Enable Javscript for better performance
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தவறான வழிகளைத் தவிர்க்க...!- Dinamani

சுடச்சுட

  
  AYUL

  நான் சிந்தனை செய்யும் பல விஷயங்களையும் செயலாகக் கொண்டு வர முடியவில்லை. உள்ளத்தில் ஏற்படும் பல உணர்வுகளும் கொந்தளிக்கும் நிலைக்குச் சென்று தவறு செய்யத் தூண்டுகின்றன. இதற்கு இன்று மிகவும் பிரபலமாக இருக்கக் கூடிய FACEBOOK, TWITTER, CINEMA, CELLPHONE, TELEVISION போன்றவை காரணமாக இருக்குமா? என்னை நான் திருத்திக் கொள்ள வழி என்ன?
  -துரைராஜ், கோவை.
  வாக்படர் எனும் முனிவர் குறிப்பிடுவதாவது: இரவு படுக்கும் முன் சிறிது சிந்தனை தேவை. இன்று பகல் பொழுதை கழித்த விதம், இரவைக் கழித்த விதம் இரண்டும் சிந்தனைக்குரியவை. நேரான முறையால் ஏற்பட்ட நன்மை மனநிறைவு, சீர்கெட்ட முறையால் ஏற்பட்ட உடல், மனம் இரண்டின் பின்விளைவுகள் இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து அதன் அடிப்படையில் நமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டியது. இவை அனைத்தையும் தினமும் சிந்திக்க வேண்டும். சிந்திப்பது செயலுடன் நெருங்கி இருக்க வேண்டும். செயல் சிந்தனையுடன் நெருங்கி இருக்க வேண்டும். இப்படி நினைப்பவன் துக்கமடைவதில்லை.
  சரகர் எனும் ஆயுர்வேத முனிவர் கூறுவதாவது: ஒரு செயலின் பின்விளைவு நன்மை தருவதாயின் அது நல்லதாகும். அது செயலாற்றும் போது சிரமம் தரலாம். பகுத்தறிவுடன் தீர விசாரித்து நடப்பவர்கள் நல்லதையே நாடுவார்கள். கண், காது முதலியவற்றில் பட்டவுடனே மகிழ்ச்சி தருபவை, பிரியமானவை, அவற்றை நுகர்ந்த பின் கேடுதரக் கூடும். அதனால் கெடுதலே ஏற்படும். பின் விளைவைச் சரியாக புரிந்து கொள்ளாதவர், அதனை அறியத்தக்க அறிவில்லாதவர், மந்த உணர்ச்சியுடன் முன் - பின் யோசிக்காமல் பின்விளைவில் கெடுதலே ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் பிரியமானதையே நாடுவார்கள்.
  இன்று நாம் அடைந்துள்ள விஞ்ஞான முன்னேற்றத்தால் நல்லதும் கெட்டதும் மனதில் பதிகிறது. ஆனால் நீங்கள் மனதில் பதிந்த அவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் இல்லை. தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்க்கவும், ஏற்க வேண்டியவற்றை ஏற்கவும், சிந்தித்து பகுத்தறிந்து செயல்படும் புத்தி உண்டு. மனம் கொண்டவற்றை எல்லாம் ஏற்கும் சபலம் இந்த புத்தியை தடுமாறச் செய்யலாம். பகுத்தறிவுடன் சிந்தித்து ஏற்றதைச் செயலளவில் கொண்டு செலுத்தும் திறமையை "திருதி' என்பர். மனச்சபலம் இதனையும் கவிழ்க்கும். பகுத்தறிந்தவை நமக்கு இந்த சூழ்நிலைக்கு ஏற்றவையா என எடைபோட முன் அனுபவம் உதவும். இந்த முன் அனுபவத்தை அறிவுக் கண்முன் கொண்டு வருவது "ஸ்மிருதி' எனும் ஞாபக சக்தி. மனச் சபலம் இந்த ஸ்மிருதியைப் புறக்கணிக்கத் தூண்டும். இதனைப்பற்றி "பிரஜ்ஞாபராதம்' - அறிவுத் தடுமாற்றம் என்பர். இந்தத் தடுமாற்றம் தொடர்ந்து தவறான வழியில் செல்லத் தூண்டும். பின்விளைவு மனமும் உடலும் எப்போதும் நோய்வாய்ப்படக் காரணமான உடல்நிலை சீர்கேடு என்கிறார் வாக்படர்.
  நம்மை திருத்திக் கொள்ளும் வழியை சரகர் குறிப்பிடுகிறார்: 
  "நன்மை எது என்பதனைக் கருத்துடன் விசாரித்து தேர்ந்தெடுப்பவனுக்கு கல்வி, அறிவு, ஞாபகசக்தி, செயல்திறன், மனோதிடம் நன்மை பயப்பதையே நாடும் சீரிய மனப்பாங்கு, சொல் தூய்மை, மனஅடக்கம், தைரியம் இவை எப்போதும் துணை நின்று கை கொடுக்கும். மனதிற்குப் பிடித்ததை நாடுபவனுக்கு இவை துணை நிற்க மாட்டா.
  உண்மை பேசு, கோபப்படாதே லாஹிரி மது பானங்களை தவிர்த்து விடு. பிறருக்கு தீங்கு நினையாதே, சொல்லாதே, செய்யாதே. உடலை அளவுக்கு மீறி வருத்தாதே. அமைதியாகப் பேசி இறைவனை வழிபடும் உடல், உடை உள்ளத் தூய்மை இரண்டும் மேலானது அவற்றைக் கடைபிடிப்பதில் நல்வழியில் தூண்டிச் செயலாற்று. இருப்பதை பகிர்ந்து கொள். கொடுப்பதை மனமுவந்து கொடு. வாழ்வு நன்கு அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் நிலைத்திரு. பொல்லாங்குக்கு ஆட்படாதே. உயிருள்ளவற்றுடன் பரிவுடன் பழகு. தூக்கத்தையும், விழிப்பையும் சீராக அமைத்துக் கொள். உணவில் நெய், பால் அதிகம் சேர்த்துக் கொள். தேசத்தையும் காலத்தையும் ஒட்டி நடந்துகொள். பகுத்தறிவை வாழ்வில் பயன்படுத்து. அகந்தை கொள்ளாதே. நல்லோர்கள் செல்லும் பாதையில் செல். கலப்பட உணவை ஏற்காதே. உன் உள்ளே உள்ள ஆத்மாவின் வசப்படு. நெறிமுறை தவறாதே. இவை தினமும் கையாள தக்கச் சிறந்த ரசாயன முறைகள்''. இப்படி சரகர் கூறுவது போகாத ஊருக்கு செல்லும் வழியாக முதலில் தோன்றும். ஆனால் சரகர் சொல்வதை மதித்துச் சிறிது தூரம் சென்றதும் இதுதான் போக வேண்டிய ஊருக்கு வழி என தானே உணர்வோம்.
  (தொடரும்)
  பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
  ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
  நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
  செல் : 94444 41771


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai