நல்ல தமிழ் நூல்களை வெளியிட்டோம் என்ற மனநிறைவு...

சங்கத்தமிழ் நூல்கள், தமிழக வரலாற்று நூல்கள், தமிழிலக்கண நூல்கள், தமிழ்ப் பேரகராதிகள்... போதும்... போதும்... இவையெல்லாம் எதற்கு? கணினி யுகத்தில்

சங்கத்தமிழ் நூல்கள், தமிழக வரலாற்று நூல்கள், தமிழிலக்கண நூல்கள், தமிழ்ப் பேரகராதிகள்... போதும்... போதும்... இவையெல்லாம் எதற்கு? கணினி யுகத்தில் இவற்றையெல்லாம் யார் படிக்கப் போகிறார்கள் என்கிறீர்களா?

""இத்தகைய பழந்தமிழ் நூல்களைப் படிக்கும், வாங்கும் தமிழ் உணர்வாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்'' என்கிறார் கோ.இளவழகன்.

அவருடைய தமிழ்மண் பதிப்பகத்தின் மூலம் பிற பதிப்பகத்தார் வெளியிடத் தயங்குகிற நூல்களையெல்லாம் பதிப்பித்து, தமிழ்ப் பணியாற்றி வருகிறார் அவர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள அவருடைய பதிப்பகத்தில் புத்தகங்கள் சூழ இருந்த அவரிடம் பேசியதிலிருந்து...

""பழந்தமிழ் இலக்கியங்களின் ஓலைச் சுவடிகளை ஒவ்வோர் ஊராகச் சென்று தேடிக் கண்டுபிடித்து வெளிக்கொண்டு வந்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர். அவருடைய அரும் தமிழ்ப் பணியைப் போல இக்காலத்தில் கூட யாரும் செய்ய முடியாது. அவரைப் போன்ற  நமது முன்னோர்கள் நமக்களித்துச் சென்ற தமிழ் இலக்கியச் செல்வங்கள் அழிந்து போகாமல் இருக்க அவற்றை மீண்டும் மீண்டும் பதிப்பித்து வெளியிட வேண்டிய தேவை இருக்கிறது. அந்தத் தேவையை நிறைவு செய்வதே என் பணி'' என்கிறார் அவர்.

""நான் பிறந்தது 1948-இல். என் பதினேழாவது வயதில் தமிழ்நாட்டில் ஒரு பேரலை எழுந்தது. அது இந்தி எதிர்ப்புப் போராட்டம். மாணவனாகிய நான் அதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டேன். 48 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். அந்தப் போராட்டம் எனக்குள் விதைத்தது தமிழார்வம். தமிழ் இனம், பண்பாட்டின் மீது மாறாத பற்றை அந்தப் போராட்டம் எனக்கு ஏற்படுத்தியது.

பாரதிதாசன், பெரியார், அண்ணா போன்றவர்களின் தாக்கம் என்னுள் ஆழப் பதிந்தது. பள்ளிக் கல்வியை முடித்ததும் மின்வாரியத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். என்றாலும் என் தமிழ்க் காதல், பொதுப்பணியில் ஈடுபடும் ஆர்வம் எனக்குள் வற்றாமல் இருந்தது.

அதன் பிறகு நான் பிறந்த உறந்தையான்குடிக்காட்டில் - அது தஞ்சை மாவட்டம் உரத்தநாடு வட்டத்தில் உள்ளது- "ஊர் நலன் வளர்ச்சிக் கழகம்' என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி ஊர்ப் பொதுப்பணிகளில் ஈடுபட்டேன்.

"தமிழர் உரிமைக் கழகம்' என்ற பெயரில் இன்னும் ஓர் அமைப்பை ஏற்படுத்தி, தமிழ்மொழி, தமிழ் இன மேம்பாட்டுக்காக உழைத்துக் கொண்டிருந்தேன்.

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. பலர் குடிக்கு அடிமையாகி சீரழியத் தொடங்கினர். 1972-73-ஆம் ஆண்டுகளில் குடிப்பதை எதிர்த்து எங்களுடைய ஊர்ப்பகுதியில் நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். பக்கத்து ஊரில் குடித்துவிட்டு எங்களூரைக் கடந்து யார் சென்றாலும் அவர்களைப் பிடித்து எங்களூரில் உட்கார வைத்துவிடுவோம். குடிக்கு எதிரான எங்களுடைய இந்த நடவடிக்கைகள் தமிழகத்தின் பல இடங்களிலும் எதிரொலித்தது.

1975-இல் தமிழகச் சட்டமன்றத்தில் அன்றைய முதல்வரால் மதுவிலக்குத் திட்டம்,  உரத்தநாட்டுத் திட்டம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டது'' என்கிறார் பெருமையாக.

மின்வாரியப் பணியில் 20 ஆண்டுகள்  இருந்த அவர், அந்தப் பணியை விட்டுவிட்டு முழுநேர தமிழ்ப் பணிக்கு மாறியிருக்கிறார்.

""இயல்பாக என்னுள் ஊற்றெடுத்த தமிழார்வம், தனித்தமிழ் இயக்கத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தேவநேயப் பாவாணரும், பெருஞ்சித்திரனாரும் எனது வழிகாட்டிகளானார்கள். நம்மால் முடிந்த தமிழ்ப் பணியைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. நல்ல தமிழ் நூல்களைத் தேடிப் பிடித்துப் பதிப்பித்தால் என்ன? என்று தோன்றியது. அதுவே தமிழ்மண் பதிப்பகத்தைத் தொடங்கக் காரணம்'' என்ற அவர், 1907 இல் ஆப்ரகாம் பண்டிதரால் எழுதப்பட்ட "கருணாமிர்த சாகரம்' என்ற முதல் புத்தகத்தை 1995 இல் தஞ்சையில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் நாட்டில் வெளியிட்டிருக்கிறார். அதற்குப் பிறகு  "கருணாமிர்த சாகரத் திரட்டு' என்ற ஆபிரகாம் பண்டிதரின் இரண்டாம் புத்தகத்தையும், முதல் புத்தகத்தையும் சேர்த்து"தமிழிசைக் களஞ்சியம்' என்ற பெயரில் 2009}ஆம் ஆண்டில் ஏழு தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்.

""இந்தப் புத்தகங்கள் தமிழிசையின் பெருமையைப் பேசும் புத்தகங்கள். அதனால்தான் அவற்றை வெளியிடும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது'' என்கிறார் அவர்.

""19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த தமிழுக்கு அருந்தொண்டாற்றிய தமிழறிஞர்களின் நூல்களைப் பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பினேன். தேவநேயப் பாவாணரின் நூல்கள், சாமிநாத சர்மா நூல்கள், ந.மு.வேங்கடசாமி நாட்டார் நூல்கள், ந.சி.கந்தையாவின் அகராதிகள், மயிலை சீனி.வேங்கடசாமி நூல்கள், சாமி.சிதம்பரனார் நூல்கள், திரு.வி.க.வின் நூல்கள், தி.வே.கோபாலையர் நூல்கள் என இவர்கள் எழுதிய எல்லா நூல்களையும் தொகுத்து வெளியிட்டேன்.

அதுமட்டுமல்ல, சங்கத்தமிழ் இலக்கியங்களான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம் உரைகளுடன், ஐம்பெரும் காப்பியங்கள் என பல நூல்களை வெளியிட்டேன். இன்று நம்மிடையே அருந்தமிழ்ப் பணியாற்றிவரும் இரா.இளங்குமரனாரின் நூல்களையும் வெளியிட்டேன். இப்படி நல்ல பல தமிழ்நூல்களை வெளியிட்டதன் மூலம் தமிழகம் முழுவதும், ஏன் உலகம் முழுவதும் உள்ள தமிழார்வலர்களின் தொடர்பு எனக்குக் கிடைத்தது. அவர்கள் என் நூல்களை வாங்கி, பரப்பி ஆதரவு தருகிறார்கள்'' என்கிறார் பெருமையுடன்.

என்றாலும் காலம் மாறிவிட்டிருக்கிறது. மழலையர் பள்ளியில் இருந்து உயர் ஆராய்ச்சி படிப்பு வரை ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. பட்டம் பெற்ற மாணவர்களால் கூட தமிழைத் திக்காமல் திணறாமல் வாசிக்க முடிவதில்லை. தமிழ்ப் புத்தகங்கள் படிக்கும் பழக்கமும் குறைந்து போயிருக்கிறது. சங்கத் தமிழ் நூல்கள் இருக்கும் திசையில் தலை வைத்துப் படுக்கவே பலர் விரும்புவதில்லை. இப்படிப்பட்ட சூழலில் இந்த நூல்களைப் பதிப்பிப்பதால் என்ன பயன்? யார் வாங்குவார்கள்? என்ற கேள்வியை எழுப்பினோம்.

""ஆங்கில மோகம் நம்மைப் பிடித்திருக்கிறது என்பது உண்மைதான். அதற்காக நான் மக்களைக் குறை சொல்லமாட்டேன். தமிழ் வாழ்க.. இந்தி ஒழிக என்று போராடினோம். இந்தித் திணிப்பை நம்மால் ஓரளவு தடுக்க முடிந்தது. ஆனால் தமிழை வாழ வைக்க நம்மால் முடிந்ததா? அதற்கு நம் ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள்? தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்குத்தான் அரசு வேலை என்று அறிவிக்கட்டுமே... எவ்வளவு பேர் தமிழ் வழிக் கல்வி பயில ஆர்வமாக முன் வருவார்கள்? அப்படியானால் குறை மக்களிடம் இல்லை. ஆங்கிலத்தை மொழி என்ற முறையில் கற்றுக் கொள்வதில் தவறில்லை. அதன் மூலமாகவே எல்லாக் கல்வியையும் கற்பதுதான் தவறு. அதுவுமில்லாமல் ஆங்கில வழிக் கல்வி உலகத்திலேயே அமெரிக்காவிலும், பிரிட்டனிலும், ஆஸ்திரேலியாவிலும், ஸ்விட்சர்லாந்திலும்தான் உள்ளது. பிறநாடுகளில் எல்லாம் தாய்மொழி வழியில்தான் கல்வி கற்கிறார்கள். நோபல் பரிசு பெற்ற பல அறிஞர்கள் தாய் மொழி வழிக் கல்வி கற்றவர்கள் என்பதை மறுக்க முடியுமா?'' என்று சூடான அவரிடம், ""உலகத்தில் பல தொழில்நுட்ப நூல்கள் எல்லாம் ஆங்கிலத்தில்தானே உள்ளன?'' என்றோம்.

""அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? தமிழில் பல தொழில்நுட்ப நூல்களைக் கொண்டு வர வேண்டும். அப்படிப்பட்ட நூல்களைக் கொண்டு வரும் எண்ணம் எனக்குள்ளது. அறிவியலின் பல துறைகளுக்கான கலைச்சொற்களை உருவாக்க வேண்டும். செருமனியிலும், இத்தாலியிலும், பிரான்சிலும், ஜப்பானிலும் அப்படித்தான் உருவாக்கியிருக்கிறார்கள். அவரவர்களுடைய தாய்மொழியின் மூலம்தான் எல்லா அறிவுகளையும் தெரிந்து கொள்கிறார்கள்; கற்றுக் கொள்கிறார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? பிரெஞ்ச் மொழியில் பிற மொழிச் சொற்களைக் கலந்து எழுதினால் தண்டனை உண்டு. எனவே வருங்காலத்தில் ஆங்கில வழியில் படித்தால்தான் வேலை வாய்ப்பு என்று சொல்வதெல்லாம் வெறும் மாயை. என்னைப் பொறுத்த அளவில் தமிழ் தேசிய உணர்வை, தமிழர்களின் உரிமையை, தமிழ் மொழியைக் காக்க வேண்டும் என்ற உணர்வை தமிழ் இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காகத்தான் இம்மாதிரியான நூற்களை வெளியிடுகிறேன்'' என்கிறார் அவர்.

நல்ல தமிழ் நூல்களை வெளியிட வேண்டும் என்ற உணர்வால் வெளியிட்டாலும், வெளியிடப்பட்டவை எல்லாம் விற்று இழப்பை ஏற்படுத்தாமல் இருந்தால்தானே தொடர்ந்து நூல்களை வெளியிட முடியும்? என்ற ஐயம் நமக்குள் எழாமல் இல்லை. அதைப் புரிந்து கொண்டவர் போல, அவரே பேசினார்:

""இந்தப் பதிப்பகத்தின் மூலம் பெரும் பொருள் ஈட்டலாம் என்று ஒரு நாளும் நான் நினைத்ததில்லை. அதேசமயம், பல தமிழார்வலர்களின் தொடர்புகளாலும், நான் தொய்ந்து போகிறபோது தூக்கிவிடுகிற அவர்களின் உதவிகளாலும்தான் நான் தொடர்ந்து பணியாற்ற முடிகிறது. நல்ல தமிழ் நூல்களை வெளியிட்டோம் என்ற மனநிறைவு ஒன்றுதான் தொடர்ந்து என்னை இயங்கும்படி செய்கிறது'' என்கிறார் மகிழ்ச்சியாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com