வளர்த்த பாசம்!

மாடேயில்லாம எப்படித்தான் இன்னிக்கு மாட்டுப் பொங்கல கொண்டாடப் போறமோ... தெரியல...? இல்லாம இருந்திருந்தாக்கூட ஒண்ணுந் தெரிஞ்சிருந்திருக்காது.
வளர்த்த பாசம்!

தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி - 2018 சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,250 பெற்ற சிறுகதை
மாடேயில்லாம எப்படித்தான் இன்னிக்கு மாட்டுப் பொங்கல கொண்டாடப் போறமோ... தெரியல...? இல்லாம இருந்திருந்தாக்கூட ஒண்ணுந் தெரிஞ்சிருந்திருக்காது. ஆனா, வச்சிருந்துட்டு இல்லை என்னும்போதுதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு. அப்படியொரு அன்னியோன்யம் எங்களுக்கும் மாட்டுக்கும்.
எனக்கு நினைவு தெரிஞ்ச காலத்திலிருந்தே எங்க வீட்டுல நிறைய மாடுங்கயிருந்துச்சு. ஊர்ல்ல எல்லாரும் எங்கள மாட்டுக்காரங்க வீடுன்னுதான் சொல்லுவாங்க. கசகசன்னு அவ்வளவு மாடுங்கயிருக்கும். அப்படியெல்லாம் மாட்டை வச்சி வளத்துட்டு இன்னிக்கு வீட்டுல்ல சுத்தமா ஒரு மாடுகூட இல்ல..
எம்பொண்ண கட்டிக்குடுக்குற வரைக்கும் வீட்டுல்ல பத்து பதினைஞ்சு மாடாவது இருந்திருக்கும். அதுக்கப்பறம் எங்களாலே அதை சரியா பாத்துக்க முடியாம போயிடுச்சு.. இருந்தாலும் ஒரே ஒரு கறவை மாட்டை மட்டும் வச்சுக்கிட்டோம். ஏன்னா அது என் சம்சாரத்தோட சீதனமா வந்த மாட்டோட கடைசி வம்சம். அதை மட்டும் நிறுத்திக்கிட்டோம். அதுயிருக்குற வரைக்கும் எங்களுக்கு ஒரு ஆறுதலாவேயிருந்துச்சு. அந்த மாட்டையும் பத்து நாளைக்கி முன்னாடிதான் எம் மொவன் கோவத்துல வந்து வித்துட்டுப்போயிட்டான்.
அந்த மாடு போனதிலிருந்தே எங்களுக்கு பித்து புடிச்சுப் போன மாதிரியாவேயிருக்கு.
கொல்லைக்கு போய்ட்டு வந்து கெழக்கு பக்க திண்ணையிலதான் ஏறி ஒக்காந்திருக்கேன். ரெண்டு கையையும் திண்ணையில ஊனிக்கிட்டு நிமுந்துப் பாத்தா என்னையும் அறியமா என் பார்வை நேரா மாட்டுக்கொட்டாவுக்குள்ளதான் போவுது.
மாடு நிக்கற மாதிரியும், அது வாலை மேலயும் கீழயும் ஆட்டுற மாதிரியும், "ம்...மே..'ன்னு கத்தற மாதிரியும் ஒரே பிரம்மையாயிருக்கு. கண்ணை நல்லா... முழிச்சு முழிச்சு பாத்தேன். உள்ள ஒரே கும்மிருட்டு. அதுக்குள்ள ஒரு பெரிய இயக்கமே நடந்துக்கிட்டிருந்தது. இப்படி எங்க காலத்துலே அந்த கொட்டா காலியாவுன்னு நான் கொஞ்சங்கூட நெனைச்சுப்பாக்கல. வவ்வா ஒண்ண வேகமா உள்ளப்போயிட்டு எதையோ பாத்து பயந்து வர்ற மாதிரி ஒடனே வெளிய வருது.
தெரிஞ்சோ தெரியாமலோ அந்த மாட்டை விக்கறதுக்கு நாங்களும் ஒரு காரணமாயிட்டோம். என் சம்சாரத்துக்கு இப்ப.. என்ன ஒரு அறுபது வயசிருக்கும். இது ஒண்ணும் பெரிய வயசில்லதான்... ஒழைச்சு ஒழைச்சு ஓடா தேஞ்சிபோனவ. விவசாய குடும்பத்துல வேலைக்கா பஞ்சம். மூணு வேளையும் மக்களுக்கு வடிச்சுக்கொட்டியே அவ ஒடம்பு ஆடிப்போயிடுச்சு. நல்லா நிமுந்து கூட நிக்க முடியாமா கூன் வேற வுழுந்து போச்சு. கண்ணுங் கொஞ்சம் சரியில்லன்னுதான் சொல்லுவா. நல்லா நடக்கும்போதே எங்கியாவது உழுந்துடறமாதிரி; ஆடி ஆடி நடப்பா. இதுல இருட்டுல நடந்தா எப்படியிருக்கும்.
போன மாசம் சரியான மார்கழி பனி காலையிலே அஞ்சு மணிக்கெல்லாம் பால் கறக்க போயிருந்திருக்கா.. பொழுது விடிஞ்சே கறந்துக்கலாம். ஓண்ணும் அவசரமில்ல.. என்னப் பண்றது..? எங்க நேரம்..
விடியாது ஏஞ்சிப் போய் பால் கறந்து பழக்கமாயிடுச்சு. அதைப் போய் இப்ப மாத்த முடியுமா? அப்படி போம் போதுதான் மாட்டுக்கிட்ட ஏதோ ஒரு கல்லோ கட்டையோ கடந்து தடுக்கிவுட்டுட்டுயிருக்கு. அதுல அவ கை மணிக்கட்டு நழுவிப் போச்சுன்னு பெரியாஸ்பிட்டல்ல சொல்லிட்டாங்க.
ஒடனே எம்மொவனுக்கு போனப்போட்டு விஷயத்த சொல்லிட்டோம்; அவன் டவுன்ல்ல வேலையில இருக்கான். அங்கே அவனுக்கு வூடும் குடுத்திருக்காங்க. அப்பப்ப விவசாயத்தப் பாக்க வருவான் போவான். ஏதாவது விசேஷம் போக்குவரத்துன்னா.. குடும்பத்தோட வந்து போவான்.
ஆத்தாளுக்கு அடிப்பட்டுடுச்சுன்னதும் புள்ள ஒடனே துடிச்சு புடிச்சு கெüம்பி வந்துட்டான். கையில கட்டோட அம்மாவ பாத்தவன் அப்படியே கண்கலங்கிப் போய் நின்னுட்டான்.
"ஏம்மா.. பாத்துயிருக்க கூடாதா.. ஒங்களுக்கு எத்தனை தடவ சொல்றது?''ன்னு பொலம்பிக்கிட்டேயிருந்தான். அப்பறம் கொஞ்சம் சமாதானமாயி "சரி இங்க பாக்க வேணாம் நாம வெளியில போய் பாப்போம்'' ன்னு சொல்லிட்டு யார் யாருக்கோ போனப் போட்டு கேட்டான். அப்பறம் பாண்டிச்சேரி போற வழியில அபிஷேகப்பாக்கத்துல போய் கட்டுப்போட்டுக்கிட்டு வந்தோம். அதுமாதிரி ஒரு மூணு கட்டுதான் போட்டோம். கை கொஞ்சம் பரவாயில்ல.
அதுக்கப்பறம் ரெண்டு தரம் வந்து பாத்துட்டுப் போயிட்டான். மூணாவது மொறையாவரும் போதுதான் என்ன நெனைச்சானோ தெரியல.
"வயசான காலத்துல ஏம்மா இப்படிகெடந்து கஷ்டப்படுறீங்க.. எல்லாத்தையும் வுட்டுட்டு ஏங்கூட டவுனுக்கு வந்துடுங்க''ன்னு சொன்னான். அவன் சொல்ல வேண்டிய மொறைக்கு சொல்றான். அதுக்காக அங்க போயிட முடியுமா என்ன? நமக்குன்னு வூடு வாசயில்ல?
அவன் குடியிருக்குற வீட்டுக்கு நாங்க ஒரு நாளஞ்சி மொறதான் போயிருப்போம். எங்கள வண்டியிலே இட்டுக்கிட்டு போயிருக்கான். எப்ப நான் போனாலும் ஒரு நாளைக்கு மேல அங்க தங்கவே மாட்டேன். எப்படா இங்கிருந்து போவோம்ன்னுதான் இருக்கும்.
"ஏன்னா.. இரயில் பொட்டி மாதிரி சின்ன வீடு. அதுல எல்லாரும் எப்படி பொழங்க முடியும்? வீட்டுக்குள்ள காத்தோட்டமும் கெடையாது. கசகசன்னுருக்கும்.
பெரும்பாலும் நான் சேர் போட்டு வெளியதான் ஒக்காந்திருப்பேன். அக்கம்பக்கம் யாருமே எங்கிட்ட பேசமாட்டாங்க. கிராமத்துக்காரங்கிட்ட யாரு பேசுவா? அப்படியே எவ்வளவு நேரந்தான் ஒக்காந்திருக்கறது? இதே ஊர்ப்பக்கம்ன்னா.. இந்த அளவுக்கு வீடுங்க நெருக்கடி கெடையாது. நல்ல காத்தோட்டம். மாடு, ஆடு, கோழி, கொக்கு, பயிரு, பச்சன்னு பாத்துக்கிட்டிருந்தாலே பொழுதுபோயிடும். அதுக்காகதான் நாங்க அங்க வர முடியாதுன்னு சொல்லிட்டோம்.
"மாடுயிருக்கறதாலதான ஊருக்கு வரமாட்டீங்கறீங்க.. என்ன பண்றேன்னு பாருங்க''ன்னு கொக்கரிச்சுட்டுப் போனவன், ஒரே வாரத்துல பால்கார ராமலிங்கத்த கூட்டாந்து வெறும் பாஞ்சாயிரத்துக்கு மாட்டை வித்திட்டான். அந்த பால்காரர் ஏற்கெனவே எங்கவீட்டுல பால்கரந்துக்கிட்டு போயிட்டிருந்தவர்தான்.
நாங்க ஆனவரைக்கும் தடுத்துப் பாத்தோம்.. "எப்பா அகத்தியா.. இனிமே ஒனக்கு எந்த தொந்தரவும் தரமாட்டோம்டா.. இதான்டா எங்களுக்கு பொழுதுபோக்கு.. புள்ள மாதிரி வளத்துட்டோம்டா... இதுயில்லாம எங்களாலயிருக்க முடியாது''ன்னு எவ்வளவோ கெஞ்சனோம். ம்..கூம் அவன் மனம் மாறவேயில்ல..
"நான் ஒங்கல பாக்குறதா..? இல்ல, அங்க புள்ளைங்களுக்கு அடிக்கடி ஒடம்பு சரியில்லாம போகுதே... அதை பாக்கறதா..? வேலைக்கு போறதா? விவசாயத்தப் பாக்கறதா..? என்னதான் ஒங்க மனசுல நெனைச்சுக்கிட்டிருக்கீங்க'' ன்னு கத்திட்டு போயிட்டான்.
அந்த மாடு எங்க வூட்டோட மகாலட்சுமி. அது போனதிலிருந்தே எங்களோட நடைவுடையெல்லாம் கொறைஞ்சுப்போச்சு. என்னை விட என் சம்சாரந்தான் உண்மையாவே கை ஒடஞ்சிப்போய் ஒக்காந்திருக்குறா. நானாவது வெளிய தெருவ போயிட்டு வருவேன். அவ என்னபண்ணுவா பாவம்.
இப்ப என் மொவன மீறி நாங்க எதுவுமே செய்ய முடியாது. வயசாயிடுச்சுல்ல. வாய மூடிக்கிட்டு பேசமா போவேண்டியதுதான். இல்லன்னா இதுவும் கெடைக்காது.
"ம்...மே..'ன்னு கொட்டாப்பக்கம் சத்தங்கேட்ட மாதிரியேயிருக்குன்னு திரும்பிப் பாத்தேன். கொழந்தப்புள்ள தாய தேடுற மாதிரி கண்ணுரெண்டும் கொட்டாவுள்ள ஓடிப்போய் தேடிப் பாத்துட்டு வெளிய ஓடியாருது.
எப்ப கொல்லைக்கு போய்ட்டு வந்தாலும், நேரா மாட்டுக்கொட்டாயிக்கு போயி, ஏங்கையால கொஞ்சம் வைக்கல அள்ளிப்போட்டுட்டுதான் வருவேன். ஏற்கெனவே அதுங்க தின்னிருக்கும். இருந்தாலும் நான் போட்டுட்டேனேங்கறதுக்காக தின்னுங்க. அந்தநேரத்துல அதுங்க கழுத்த தடவிக் குடுத்தா போதும், நல்லா ஒனக்கையா காட்டிக்கிட்டேயிருக்கும். நான் சாப்படறேனோ இல்லியோ மொதல்ல அதுங்கல கவனிச்சுட்டுதான் மறுவேலையே. இப்படியே அதுங்ககூட கொஞ்சநேரம் ஒக்காந்துட்டு வந்துதான் காலை சாப்பாடே சாப்புடுவேன்.
மாடு போன இந்த பத்து நாளாவே எங்களால சரியா சாப்புடவும் முடியல தூங்கவும் முடியல. அதே நெனைப்பு. மாடுதான் எங்களுக்கு குலதெய்வம்மாதிரி. எங்களுக்கு மட்டுமில்ல விவசாயம் பண்றவங்கலெல்லாத்துக்கும் மாடுதான் குலதெய்வம்.
அதுங்க காட்டுற விசுவாசத்துக்கு நாம காட்டுற நன்றிதான் இந்த பொங்கல் விழா... வருஷத்துல ஒருநாள் குலதெய்வத்துக்கு படைக்கற மாதிரி மாடுங்களுக்கும் புடிச்சத செஞ்சுவச்சு படைக்கணும்ன்னு எங்க தாத்தா அடிக்கடி சொல்லுவாரு.
யூரியா வந்ததும் அந்த குலதெய்வத்த மறந்துட்டோம். அதோட பலனைதான் இப்ப நாங்க அனுபவிச்சுக்கிட்டிருக்கறோம். புள்ளமாதிரி வச்சியிருந்த மாட்டை வித்துட்டு எங்கிருந்து பொங்க கொண்டாடுறது. அவன் காலத்துக்கு தகுந்த மாதிரி மாறிக்கிட்டான். எங்களால அப்படி மாற முடியல..
நான் திண்ணையில வந்து ஒக்காந்திருக்கறத என் சம்சாரம் பாத்துட்டு, "கை கால் கழுவிட்டு வந்து சாப்புடுங்க''ன்னா..
"நீ சாப்டீயா?'' ன்னேன்.
"ம்...''
சாப்படலன்னாலும், சாப்ட்டேன்னு தான் சொல்லுவா. நான் எந்திரிக்காம ஒக்காந்தேயிருந்தேன். ஒடம்புவேற அசதியாதான் இருக்கு... ஆனா, பசியில்ல. ரொம்ப நேரம் நிக்கமுடியாம அப்படியே கீழ ஒக்காந்துட்டா...
இதுக்கு முந்தியெல்லாம் நான் வந்ததும் எம் பக்கத்துல வந்து ஒக்காந்துக்கிட்டு வளவளன்னு அந்த கதை இந்த கதைன்னு ஏதாவது பேசிக்கிட்டேயிருப்பா.. மாடு போனதிலிருந்தே சரியாவே பேசறதில்ல.. அவளுடைய சந்தோஷத்த, கொடைமாதிரி சுருக்கி வீட்டுக்குள்ள ஒக்கார வச்சுட்டான் எம்மொவன்.
"மாட்டுப்பொங்கலுக்கு எப்படா வர்ற?''ன்னு போன் போட்டு கேட்டாக்கா.."அங்கதான் மாடேயில்லையே.. அப்பறம் அங்க வந்து என்ன பண்றது?''ன்னு கேக்கறான். இவன் சொல்றத கேட்டு சிரிக்கறதா.. அழுவறதான்னு தெரியல.
தீபாவளிக்கு வந்து போகும்போதே எம் பேரன், "தாத்தா வர பொங்கலுக்கு நாந்தான் இந்த கன்னுக்குட்டிய இட்டுக்கிட்டு கோயிலுக்கு வருவேன்''னு சொல்லிட்டுப் போனான். இப்பதான் அவனுக்கு நல்லா வெனவு தெரிஞ்சுருக்கு. வந்தான்னா.. நம்ம என்ன செய்யறோம்... ஏது செய்யறோம்ன்னு தெரிஞ்சுப்பான்னு பாத்தேன்.?
ஊர்க்கார புள்ளைங்கெல்லாம் ஏதோ சொல்லி சிரிச்சுக்கிட்டே தெருவுல போவுதுங்க. எல்லாம் ஒரு வகையில சொந்தக்காரப்புள்ளைங்கதான். இதுங்கெல்லாம் என்னென்ன ஊருக்கோ பொழைக்கப் போயிருக்குங்க.. ஆனா, பொங்கலுக்கு மட்டும் எங்கிருந்தாலும் டான்டான் வந்துடுங்க. இந்த சாக்குலியாவது தாய் தகப்பன ஒரு எட்டு பாத்துட்டு போலாம்ன்னு புள்ளைங்க ஆசையா வருதுங்க.
"என்ன மீசை.. பேரன் பேத்தியெல்லாம் வந்துட்டாங்களா?''ன்னு வீட்டு வாச வழியாபோற பொன்னம்மா கேட்டுக்கிட்டே மாட்ட ஓட்டிக்கிட்டுப் போவுது. இன்னும் வரலைங்கறது அதுக்கும் தெரியும். இருந்தாலும் சும்மா போவாம.. ஏதாவது பேச்சுக்குடுத்துக்கிட்டு போறது ஊர் வழக்கம்.
என்ன சொல்றதுன்னு தெரியாம நான் பாட்டுக்கு காதுல வாங்காதமாதிரிதான் ஒக்காந்திருக்கேன். இதே மாதிரி எத்தனை முறை நான் இப்படி மாட்டைப்புடிச்சுக்கிட்டு கம்பீரமா தெருவுல போயிருந்திருப்பேன். இருக்க வேண்டியது இருந்திருந்தா கெடைக்க வேண்டிய மரியாதை தானா கெடைக்கும். நாமதான் இப்ப இல்லாத வெறும் பயலாப் போயிட்டோம். எங்ககிட்ட மாடேயில்லாததால எங்கள என்னமோ இந்த ஊரவிட்டே ஒதுக்கி வச்சமாதிரியேயிருக்கு.
"ஏன் இங்கியே ஒக்காந்திருக்கீங்க.. உள்ள வந்து சாப்புடுங்க''ன்னா..
வெளியிலே ஒக்காந்திருக்கறதாலதான் போற வர்றவங்க எதாவது கேக்கறாங்கன்னு சொல்றான்னு நெனைக்கறேன். முந்திய விட கொரல் கொஞ்சம் நடுக்கமாத்தான் இருக்கு என் சம்சாரத்துக்கு.
பொன்னம்மா சாதாரணமாத்தான் கேட்டுட்டுப்போவுது. இருந்தாலும் இந்தமாதிரி நேரத்துல எதார்த்தமா கேட்டாகூட நமக்கு தப்பாதான் தெரியும்.
ஊர்ல்ல இன்னேரம் அவுங்கவுங்க மாடுங்களை அழகு பண்ண ஆரம்பிச்சிருப்பாங்க. நாங்களும் அதுக்கு சளைச்சவங்கயில்லன்னு ஒவ்வொரு வருஷமும் தூள் பண்ணுவோம். யார் கண்பட்டுச்சோ இந்த வருஷம் விக்கி வெலவெலத்துப்போய் ஒக்காந்திருக்கோம்.
எதையெல்லாம் நெனைக்க கூடாதுன்னு நெனைக்கறோம்ன்னோ.. அதெல்லாம் மண்ணுக்குள்ளயிருந்து வர்ற பயிறு மாதிரி மனசுக்குள்ள முட்டி மோதி வெளிய வருது.
இந்த நேரத்துக்கெல்லாம் மாட்டைக் கொளத்துக்கு இட்டுக்கிட்டுப்போய் நல்லா சோப்புப்போட்டு குளிப்பாட்டி இட்டாந்திருப்போம். தை பொறந்ததுமே.. கொம்புக்கெல்லாம் பிளேடு போட்டு நல்லா மழ மழன்னு சொரண்டிட்டு, பச்சை, மஞ்ச, செவப்பு, நீலம்ன்னு கலர் கலரா பெயிண்ட் அடிப்போம். அப்படி ஒரு முறை பெயிண்ட் அடிக்கும் போது எம் மொவன் என்ன பண்ணிட்டான்னா.. அப்ப அவன் நாலாவது படிச்சுக்கிட்டிருந்திருப்பான்.
ஒரு குச்சியில பெயிண்ட்ட தொட்டு, மாட்டோட கால் கொளம்புல போய் பூசியிருக்கான். பழகுன மாடுதான் ஒண்ணும் பண்ணாது. இருந்தாலும் அதுக்கும் கூச்சநாச்சம் இருக்கத்தானே செய்யும். வெடுக்குன்னு கால தூக்கினதும் எங்க ஒதைச்சிடப்போவுதுன்னு பயந்துப்போய் எகிறி குதிச்சு ஓடியிருக்கான். அப்ப பக்கத்திலிருந்த மஞ்சகலர் பெயிண்ட் டப்பாவ தட்டிவுட்டுட்டான். எனக்கு செமக்கோவம் வந்துடுச்சு..
"பெயிண்ட் அடிக்கும்போது கிட்டவராதன்னு ஒங்கிட்ட எத்தனை முறை சொல்றது'' ன்னு அடிக்கறதுக்கு கைய ஓங்கிட்டேன். அவன் நேரா அவுங்கம்மாக்கிட்ட ஓடிப்போய் அப்பா அடிக்க வர்றார்ம்மான்னு சொல்லிட்டிருக்கான். அவவுடனே மொவனுக்கு பரிஞ்சுக்கிட்டு எங்கிட்ட சண்டைக்கு வந்துட்டா. நீங்க ஏன் அவன் கால் வைக்கற எடத்துல கொண்டுபோய் பெயிண்ட் டப்பாவ வச்சீங்க..ன்னு கேட்டா? இப்படியெல்லாம் கண் மூடித்தனமா... காட்னெ பாசத்தையெல்லாம் இந்த பய மறந்துட்டான்னு நெனைக்கறேன்.
மாட்டை குளிப்பாட்டினதுலேர்ந்து அதை கோயிலுக்கு இட்டுக்கிட்டுப்போறவரைக்கும் எவ்வளவுக் கெவ்வளவு அழகு படுத்த முடியுமோ அவ்வளவுக்கெவ்வளவு அழகு படுத்தி தங்க தேர்போல ஜோடிப்பாங்க.
மொதல்ல மஞ்சளை நல்லா கொழைச்சி நெத்தி, கொம்பு, திமிளை, வாலு, காலு, தொடை, வயிறு இப்படி எல்லா எடத்துலையும் வட்டவட்டமா பூசிவுடுவாங்க. அவுங்க பூச பூச இன்னொருத்தரு செவப்ப வச்சுக்கிட்டே போவாங்க.
எங்கம்மா இதுபோல மஞ்சள் வைக்கும்போது ரொம்ப பயபக்தியோட பாட்டு பாடிக்கிட்டே மஞ்சளை வைப்பாங்க. அதை கேக்கும்போது நமக்கே ஒடம்பு சிலுக்குறமாதிரியேயிருக்கும்.
வரமாய் உம்மை வாங்கி வந்தோம்...
பரமனாய் நீயும் பாரம் சுமந்தாய்...
உரமாய் எமக்கு உதவி செய்ய...
கரம்பாய் என்றும் காட்டில் கிடந்தாய்... ன்னு உணர்ச்சிப்பொங்க ராகமா பாடுவாங்க. அவுங்களுக்கப்பறம் எம் மொவந்தான் அந்த பாட்ட சரியாப்பாடுவான். அதெல்லாம் என் பேரனும் கத்துக்கணும் தெரிஞ்சுக்கணும்ன்னு ஆசைப்பட்டேன். அதுக்குதான் வழியில்லாம பண்ணிட்டான் புண்ணியவான்.
இப்ப அதையெல்லாம் நெனைக்க நெனைக்க என்னையும் மீறி ரெண்டு சொட்டு தண்ணி என் கண்ணிலயிருந்து வந்துடுச்சு. நானே எதிர்பாக்கல... கீழ ஒக்காந்திருக்கற என் சம்சாரத்து மேல பட்டுடுச்சுன்னு நெனைக்கறேன். அவ அண்ணாந்து என்னைப்பாத்துட்டு.. இப்ப ஏன் கண்கலங்குறீங்க.. ன்னு கேட்டுக்கிட்டே அவளும் கலங்க ஆரம்பிச்சுட்டா.. அவளுக்காகதான் நானே எதையும் ரொம்ப காட்டிக்காமயிருந்தேன். அப்படியிருந்தும் கட்டுப்படுத்த முடியாம போயிடுச்சி..
"ம்..கூம் ஓண்ணுமில்ல..''ன்னுட்டு தெருவையே வெறிச்சு பாத்துக்கிட்டிருந்தேன். கொட்டாவுள்ளயிருந்து "ம்..மே.....ம்.மே......'ன்னு சத்தங்கேக்கற மாதிரியேயிருக்கு. பெரும்பாலும் அது கத்தறத வச்சே எதுக்கு கத்துதுன்னு புரிஞ்சுப்பேன். பசின்னா.. "மே...' ன்னு நீளமா கத்தும் தண்ணி தாகம்ன்னா.. "ம்...மே..' ன்னு அடி தொண்டையிலேர்ந்து கத்தும். அதே ஏதாவது பாம்புமாதிரி வெஷ ஜந்துவைப் பாத்துடுச்சுன்னு வச்சுக்குங்க கயிறே அறுத்துக்கற மாதிரி "மே...மே..'ன்னு கத்திக்கிட்டே ஒரு எடத்துல கூட நிக்காது.
புள்ளைங்க ஏன் அழுவுதுன்னு பாத்து பாத்து செய்யற தாய்மாதிரிதான் எங்க வீட்டு மகாலட்சுமிய வளத்தோம். அதனாலதான் அதை பிரிஞ்சிருக்கறது ரொம்ப கஷ்டமாயிருக்கு.
"இங்கியே ஒக்காந்திருந்தீங்கன்னா... அதே நெனைப்பாதான் இருப்பீங்க.. உள்ள வந்து சாப்புடுங்க''ன்னு சொல்லிக்கிட்டே ரெண்டு கையையும் தரையில ஊன்றி ஏஞ்சி நிக்கமுடியாம தராசு போல ஆடிக்கிட்டே நின்னுக்கிட்டிருந்தா.. நான் வருவேன்னு கொஞ்சநேரம் நின்னுப்பாத்தா. நான் ஏஞ்சிருக்கலைன்னதும் "வர்றீங்களா இல்லையா'ன்னு ஒரு பார்வ பாத்தா...
"க்கும்..'ன்னு கனைச்சுக்கிட்டே "போ.. தோ வர்ற'ங்கறமாதிரி தலையாலே சைகை காட்டினேன். இந்தமாதிரி நேரத்துல என்னை ரொம்பவும் கட்டாயப்படுத்த மாட்டா... கோவத்துல எதாவது நான் திட்டிடுவேன்னு பேசாம போயிக்கிட்டேயிருக்கா.
எட்டாவது முடிச்சுட்டு எம்மொவன் பெரிய படிப்பு படிக்க பெரியகுப்பம் ஆஸ்டல்ல கொண்டு
போய் சேத்துவுட்டேன். சேத்துவுட்டேனே தவிர அவனை நெனைச்சு நெனைச்சு எத்தனையோ நாள் நான் சாப்பிடாமக் கூட தூங்கியிருக்கேன். அதுபோலதான் இப்பவும் புள்ளமாதிரி எங்களையே சுத்தி சுத்தி வந்துக்கிட்டிருந்த மாட்டையும் மறக்க முடியாம தெனம் தெனம் தவிச்சுக்கிட்டிருக்கிறோம்.
பொங்கலுக்கு நாம புது சட்டை போட்டுக்கிற மாதிரி மாட்டுக்கும் இன்னிக்குத்தான் மூக்கணாங்கயிறு மாத்துவோம்.
எங்கம்மாவும் என் சம்சாரமுந்தான் அதுக்கு பதமா மாத்துவாங்க. இவுங்க மாத்தும்போது நான் பக்கத்துல நிக்கவே மாட்டேன்.
அது ம்..மே..ன்னு கத்தும் போது "அப்பா.. அப்பா'ங்கற மாதிரியேயிருக்கும். அப்ப என்னையும் அறியாம கண்ணிலேர்ந்து தண்ணி தானா தரையெறங்கும். இப்படியெல்லாம் பாத்துப்பாத்து பாசமா வளத்த மாட்டை வித்தா யாருக்குத்தான் மனசுக்கஷ்டம் வராது... ஏதோ எங்களுக்கு நல்லது செய்யறேன்னு நெனைச்சுக்கிட்டு தீம்பு செஞ்சுட்டான்.
மூக்கணாங்கயிறு போட்டதும் வலி தெரியாமயிருக்க வெல்லமும் வாழைப்பழத்தையும் நல்லா பெசஞ்சு ஊட்டிவுடுவாங்க. புள்ளைங்க அழுதுக்கிட்டே சோறு வாங்கிக்கிறமாதிரி அதுவும் "அபுக் அபுக்' ன்னு வாங்கிக்கும். "அழாதடா கண்ணு'ங்கறமாதிரி அதை அப்படியே தடவிக்குடுப்பேன்.
இதுங்களுக்காக ரெண்டு விதமா மாலை ரெடி பண்ணி வச்சுருப்போம். அதுல்ல ஒண்ண மாந்தழை, வேப்பந்தழை, நெல்லித்தழை, அசோக தழை இப்படி எல்லாத்தையும் மாலையா கட்டி ஒவ்வொரு மாட்டுக்கும் போடுவோம். ஆனா, அதுங்க ரொம்ப எதிர்பாக்குறது ரெண்டாவது மாலையத்தான். அதுல பாத்தீங்கன்னா.. பனங்கெழங்கு, கரும்பு, அரிசிமாவுல வெல்லம் போட்டு நல்லா மொறு மொறுன்னு சுட்ட அடையெல்லாம் அந்த மாலையில கோத்து கட்டி வச்சுருப்போம். நேரம் ஆவாவ "ம்..மே..'ன்னு கத்தாரம்பிக்குங்க.
அதுங்க கத்தறது "சீக்கிரம் குடும்மா'ங்கிற மாதிரியேயிருக்கும். அந்த மாலைய போட்டதுக்கப்பறம் "உஸ்சு... உஸ்சு...' ன்னு பெரு மூச்சுவுட்டுக்கிட்டே நாக்கை வெளிய நீட்டி வளைச்சு புடிச்சு திங்கத்தான் பாக்குங்க.
இப்பத்தான் ஊர்ல்ல மாடே கொறைஞ்சு போச்சு.. அப்பெல்லாம் வீட்டுக்கு பத்து பதினைஞ்சு மாடுங்க சாதாரணமாவேயிருக்கும். யாரு அதிகமா மாடு வச்சுருக்காங்களோ அவந்தான் ஊர்ல்லே பெரிய பணக்காரன். ஆமாம் அவங்கிட்டதான் எப்பவும் மகாலட்சுமி வாசமிருப்பா.. பால் விப்பான், மோர் விப்பான், தயிர் விப்பான், மாடு விப்பான், நெய் விப்பான், எரு விப்பான், ஏன்.. கோமியத்தக் கூட விப்பான், இப்படியெல்லாம் ஏகபோகமா வாழ்ந்துட்டு இன்னிக்கு எல்லாத்துக்கும் ஏங்கிப்போய் ஒக்காந்திருக்க வேண்டியதாயிருக்கு.
"எல்லாத்தையும் இங்கியே தின்னுட்டா... கோயிலுக்கு போம்போது சும்மாவா போவீங்க.. கொஞ்ச நேரம் கம்முன்னிருங்கடா''ன்னு என் சம்சாரம் செல்லமா மாட்டை தட்டுவா.. அதுங்க எதையும் காதுல வாங்காம கெடைச்சவரைக்கும் லாபம்ன்னு தும்பிக்கைமாதிரி நாக்க வெளிய நீட்டி துழாவிக்கிட்டேதான் இருக்கும்.
பொழுது சாயறதுக்குள்ள பொங்க பானைய கிழக்கு பக்கமா வச்சு புது அரிசி போட்டு, அது பொங்கி வந்ததும் அதுல கொஞ்சம் வெல்லத்தப்போட்டு, நல்லா ஒரு கிண்டு கிண்டி எடுத்து, மாடுங்களயெல்லாம் கிழக்கு பக்கமா பாத்தமாதிரி நிக்கவச்சு அதுங்களுக்கு முன்னாடி வாழை எலையப்போட்டு படைச்சு ஒவ்வொரு உருண்டையா உருட்டி எல்லாரும் ""நாந்தான் குடுப்பேன்.. நீதான் குடுப்பேன்'' னு எல்லாரும் போட்டி போட்டுக்கிட்டு குடுப்போம்.
கடைசி காலத்துல பசிச்சவன் பழங்கணக்குப்பாத்து பசியாறிக்கற மாதிரி பழச நெனைச்சுப்பாத்து சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்னு எங்க தாத்தா அடிக்கடி சொல்லுவாரு.. அதுபோலதான் இப்ப எங்க நெலமையும் ஆயிப்போச்சு.
உள்ளப்போனவ சத்தத்தையே காணோமேன்னு எட்டிப்பாத்தேன். குத்துக்கால் போட்டு ஒக்காந்துக்கிட்டு, உள்வாச காலுக்கு மஞ்சள பூசி குங்குமம் வச்சிக்கிட்டிருக்கா..
சாயந்திரம் ஓர் ஆறு ஆறரைக்கெல்லாம் புத்துமாரியம்மன் கோயிலுக்கு. மணப்பொண்ண ஜோடிச்சு இட்டுக்கிட்டு வர்றமாதிரிதான் எல்லாரும் மாட்டை ஓட்டிக்கிட்டு வருவாங்க. அங்கபாத்தா.. அசந்தே போயிடுவோம் அவ்வளவு மாடுங்க வந்திருக்கும். கிட்டதட்ட ஒரு பெரிய மாடுங்க மாநாடு போலவேயிருக்கும்.
பூசாரி சாமிக்கிட்ட படைச்சிட்டு வந்து எல்லாமாட்டுக்கும் சூடம் காட்டி குங்குமப்பொட்டெடுத்து மாட்டுக்கு நெத்தியில வச்சுவுடுவாரு.. அதுக்கப்பறம் வண்டிமாடு வச்சிருக்கறவங்களெல்லாம் மாட்ட பூட்டிக்கிட்டு ரெடியா நிப்பாங்க. சின்ன பூசாரி தேங்காயில சூடத்த ஏத்தி வச்சு.. எல்லா மாட்டையும் சுத்தி வந்து கோயிலுக்கு முன்னாடி கடக்கற கல்லுல்ல டமார்ன்னு போட்டு ஒடைச்சுடுவாரு..
ஒடனே வண்டியில எல்லாரும் ஏறிக்கிட்டு பொங்கலோ.. பொங்கல்.. ன்னு கத்திக்கிட்டு தெரு தெருவா போயிட்டு வருவாங்க. ஊரே சந்தோஷமாயிருக்கும்.
போன வாரம் பால்காரர் ராமலிங்கத்தைச் சந்தையில பாக்கும் போது பொலம்பிக்கிட்டே போனான்.
"என்னா.. மீசைக்காரரே வாங்கிட்டு போன நாள்லேர்ந்து எதையும் திங்கக்கூட மாட்டேங்குது. ராவும் பகலுமா ம்..மே..ன்னு கத்திக்கிட்டேயிருக்கு. என்ன மாயமந்திரம் போட்டு குடுத்தியோ தெரியல..'' ன்னான்.
அதை கேட்டதுலேர்ந்து எங்களுக்கு அது நெனைப்பாவேயிருக்கு.
வாசலுக்கு கிழக்கு பக்கமா மாடு குடிக்கிற ரெண்டு தண்ணித் தொட்டியும் எங்க வாழ்க்கை மாதிரி வறண்டு போய் கெடக்கு. கவுத்த அவுத்துட்டா போதும் விறு விறுன்னு நாலு எட்டா வந்து "சர்..'ன்னு உறிஞ்சுற சத்தம் இன்னமும் எங்காதுல கேட்டுக்கிட்டேயிருக்கு.
திண்ணையிலேர்ந்து எறங்கி நின்னு வேட்டிய அவுத்துக்கட்டிக்கிட்டேன்...
சாதாரணமாதான் நிக்கறேன்....
ஒடம்புல தெம்பேயில்லாதமாதிரியேயிருக்கு...
ஏதோ மயக்கம் வர்றமாதிரி ஒரு பக்கமா தள்ளுது...
கிழக்கு பக்கம் நிக்குற மரத்தூண்மேல சாஞ்சுக்கிட்டேன்...
மனசு பூரா மாட்டைப் பத்தியே நெனைச்சுக்கிட்டிருக்கறதால "ம்..மே..'ன்னு அது கத்தறமாதிரியே கேக்குது.
தொடர்ந்து கேக்குது.
கழுத்துமணிச்சத்தம் "க்ணிங்.. க்ணிங்'ன்னு அதிர "அ...ம்...மா...'ன்னு கத்திக்கிட்டு ஓடி வர்ற சத்தம்... வடக்கால பக்கத்திலிருந்து, இப்ப இன்னும் வேகமா கேக்குது.

சுப்ரமணிய பாண்டியன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com