முகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்
மெட்ரோ ரயில் ஓட்டும் காவ்யஸ்ரீ!
By -பூர்ணிமா | Published On : 30th March 2014 09:56 AM | Last Updated : 30th March 2014 09:56 AM | அ+அ அ- |

பெங்களூரில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி துவங்கப்பட்ட ரீச்3 மற்றும் 3அ மெட்ரோ ரயில் திட்டத்தில் சம்பிகேரோடு - பீன்யா மார்க்கத்தில் மெட்ரோ ரயிலை இயக்கும் பைலட்டாக காவ்யஸ்ரீ சேர்ந்துள்ளார்.
ஏற்கெனவே இரண்டாண்டுகளுக்கு முன் பையப்பனஹெள்ளி - எம்.ஜி.ரோடுக்கு இடையே துவங்கப்பட்ட ரீச் 1 மார்க்கத்தில் மூன்று பெண்கள் மெட்ரோ ரயிலை இயக்கும் பைலட்டாக பணியாற்றுகின்றனர். காவ்யாஸ்ரீ நான்காவது பெண் பைலட்.
"மண்டியாவில் ஜாவரே கவுதானா கொப்பலு கிராமத்தை சேர்ந்த காவ்யஸ்ரீக்கு வாகனங்களை ஓட்ட வேண்டுமென்று கொள்ளை ஆசை. அதுபற்றி, பலவிதக் கனவுகள் கண்டவர். அப்படிப்பட்டவருக்கு மெட்ரோ ரயிலை ஒட்டும் வாய்ப்புக் கிடைத்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில் ""மெட்ரோ ரயில் பைலட்டாக வருவோமென்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை'' என்கிறார்.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலெக்ட்ரிக்கல் டிப்ளமோ முடித்திருக்கிறார். பெங்களுரூ மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் வெளியிட்ட "வேலைக்கு ஆள் தேவை' விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்த 50 பேரில் இவர் ஒருவர் மட்டுமே பெண். இருப்பினும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறுமாத காலம் பையப்பனஹெள்ளி மெட்ரோ ஸ்டேஷனில் மெட்ரோ ரயிலை இயக்கும் பயிற்சி அவருக்கு அளிக்கப்பட்டது.
தற்போது காலை 6 மணி முதல் பகல் 2 மணிவரை மெட்ரோ ரயிலை இயக்கும் காவ்யஸ்ரீ விரைவில் தன்னுடைய பிஇ (எலக்ட்ரிகல் - எலெக்ட்ரானிக்ஸ்) கோர்ûஸ முடிப்பதற்காக பிஎம்எஸ் கல்லூரியில் மாலை நேர வகுப்புக்குச் சென்று வருகிறார்.
இவரது தந்தை புட்டசாமி தனியார் நிறுவனமொன்றில் பர்சனல் அதிகாரியாகவும், தாய் சரஸ்வதி எல்ஐசி முகவராகவும் பணியாற்றுகின்றனர். சகோதரர் என்ஜினீயரிங் படிக்கிறார்.
ஒரு கிராமத்திலிருந்து வந்த இவர், மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து என்ன சொல்கிறார்? ""இந்த வேலையில் தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். ரயிலை இயக்க கூர்ந்த பார்வையும் கவனமும் தேவை. மெட்ரோ ரயிலை இயக்க மேலும் பல பெண்கள் முன் வர வேண்டும். இதில் எவ்வித சிரமமும் இல்லை'' என்கிறார் காவ்யஸ்ரீ.
இப்போது கூட அவருக்கு நிறைவேறாத ஆசை ஒன்று உண்டாம். அது என்ன?
""மெட்ரோ ரயில் துவக்க விழாவில் முதலமைச்சருடன் கை குலுக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை'' என்பதே.