சிலம்பின் ஒவியானார்!

கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர்,  சங்ககால மதுரை கணக்காயனார் போலத் தமிழ்மொழியின் ஈர்ப்புக்கு உள்ளானார்.
சிலம்பின் ஒவியானார்!


கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர்,  சங்ககால மதுரை கணக்காயனார் போலத் தமிழ்மொழியின் ஈர்ப்புக்கு உள்ளானார். தமிழ் வளர்ச்சித்துறை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்  ஆகிய துறைகளில் இயக்குநராகவும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பதிவாளராகவும் பணியாற்றியவர். பணிக்காலத்தில் அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., திருமதி. ஜானகி ஆகிய முதலமைச்சர்களின் அன்புக்கு உரியவராக இருந்தார். ஓய்வு பெற்ற பிறகும் முதலமைச்சர்களின் அன்புக்கு உரியவராக இருந்தார். அண்மையில் தமிழ் வளர்ச்சித்துறையின் விருதினையும் பெற்றிருக்கிறார். இறுதிநாள் வரை "அரிமா நோக்கு' எனும் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்திருக்கிறார்.

"சிலம்பொலி' தலைப்பில் 1975-இல் நூல் எழுதி இருக்கிறார். அதற்கும் முன்பே சிலம்பொலியாக முழங்கி இருக்கிறார். பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை இவரது சிலப்பதிகாரச் சொற்பொழிவைக் கேட்டு வியந்து, "சிலம்பொலி' என்று பட்டம் தந்திருக்கிறார். 

தமிழகத்தில் நடந்த உலகத்தமிழ் மாநாடுகளின் போதெல்லாம் மலர் தயாரிப்புப் பணியைச் சிலம்பொலியார்தான் சிறப்பாகச் செய்திருக்கிறார். அவர் தயாரித்த உலகத் தமிழ் மாநாட்டு மலர்களில்  இப்போதும் தமிழ் மணம் வீசும். தமிழ் மாநாட்டு மலர்களை வடிவமைப்பதிலும் படங்களை வகைப்படுத்துவதிலும் கட்டுரைகளைக் கோவைப்படுத்துவதிலும் அவருடைய படைப்பாளுமை வெளிப்படும். அரசு நிலையில் மலர் என்றால் சிலம்பொலியார்தான் நினைவுக்கு வருவார்.

மூத்த படைப்பாளர்களுக்கு அணிந்துரை எழுதித் தருகிற விருப்ப ஈடுபாட்டைப் புதிய இளம் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் அணிந்துரை தரும்போதும் வெளிப்படுத்துவார். இவ்வாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களுக்கு அணிந்துரை தந்திருக்கிறார். அவை தொகுதிகளாகக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் முன்னுரையோடு வெளிவந்துள்ளன. அவர் எழுதித் தந்த அணிந்துரைகள் பலருக்கு  எழுத்தாளராகவும் கவிஞராகவும்  சொல்லிக் கொள்ளும் துணிவைத் தந்திருக்கின்றன. எந்த வகையான பயனையும் எதிர்பாராமல் இளம் படைப்பாளர்களின் படைப்புகளை அவர் பேசுகிற கூட்டங்களில் பாராட்டிப் பேசும் பண்பு வியக்க வைக்கும்.

“"நூல் முழுதும் கவியின்பம் சிறகடித்துப் பறக்கக் காண்கிறோம்; பறவைகளைக் கூட்டில் அடைப்பது கொடுமை! ஆனால் பாவலர்கள் கவிதை வானில் பறக்கவிட்டுள்ள இப்பாட்டுப் பறவைகளைப் பிடித்து நம் நெஞ்சக் கூட்டில் அடைப்பதோ பெருமை'” என்று "வண்ணப்பறவைகள்' கவிதை நூலுக்கு அணிந்துரை எழுதுகிற போது அவரும் கவிமனதுக்குள் போய்விடுவதைப் பார்க்கலாம்.

தமிழ் என்று வந்துவிட்டால் இவருக்குச் சாதி இல்லை; மதம் இல்லை. சிலப்பதிகாரம் போலவே சீறாப்புராணமும்; பக்தி இலக்கியம் போலவே குணங்குடி மஸ்தான் சாகிப் பாடலும். என்.ஏ. ரசீத் பதிப்பித்துள்ள "குணங்குடி மஸ்தான் சாகிபு ,திருப்பாடல் திரட்டு'க்குச் சிலம்பொலியார் முன்னுரை எழுதி இருக்கிறார். அதில், “"இசுலாமியக் கோட்பாடுகள் சமயக் கதைக் குறிப்புகள், தத்துவக் கருத்துகள் ஆகியன கூறப்பட்டுள்ள இடங்களில்  அவற்றிற்கு விளக்கம் தந்திருப்பின் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும். அடுத்த பதிப்பில் இஃது இடம்பெறுமென நம்புகிறேன்'” என்று குறிப்பிடுகிறார். இப்படியான அவரது உண்மையான அக்கறையின் வெளிப்பாடு சாதி மதம் கடந்து தமிழ் வளர்ச்சியில் காலூன்றி இருப்பதைக் காட்டுகிறது.

இயன்றவரை உதவும் பண்பு உடையவர். ஒருமுறை தமிழறிஞர் ஒருவரின் மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற முதலமைச்சரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். இடம் பெற்றிருக்கிறார். அதன் பிறகு தமிழறிஞர்களுக்கு என்று மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது. தமிழறிஞர்கள் பலரது குழந்தைகள் இப்போது மருத்துவர்களாகத் திகழச் சிலம்பொலியார் முயற்சிதான் காரணமாக இருந்திருக்கிறது. பின்னர் அந்த மாதிரியான இட ஒதுக்கீடுகள் இல்லாமல் போனதை அறிந்து சிலம்பொலியார் வருத்தப்பட்டார்.

சிலம்பொலியாரின் பெரும்பணி, சொற்பொழிவாகவே இருந்திருக்கிறது. கேட்பவரை ஈர்க்கும் சொல்வன்மை உடையவர்; இடையிடையே நகைச்சுவையை இயல்பாகக் கையாளும் திறமை உடையவர். நடமாடும் தமிழ் இயக்கமாகக் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் பயணித்திருக்கிறார். இளைஞர்களிடம் தமிழ் உணர்வையும் எழுச்சியையும் ஏற்படுத்தியவர்.

பட்டிமன்றத்தில் தமிழைப் பரப்பியவர்; பாவேந்தர் பாடல்களை மனதில் விதைத்தவர். திருமணங்களை இலக்கியக் கூட்டங்களாக மாற்றியவர். கோயில் விழாக்களிலும் தமிழ் வளர்த்தவர். பள்ளி, கல்லூரி விழாக்களில் இவரால் கவரப்பட்ட மாணவர்கள் ஏராளம். மடை திறந்த வெள்ளம் போல் கவிதை பொழிகிற இவரது மனப்பாட மழையில் நனைவது தனி இன்பம். எடுத்துரைக்கும் தனிப்பாங்கும் கைவரப்பெற்றவர்.

சங்க இலக்கியம் முதலாகச் சமகால இலக்கியம் வரை அவரது வாசிப்புத் தளம் பரந்துபட்டது. மரபுக் கவிதைகள் புதுக்கவிதைகள் என்ற பாகுபாடு பார்க்கமாட்டார். “ மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டும்  நோக்கிலும் போக்கிலும் யாப்பிலும் முற்றிலும் மாறானவை. எனவே இரண்டையும் ஒன்றுபடுத்தி நோக்குவது அல்லது ஆய்வு செய்வது பொருத்தமாகாது” என்ற அவரது கருத்துப்படியே சிறந்தநூல் பரிசுக்கான வகைப்பாட்டில் கவிதைகளுக்கு இரு பிரிவில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. "புதுக்கவிதை, கவிதை ஆகுமா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவதைவிடத் தோன்றிவிட்ட புதுக்கவிதை கவிதையாய் இருக்கிறதா? என்று பார்ப்பதே நம் நோக்கமாய் இருக்க வேண்டும்... காலம்தோறும் அடைந்துவரும் மாறுதல் நிலைகளுள் ஒன்றே இன்றைய புதுக்கவிதை.

கவிதையில் புதியவை பழையவை என்றில்லை. உருவத்தால் மாறுபட்ட நிலையைக் குறிக்கப் புது எனும் அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது. அவ்வளவே! யாப்புச் சிந்தனை இன்றிக் கருத்துகளை மையமாய்க் கொண்டு எழுதுவோர்க்கு இயைந்துவரும் வடிவத்தில் படைக்கப்படுவனவே இன்றைய புதுக்கவிதைகள்'”    என்ற இவரது அந்தக் காலச் சிந்தனை, மரபு வழிப்பட்ட அறிஞர்களிடம் மனமாற்றத்தை உண்டாக்கியது. கடந்த கால இலக்கியங்கள் மட்டுமின்றிச் சிறுகதை, புதினம் எனும் தற்கால உரைநடை இலக்கியங்களையும் நாட்டுப்புற இலக்கியங்களையும் ஆய்வுநூல்களையும் படித்துப் பாராட்டும் தமிழ் மணம் உடையவர்.

யாரும் புண்படப் பேசவோ எழுதவோ அறியாத பண்பு நலன் மிக்கவர். செருக்கு கொள்ளும் புலமை இருந்தும் எளிமையாக எல்லோரிடமும் வயது பாராமல் பழகும் தன்மை காத்தவர்.  தமிழ் அன்பர்களிடம் தாய்ப்பாசம் காட்டியவர்.

இப்படியெல்லாம்  தம் நலம் பாராமல் தமிழுக்கு வளம் சேர்த்தவர். சிலப்பதிகாரத்தைப் பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லியவர். அதற்கென்றே "சிலப்பதிகார அறக்கட்டளை' ஒன்றை நிறுவினார்.

இப்போது 91-ஆம் வயதில் மறைந்திருக்கிறார். நாமக்கல்லில் தொடங்கிய பயணம் நாமக்கல்லில் நிறைவடைகிறது. பெரும் பயணத்தைத் தமிழுக்குத் தந்திருக்கிறார்.

சிலம்பொலியார் உயிர், உடல் இப்போது இல்லை. சிலம்பொலி இருக்கும். சிலப்பதிகாரத்தைப் படிப்பவர்களும் சொற்பொழிவுகளைக் கேட்பவர்களும் உணரும்படியாகத் தம் வாழ்நாட்களைச் சிலம்பில் சேர்த்து வைத்துச் சென்றிருக்கிறார்.

ஒலியைக் காண முடியாது; கேட்க முடியும்; உணர முடியும். சிலம்பொலி செல்லப்பனார் மறைந்தார். சிலம்பொலியைப் பார்க்க முடியாது. அவர் குரலைக் கேட்க முடியும்; சிலம்பொலியார் ஒலியானார். சிலம்பின் ஒலியானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com