பொடுகுத் தொல்லை...முடி கொட்டுதல்... முன் வழுக்கை!

சிறிதும் எண்ணெய்ப்பசையே இன்றி தலையை வறட்சியுடன் வைத்திருப்பதே பலருக்கும் நீங்கள் குறிப்பிடுவது போன்ற உபாதை வரக் காரணமாகலாம். இவ்விஷயத்தில் தற்காலத்திய ஆராய்ச்சிகள் பல எண்ணெய்க்கு எதிராகவே
பொடுகுத் தொல்லை...முடி கொட்டுதல்... முன் வழுக்கை!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
எனக்கு வயது 21 ஆகிறது. இந்த இளம் வயதிலேயே எனக்கு பெரும் மன உளைச்சல். காரணம் பொடுகு, அதனால் முடி கொட்டுதல், அதனால் முன் வழுக்கை. இதற்கு ஆயுர்வேதத்தில் ஏதேனும் உபாயம் உள்ளதா? 
வே.மாதவன், காவேரிபாக்கம்.
சிறிதும் எண்ணெய்ப்பசையே இன்றி தலையை வறட்சியுடன் வைத்திருப்பதே பலருக்கும் நீங்கள் குறிப்பிடுவது போன்ற உபாதை வரக் காரணமாகலாம். இவ்விஷயத்தில் தற்காலத்திய ஆராய்ச்சிகள் பல எண்ணெய்க்கு எதிராகவே இருக்கின்றன. ஆனாலும், ஆயுர்வேதம் அதைச் சம்மதிக்கவில்லை என்று தான் கூற வேண்டியிருக்கிறது. முடியினுடைய வேர்பகுதியிலிருந்து பிய்த்துக் கொண்டுவரும் தோல் பகுதியானது, வெளியேறும்போது மயிர்கால்களின் வலுவையும் குறைத்து விடுவதால் அவை உதிர்ந்துவிடும்நிலையில் முடிகொட்டிவிடும் பிரச்னையானது தொடங்கிவிடுகின்றது. தோல், பிளவுற்று அரிப்பது எதனால்? பூச்சிகளின் உபாதையாலா? அல்லது நீர்ப்பசையின் குறைவினாலா? நெய்ப்பின்றி கிடப்பதாலா? மன உளைச்சலால் அப்படி ஏற்படுமா? போன்ற பல சந்தேகங்களைக் கிளப்பி விட்டதால் இது மிகுந்த ஆராய்ச்சிக்கு உட்பட்டது. அதன் விளைவாக Trichology என்ற தலைமுடி சம்பந்தப்பட்ட துறையே தொடங்கப்பட்டு, இன்று உலகம் முழுவதும் மிகவும் பார்க்கப்படும் வலைதளமாக அது விளங்குகின்றது. எதுவாக இருந்தாலும் தோல்வறட்சியை நீக்கி வனப்பை ஏற்படுத்தும் சில ஆயுர்வேத மூலிகைத் தைலங்களை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் குணம் பெற வாய்ப்பிருக்கிறது. அய்யப்பாலா கேரதைலம், தூர்வாதி கேர தைலம், சதுக்ஷீரீ கேர தைலம், ஏலாதி கேர தைலம், ஏலாதி தைலம் போன்ற சிறந்த மருந்துகள் இருந்தாலும் ஆயுர்வேத மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகு ஒன்றிரண்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம். இவற்றின் மூலமாக கிருமிதொற்றுகள் ஏதேனும் தோலில் இருந்தால் அவையும் மறைந்துவிடும். தலைப்பகுதி பொதுவாகவே கபம் எனும் தோஷத்தின் இருப்பிடமாகையால் அதன் மூலமாகவே சிலருக்கு அரிப்புடன் கூடிய பொடுகுத் தொல்லையும், முடி உதிர்தலும் ஏற்படலாம். அதில் வெளிப்புறத் தைலத்தின் பயன்பாடு மட்டுமே போதாது என்பதால் உள்ளுக்கு ஆரக்வதாதி கஷாயம், படோலகடுரோஹிண்யாதி கஷாயம், திக்தகம்/மஹாதிக்தகம் கஷாயம் போன்றவற்றைச் சரியானபடி தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினால் குணம் தரக்கூடிய நல்ல மருந்துகளாகும்.
சொரிந்தால் செதில் செதிலாக உதிரக் கூடிய பொடுகுத் தொல்லையுடன், எரிச்சலும் இருந்தால் பித்த ரத்தங்களுடன் கேடுற்று தலையின் தோல்பகுதியில் கபதோஷத்தின் ஆதிக்கம் நடைபெறுவதை ஊகித்து அறியலாம். கஷாயம் மருந்துகளை விட மூலிகை நெய் மருந்துகளாகிய திக்தகம்/மஹாதிக்தகம் இந்நிலையில் உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் பயன்படுத்த சிறந்தவை. உட்புற விஷச்சேர்க்கையானது உணவின் மூலமாகவோ, ஒவ்வாமை உணவுகளின் சேர்க்கையின் மூலமாகவோ நடைபெற்றிருந்தாலும் அவையும் தோலில் பிரதிபலிக்கவே செய்யும். மாணிபத்ரம் லேஹ்யம் திருவ்ருல் லேஹ்யம் போன்றவற்றைப் பயன்படுத்தி நன்கு வயிறு பேதியாகும்படிச் செய்து நமது உடலைச் சுத்தப்படுத்தலாம். இரத்தத்தில் உள்ள விஷத்தை முறிக்கச் செய்து வெளியேற்றும் இவ்வகை மருந்துகளால் குடல் சுத்தம் அடைந்து பல தோல் நோய்கள் குணமடைந்துள்ளன. தலையில் ஊற்றப்படும் சிரோதாரா சிகிச்சை முறை, மூலிகைகளை அரைத்து தலையில் பொத்தி வைக்கும் தலைப்பொதிச்சல் எனும் சிகிச்சை, மூக்கினுள் மருந்தைவிட்டு தலையிலுள்ள உட்புற அழுக்குகளை நெகிழச் செய்து வாய்வழியாக வெளியேற்றும் நஸ்யம் எனும் சிகிச்சை போன்றவற்றாலும் நீங்கள் பயன்பெறலாம். 
மீன், சிக்கன், தயிர், வெல்லம், பால்பொருட்கள், பகல் தூக்கம் போன்றவற்றைத் தவிர்க்கவும். தலை குளிக்க கடுக்காய், கருங்காலிக்கட்டை, சரக்கொன்றைப்பட்டை, வேப்பம்பட்டை ஆகியவற்றைப் போட்டு காய்ச்சி ஆறிய வெந்நீரையே பயன்படுத்தவும்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
செல் : 94444 41771
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com