காணாமல் போன குஜிலி பாடல்கள்!

வட சென்னை தமிழ்ச்சங்கம்  ஒரு  வித்தியாசமான  இலக்கிய  அமைப்பு. சங்கத்தில்  சேருபவர்கள்   உறுப்பினர் கட்டணம் செலுத்த  வேண்டிய அவசியம் இல்லை.
காணாமல் போன குஜிலி பாடல்கள்!

வட சென்னை தமிழ்ச்சங்கம்  ஒரு  வித்தியாசமான  இலக்கிய  அமைப்பு. சங்கத்தில் சேருபவர்கள்  உறுப்பினர் கட்டணம் செலுத்த  வேண்டிய அவசியம் இல்லை.  யார் வேண்டுமானாலும்  உறுப்பினர் ஆகலாம். ஆனால்   உறுப்பினர் தனது பிறந்த நாளின்போது  குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய்க்கு தமிழ் நூல்கள் வாங்கி நூலகங்களுக்கோ,  பள்ளிகளுக்கோ  அன்பளிப்பு செய்ய வேண்டும். இந்த ஆண்டில் சுமார் இருபதாயிரம் ரூபாய்  மதிப்புள்ள  திருக்குறள் முதலான நூல்களை  அன்பளிப்பு செய்துள்ளோம். 

சென்னை நகர் சுற்றுவட்டாரத்தில்  எந்த இலக்கிய அமைப்பும்  இலக்கிய விழா நடத்தினாலும், வட சென்னை தமிழ்ச் சங்கம் தன்னால் ஆன விளம்பர, நிதி உதவிகளைச் செய்து வருவதுடன் பங்கு கொண்டும் சிறப்பிக்கிறது.

வட சென்னை தமிழ்ச்சங்கத்தின்  தலைவர் பொறுப்பில்  இருக்கும்  எ.த. இளங்கோ இரண்டு தலைமுறைகளாக சென்னை வியாசர்பாடியில் குடும்பத்தினருடன் வாழ்ந்து  வருகிறார்.    

சென்னை நகரம் 2015-இல் மழை வெள்ளத்தில் மூழ்கியபோது, வியாசர்பாடி பகுதியில் தன்னால் ஆன  உதவிகளைச் செய்ததினால், "தங்க இதய' விருது வழங்கப்பட்டது.  

சிறுவயதிலிருந்தே பொதுமக்கள் சேவையில் ஈடுபடுத்திக் கொண்ட இளங்கோ தமிழ் ஆர்வம்  காரணமாக வட சென்னை  தமிழ்ச் சங்கத்தை ஒத்த கருத்துடைய தமிழ் ஆர்வலர்கள் பங்களிப்புடன் தொடங்கினார். 

"பொன்னேரி  அரசு மருத்துவமனையில்  மாதத்திற்கு சுமார் 175  பிரசவங்கள் நடக்கின்றன. பிரசவத்திற்கு வருகிற பெண்கள் சுமார் 15  முதல் 20  நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் போது நேரத்தை பயனுள்ளதாக செலவு செய்ய நல்ல நூல்களை நன்கொடையாக தந்து உதவுமாறு தனது முகநூல் பக்கத்தில் தலைமை மருத்துவர் அனுரத்னா வேண்டுகோள் விடுத்ததைப் பார்த்ததும் ஒரு கட்டு நூல்களை வாங்கிக் கொண்டு  தனது  நண்பரும்  "அறம்' பட இயக்குனருமான கோபி நயினாருடன் சென்று அன்பளிப்பு செய்து திரும்பினார்.  

"துளிப்பா'  எழுதும் கவிஞர்களுக்கு புதுச்சேரியில்  பண முடிச்சு வழங்கி பெருமைப்படுத்தினோம்.  என்று ஆரம்பித்த இளங்கோ,  சென்னையின் அந்தக் கால  பாடல் வகையான  "குஜிலி' பாடல்கள் குறித்தும்,  அவற்றை மீட்டெடுப்பது குறித்தும்  இங்கு கூறுகிறார்: 

""இன்றைய  காலகட்டத்தில் மறக்கப்பட்டுவிட்ட "குஜிலி'  பாடல்கள்  பற்றி பலரும் நினைவுப்படுத்தி வருகிறார்கள். அன்றைய சென்னப்பட்டினம் அல்லது மதராச பட்டணம். சிறு நகரம். ஆங்கிலேயரின் வருகைக்குப்பின் துறைமுகம் அறிமுகமானது, ஏற்றுமதி இறக்குமதி காரணமாக தொழில் வாய்ப்புகள் பெருகின. அந்தக் காலத்தில் பொருள்களை ஏற்ற இறக்க கிரேன் போன்ற இயந்திரங்கள் இல்லை. பொருள்களை ஆழ்கடலில் நிற்கும் பெரிய கப்பல்களிலிருந்து  இறக்கி  படகுகள் மூலமாக துறைமுகத்திற்கு  ஆட்கள்தான் கொண்டு வந்து சேர்த்தார்கள். அதனால் எங்கு பார்த்தாலும் ஆயிரக்கணக்கான கூலித்  தொழிலாளர்கள். துறைமுகத்துப் பக்கத்திலேயே, இரண்டாம் பீச் லைன் (செகண்ட் லைன் பீச்)  எனப்பட்ட குடிசைப் பகுதிகளில் வசிக்க ஆரம்பித்தார்கள்.

பகலில் கடின உழைப்பிற்குப் பிறகு மாலை, இரவு வேளைகளில்  பொழுது போவதற்காக பாடல்களைப்  பாடி  ஆடினர். ஆரம்ப காலத்தில் பெண்களைக் கேலியும், கிண்டலும்  செய்து "ஒருமாதிரியான' பாடல்களை இட்டுகட்டிப் பாடினார்கள். காலம் செல்லச் செல்ல  நாட்டு நிகழ்வு எது எங்கே நடந்தாலும் அது குறித்து பாட ஆரம்பித்தார்கள். இருந்தால் பாடல், இறந்தால் பாடல் என மரபுக்  கவிஞர்கள்  விலக்கிய விஷயங்களை குஜிலிப் பாடல்கள் தத்து எடுத்துக்  கொண்டன.

கொலை, களவு, திருட்டு, சென்னையில் முதன் முதலாக ரயில் நிலையம் திறக்கப்பட்டது, முதல் முதலாக புகை வண்டி வந்தது, முதல் முறையாக விமான நிலையம் உருவானது, ஆங்கிலேயரை வாழ்த்தியும் எதிர்த்தும், வடக்கே நடந்த விடுதலைப் போராட்டம் பற்றியும் மெட்டுடன் பாடியதுடன், பாடியவர் பெயர், ராகம் போன்ற விவரங்களுடன் ஒரு சில பக்கங்கள் அச்சிட்டு காலணா அரையணாவுக்கு பாரிஸ், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் கந்தசாமி கோயிலைச் சுற்றி அமைந்திருந்த குஜிலி பஜாரில் கூவி விற்கவும் செய்தார்கள். பொழுதுபோக்க எந்தவித வசதிகளும் இல்லாமல்  இருந்த  காலத்தில்  குஜிலி பாடல்கள்  பொழுதுபோக்கு ஊடகமாக அமைந்திருந்தன.

"கலீஸ்'  (GALEES)  என்ற வார்த்தை  "கலீஜ்'  என்று மருவியது போல  "குஜிலி' என்ற சொல்  வேறு  ஏதோ சொல்லின் மருவிய பெயராகவும்  கூட  இருக்கலாம். சென்னை பிராட்வே பகுதியில் குச்சிலிக் கடைத் தெருவில் பாடல்களை பாடி நூல்களை  விற்பனை செய்து வந்தார்கள். குச்சிலி புத்தகங்கள் என்பது மருவி குஜிலி புத்தகங்கள் என்று மாறியது என்றும் சொல்லப்படுகிறது. "குஜிலி' என்றால் ஹிந்தி, உருது  மொழியில்  "அரிப்பு'  என்ற  பொருள் உண்டு. மாலை, இரவு நேரங்களில்  சும்மா  இருக்க முடியாமல் பானங்களை  அருந்தி விட்டு எதைப்  பற்றியாவது  பாட வேண்டும்  என்ற  அடங்கா  ஆர்வத்தை, நமைச்சலை "அரிப்பு'  என்ற பொருளில்  அந்த  பாடல்களுக்கு  "குஜிலி'  பாடல்கள் என்று  பெயர் வைத்திருக்கலாம். 

காலக்கிரமத்தில் இசைத்தட்டுகளில்  வெளியான  தியாகராஜ பாகவதர்,  பி.யு. சின்னப்பா பாடல்கள், புத்தக வடிவில்  வெளியான  அவர்களின்  பாடல் வரிகள், பிறகு வந்த வானொலி, அதைத் தொடர்ந்த செய்தித்தாள்கள் வரத் தொடங்கியதாலும், குடிசை மக்கள் சென்னையின் இதர குடிசைப் பகுதிகளுக்கு இடம் மாறியதாலும், குஜிலி பாடல்களின் பிரபலம் மங்கத் தொடங்கியது.  

ஆங்கிலேயர்களின்   ஆட்சியில்   நடந்த அட்டூழியங்களை   குஜிலி  பாடல்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியதால் அவை தடை செய்யப்பட்டு  தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. குஜிலி பாடல் புத்தகங்கள்  வீட்டில் வைத்திருப்பதும் தடை செய்யப்பட...  19-ஆம் நூற்றாண்டின் பின்பகுதியிலிருந்து 20-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை பிரபலமாக இருந்த குஜிலிப் பாடல்களை மக்கள் மெல்ல மெல்ல மறந்தார்கள்.  நீண்ட  இடைவெளிக்குப் பின் குஜிலி பாடல்கள்  "கானா' பாடல்கள் என்கிற வடிவில்  சென்னையின்  இன்னொரு முகத்தைக் காட்டியது. ஆரம்பக் காலத்தில் "கானா' பாடல்கள் கூட பெண்களை மையப்படுத்தி அமைந்திருந்தன. போகப் போக  "கானா' பாடல்கள் நாட்டு நடப்புகளை சொல்ல ஆரம்பித்தன. வழக்கொழிந்த குஜிலி "கானா' என்ற பெயரில் சாதாரணர்களின் பாடல்களாக  பரிணமித்தன. "முச்சந்தி இலக்கியம்' என்ற நூலை எழுதியிருக்கும்  ஆ. இரா. வேங்கடாசலபதி, குஜிலி பாடல்கள் குறித்து திறனாய்வு செய்து வெகுவாகப் பாராட்டியும் உள்ளார். குஜிலி பாடல்கள் பிரபலமாக இருக்கும் போதே அதை திட்டித் தீர்த்த மரபுக் கவிஞர்களும்  இருந்திருக்கிறார்கள். அன்றைய   சென்னையின்   வாழ்வியல் எப்படி இருந்தது. அப்போது என்னென்ன நிகழ்வுகள் நடந்தன என்று கச்சிதமாகக் காட்டும் கண்ணாடியாக "குஜிலி' பாடல்கள் அமைந்துள்ளன என்பதை யாராலும் மறுக்க முடியாது. பாடல்களை மீட்டுக் கொண்டுவரும் முயற்சிகளும் காலம் மாறினாலும்  தமிழுக்காக சிலர் இருக்கிறார்கள்  என்ற நம்பிக்கையைத்  தருகிறது''  என்கிறார் இளங்கோ. 

கும்பகோணம் நீலத்தநல்லூர் 
மாட்டுச்சந்தை பாட்டு 
ஓ.குருசாமிதாஸ் அவர்கள் 
இயற்றியது. 
இந்துஸ்தான் பியோரோ என்ற மெட்டு

"மாமியத்தை மாமியத்தை 
பார்த்து வந்தேண்டி
மாட்டு சந்தை அதிசயத்தை 
கேட்டு வந்தேண்டி
முடுக்கு
கருப்புகாளை ரெண்டு ஜோடி 
ஓட்ட போனேண்டி
கருத்தபையன் தெருத்திகிட்டான் பொருத்து வந்தேண்டி 
யேலம்மா -  எட்டி நட - வீரம்மா'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com