Enable Javscript for better performance
உங்கள் ரத்தமே உங்களுக்கு மருந்து!- Dinamani

சுடச்சுட

  
  kadhir2

  வலியில்லாத அறுவை சிகிச்சை என்றால் யார் தான் விரும்ப மாட்டார்கள்? அதுவும் பல் வலி என்றால் நமக்கு உயிரே போய்விடும். மற்ற வலிகளில் மயக்க மருந்து உண்டு. ஆனால் பல்வலியில் மட்டுமே மரத்துப் போகச் செய்யும் வழிமுறை உண்டு. பின் சகஜ நிலைக்கு வந்த பின் திரும்பவும் வலியால் சிகிச்சை பெற்றவர் கஷ்டப்படுவார். இவரது கஷ்டத்தைக் குறைப்பது எப்படி? ""அதற்கு ஒரு புது வழி உள்ளது'' என்கிறார் பல் மருத்துவர் நடராஜன்.

  ""பற்களைப் பராமரிக்கா விட்டால் பிரச்னை வரும். வந்தால் பற்களை எடுக்க வேண்டி வரும். பற்களை எடுக்கும்போது வலியால் துடிப்பீர்கள். அந்த வலியைக் குறைக்க நான் சொல்லும் புதிய வழிமுறை கண்டிப்பாக உதவும்.

  ஏனென்றால் நம் உடம்பிலிருந்து எடுக்கப்படும் ரத்தமே நமக்கு மருந்தாக அமைகிறது. கொஞ்சம் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால், நம் உடம்பிலிருந்து 10 முதல் 12 (ML) மி.லி. ரத்தம் எடுக்கப்படும். நம் உடம்பிலிருந்து எடுக்கப்படும் ரத்தம் சிலநிமிடங்களில் உறைந்து விடும். அதனால் விரைவாக ரத்தம் எடுக்க, காற்று இல்லாத (Vacuvum Syringe) சிரிஞ்சு தேவை. அதுவும் தயாராக இருக்கும் பட்சத்தில், எடுக்கப்படும் ரத்தம், நம் தேவைக்கு ஏற்ப மருத்துவரால் அங்கேயே ஒரு சிறப்பான எந்திரத்தால் (அந்த மிஷினே சில லட்சம் ரூபாய் விலையுள்ளது) சுழற்சி முறையில் சுழற்றப்பட்டு, எடை கம்மியாக ரத்தத்தில் உள்ள பொருள்கள் மேலேயும், அதிக எடை உள்ள பொருள்கள் கீழும் தங்கிவிடும். சுழற்சியினால் ரத்தம் ஒரு வித ஜெல்லி போல் ஆகிவிடும். அதை பல் எடுக்கப்பட்ட இடத்தில் வைத்தால் வலியும் குறைந்து விடும், புண்ணும் சீக்கிரமே ஆறிவிடும்.

  இதை ஜோசப் சூக்ரெüன் (Joseph Chookroun) என்ற பிரெஞ்சு தேசத்து விஞ்ஞானி 2001 இல் கண்டுபிடித்தார். அவர் கண்டு பிடித்தது பல சோதனைகளுக்குப் பின்னர் சில ஆண்டுகளுக்கு முன் தான் இந்தியாவிற்கே அது வந்தது. சென்னையில் சில மருத்துவர்கள் இதைச் செய்து பார்த்து வெற்றி பெற்றதனால் ஆரம்பத்தில் இருந்தே நானும் இந்த முறையை வெற்றிகரமாக சென்னையில் செய்து வருகிறேன். சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் செய்ய ஆரம்பித்து இன்று வரை அது தொடர்கிறது.

  இந்த முயற்சி அறுவை சிகிச்சைகளுக்கு ஒரு வரப்பிரசாதம். காரணம், இந்த முறையில் வெளியில் இருந்து எந்த பொருளும் இதில் சேர்க்கப்படுவதில்லை. நம் ரத்தம் கலப்படமாகவோ அல்லது கலங்கி பழுதாகவோ போவதற்கு சாத்தியமே இல்லை. ஏனென்றால், அறுவை சிகிச்சை செய்தவரின் உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டவுடன், அவரை உட்கார வைத்துவிட்டு, சில நிமிடங்களில் திரும்பவும் அவருக்கே அது ஜெல்லியாக வைக்கப்படுகிறது.

  சரி, இந்த முயற்சி எந்த உபாதைகளுக்கெல்லாம் உபயோகமாகும் என்று நீங்கள் கேட்டால், பல் மருத்துவர்களுக்கு மட்டும் அல்ல, பல மருத்துவர்களுக்கும் இது சிறந்த முறையில் பயன் அளிக்கிறது. குறிப்பாக இதில் உள்ள க்ரெளத் பாக்டர் (Growth Factor) சாதாரண வலிநிவாரணியாகவும், நம் எலும்பு வளரவும் இது உதவுகிறது. சைனஸ், முடி வளரவும், பிளாஸ்டிக் சர்ஜரிக்கும் (Plastic Surgery இந்த முறை பயன் படுகிறது. இன்னும் சொல்லப்போனால், சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இது மிகவும் இன்றியமையாத ஒன்றாகி வருகிறது.

  என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு மருத்துவரும் உலக அளவில் என்ன நடக்கிறது? அதை எப்படி நம் மக்களுக்கு பயன்படுத்தி அவர்களைக் குணமாக்கலாம் என்றுதான் நினைப்பார்கள். இதற்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா? இதற்காகவே நான் பல வலைதளங்களுக்கு வருட சந்தா கட்டிவருகிறேன். அதே சமயம் பொய்யான விஷயங்களை புறம் தள்ளவும் நான் தவறுவதில்லை'' என்கிறார் பல் மருத்துவர் நடராஜன். இவர் மெட்ராஸ் பல் மருத்துவ கல்லூரியில் படித்து, மாநில அளவில் நான்காவது இடத்தில் தேர்வாகி பெருமை பெற்றவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai