புதிய பாதைகளைத் திறந்தவர்! மாலன்

வேலைக்குச் செல்லும் அவசரத்தில் விரைந்து கொண்டிருந்தான் சுப்ரமண்ய ராஜூ. எதிர்சாரியில் அவன் செலுத்திக் கொண்டிருந்த மோட்டார்
புதிய பாதைகளைத் திறந்தவர்! மாலன்

வேலைக்குச் செல்லும் அவசரத்தில் விரைந்து கொண்டிருந்தான் சுப்ரமண்ய ராஜூ. எதிர்சாரியில் அவன் செலுத்திக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்து வலக்கையை உயர்த்தி அசைத்தான். அது அவன் சொல்லும் அவசர "ஹலோ' எனக் கருதிய நான், பதிலுக்குக் கையசைத்து விட்டு என் வாகனத்தைச் செலுத்தினேன். அவன் தனது மோட்டார் சைக்கிளை "யூ' டர்ன் அடித்து விரைந்து வந்து என் ஸ்கூட்டரின் முன் நிறுத்தினான். அப்போது கிண்டி ராஜ்பவன் சாலையின் நடுவே குறுக்குச் சுவர் கிடையாது.
 நானும் அவனும் அநேகமாக வாரத்திற்கு மூன்று முறையாவது, தி.நகரில் உள்ள இந்தியா காபி ஹவுஸ் எதிரில் உள்ள பஸ்ஸ்டாண்ட் காம்பவுண்ட் சுவரில் உட்கார்ந்து கொண்டு இலக்கியம், எக்சிஸ்டென்ஷியலிசம் எனப் பல விஷயங்களை அரட்டை அடிப்பதுண்டு. அவன் அப்போது சாவி ஆரம்பித்த பத்திரிகையிலும் எழுதிக் கொண்டிருந்தான். என் கதை ஒன்றையும் வாங்கிக் கொண்டு போயிருந்தான். அதைப் பற்றி ஏதேனும் சொல்லப் போகிறான் என்று நினைத்துக் கொண்டேன்.
 ""சாவி சார் உன்னை நாளைக்கு ஆபீசுக்கு வரச் சொன்னார்'' என்றான் மொட்டையாக.
 ""கதை பற்றிப் பேசவா?''
 அப்போது நாங்கள் எழுதும் கதைகளில் எத்தனை பெரிய ஆசிரியராக இருந்தாலும் எங்கள் அனுமதி இல்லாமல் கைவைக்கக் கூடாது எனப் பிடிவாதமாக இருந்தோம். அதற்காக அவர்கள் அலுவலகம் தேடிப் போய் சண்டைகள் போட்டிருக்கிறோம். அந்த மாதிரி ஒரு சண்டை வீடு தேடி வருகிறதோ? என நினைத்தேன்.
 ""அதெல்லாம் எனக்குத் தெரியாது, வரச் சொன்னார், போய்ப் பார்.''
 ""நீ நாளைக்கு அங்கிருப்பியா?''
 ""ஆபீஸ் முடிந்ததும் வருவேன்''
 ஆனால் வரவில்லை. ஆறரை ஆயிற்று. ஏழாயிற்று. ஆளைக் காணோம். எனக்குக் கோபம் வரவில்லை. அவனுக்கு வாய்த்தது தலையைத் தின்னும் வேலை என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
 அவன் இல்லாமலே நானே போய் சாவி சாரைச் சந்தித்து விடுவதா அல்லது இன்னொரு நாள் அவனோடு வந்து பார்ப்பதா என்று எனக்குள் கேள்விகள் முளைத்தன. நானே போய்ப் பேசினால் என் கதையைப் போடச் சொல்லிக் கெஞ்ச வந்திருப்பதாக எண்ணி என்னைக் குறைவாக மதிப்பிடுவார்களோ என்ற எண்ணமும், அவர்தானே வரச் சொன்னார் என்ற கேள்வியும் மனதுக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தன. நான் சாவி சார் அறை முன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தேன்.
 ஏழு மணி இருக்கும். சாவி சார் அறைக் கதவைத் திறந்து கொண்டு வந்தார். புகைப்படங்களில் பார்த்ததைப் போலவே, தும்பைப் பூ போல வேட்டி. மேலே தூய வெண்ணிற அரைக் கைச் சட்டை. சீராக வாரிய வெள்ளி இழைகளாளான தலை. வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார் எனத் தெரிந்தது.
 நான் எழுந்து நின்றேன். அவர் என்னை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தார்.
 ""மாலனா?'' என்றார்.
 ஆமோதித்துத் தலையாட்டினேன்.
 ""வாங்க'' என்று மீண்டும் அறைக்குத் திரும்பினார். உட்காரச் சொல்லி பேச ஆரம்பித்தார். ""ராஜு சொன்னார். எங்க பத்திரிகைக்கு எழுதலாமே?'' என்றார்.
 ""ராஜூ கிட்ட ஒரு கதை கொடுத்திருக்கேன்''
 ""கதை இருக்கட்டும் சார். எல்லாரும்தான் கதை எழுதுறாங்க. உங்க கதை அடுத்த வாரம் வந்திடும். வேற விஷயங்களும் எழுதலாமே?'' என்றார்.
 வேற என்ன எழுதுவது? நான் இலக்கியவாதி அல்லவோ என்ற கேள்வி மனதில் ஓடியது.
 சாவி சாரே தொடர்ந்தார். ""அரசியல் கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்களாமே?''
 ""ம். ஒன்றிரண்டு. கணையாழியில் தில்லியில் இருந்த கஸ்தூரி ரங்கன் ஏதோ ஒரு விஷயம் பற்றி எழுத ஒரு backgrounder கேட்டிருந்தார். நான் தயாரித்து அனுப்பிய அதை கட்டுரையாகவே வெளியிட்டு விட்டார்.''
 ""இங்கேயும் எழுதலாம். அடுத்த வாரத்திற்கே ஏதாவது எழுதுங்கள். ஒரு பக்கத்திற்குள் வருவது போல பகிரங்க கடிதம் எழுதுங்களேன்'' என்றார்.
 பகிரங்கக் கடிதம் அந்த வாரச் செய்தியில் அடிபடும் பிரபலத்திற்கு அதைக் குறித்து, விமர்சனம், கேள்வி, கேலி, சீண்டல் எல்லாம் கலந்து, ஆனால் ஒரு பக்க அளவில் எழுத வேண்டும். அதில் இருந்த சவால் என்னை வசீகரித்தது.
 வரும் வழியில் ஒரு மாலை நாளிதழ் வாங்கினேன். 16 வயதினிலே வெற்றி விழாக் கூட்டத்தில், பாரதிராஜாவின் திறமையைப் பார்த்து அவர் காலில் விழுகிறேன் என்ற ரீதியில் இயக்குநர் பாலசந்தர் பேசியிருந்தார். ஆகா... அவல் கிடைத்து விட்டது. முதல் பகிரங்கக் கடிதம் பாலசந்தருக்கு. அந்த வாரம் கடிதம் வெளியாகிவிட்டது. ஆனால்-
 அன்புள்ள என்ற வரிக்குக் கீழே மாலன் என்றில்லாமல், தமிழன் என்று இருந்தது. நான் சீற்றத்துடன் சாவி சாரின் அறைக் கதவைத் திறந்து கொண்டு, ""என்ன சார் இப்படிப் பண்ணீட்டிங்களே?'' என்றேன். என்னையறியாமலேயே என் குரல் உயர்ந்திருந்தது.
 சாவி சார், அமைதியாக, ""என்ன?'' என்றார். நான் எழுதிய கடிதம் வேறு யார் பெயரிலேயோ வந்திருக்கிறது என்றேன். ""இதுவும் உங்க பெயர்தான் சார்'' என்றார். ""இந்தப் பெயரில் இனி நீங்கள் நிறைய எழுதப் போகிறீர்கள். அந்தப் பெயரில் நீங்கள் மட்டும்தான் எழுதப் போகிறீர்கள்'' என்றார்.
 சொன்னதைப் போலவே, அந்தப் பெயரிலும், சொந்தப் பெயரிலும், "நசிகேதன்' என்று இன்னொரு புனை பெயரிலும் ஏராளமாக எழுத வாய்ப்பளித்தார். பகிரங்கக் கடிதங்கள், கட்டுரைகள், கேள்வி பதில், சினிமா விமர்சனம், தலையங்கம் எனப் பலவும் எழுதிக் களித்தேன்.
 சாவி சாரிடம் உள்ள ஒரு நல்ல குணம். ஒருவரது எழுத்து அவருக்குப் பிடித்து விட்டது என்றால் அவரைத் தலை மேல் வைத்துக் கொண்டு கொண்டாடுவார். பாலகுமாரனின் "மெர்க்குரிப் பூக்கள்' வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற போது கோயம்புத்தூரில் டவுன் ஹால் அருகே ஒரு முச்சந்தியில் அரசியல் கூட்டம் போல சாலையில் மேடை அமைத்து விழா எடுத்தார்.
 "திசைகள்' இதழ் தொடங்கப்பட்டபோது, "ஆசிரியர் மாலன் வழங்கும் திசைகள்' என்ற ஒற்றை வாக்கியம் மட்டுமே பெரிய எழுத்துக்களில் போஸ்டராக அச்சிடப்பட்டு நகரெங்கும் ஒட்டப்பட்டது. சாவி சார் பெயரோ, பத்திரிகையின் சின்னமோ கிடையாது
 தலையங்கம் எழுதுவது குறித்து ஒரு முறை எனக்கும் அவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. ""இனிமேல் நான் தலையங்கம் எழுதலை சார்'' என்று அவருக்குப் போன் செய்து சொல்லிவிட்டேன். மாலை நான்கு மணி வாக்கில் மறுபடியும் போன். ""இன்னும் தலையங்கம் வரலையே'' என்றார் ராஜாபாதர் என்ற அச்சகத்து ஃபோர்மேன்.
 ""எடிட்டர் கிட்ட கேட்டு வாங்கிங்க'' என்றேன் நான். ""எடிட்டர்தான் உங்களைக் கேட்கச் சொன்னாரு. நான் எழுதலைனு காலையிலேயே அவர் கிட்ட சொல்லிட்டேனே'' என்றேன். உடனே சாவி சாரே லைனில் வந்தார். அவர் போனிலேயே ""இந்தப் பத்திரிகைக்கு ஆயுசு இருக்கிற வரைக்கும், இல்லை நமக்கு ஆயுசு இருக்கிற வரைக்கும் ஒன்று நீங்க தலையங்கம் எழுதணும் அல்லது நான் எழுதணும். எனக்கு இனி ஆயுசு கம்பி. அதனால நீங்கதான் எழுதணும்'' என்றார் குரல் கம்ம.
 மனது நெகிழ்ந்து விட்டது. ஒரு சிறிய கனத்த மௌனத்திற்குப் பின், ""சார், நான் இப்ப கோயம்புத்தூர் கிளம்பிக்கிட்டு இருக்கேன். என் மனைவிக்கு பிரசவ நேரம்'' என்றேன். ""இதெல்லாம் நீங்க சொடக்குப் போடற நேரத்தில் எழுதுவீங்க. நான் ஜெகதீசனை ஸ்டேஷனுக்கு அனுப்பி வாங்கிக் கொள்கிறேன்'' என்று போனை வைத்து விட்டார்.
 எனக்கு ரயிலுக்கு நேரமாகிவிட்டது. நான் ஏதும் எழுதாமல் கிளம்பிவிட்டேன். ஸ்டேஷனில் நுழைந்தேன். ஹிக்கிம்பாதம்ஸ் அருகில் சாவி மேனேஜர் ஜெகதீசன். ""எடிட்டர் லீடர் வாங்கிட்டு வரச் சொன்னாரு''
 நான் அதிர்ந்தேன். ""சரி வாங்க'' என்று அவரை நான் பயணம் செய்யும் பெட்டிக்கு அழைத்துச் சென்று எதிரே உட்காரச் செய்து என் பிரீப்கேசை மடியில் வைத்துக் கொண்டு சிவபெருமான் பூமிக்கு வருவது போல ஒரு சினாரியோ அமைத்துக் கொண்டு அவசரமாக எழுதி கொடுத்தனுப்பினேன்.
 பயணத்தின் மௌனத்தில் யோசித்துக் கொண்டே வந்தேன். என்ன அன்பு! என்ன நம்பிக்கை ! நான்தான் அதீதமாகக் கோபித்துக் கொண்டுவிட்டேனோ? ஒரு பக்க விஷயம். அதை அவரால் எழுதிக் கொண்டிருக்க முடியாதா? பதினைந்து நிமிடத்தில் முடிந்திருக்கும் வேலை. அதற்கு இத்தனை மெனக்கிடலா? அவர் நாற்காலியில் நான் அமர்ந்திருந்தால் இது போல் செய்திருப்பேனா? நிச்சயம் மாட்டேன். ஆனால் அதுதான் சாவி. எண்ணிய எண்ணியாங்கு எய்துபவர்.
 ஒரு வெள்ளிக் கிழமை மாலை. வெள்ளிக்கிழமை எப்போதும் ஆபீசில் பூஜை. தேங்காய் உடைத்து கற்பூரம் காண்பித்து ஒரு பாதித் தேங்காயையும் பழத்தையும் ஆசிரியருக்குக் கொடுத்து விட்டு மற்ற பாதியை கீற்றுப் போட்டு எல்லோருக்கும் கொடுப்பார்கள். பூஜை செய்தவர் அரைத் தேங்காயை எடுத்துக் கொண்டு சாவி சாரிடம் கொடுக்க வந்தார். சாவி சார், என்னைக் கையைக் காண்பித்து, ""அவரிடம் கொடுங்க. இன்னியிலிருந்து அவர்தான் எடிட்டர்'' என்றார். மறுபடியும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.
 ""நாளை நான் ஐரோப்பா டூர் கிளம்பறேன் திரும்ப எட்டு வாரம் ஆகும். எல்லாம் பார்த்துக்கங்க'' என்றார். அப்போது சாவி தொடங்கப்பட்டு 52 வாரங்கள்தான்- அதாவது ஒரு வருடம்- முடிந்திருந்தன. அந்நேரம் நான் சாவி இதழின் முழு நேர ஊழியன் கூட இல்லை. எனக்கு வயதோ 30 தான். இதைப் போன்ற ஒரு மனது வேறு யாருக்கு வரும்?
 சாவி சாரைப் போல ஓர் ஆசிரியரைத் தமிழ்ப் பத்திரிகை உலகம் பார்த்தது இல்லை. எழுத்தாளர்களுக்கு நட்சத்திர அஸ்தஸ்தை உருவாக்கினார். அடுத்த தலைமுறை பத்திரிகையாசிரியர்களை அடையாளம் கண்டார். பல புதிய கதவுகளைத் திறந்த ஓர் அற்புதத் திறவுகோல் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com