Enable Javscript for better performance
இதழியல் துரோணாச்சாரியார்! கே. வைத்தியநாதன்- Dinamani

சுடச்சுட

  

  இதழியல் துரோணாச்சாரியார்! கே. வைத்தியநாதன்

  By DN  |   Published on : 06th August 2016 12:10 PM  |   அ+அ அ-   |  

  3

  அப்போது எனக்கு சுமார் 10 வயதுதான் இருக்கும். நான் கேரளாவில் என்னுடைய தாத்தாவின் வீட்டில் விடுமுறைக்காகத் தங்கியிருக்கிறேன். வாரம் தவறாமல் திருச்சூரிலிருந்து ஆனந்த விகடன் கொண்டு வந்து வீட்டில் கொடுக்கும்படி என்னுடைய அப்பாவின் உத்தரவு. எதற்கு தெரியுமா? நான் தமிழ் படிப்பதற்கு.
   ÷அப்போது விகடனில் வந்து கொண்டிருந்த "வாஷிங்டனில் திருமணம்' தொடர் கதைதான் எனது அரிச்சுவடி. வாரா வாரம் கதையைப் படித்து பாட்டி எனக்கு விளக்கம் சொல்லித் தருவார். பிறகு நான் அதை எழுத்துக் கூட்டி படித்துப் பழகுவேன், எழுதிப் பார்ப்பேன்.
   ÷இன்றைக்கும் கூட நினைத்துப் பார்த்தால் எனக்கு அதிசயமாக இருக்கிறது. ஏகலைவனாகவே இருந்திருக்க வேண்டிய நான், அர்ஜுனனாக மாறுவேன் என்று கனவுகூட கண்டதில்லை.
   ÷எனது வாழ்வில் மறக்க முடியாத தொடர்பாக ஒன்றிப் போய் விட்டிருந்த சஞ்சய் பாபு (சஞ்சய் காந்தி) மறைந்த செய்தியைக் கேட்டு திடுக்கிட்டு போயிருந்த நேரத்தில் மனதைச் சாந்தப்படுத்த எழுதிய கட்டுரை அது. கட்டுரையை சாவி இதழுக்கு தபாலில் சேர்த்துவிட்டு தில்லிக்கு கிளம்பிவிட்டேன்.
   ÷அடுத்த வாரம் யாரோ ஒருவர் கையில் வைத்துக் கொண்டிருந்த சாவி இதழை வாங்கிப் புரட்டினால் அதில் எனது சஞ்சய் பாபு பற்றிய கட்டுரை என்னைப் பார்த்து அட்டகாசமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. அட நான் எழுதிய கட்டுரை... எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தை எப்படி எழுதுவது சாரி, முடியவில்லை.
   ÷அதிலிருந்து தொடங்கிய தொடர்பு நாளுக்கு நாள் வளர்ந்து சாவி இதழில் ஒருவனாகவே என்னை மாற்றி விட்டது. ஆசிரியர் குழுவிலும் இணைத்து விட்டது. என்னைப் பொருத்தவரை, எனது ஆசான் திரு சாவி அவர்கள்தான். எனது துரோணாச்சாரியார்.
   ÷ எனக்கு மட்டுமா? திறமைசாலி என்று தோன்றினால் போதும், உடனே கைப்பட கடிதம் எழுதி போட்டு விடுவார். அதில் வேண்டுகோளாக அமைந்த ஓர் ஆணையும் இருக்கும். "எழுதுங்கள்... நிறைய எழுதுங்கள்... எழுதிக் கொண்டே இருங்கள்...' என்று. அவர் எனக்கு அனுப்பிய அந்தக் கடிதங்களை இப்போதும் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறேன்.
   ÷அவருக்குப் பட படவென்று கோபம் வரும். அந்தக் கோபம் எப்படி வருகிறதோ, அதே போல சட்டென்று சாந்தமும் ஆகி விடுவார். யாராக இருந்தாலும் சரி, தவறு என்று பட்டால் முகதாட்சண்யமே பார்க்காமல் விமர்சிக்கவும் செய்வார். நன்றாக எழுதும்போது அவரிடமிருந்து பாராட்டை எதிர்பார்ப்பவர்கள், குற்றம் காணும்போது அவர் விமர்சிக்கக் கூடாது என்று சொன்னால், அது என்ன நியாயம்?
   ÷சாவி அலுவலகத்தின் அந்தந்த வார இதழுக்கான கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து லே அவுட் எப்படிப் போட வேண்டும் என்று தீர்மானித்து புரூப்பை படித்து பார்த்து சரி செய்து இதழ் அச்சாகி வருவது வரை எல்லாமே அவருடைய நேரடிப் பார்வையில்தான் நடக்க வேண்டும். முதலில் எல்லாம் இவர் ஏன் எல்லா வேலைகளையும் தனது தலையில் போட்டுக் கொண்டு கஷ்டப்படுகிறார் என்று நான் நினைத்தது உண்டு.
   ÷எனது இந்த சந்தேகம் விரைவிலேயே தீர்ந்துவிட்டது. அவர் ஜப்பான் போயிருந்த சமயம், உதவியாளர்களான எங்களது கண்காணிப்பில் வெளிவந்த "சாவி' இதழைப் பார்த்தபோது அவர் தன்னை வருத்திக் கொள்வதன் காரணம் புரிந்துவிட்டது. அட்டைப் படத்திலிருந்து பக்கத்திற்கு பக்கம் இருக்கும் அவரது அனுபவ முத்திரைகள் அந்த இதழில் இருக்கவில்லை.
   ÷அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு "ஆஹோ ஓஹோ' என்று அவரால் பிரபலமாக்கப்பட்ட ஒருவர் அவரை விட்டு அகன்றபோது "வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
   ÷"திறமைசாலியைத் தேடிப் பிடித்து, உற்சாகம் கொடுத்து வாய்ப்பையும் கொடுத்து முன்னுக்கு கொண்டு வருகிறோம். அவர் பிரபலமானால் அவரை வைத்து நம்முடைய பத்திரிகையும் பிரபலமாகுமே என்கிற நைப்பாசையும் ஒரு காரணம்.
   ÷""கொஞ்சம் பிரபலமானதும், பிரபலமான பத்திரிகைகளைத் தேடிப் போயிடறாங்க. நாம அவங்களை பிடிச்சு கட்டிப் போடவா முடியும்? அதேபோல இன்னொரு திறமைசாலியைக் கண்டுபிடிக்கணும். தயார் பண்ணனும். தொடர்ந்து அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். அதுக்குள்ள காலம் ஓடிப்போயிடறது.
   ÷ஆத்ம திருப்தின்னு ஒன்னு கிடைக்குதே அதுவே பெரிய விஷயமில்லையா? உங்களையே எடுத்துக்குங்கோ.. நீங்கள் எந்த பத்திரிகையிலே எழுதினாலும், "என்ன முதன் முதலா எழுத வைச்சு வளர்த்தவர் இவர்தான்'னு நீங்க என்னென்னைக்கும் நினைச்சு பார்க்காமலா இருப்பீங்க? எனக்கு அதுவே போதும்''.
   ÷அவர் என்ன நம்பிக்கையில் என்னிடம் அப்படியொரு தன்னிலை விளக்கம் தந்தார் என்று தெரியவில்லை. இன்றுவரை நான் பேனா பிடிக்கும் போதெல்லாம், சாவி சாரை நினைக்கத் தவறுவதில்லை.
   ÷ஆசிரியர் சாவி நவகாளிக்குப் போய் அண்ணல் காந்தியுடன் இருந்தது இரண்டே நாள்தான். அவருடன் பேசியதோ, ஒரே ஒரு நிமிஷம்தான். ஆனால் அந்த அனுபவத்தை அவர் எழுத்தில் வடித்திருப்பதைப் படித்தால், அண்ணல் காந்தியடிகளை நேரில் பார்த்து, அவருடன் நீண்ட நாள்கள் தங்கியிருந்த அனுபவத்தை ஏற்படுத்துகிறது. அதுதான் எங்கள் எழுத்துலக ஆசான் சாவியின் தனித்திறமை.
   ÷""நவகாளி யாத்திரை'' புத்தகத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ""கல்கி'' வார இதழில் தொடராக வெளிவந்த ""நவகாளி யாத்திரை'' புத்தக வடிவம் பெற்றபோது, அதற்கு அணிந்துரை அளித்திருப்பது சாட்சாத் ஆசிரியர் கல்கி. தங்கத்தில் வைரம் பதித்ததுபோல அப்படியொரு அசாத்தியமான அணிந்துரை.
   ÷""நவகாளி யாத்திரை'' புத்தகத்தில், ஹிந்தி பிரசார சபாவின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்திற்கு காந்திஜி வந்ததையும், காந்திஜியின் மதுரை, பழநி விஜயத்தையும் பற்றிய சாவி சாரின் இரண்டு கட்டுரைகளையும் இணைத்திருக்கிறார்கள். காந்திஜியின் தமிழக விஜயம் பற்றிய கட்டுரை மலைப்பையே ஏற்படுத்துகிறது. இப்போதெல்லாம் பெரிய பெரிய தலைவர்களுக்கே பிரியாணிப் பொட்டலமும், பணமும் தருவது போதாது என்று பஸ்ஸிலும், வேனிலும் கூட்டத்தை அழைத்து வரவேண்டி இருக்கிறது. ஆனால், காந்திஜியைப் பார்க்க, எந்தவித வசதியுமில்லாத காலத்தில் கூடிய கூட்டத்தைப் பற்றி சாவி சார் விவரிக்கும்போது அந்த மகாத்மாவின் ஆளுமை ஆச்சரியப்பட வைக்கிறது.
   ÷ஆசிரியர் சாவி ஒருமுறை தமது படைப்புகளைப் பற்றிக் கூறும்போது, தமக்குப் பிடித்த படைப்புகள் என்று குறிப்பிட்டவை, நவகாளி யாத்திரை, சிவகாமியின் செல்வன் மற்றும் வழிப்போக்கன் ஆகிய மூன்றினையும்தான். "வழிப்போக்கன்' ஆசிரியர் சாவிக்குப் பிடித்திருந்ததற்குக் காரணம், அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில அனுபவங்களின் பின்னணியில் உருவான நாவல் அது என்பதுதான்!
   ÷ஆசிரியர் சாவி எழுதிய, "சிவகாமியின் செல்வன்' காமராஜ் என்கிற மாமனிதரின் பல்வேறு பரிமாணங்களைப் படம்பிடித்துக் காட்டுவதுடன், சுதந்திர இந்தியாவின் மிகவும் முக்கியமான காலகட்டங்களான 1947 மற்றும் 1969 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களின் பின்னணிகளைப் பதிவு செய்யும் ஆவணமாகவும் விளங்குகிறது.
   ÷ஒரு நாள் இரவு சுமார் எட்டு மணி இருக்கும். அவரது மகன்கள் பாச்சாவும், மணியும் உடனிருந்தார்கள். திடீரென்று சாவி சார் பேசத் தொடங்கினார்.
   ""அரசியல் தலைவர்களானாலும் சரி, பத்திரிகை ஆசிரியர்களானாலும் சரி, உருவாக்கும் சீடர்களால்தான் அவர்கள் நினைவு கூறப்படுவார்கள். எங்கள் ஆசிரியர் கல்கியின் பெருமை என் போன்ற பலரை உருவாக்கியதுதான். நாங்கள் அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்'' என்று சொன்னார் சாவி. அது எவ்வளவு உண்மை என்பதை நான் இப்போது அனுபவப் பூர்வமாக உணர்கிறேன். எங்கள் சாவி சார் பற்றிப் பேச என்னைப் போலப் பலர் இருக்கிறார்கள். அவரது காலத்தில் வாழ்ந்த, ஏனைய பத்திரிகை ஜாம்பவான்கள் குறித்து "எங்கள் ஆசிரியர்' என்று பெருமையுடன் கூறிக் கொள்ள யாரும் இல்லை!
   ÷ஆசிரியர் சாவியுடன், அவருக்கு உதவியாகப் பணியாற்றிய அந்த ஐந்தாண்டுகள்தான், பத்திரிகையாளனாக இன்று நான் பணியாற்றுவதற்குப் பெற்ற பயிலரங்கம். அதைப் பற்றி தனிப் புத்தகமே எழுதலாம். எழுத வேண்டும்...! ய்
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai