வேப்பம் பூ... இலை... பட்டை! ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

"கையதேவ நிகண்டு' எனும் ஆயுர்வேத நூலில் வேப்ப மரத்தினுடைய மருத்துவ குணங்களைப் பற்றிய விவரங்கள் விரிவாகக் காணப்படுகின்றன
வேப்பம் பூ... இலை... பட்டை! ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

எனக்கு 58 வயதாகிறது. கடந்த பல வருடங்களாக உடல் முழுவதும் அரிப்பு இருக்கிறது. ஆங்கில வழி வைத்தியங்கள் அவ்வப்போது தான் நிவாரணம் தருகின்றன. சிலர் கூறியதால் வேப்ப இலை, குப்பை மேனி இலையை அம்மியில் அரைத்து உடலில் பூசுகிறேன். ஓரளவு சுமாராக உள்ளது. வேப்ப இலை தினமும் பூசலாமா? அது உஷ்ணமா? குளிர்ச்சியா? தங்களது வேறு யோசனைகள் இருக்கின்றனவா?
- சிவ. இளவரசி, சிதம்பரம்.

"கையதேவ நிகண்டு' எனும் ஆயுர்வேத நூலில் வேப்ப மரத்தினுடைய மருத்துவ குணங்களைப் பற்றிய விவரங்கள் விரிவாகக் காணப்படுகின்றன. கசப்புச் சுவையுடைய வேப்பம் பட்டை, சீரண இறுதியில் காரமாக மாறிவிடும். செரிப்பதற்கு எளிதானது. குளிர்ச்சியான வீரியமுடையது. பசியைத்தூண்டி விடும். குடல் வாயுவை அதிகரிக்கச் செய்யும். மலத்தைக் கட்டும். ஆனால் இதயத்திற்கு நன்மை தரும். சீற்றமடைந்துள்ள பித்தம் மற்றும் கப தோஷங்களை அமைதியுறச் செய்யும் சர்க்கரை உபாதையின் தாக்கத்தை குறையச் செய்யும். காய்ச்சல் மற்றும் குடல் கிருமிகளை நீக்கும்.
தோல் உபாதைகளான அரிப்பு, படை, சொறி, சிரங்கு ஆகியவற்றை குணப்படுத்தும். சளியால் ஏற்படும் இருமல், நாக்கில் சுவையறியாமை, மூச்சிரைப்பு, நெஞ்சு படபடப்பு, உடல் வீக்கம், புண் ஆகியவற்றை குணப்படுத்தும்.
வேப்பிலைக் கொழுந்து - உள்ளிற்குச் சாப்பிட்டால், மலம் கட்டும். அதனால் பேதி நிற்பதற்கு உதவும். உடலிலிருந்து திடீரென்று ஏற்படும் ரத்தக்கசிவை நிற்கச் செய்யும். கப தோஷத்தினுடைய சீற்றத்தால் தொண்டை, மூக்கு, தலைப்பகுதிகளில் ஏற்படும் கிருமித் தொற்றை நசிக்கச் செய்யும். பொதுவாகவே, குஷ்ட உபாதைகளை அகற்றும் சிறப்புடைய கொழுந்து வாயுவை குடலில் சீற்றமுறச் செய்தாலும், கண் சார்ந்த பல உபாதைகளுக்கு நல்ல நிவாரணம் தரும். கொழுந்தைப் போலவே, முற்றிய இலைகளும் இதே குணங்களைக் கொண்டதாயினும், விசேஷமாக, அதன் காய்ந்த இலைச் சருகுகளைக் கொண்டு தீ மூட்டி, புகையை, கொச கொசத்துப்போன, சீழுடன் கூடிய புண்கள் மீது காட்ட, அவை விரைவில் வறண்டு, புண் ஆறிட உதவிடும்.
உடல் உட்புற, வெளிப்புற கிருமிகளை அழிப்பதற்காக நம் முன்னோர், வேப்பிலைகளை பல விதங்களிலும் பயன்படுத்தி குணம் கண்டனர்.
வேப்பம்பூ - கண்களுக்கு இதமானது. காய்ந்து போன பூக்களை, நெய்யில் "மொற மொற' என்று வறுத்துச் சாப்பிடலாம். குடல் கிருகளால் சிறுபிள்ளைகள், ஆசனவாய் அரிப்பு, பற்களை உறக்கத்தில் நற நற வென்று கடித்தல், உடலில் வட்ட வட்டமான தடிப்புகள் ஏற்படுதல் போன்ற நிலைகளில், பூக்களை மேற் குறிப்பிட்டது போலப் பயன்படுத்தி, குணம் பெறலாம். வேப்பம் பூவைக் கஷாயமாகக் காய்ச்சி, வாய் கொப்பளித்தால், நாக்கினுடைய ருசி கோளங்களில் படிந்துள்ள மாவுப்படலம் விலகி, ருசியை உணர்த்திடச் செய்யும்.
வேப்பங்காய்ப் பட்டை, இலை, பூ ஆகியவற்றிலிருந்து மாறுபட்ட சில குணங்களைச் செய்கிறது. கசப்பான சுவையுடையது. சீரண இறுதியில் காரமான சுவையாக மாறுகிறது. மலக்கட்டை உடைத்து வெளியேற்றுகிறது. செரிப்பதற்கு எளிதானது. உடல் நீர்ப்பசையை வற்றச் செய்யாது. சூடான வீரிய முடையது. தோல்சார்ந்த உபாதைகளை பலவற்றையும் குணமாக்கும் சிறப்புடையது. குடலில் வாயு பந்துபோன்று சுருண்டு ஏற்படுத்தும் வலியை நீக்கும், மூலம், குடல் கிருமி, சர்க்கரை உபாதைகளை அழிக்கும் திறனுடையது.
பழுத்த வேப்பம் பழம் - இனிப்பும், சிறிது கசப்பும் கொண்ட சுவையுடையது. நல்ல நெய்ப்பு தரும் பொருள். ரத்தத்தில் பித்த சீற்றத்தினால் ஏற்படும் காந்தல், கசிவு, சூடு ஆகியவற்றை நீக்கும் கப உபாதைகளை மாற்றும் திறன் கொண்டது. கண் சார்ந்த பல உபாதைகளையும், பழம் குணப்படுத்தும். வழுவழுப்பான, வேப்பம் கொட்டையுடன் ஒட்டியிருக்கும் சுளையான பகுதியை, வாயில் போட்டு மெதுவாகச் சாப்பிட்டால் - குடல்கிருமி, குஷ்ட உபாதைகள் நீங்கும். காச நோய்க்கு மருந்தாகும். செரிப்பதில் தாமதமாகும். வழுவழுப்பான தன்மை, வாயில் அதே தன்மையை ஏற்படுத்தும்.
வேப்பெண்ணெய் அத்தனை சூடானதல்ல. கசப்பான சுவையினால் கிருமி, குஷ்ட, கப உபாதைகளை நசிக்கும். தலைக்குத் தேய்த்துக் குளிப்பதாலும், மூக்கினுள் நான்கு சொட்டு விட்டுக் கொள்வதாலும், பத்திய உணவாக, பால்சாதம் அதிகம் சாப்பிட்டு வந்தால், தலைமுடி நரையை மாற்றும். தன்வந்தரி நிகண்டுவில் - வேப்பெண்ணெய்யை இளம்சூடாக, உள்ளுக்குச் சாப்பிட்டு, மேல் தேய்ப்பதால் வாதரக்தம் எனும் பூட்டுகள் சார்ந்த வலிகள் குணமாவதாகவும், மத்துபிடித்த நிலை, முக, உடல் வாட்டத்தினால் களையிழந்த உடல் நிலையை மாற்றி, உடல் வசீகரத்தை ஏற்படுத்தும் என்றும் காணப்படுகிறது.
அதனால், நீங்கள் வேப்ப இலையை தினமும் பயன்படுத்தி குணமடையலாம். பல ஆயுர்வேத மருந்துகளிலும் வேப்பம்பட்டை சேர்க்கப்படுகிறது.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com