முகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்
எங்கேயும், எப்போதும்!
By -பாரத் தி. நந்தகுமார் | Published On : 19th June 2016 12:00 AM | Last Updated : 17th June 2016 04:53 PM | அ+அ அ- |

துப்புரவுத் தொழிலாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் 84 பேர் ஒருங்கிணைந்து ரத்த தானம் தொடர்ந்து செய்து வருகின்றனர். இவர்கள் சேவை மனப்பான்மையோடு, அழைப்பின்பேரில் எப்போதும், எங்கும் சென்று ரத்த தானம் அளித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்துக்குட்பட்ட குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில் உள்ள முனிசிபல் லைன் பகுதியில் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் டி . ஆர். சீனிவாசன் இதுவரை 14 ரத்த தான முகாம்களை நடத்தியுள்ளார். மேலும், 73 தடவை ரத்த தானமும் செய்துள்ளார். இதற்காக பல விருதுகளையும், பாராட்டுகளையும் அரசு அமைப்புகள் சார்பில் பெற்றுள்ளார்.
இவரது வழிகாட்டுதலின் பேரில், 2012-இல் 13 பேராக இருந்த ரத்த தான தன்னார்வலர்கள் இப்போது 84 பேராக ஒருங்கிணைந்துள்ளனர்.
இவர்களில் டி.சுரேஷ், என்.வடிவேல், எம்.ஸ்டாலின், வி.ராஜ்கமல்ஆகிய 4 பேர் 50 தடவைக்கு மேலும், 30 பேர் 30 தடவையும் ரத்த தானம் அளித்துள்ளனர்.
இது குறித்து டி . ஆர். சீனிவாசன் கூறுகையில்:
""அரசு மருத்துவமனைகள், வேலூர் சி.எம்.சி., நாராயணி மருத்துவமனை, சென்னை ராமச்சந்திரா, அப்போலோ உள்ளிட்ட மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் அழைப்பின் பேரில், தன்னார்வலர்கள் அங்கு சென்று ரத்த தானம் அளிக்கின்றனர். எங்களில் அரிய வகை ரத்த பிரிவு உள்ளவர்களும் உள்ளனர். இவர்களும் அழைப்பின் பேரில் எங்கேயும், எப்போதும் சொந்தச் செலவில் சேவை மனப்பான்மையோடு பயணித்து ரத்த தானம் அளிக்கிறார்கள் என்கிறார்'' இவர்.