ஏழை மாணவர்களுக்கு உதவும் இளைஞர்!

சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தும், உயர்கல்வி கற்க வழியின்றித் தவிப்பவர்களுக்கும், கல்வி கற்க ஆசையிருந்தும் வசதியில்லாமல் கலக்கமடைபவர்களுக்கும் கலங்கரை விளக்கமாக இருந்து சத்தமின்றி உதவிகளைச் செய்து வருகிறார் கிராமத்து இளைஞர் ஒருவர்.
ஏழை மாணவர்களுக்கு உதவும் இளைஞர்!

சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தும், உயர்கல்வி கற்க வழியின்றித் தவிப்பவர்களுக்கும், கல்வி கற்க ஆசையிருந்தும் வசதியில்லாமல் கலக்கமடைபவர்களுக்கும் கலங்கரை விளக்கமாக இருந்து சத்தமின்றி உதவிகளைச் செய்து வருகிறார் கிராமத்து இளைஞர் ஒருவர்.

எவ்வித பிரதிபலனும் பார்க்காமல், சிறுவயதில் தான் கல்வி கற்பதில் ஏற்பட்ட சிரமங்கள், கல்வி கற்க விரும்பும் யாருக்கும் வரக்கூடாது என்ற உன்னத நோக்கத்தோடு சேவையாற்றி, ஏழை மாணவர்கள் வாழ்வில் உயர வழிகாட்டி வருகிறார் கடையநல்லூர் அருகேயுள்ள நெடுவயலைச் சேர்ந்த 40 வயது இளைஞர் ரா.நாராயணன். 40 வயதில் குடும்பத்திற்காக மட்டுமே உழைத்து முதியவர்களாக மாறி வருபவர்கள் மத்தியில், மற்றவர்களுக்கு உதவி செய்து என்றும் இளைஞராக உலா வருகிறார் நாராயணன்.

ஆடிட்டராகப் பணியாற்றி வரும் அவரின் பன்முகச் சேவைகளைப் பாராட்டி, கல்வி நெறிச்செம்மல், தியாகச் செம்மல். சேவைத்திலகம், மாமனிதர், சமூகஆர்வலர் உள்ளிட்ட பட்டங்களை பல்வேறு சமூக அமைப்புக்கள் வழங்கியுள்ளன. இப்படி இளைஞர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வரும் அவர் கூறியது:

""சாப்பிடுவதற்கு மீன் கொடுப்பதற்குப் பதிலாக மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால் அது அவரது வாழ்க்கையை உயரத்தில் கொண்டு செல்லும் எனக் கூறுவதுண்டு. அந்தக் கருத்தை மையமாகக் கொண்டே நான் உதவிகளைச் செய்து வருகிறேன். குறிப்பாக படிக்க வேண்டும் என ஆசைப்பட்டும், குடும்பச் சூழல் காரணமாகப் படிக்க முடியாதவர்களுக்கு உதவி செய்வதை முதற்பணியாகச் செய்து வருகிறேன். அது தவிர கல்விக்கு உதவி புரியும் நூலகங்களுக்கும் புத்தகங்கள், மேசைகள், நாற்காலிகளை வாங்குவதற்கு உதவி வருகிறேன். எனது பெரும்பாலான உதவிகள் மாணவர்களின் வாழ்க்கையை உயர்த்தும் வகையிலான உதவிகளாகத்தான் இருக்கும்'' என்றார்.

கல்வி உதவித்தொகை பெற இவரை அணுகும் மாணவர், மாணவிகள் அந்தக் கல்வி நிறுவனத்தில் கட்ட வேண்டிய கல்விக்கட்டணம் உள்ளிட்டவற்றின் நகலை கொடுத்தால் மட்டும் போதும். உண்மையிலேயே அவர்கள் சிரமப்படுபவர்களாக இருந்தால் உடனடியாக முழுத்தொகையையும் அவர் கொடுத்து வருகிறார்.

மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி, ஐடிஐ என இவரின் உதவியால் படித்து வருபவர்களின் எண்ணிக்கை 500-க்கும் மேல் இருக்கும் என்கின்றனர் இவரால் பலனடைந்தவர்கள்.

தென்காசி திருவள்ளுவர் கழகம் ஆடிட்டர் நாராயணனின் சமூக சேவையைப் பாராட்டி தவத்திரு பொன்னம்பல அடிகளார் தலைமையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே.இலக்குமிகாந்தன்பாரதி முன்னிலையில் கல்விநெறிச் செம்மல் பட்டத்தை வழங்கியுள்ளது.

மேலும், கல்வி தவிர்த்து சிரமப்படும் குடும்பங்கள் பலவற்றிற்கு ஒவ்வொரு மாதமும் தேவைப்படும் அரிசி உள்ளிட்ட அனைத்து வகை மளிகைச் சாமான்களை இடைவிடாது வழங்கி வருவதுடன், மாணவர்களுக்கு இலவசமாக நோட்டுகளையும்,கல்வி உபகரணங்களையும் அவர் வழங்குகிறார். மேலும் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு பாத்திரங்களை முழுமையாக வழங்கி வருவதையும் அவ்வப்போது செய்து வருகிறார். தையல் எந்திரங்கள், தேய்ப்பு பெட்டிகள் அளிப்பது உள்ளிட்ட சேவைகளையும் அவர் செய்து வருவதைக் கெüரவிக்கும் வகையில் அரிமா சங்கம் அவருக்கு சமூக ஆர்வலர் என்ற விருதினை வழங்கியுள்ளது. அவரின் ஒட்டுமொத்த சேவையைப் பாராட்டி தமிழ்நாடு சாதனையாளர்கள் கூட்டமைப்பு "மாமனிதர்' என்ற பட்டத்தை வழங்கி பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனக்குக் கிடைக்கும் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை மற்றவர்களுக்காகச் செலவிடும் இந்த இளைஞரின் சேவை போற்றுதலுக்குரியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com