உதவி தேவையா... நாங்க இருக்கோம்...!

தற்போதைய கால ஓட்டத்துக்கு தேவையான விஷயமான நதிகளை தூய்மைப்படுத்தும் திட்டத்தையும் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்களை கொண்டு செயல்படுத்தி வருகின்றனர்
உதவி தேவையா... நாங்க இருக்கோம்...!

தற்போதைய கால ஓட்டத்துக்கு தேவையான விஷயமான நதிகளை தூய்மைப்படுத்தும் திட்டத்தையும் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்களை கொண்டு செயல்படுத்தி வருகின்றனர் "ஐ சப்போர்ட் பவுண்டேசன்' அமைப்பினர்.  நாம் அவர்களைச் சந்திக்கச் சென்றபோது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஜம்புநதியை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அமைப்பின் நிறுவனர் ப.சிவசுப்பிரமணியன் தாங்கள் செய்து வரும் பணிகள் குறித்து நம்மிடம் கூறியது:

""நான் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன். தமிழ்நாட்டில் பிறந்து படித்து, வெளிநாட்டில் வேலை செய்து வருபவர்கள் தாங்கள் பிறந்த மண்ணுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் உள்ளனர். ஆனால், எப்படிச் செய்வது? யார் மூலமாகச் செய்வது? என்பன போன்ற விவரங்கள் தெரியாததால் செய்ய முடியாமல் உள்ளனர். இது போன்று மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களை இணைத்து ஐ சப்போர்ட் பவுண்டேசனை நிறுவி மக்கள் தொண்டாற்றி வருகிறோம். 

தமிழகத்தில் இப்பணிகளை அமைப்பின் தலைவர் பரமசிவன், செயலர் ராமலிங்கம், பொருளாளர் ரஞ்சித் ஆகியோர் முன்னின்று செயல்படுத்தி வருகின்றனர். 2014-ஆம் ஆண்டில், தூய்மை பாரத திட்டம்  பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. இந்த பள்ளிகளுக்கு தூய்மைப் பணிகளுக்குத் தேவையான தளவாடங்கள் வழங்கப்பட்டதுடன், தூய்மைப் பணியும் மேற்கொள்ளப்பட்டது. 

அது போல், சில கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு அங்கு அடிப்படை வசதிகள், மருத்துவ முகாம்கள், குப்பை சேகரிப்பு தொட்டிகள் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், சிறார்கள் படிக்கும் பள்ளிகள் பலவற்றில் கட்டடங்கள் சரியாகப் பராமரிக்கப்படாமல் , பாதுகாப்பற்று இருப்பது தெரியவந்தது. எனவே, தொடக்கப்பள்ளிகளின் கட்டடங்களில் கவனம் செலுத்த தொடங்கினோம். சில  தொடக்கப் பள்ளிகளில் கட்டடங்களை புதுப்பிக்கும் பணி, உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள், வண்ணம் அடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அது போல் சிறப்பாகப் படிக்கும் ஏழை மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களின் வீட்டில் படிப்பதற்கு வசதியாக தரைத்தளம் அமைத்தல், மேஜை, நாற்காலி, புத்தக அலமாரி, விளக்குகளை அமைத்துக் கொடுக்கும் பணிகளும் செய்து தரப்பட்டுள்ளன.  

பல பள்ளிகளில் மாணவர், மாணவிகள் கழிப்பறை வசதி இல்லாமல் சிரமப்படுவது தெரிய வந்தது. அதன் பின்னர் பள்ளிகளில் கழிப்பறை அமைக்கும் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பல பள்ளிகளுக்கு கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. 

கடையம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் நூற்றுக்கணக்கானோருக்கு மாதம் தோறும் தேவையான ஊட்டச்சத்து மாத்திரைகள் அரசு மருத்துவர்களின் பரிந்துரையின்படி வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பு தொடங்கப்பட்டது முதல் இன்று வரை 1100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் வகுப்புக்கு ஏற்ப கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும்,   நடிகர் விவேக்குடன் இணைந்து 2017-18இல் 10,450 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதை நடிகர் விவேக் ஆழ்வார்குறிச்சியில் தொடங்கி வைத்தார். நிகழாண்டில் இதுவரை 2000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 

நதிகள் கழிவுநீர் ஓடையாக மாறி தங்களின் சுயத்தை இழந்து வருகின்றன. மேலும் குப்பை  மேடாகவும் மாறி மழைக்காலங்களில் வெள்ள நீர் செல்ல முடியாமல் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதையடுத்து நதிகளைப் பாதுகாக்கும் நோக்கில் நதிகளை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நடப்பாண்டில் தொடங்கியுள்ளோம். முதல் கட்டமாக திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஜம்புநதியை மாணவர்கள, சமூக ஆர்வலர்கள் துணை கொண்டு சீர் செய்துள்ளோம். 

கடலூரில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட பொழுது அங்குள்ள முடப்பள்ளி கிராமத்துக்குச் சென்ற எங்கள் அமைப்பினர் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்தனர். 

தொண்டு நிறுவனங்கள் தனித்தனியாக பணிகளை செய்யும்போது தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. பல தொண்டு நிறுவனங்கள் இணைந்து பணிகளை மேற்கொண்டால் மக்களுக்கு தேவையான நல்ல பணிகளை விரைவாக செயல்படுத்த முடியும்'' என்றார் சிவசுப்பிரமணியன்.  

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com