக்கு ஓர் இடமும் புலப்படவில்லை. ரொம்ப நாள் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு கடவுளுக்கு அப்படிப்பட்ட ஓர் இடம் இருப்பதை அறிந்து கொண்டார்! அங்கு யாரும் வரவே மாட்டார்கள்!
இந்த மனிதர்கள் தங்களைத் தவிர பிறரை ஆராய்வார்கள். தங்கள் மீது நம்பிக்கை அற்றவர்கள் தங்களுக்குள் பார்ப்பதில்லை. பிற இடங்களில் தேடுவார்கள். தங்களுக்குள் தேடுவதில்லை. தங்களை அறிவதில்லை. தங்களை உணர்வதில்லை. கோயில், பூசை, அபிஷேகங்கள், மசூதி, தேவாலயம், தர்மசாலை, சினாகோஜ் என்று தங்களுக்கு விரும்பிய இடங்களில் தங்களைத் தாங்களே புறக்கணித்து விடுவார்கள். சரியான, பாதுகாப்பான, தொந்தரவு இல்லாத "தான்' இருப்பதற்கு ஏற்ற இடம் "இந்த மனிதனின் உள்ளே' இருப்பது எனக் கடவுள் முடிவு எடுத்துவிட்டார்! கடவுள் மனிதனின் உள்ளே புகுந்துவிட்டார்! என்ன ஆச்சரியம்! அவரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை! கடவுளின் முடிவு சரியானதாகவே அமைந்துவிட்டது!
("மறுபிறப்பு பற்றிய ஆச்சரியமான தகவல்கள்' என்ற நூலில் எஸ்.குருபாதம்)