சுடச்சுட

  
  31kdr5

  இதர இடங்களில் மண் ஆனது, மொட்டாக முகிழ்த்துக் கொண்டிருந்தபோது, அது மதுரையில்தான் தாமரையாக மலர்ந்தது.  மூன்று தமிழ்ச்சங்கங்களின் வாசனையால் அம்மண், இன்றும் மகரந்தமாக மணக்கின்றது. மெகஸ்தனிஸ், பிளினி, தாலமி, பெரிப்ளூஸ், ஸ்டெராபோ, மார்க்கோபோலோ, இபின் பதூதா போன்ற வரலாற்றாசிரியர்களால் மொடுரா என மழலைத் தமிழால் உச்சரிக்கப்பட்டாலும், நமக்கு அது மதுரமாய் மணக்கிறது.  ஆதியில் கடம்பவனமாய் இருந்த காடு அது.  சிவபெருமான் தலையில் இருந்து கொட்டிய தேன், மதுரமாய் இனித்ததால், அது மதுரை ஆயிற்று.

   பதின்மூன்று மன்னர்களால் நாயக்கர் ஆட்சி, பாண்டி மண்டலத்தில் 200 ஆண்டுகள் கொடி கட்டிப் பறந்தது.  அம்மன்னர்களுள் திருமலை நாயக்கர் (கி.பி.1623 - 1659) தம் சாதனைகளால், தம் பெயரைச் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களில் பொறித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.  முத்து வீரப்ப நாயக்கர் அமரத்துவம் அடைந்தவுடன், அவருடைய தம்பி திருமலை அவ்விடத்திற்கு எழுஞாயிறாய் எழுந்தார்.  மதுரையில்தான் நாயக்கர் ஆட்சி வேர் விட்டது.  ஆனால், அதனை கி.பி. 1616 இல் திருச்சிராப்பள்ளியில் பெயர்த்து நட்டார், முதலாம் முத்து வீரப்பர்  என்றாலும், அதனைத் திரும்பவும் மதுரையிலேயே பதியமிடவேண்டிய காலத்தின் கட்டாயம், திருமலைநாயக்கருக்கு ஏற்பட்டது. 

  31kdr5a.jpg 

  1935 ஆம் ஆண்டு வாக்கில் திருமலை நாயக்கருக்குக் கண்புரை நோய் ஏற்பட்டது.  அப்புரை நீங்க வேண்டுமானால், அன்னை மதுரை மீனாட்சியால்தான் முடியும் என்று கனவில் சொல்லப்பட்டது.  ஒருநாள், மதுரையில் மீனாட்சி செங்கோல் வாங்குகின்ற நாளில், மன்னர் அங்கு சென்றார்.  மீனாட்சி தரிசனம் கண்டார்.  இனி தம் ஆட்சி, அவளுடைய ஆட்சியின் கீழ்தான் என்று முடிவு செய்தவர், மதுரையைத் தலைநகரம் ஆக்கினார் (தகவல் ஜே.எச். நெல்சன்).  மதுரை தலைநகரம் ஆனவுடன் அங்கு இரண்டு கோட்டைகளைக் கட்டினார்.  30,000 படைவீரர்கள் கொண்ட இராணுவத்தை உருவாக்கினார். தலைநகர் மாற்றத்திற்கு வேறொரு காரணமும் சேசுசபை பாதிரிகளால் சுட்டப்பெறுகிறது.  கோல்கொண்டா - பீஜப்பூர் சுல்தான்களுடைய படையெடுப்புகளுக்குத் திருச்சி சற்று சமீபத்தில் இருப்பதாலும், மதுரை தொலைவில் இருப்பதாலும் பாதுகாப்புக் கருதி, தலைநகரத்தை மாற்றியதாகக் கருதுகின்றனர்.  இன்னும் சில வரலாற்றாசிரியர்கள் சமயம் சார்ந்த வாழ்வுக்கு மதுரை மிகவும் உகந்ததாக இருந்ததால், தலைநகர் மாற்றம் என்று எழுதியிருக்கின்றனர்.

   திருமலைநாயக்கர் ஸ்ரீவில்லிபுத்தூரில் தீபாராதனை முடிந்தவுடன்தான் காலை உணவை உட்கொள்வார்.  தீபாராதனை முடிந்த தகவலைத் தெரிவிப்பதற்கு, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை வரையில், கூப்பிடு தூரத்திற்கொரு முரசு மண்டபத்தை நிறுவவும் செய்திருந்தார் மன்னர்.

  31kdr5b.jpg 

  ஆட்சிக்கலை திருமலை மன்னருக்கு வசப்பட்டதுபோல், வேறொருவருக்கும் கைகூடவில்லை எனலாம்.  பிரித்தலும் பேணிக் கொளலும், பிரிந்தாரைப் பொருத்தலும் ஆகிய இராஜ தந்திரக்கலை நாயக்கரின் சுட்டுவிரல் முனையில் இயல்பாகவே கட்டப்பட்டிருந்தது.  காலம் காலமாகக் கலவரப்பட்டுக் கிடந்த சேதுபதி சீமையில் தாமே ஒருவரைச் சேதுபதியாக நியமித்தார்.  அதனால் அச்சேதுபதியைத் திருமலை சேதுபதி என்றே மக்கள் அழைத்தனர்.  தலைக்கோட்டைப் போருக்குப் பிறகு விஜயநகரப் பேரரசு சில்லு சில்லாகச் சிதறியது.  பாளையங்களில் நியமிக்கப்பட்டிருந்த ஆளுநர்கள் அதிகாரப் போட்டியில் குடுமிப்பிடிச் சண்டையில் ஈடுபட்டனர்.  வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட திருமலை நாயக்கர், வேலூரைத் தலைநகராகக் கொண்டிருந்த விஜயநகர வாரிசுக்குக் கப்பம் கட்ட மறுத்து, மதுரையைத் தனியரசாக்கினார்.  முத்துவீரப்ப நாயக்கரால், முடியாத காரியத்தை மன்னர் திருமலை செய்து முடித்தார்.

   திருமலை நாயக்கருக்கு வாளும் கேடயமுமாகவே வடிவெடுத்த, ஒரு சேனாதிபதி வாய்த்திருந்தார்.  இராமப்பய்யன் என்பது அவருடைய பெயர்.  அவரொரு தெலுங்கு அந்தணர்.  மைதானத்தில் இறங்காமல் மனக்களத்திலேயே முக்கால் பகுதிப் போரை முடித்துவிடுவார்.  மன்னர் திருமலை விஜயநகர வாரிசு ரங்கனுக்குக் கப்பம் கட்ட மறுத்ததால், அவன் மைசூர் மன்னனைத் துணைக்கழைத்துக் கொண்டு மதுரை மீது படையெடுக்கத் துணிந்தான்.  திருமலை நாயக்கர் தம்முடைய சாதுர்யத்தால், கோல்கொண்டா சுல்தானை  வேலூரின் மீது படையெடுக்கும்படி ஏவினார் தம்முடைய படைகளையும், தஞ்சை நாயக்கர் படையையும் சுல்தானுக்குத் துணையாக.  வேலூரைக் காப்பாற்ற ரங்கன் மதுரைப் படையெடுப்பைத் தவிர்த்தான்.  என்றாலும், கோல்கொண்டா சுல்தான் வேலூரைக் கைப்பற்றியதால், ரங்கன் மைசூர் மன்னரிடம் தஞ்சம் புகுந்தான்.  மன்னர் திருமலை, சுல்தான் தெற்குப் பக்கம் வராதிருக்கத் தற்காலிகமாகக் கப்பம் கட்டவும் சம்மதித்தார்.

  31kdr5c.jpg 

   ஓர் இடைவேளைக்குப்பிறகு மைசூர் நந்திராஜா மன்னனும், ரங்கனும் ஒன்று சேர்ந்து, மதுரை மீது போர் தொடுக்கப் புறப்பட்டனர்.  இப்போருக்கு மூக்கறுப்புப் போர் என சரித்திர ஆசிரியர்கள் பெயரிட்டனர்.  மைசூர்ப் படையினர் தங்களிடம் சிக்கிய மதுரை வீரர்களைச் சிறைப்பிடித்து, அவர்களுடைய மூக்குகளை எல்லாம் அறுத்து, அக்கைதிகளை மைசூருக்குப் பரிசாக அனுப்பினர்.  நாயக்கரின் படைவீரர்கள், மைசூர்ப் படையினரைச் சிறையெடுத்து, அவர்களுடைய மூக்குகளை எல்லாம் அறுத்து, அக்கைதிகளை மதுரைக்குப் பரிசாக அனுப்பினர்.  மிகவும் உக்கிரமாக நடந்த போரில் திருமலை நாயக்கரே வெற்றி பெற்று, மைசூரையும் தம் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தார்.  அதற்கடுத்து நடந்த திருவாங்கூர்ப் போரிலும் திருமலை நாயக்கரே வென்றார்.

   திருமலை நாயக்கர் காலத்தில் திண்டுக்கல் முக்கியமான கேந்திரமாகக் கருதப்பட்டது.  மைசூர் அரசர்களும், சுல்தான்களும் திண்டுக்கல் வழியாகத்தான் மதுரைக்குள் நுழைய முடியும் என்பதால், திண்டுக்கல் குன்றின்மீது ஒரு கோட்டையைக் கட்டினார் மன்னர் திருமலை.  மைசூர் அரசர்கள் மதுரையை நோக்கிப் படையெடுத்து வந்தபோது, தளபதி இராமப்பய்யன் திண்டுக்கல்லிலேயே அப்படையை வழிமறித்து, முறியடித்தான்.

   திருமலை நாயக்கர் ஆட்சியில் சந்தித்த தலையாயப் போர் சேதுபதிகளோடு தொடுத்த போர்.  சேதுபதி சீமையில் முறையாக ஆண்டு கொண்டிருந்த சடைக்கத்தேவனுக்கும், அவனுடைய முறைசாரா தம்பிக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மூண்டது.  தெற்கு முனையில் ஒரு வல்லரசு நிலைபெற்றுவிடக்கூடாது என எண்ணியிருந்த திருமலை மன்னர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தம்முடைய படையை இராமப்பய்யன் தலைமையில் ஏவினார். இராமப்பய்யன் சகல வித்தைகளையும் பயன்படுத்திய போரில், சேதுபதி படை தோற்றுக் கொண்டே வரவே, சடைக்கத்தேவன் இராமேசுவரம் தீவில் சரண் புகுந்தார்.

   பாம்பனிலிருந்து இராமேசுவரத்திற்குப் படை நடத்திப் போவதற்கு ஒரு பாலம் கட்ட வேண்டும்.  எனவே, இராமப்பய்யன் போர்த்துக்கீசியர் போன்ற பல நாட்டுப் படையுதவியையும் துப்பாக்கிகளையும் பெற்று, சடைக்கத்தேவனைக் கைது செய்து கொணர்ந்ததாக மெக்கன்சி ஏடுகள் தெரிவிக்கின்றன.  திருமலைநாயக்கருக்குக் கிடைத்த வெற்றிகளில், இது ஒரு மகத்தான வெற்றியாகும்.

   என்றாலும், திருமலை நாயக்கருக்கு ஓர் அருள் உள்ளமும் உண்டு.  சடைக்கத்தேவன் சேதுபதியாக இல்லாத காரணத்தால், வடநாட்டிலிருந்து இராமேசுவரத்திற்குத் தீர்த்த யாத்திரை செய்ய வரும் வைராகிகளும், லாட சந்நியாசிகளும் அச்சமின்றி பயணம் செய்வது அரிது என்று கருதி, திருமலை நாயக்கரிடம் முறையிட்டனர்.  மன்னரும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று சடைக்கத்தேவனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தார்.

   திருமலை நாயக்கரின் மங்காப் புகழுக்குக் காரணம், போர்களில் கிடைத்த வெற்றி மட்டும் அன்று.  இன்றும் என்றும் நிலைத்திருக்கும்படியாக அவர் படைத்துச் சென்ற கலைவடிவங்களே அவரை மன்னாதி மன்னனாக்கியது.  மதுரைக்கு வருகின்ற வெளிநாட்டு, உள்நாட்டுப் பயணிகள் மீனாட்சியம்மனைத் தரிசித்துவிட்டு, அடுத்து அவர்கள் நுழைவது திருமலை நாயக்கர் மஹால் ஆகும்.  மன்னர் திருமலை இத்தாலி நாட்டுக் கட்டடக் கலைஞர்களைக் கொண்டு, அதனை நிர்மாணம் செய்தார்.  ராஜபுத்திர கட்டடக் கலையம்சத்தையும், இசுலாமிய கட்டடக் கலையம்சங்களையும், திராவிடக் கட்டடக் கலைநுட்பங்களையும் கொண்டு மஹாலை வடிவமைத்தார். 

   1636 இல் கட்டி முடிக்கப்பட்ட இம்மஹால் தெற்கு மாசி வீதி வரை விரிந்திருந்தது. இந்த அரண்மனை 58 அடி உயரம் கொண்டது.  248 பிரம்மாண்டமான தூண்கள் தாங்கி நிற்கின்றன.  கட்டி முடிப்பதற்கு ஏழு ஆண்டுகள் (1629 - 1636) ஆயின. நவபத் கானா தெருவில் அரண்மனையின் முகப்பு இருந்தது.  நவபத் கானா வாத்யம் என்றுசொல்லப்படும் பதினெட்டு வாத்யங்கள் நாள்தோறும் காலை - மாலைகளில் அரண்மனையின்

  முகப்பில் இசைக்கப்படும்.  அரண்மனையில் சொர்க்கவிலாசம் என்ற பகுதியில் திருமலை மன்னரும், ரங்க விலாசம் எனும் பகுதியில் அவருடைய தம்பியும் வசித்தனர்.  நவராத்திரி விழாவில் ஒன்பது நாளும் மன்னர் திருமலை சொர்க்க விலாசத்தில் கொலு வீற்றிருப்பார்.  பாளையக்காரர்கள் அந்நேரத்தில் வந்து திறை செலுத்துவது வழக்கம்.

   முக்குறுணிப் பிள்ளையார்:

   திருமலை நாயக்கர் தெப்பக்குளம் வெட்டும் முயற்சியில் ஈடுபட்டபோது, தற்செயலாக 6 அடி உயரம் 4 அடி அகலமுள்ள விநாயகர் விக்கிரகம் கிடைத்தது.  இப்பிள்ளையாரைச் சோமசுந்தரப்பெருமாள் சந்நிதிக்குச் செல்லும் வழியில் மன்னரே பிரதிஷ்டை செய்தார்.  முக்குறுணி பிள்ளையாருக்கு 18 படி அரிசியில் செய்யப்பட்ட கொழுக்கட்டை படைக்கப்படும்.

   அரண்மனைக்கு அடுத்து கட்டடக்கலையின் சிறப்புக்களைத் தாங்கி நிற்கும் புது மண்டபம், கிழக்குக் கோபுர வாசலில் அமைந்திருக்கிறது.  இதற்கு வசந்த மண்டபம் என்றொரு பெயரும் உண்டு.  வைகாசி மாதத்தில் வசந்த விழா நடப்பதற்காகக் கட்டப்பெற்றது.  இம்மண்டபத்தின் நீளம் 333 அடி, அகலம் 105 அடி, உயரம் 25 அடி.  124 சிற்பத்தூண்கள் இருக்கின்றன.  திருவிழாக் காலங்களில் குளிர்ச்சி வேண்டுமென்பதற்காக மண்டபத்தைச் சுற்றி தெற்கு - வடக்குப் பகுதிகளில் அகழிகள் வெட்டி, அவற்றில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கிறது.  உள்ளே திருமலை நாயக்கரும் தம்பி முத்தியாலு நாயக்கரும் குதிரையில் சவாரி செய்வது போல் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.  இதன்பின் ஆவணி மூலவீதியைச் சுற்றி மதிலெடுத்துப் புது மண்டபத்திற்கு எதிரில் இராய கோபுரம் ஒன்று கட்டத் திட்டமிடப்பட்டது.  ஆனால் அப்பணி முற்றுப்பெறவில்லை.  அது முற்றுப் பெறாமல் விட்டபடியால் அவ்வாசல் விட்டவாசல் ஆயிற்று.

  31kdr5d.jpg 

   திருமலை நாயக்கர் வைணவ சமயத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும், எந்த மதத்தோடும் பேதம் காட்டியதில்லை.  1635 இல் அம்பாசமுத்திரத்திற்கருகிலுள்ள ஆலடியூர் சிவன் கோயிலுக்கு நிலதானம் செய்திருக்கிறார்.  புதுமண்டபம் கட்டிக் கொண்டிருக்கும்போது, ஊட்டத்தூரிலிருந்து கன்னியாக்குமரிக்கு இடைப்பட்ட சைவ - வைணவ கோயில்களில் 64 இராயர் கோபுரங்களை எழுப்பத் தீர்மானித்து, கால்கோள் விழாவும் நடத்திவிட்டார்.  என்றாலும், அப்பணியை அவரால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.  மேலும், சேதுபதியோடு நடத்திய போரில் போர்த்துக்கீசியர்கள் உதவியமைக்காக இராமேசுவரத்தில் ஒரு மாதா கோயிலையும், பாம்பனுக்கும் - தொண்டினுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏழு மாதா கோயில்களையும் கட்டித் தந்திருக்கிறார்.

   மன்னர் திருமலை திருச்சியிலிருந்து மதுரைக்குத் தலைநகரை மாற்றியவுடனே முதலில் உருவாக்கினது தெப்பக்குளம்.  தெற்கு வடக்கில் 1000 அடி நீளமும், கிழக்கு மேற்கில் 950 அடி அகலமும், 9.5 இலட்சம் சதுர அடிப்பரப்பும் உடையது.  பக்கத்திற்கு 3 படித்துறைகளாக 12 படித்துறைகள் உள்ளன.  தெப்பக்குளத்தின் நடுவில், மைய மண்டபமும் அமைந்துள்ளது.  அம்மண்டபத்தின் நிழல் மையமண்டபத்திலேயே விழும்.  வெளியில் விழாதவாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  இதனை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என்பர்.

   திருமலை நாயக்கர் ஏறத்தாழ 36 ஆண்டுகள் அரசாட்சி செய்துள்ளார்.  பாண்டி நாட்டின் பெரும்பகுதி அவருடைய ஆட்சி அதிகாரத்தில் இருந்தது.  வருடத்திற்குக் கிட் டத்தட்ட 44 இலட்சம் பொன் நாயக்கருக்கு வருமானம் வந்ததாக, டெய்லர் பாதிரியார் எழுதியிருக்கிறார்.  திருமலை நாயக்கர் மதுரை மண்ணை மட்டும் ஆளவில்லை.  மக்களுடைய மனங்களையும் ஆண்டிருக்கிறார்.  ஆட்சிக்கலை, போர்க்கலை, கவின்கலை ஆகிய மூன்று துறைகளிலும் கற்றுத் துறை போகியவராக இருந்த காரணத்தால், அவருடைய ஆட்சிக்காலம், ஒரு பொற்காலமாகத் திகழ்ந்திருக்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai