குறையொன்றுமில்லை!

பாலகிருஷ்ணன் குட்டி போட்ட பூனை போல இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார்.
குறையொன்றுமில்லை!

பாலகிருஷ்ணன் குட்டி போட்ட பூனை போல இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார்.
ஆயிற்று கிட்டத்தட்ட இரண்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஓட்டமாய் ஓடிவிட்டது. ரிடையர்டு ஆன பிறகு பென்ஷன் பணம் அருகில் உள்ள வங்கிக் கணக்கில் சேர்வதற்கான என்னென்ன வேலைகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து முடித்தாகிவிட்டது. இனி ஒரு வேலையும் கிடையாது.
காலையில் எழுந்தவுடன் காப்பி சாப்பிட வேண்டியது, தினசரிகளைப் படிக்க வேண்டியது, குளிக்க வேண்டியது. சில ஸ்தோத்திரங்களையும் சொல்ல வேண்டியது. பிறகு சாப்பிட வேண்டியது. மீண்டும் சாப்பிட வேண்டியது. தூங்க வேண்டியது. மாலையில் நடைப்பயிற்சி, பிறகு வீடு, சாப்பாடு, தூக்கம்....மூன்றே மாதத்தில் ரிடையர்டு வாழ்க்கை அலுத்துப்போய் விட்டது பாலகிருஷ்ணனுக்கு. தொலைக்காட்சியில் வரும் மெகா தொடரும் பார்க்கும்படி இல்லை. செய்திகளும் காதைக் கூச வைக்கின்றன. செய்திகளைச் சார்ந்த விவாதங்களும் ஒரே கூச்சலும் குழப்பங்களுமாகத்தான் இருக்கின்றனவே தவிர ரசிக்கும்படியாக இல்லை. ஆன்மிகச் செய்திகளோ பார்ப்பதற்கும், கேட்பதற்கும் அரிதாய் இருக்கிறது. கர்நாடக சங்கீதமா தேடித் தேடிப் பார்க்கவேண்டியதாய் இருக்கிறது.
"என்ன செய்யலாம்? எப்படி பொழுதைக் கழிக்கலாம்?' யோசித்தபடியே தலையைத் தூக்கி விட்டதைப் பார்த்தார்.
சுவரில் மாட்டியிருந்த குரூப் போட்டோ ஒன்று கண்களில் தென்பட்டது. தனக்கு பூணூல் வைபவம் நடந்தபோது எடுக்கப்பட்ட போட்டோ அது.
தன் அருகில் நின்று கொண்டிருப்பவர் யார்? யோசித்தார்.
"கிருஷ்ணதாசன்தான்' மனதிற்குள்ளேயே உறுதி செய்துகொண்டார்.
"பெரியண்ணாவின் மகன்.'
அடுத்த கணமே பழைய சம்பவங்கள் அவர் நினைவலையில் ஓடத் தொடங்கின. இருவருமே கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு வந்து வேலை தேடும் படலத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போதெல்லாம் வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது.
சென்னையில் பாலகிருஷ்ணனின் அக்காள் நாகபூஷணி வீட்டில் தங்கி இருந்துதான் வேலை தேடிக் கொண்டிருந்தனர்.
ஒருநாள் அனைவரும் வீட்டில் அமர்ந்தபடி வேலை வாய்ப்பினைபற்றி வேதனையோடும், வேடிக்கையோடும் பேசிக் கொண்டிருந்தனர்.
பேச்சுக்கிடையே கிருஷ்ணதாசன் பாலகிருஷ்ணனைப் பார்த்து, "ஏன்டா பாலா! இந்தப் பாடு படுகிறாய்? ஊரில் இருக்கும் உன் நிலத்தைப் பார்த்துக் கொண்டாலே நீ ஓரளவுக்கு சம்பாதித்து விடலாம். சென்னைக்கு வந்து ஏன்டா இப்படி அல்லாடுகிறாய்?'' எனக் கேட்டுவிட்டார்.
இப்படி கேட்டபோது பாலகிருஷ்ணனின் அக்கா நாகபூஷணிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது.
"ஏன்டா கிருஷ்ணா! நீதான் அந்த குக்கிராமத்திற்குப் போய் அந்த நிலத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதானே. மற்றவர்களுக்குத்தான் நீ வாத்தியாரா?'' என "பட்'டென்று கேட்டுவிட்டாள்.
"எனக்கு நிலம் இருந்தால் நான் ஏன் அக்கா இப்படி அல்லாடப் போகிறேன்? எங்கள் பங்கைத்தான் என் தங்கை ராஜியின் கல்யாணத்திற்காகவும், என் படிப்பிற்காகவும் என் அப்பா அப்போதே விற்று விட்டாரே. நம் பரம்பரையில் பூர்வீக நிலம் என்று இருப்பது பாலா ஒருவனுக்கு மட்டும் தானே அக்கா'' கிருஷ்ணதாசன் அமைதியாக எடுத்துச் சொன்னார்.
"அது கடைமடைப் பகுதியப்பா. விற்றால் சல்லிக்காசுகூட தேறாது கிருஷ்ணா. நாங்களே எவன் தலையில் கட்டிவிட்டு காசாக்கலாம் என்று காத்துக்கொண்டிருக்கிறோம். உனக்குத் தெரியாததா என்ன?'' பாலாவும் அமைதியாகக் கூறினார்.
"அப்படியென்றால் அக்காவும் வாயைத் திறந்து கேட்டுவிட்டாள். நீயும் கடைமடைப் பகுதி, காசு தேறாது என்று கூறிவிட்டாய். எனக்கும் இந்த சென்னையில் வேலை தேடித் தேடி அலுத்துவிட்டது. உட்கார்ந்து உட்கார்ந்து சோம்பேறித்தனம்தான் ஜாஸ்தி ஆகிறதே தவிர, ஒரு பிரயோஜனமும் இல்லை. என்னிடம் அந்த நிலத்தைக் கொடுத்துவிடு. நான் கொஞ்சம் கொஞ்சமாக உனக்கு பணத்தைப் பைசல் செய்துவிடுகிறேன். சம்மதமா?'' கிருஷ்ணதாசன் தீர்மானமாகக் கூறினார்.
"எனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை கிருஷ்ணா. ஆனால் வீணாக உன் வாழ்க்கையைக் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கிக் கொள்ளாதே. எல்லோரும் கிராமத்தை விட்டு விட்டுத் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடிவரும் காலம் இது. நீ என்னடாவென்றால் இந்த அளவிற்கு படித்துப் பட்டம் பெற்றுவிட்டு ஒன்றுக்கும் உதவாத குக்கிராமத்திற்கு செல்கிறேன் என்கிறாயே? உனது நல விரும்பி என்ற முறையில் சொல்கிறேன். அக்கா சொன்னதை மனதில் வைத்துக்கொள்ளாதே. அதற்காகக் கோபித்தும் கொள்ளாதே'' பாலா எடுத்துரைத்தார்.
"இல்லை பாலா... அக்கா சொன்னதும் நல்லதற்குத்தான். சில நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகத்தான், சில பேரிடமிருந்து சில வார்த்தைகள் வந்து விழுகின்றன. நான் தெய்வ பக்தி உடையவன். இது அக்கா நாகபூஷணியின் வார்த்தைகள் அல்ல. சாட்சாத் கிருஷ்ண பரமாத்மாவின் வார்த்தைகள். என்னிடம் உன் நிலத்தைக் கொடு. நான் உன்னிடம் கொஞ்சம் கொஞ்சமாகப் பணத்தைத் தந்துவிடுகிறேன். இது சத்தியம். என்னை நம்பு பாலா. என்னை நம்பு'' உணர்ச்சி வசப்பட்டுவிட்டார் கிருஷ்ணதாசன்.
அதற்குமேல் எதுவும் பேசமுடியாத பாலகிருஷ்ணன், நிலத்தை அவரிடம் எழுதிக்கொடுத்து விட்டார். கிருஷ்ணதாசனும் சொன்னபடி ஒரு சில வருடங்களிலேயே நிலத்திற்குத் தகுந்த கிரயத்தைக் கொடுத்துவிட்டார். அந்தக் கதை அத்தோடு முடிந்துவிட்டது என்றுதான் இறுதியாக உறுதியாக நம்பினார் பாலகிருஷ்ணன்.

"ஆனால் காலங்கள் பல உருண்டோடி இந்த பழைய போட்டோ, ஸ்வாமிமலை பூணல் வைபவ போட்டோ, என் கண்ணில் ஏன் படவேண்டும்? "அந்த கிருஷ்ணதாசனைப் போய் ஒருமுறை பார்த்துவிட்டு வா' என்று அந்த கந்தன் எனக்கு ஆணையிடுகிறாரோ? அந்தக் குக்கிராமத்தில் இருந்து கொண்டு என்ன கஷ்டப்படுகிறானோ? காவேரிக்கரையே வறட்சியால் பாதிக்கப்பட்டு இருக்கிறதே. சென்னையிலே போராட்டம்... டெல்லியிலே போராட்டம்... என்றெல்லாம் செய்தி வருகிறதே. கடனைத் திருப்பித் தராததால் வங்கி அதிகாரிகள் கெடுபிடி என்கிறார்களே. சாவு என்கிறார்களே. தற்கொலை என்கிறார்களே. ஐயோ பாவம் இந்தக் கிருஷ்ணதாசனுக்கு என்ன ஆயிற்றோ? காவேரிக் கரையிலே தண்ணீர் வரவில்லை என்றால் மேலக்குறிச்சியான என் கிராமம் கடைக் கோடிக் கடை மடைப்பகுதி ஆயிற்றே. பாவம் வங்கிக் கடனை அடைக்க முடியாமல் தவிக்கிறானோ?'' பெண்ணுக்கு திருமணம் செய்ய முடியாமல் தவிக்கிறானோ?' ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் தோன்றி பாலகிருஷ்ணன் தவியாய்த் தவித்தார்.
உடனே அந்த கிருஷ்ணதாசனைப் போய்ப் பார்த்தாக வேண்டும். அவனுக்கு நம்மால் ஆன உதவியைச் செய்தாக வேண்டும் என எண்ணியபடியே அன்று இரவே மேலக்குறிச்சியை நோக்கி புறப்பட்டு விட்டார்.

கிராமத்தை அடைந்த அடுத்த நிமிடமே அவர் அதிசயித்துப் போனார்.
செய்தித்தாள்களில் வந்த செய்திகளுக்கும் அந்தக் குக்கிராமத்தில் இருந்த நிலைக்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்தது.
"பச்சைப் பசேல்' என்ற வயல்வெளிகள். வயலுக்கு வயல் ராட்சதக் கிணறுகள். வீட்டுக் வீடு தோட்டப் பகுதியில் குட்டைகள். நான்கு தெருவுக்கு ஒரு குளம். குளத்தருகே ஒரு கோயில். ஊரை அடுத்து பிரும்மாண்ட ஏரி. மா, பலா, வாழை, தென்னை மரத் தோட்டங்கள். காய்கறித் தோட்டங்கள். பூங்காக்கள். ஆரம்பப் பள்ளியே இல்லாத ஒரு குக்கிராமத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளி. கல்லூரி நிறுவுவதற்கான ஆரம்ப ஏற்பாடு.
மாட்டுப் பண்ணை, ஆட்டுப் பண்ணை, கோழி வளர்ப்பு, தேனி வளர்ப்பு, பாய் முடைதல், நார் திரித்தல் போன்ற கைத் தொழில்கள்.
என் பூர்வீக கிராமத்தில் இத்தனை வளர்ச்சியா?
அசந்துதான் போய் விட்டார் பாலகிருஷ்ணன். 
ஆனால் அன்றும் கடைமடை கிராமமான மேலக்குறிச்சி யார் கண்ணுக்கும் தெரியவில்லை. இன்றும் யார் கண்ணிலும் படவில்லை.
ஆம். யார் கண்ணிலும் படாமல் வளர்ந்திருக்கிறது.
ஆனால் ஆச்சரியப்படக் கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
""கிருஷ்ண தாசனின் வீடு எங்கே?''
""கிராமத் தலைவர் வீடாங்க? அதோ அதுதாங்க.''
கை காட்டிய திசையை நோக்கிப் பார்த்தார் பாலகிருஷ்ணன்.
அந்தக் காலத்தில் மாமுனிகள் தங்கக் கூடிய இடம் போல் இருந்தது அந்தக் குடில்.
சென்று பார்த்தார் பாலகிருஷ்ணன்.
"இது எப்படி உன்னால் சாத்தியம் ஆயிற்று கிருஷ்ணா?''
"நமக்கென்று ஒரு தந்தை இருந்தால் நாம் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்ற மாட்டோமா? நமக்கென்று ஒரு தாய் இருந்தால் நாம் அன்பும் ஆதரவும் தரமாட்டோமா? நமக்கென்று ஒரு மனைவி இருந்தால் 
அன்போடும் ஆசையோடும் வைத்துக் கொள்ள மாட்டோமா? நமக்கென்று ஒரு குழந்தைச் செல்வம் இருந்தால் நாம் கண்காணித்து சீரோடும் சிறப்போடும் வளர்த்து ஆளாக்க மாட்டோமா?
இவைகளைப் போல் நமக்கென்று ஒரு கிராமம் இருக்கும் போது அதனை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதும் நம் கடமைதானே பாலா?''
"அது சரி ஊரெல்லாம் தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கிறது. உன் கிராமத்தில் மட்டும் கிணற்றில் தண்ணீர் குட்டையில் தண்ணீர், குளத்தில் தண்ணீர், ஏரியில் தண்ணீர்... பச்சைப் பசேல் வயல்கள். என்ன மந்திரம் போட்டாய் கிருஷ்ணா?''
"ஒரு மந்திரமும் இல்லை பாலா. இறைவன் கொடுக்கும் கொடைக்கு அளவே இல்லை. "குறை ஒன்றும் இல்லை, மறைமூர்த்தி கண்ணா' எனப் பாடக் கூடிய அளவுக்குத்தான் வாரி வாரி வழங்குகிறான். நாம் தான் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. வாரிவாரி வழங்கும் போது அதை வீணாக்கிவிட்டு பிறகு அவன் கொடுக்கவில்லை, இவன் கொடுக்கவில்லை என்றும், வறட்சி வந்து விட்டது. வறண்டு போய் விட்டது என்றெல்லாம் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொள்கிறோம். இந்த கிராமத்தில் இருக்கும் தண்ணீர் அத்தனையும் கடந்த இருபது ஆண்டுகளாக பெய்த மழையாலும் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தாலும் சேமித்த சேமிப்பு. மழை காலத்தில் சேமித்து விடுவேன். கோடை காலத்தில் தூர் வாரிவிடுவேன். அவ்வளவுதான். சிறு சிறு துளிகள் தானே பெரும் வெள்ளம் ஆகிறது பாலா''
"உண்மையிலேயே நீ ஒரு தீர்க்கதரிசிதான் கிருஷ்ணா''
""ரொம்பப் புகழாதே. அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது''
"அது போகட்டும் எனக்கு சென்னையில் பொழுது போகவில்லை. இந்த கிராமத்தில் கொஞ்சம் நிலம் விலைக்குக் கிடைக்குமா? நானும் உன்னைப் போல் கிராம வளர்ச்சிக்கு ஏதாவது செய்கிறேன்'' 
"இந்த கிராமத்தில் எனக்குப் போட்டியாக நீ வரக்கூடாது. பக்கத்து ஊரான கல்யாண ஓடையில் இருக்கிறது. வேண்டுமானால் வாங்கித் தருகிறேன்''
"அதுவும் சரிதான். இப்படி ஒவ்வொருவரும் தன் தந்தையை தாயை மனைவியை குழந்தையைப் பராமரிப்பது போல் தன் கிராமத்தையும் பராமரித்தாலே போதும் நாடு வளர்ச்சியின் உச்சிக்கே போய் விடும்''
"அன்று கிராமத்திலிருந்து பட்டினத்துக்கு மக்கள் படை எடுத்ததைப் போல் இனிமேல் பட்டினத்திலிருந்து கிராமத்திற்கு மக்கள் படையெடுக்க ஆரம்பித்து விடுவார்கள் என்கிறாயா?''
"அப்படி ஒரு நிலைமை இந்தியாவில் உருவானால் இந்தியாவின் வளர்ச்சியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது''
இருவரும் மனம் விட்டு சிரித்தனர். கிருஷ்ண தாசின் மனைவி அன்று ஓர் அறுசுவை உணவுக்கே ஏற்பாடு செய்து விட்டாள். 
ஷிவ்ராம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com