Enable Javscript for better performance
சொன்னால் நம்பமாட்டீர்கள்!  25 சின்ன அண்ணாமலை- Dinamani

சுடச்சுட

    

    சொன்னால் நம்பமாட்டீர்கள்!  25 சின்ன அண்ணாமலை

    By DIN  |   Published on : 21st April 2019 08:51 AM  |   அ+அ அ-   |    |  

    k2

    வீட்டில் மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்து காத்துக் கொண்டிருந்தார்.
     போலீஸ் கமிஷனர் கூட்டிக் கொண்டு வரச் சொன்னதாகச் சொன்னார். கமிஷனரைப் போய்ப் பார்த்தேன். மயிலாப்பூரில் நடைபெற்ற விஷயங்களைச் சொன்னேன். "ஆட்களை ஞாபகமிருக்கிறதா?'' என்று கமிஷனர் கேட்டார்.
     "ஞாபகமிருக்கிறது'' என்றேன். "அப்படியானால் கலாட்டா செய்த பகுதி வழியாக மீண்டும் செல்லுங்கள். கலாட்டா செய்தவர்கள் தட்டுப்பட்டால் அவர்களைக் கூப்பிட்டு வம்பிழுங்கள்'' என்றார் போலீஸ் கமிஷனர். அவர் சொன்னபடியே செய்தேன்.
     கலாட்டா செய்த லோகநாதனைக் காணோம். ஆனால், மற்றவர்கள் இருந்தார்கள். மீண்டும் என்னை வந்து சுற்றிக் கொண்டார்கள். அப்போது சாதாரண உடையில் (மப்டியில்) இருந்த போலீசார் பலர் நாலாபக்கமிருந்தும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து மேற்படி கலாட்டாக்காரர்களைச் செம்மையாக உதைத்துப் போலீஸ் வேனில் ஏற்றி, போலீஸ் ஸ்டேஷனுக்குத் தள்ளிக் கொண்டு போய்விட்டார்கள்.
     என்னைப் போலீஸ் கமிஷனர் தன் வண்டியில் ஏற்றி என்வீட்டில் விட்டுவிட்டுச் சென்றார். இரவு 10 மணி இருக்கும். தலைவர் காமராஜ் அவர்கள் வீட்டிலிருந்து, உடனே வரும்படி எனக்கு போன் வந்தது. போனேன். அங்கு சுமார் இருபது குடும்பத்தினர், வயதான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கூடியிருந்தார்கள்.
     என்னைப் பார்த்ததும் தலைவர் காமராஜ், "இவங்கள்ளாம் இன்று கைது செய்யப்பட்டிருக்கும் திராவிடக்கழகக்காரர்களின் குடும்பத்தினர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் கார்பொரேஷனிலும், அரசாங்கத்திலும் வேலை செய்பவர்களாம். தண்டிக்கப்பட்டால் வேலை போய்விடுமாம். அந்த பிள்ளைகளை நம்பித்தான் இவர்கள் குடும்பம் இருக்கிறது என்கிறார்கள்.
     இனிமேல் இம்மாதிரி நடக்காமல் நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம் என்கிறார்கள். முதலமைச்சர் குமாரசாமி ராஜாவைப் பார்த்தார்களாம். அவர் என்னைப் போய் பார்க்கும்படி சொன்னாராம். சம்பந்தப்பட்டவர் தாங்கள். ஆகவே தங்களைக் கேட்காமல் எதுவும் நான் சொல்லக் கூடாதல்லவா? அதனால்தான் கூப்பிட்டு விட்டேன். என்ன, மன்னிச்சுவிட்டு விடலாமா?'' என்று மடமடவென்று கேட்டார் தலைவர் காமராஜ்.
     "சரி, இனிமேலாவது காங்கிரஸ் தொண்டர்களைக் கேவலப்படுத்தாமல் இருந்தால் போதும்'' என்றேன். காமராஜ் அவர்களின் கட்டளைப்படி கலாட்டா செய்த தோழர்கள் இரவே விடுதலை செய்யப்பட்டார்கள். மறுநாள் காலை, மயிலாப்பூர் திராவிடக் கழக பிரமுகர் லோகநாதன் அவர்கள் என்வீட்டிற்கு வந்து நடந்ததற்கு வருத்தம் தெரிவித்தார்.
     சொன்னால் நம்ப மாட்டீர்கள். அதே லோகநாதன் சில ஆண்டுகளில் காங்கிரசில் சேர்ந்து எனது நெருங்கிய நண்பராக இறக்கும் வரை இருந்தார். காமராஜரின் பக்தராகக் கடைசிவரை இருந்தார். காமராஜரிடம் அவர் பக்தி கொள்ளக் காரணமாக இருந்தது, நான் மேலே குறிப்பிட்ட சம்பவமும், காமராஜ் அவர்களின் மன்னிக்கும் குணமுமேயாகும்.
     திராவிட இயக்க எதிர்ப்பு
     தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களையும் காங்கிரஸ் கட்சியையும் கேவலப்படுத்தும் திராவிடக் கழகத்தாரை எதிர்த்து "போர்' தொடுக்கும் வேலையை ஆரம்பித்தேன்.
     சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களும் நானும் இன்னும் சில நண்பர்களும் ஆலோசனை செய்து, ஒரு மாபெரும் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு நடத்துவது என்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய தொண்டர்கள் அனைவரையும் திரட்டுவது என்றும் முடிவு செய்தோம்.
     சென்னையில் இப்போது சத்தியமூர்த்தி பவன் இருக்கும் இடம் அப்போது கட்டடம் இல்லாமல் வெறும் காலி இடமாக இருந்தது. அந்த இடத்தில் மாபெரும் பந்தல் போடப்பட்டது. பந்தலுக்கு " கண்ணகி பந்தல்' என்று பெயரிடப்பட்டது. முதல்நாள் "சிலப்பதிகார மாநாடு' என்றும் மறுநாள் "திராவிட இயக்க எதிர்ப்பு' மாநாடு என்றும் நடத்தப்பட்டது.
     சிலப்பதிகார மாநாட்டிற்குப் பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் தலைமை வகித்தார். மு.வரதராசனார் போன்றவர்கள் கலந்து கொண்டார்கள். திராவிட இயக்க எதிர்ப்பு மாநாட்டுக்கு ம.பொ.சி தலைமை வகித்தார்.
     இரண்டு நாள் மாநாட்டிலும், பூரா நாளும் இருந்து தலைவர் காமராஜ் ஆதரவு கொடுத்தார். டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடகமும் நடைபெற்றது. தமிழகம் முழுவதுமிருந்த தேசியத் தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்களுக்கு மாநாடு தைரியத்தையும் ஆவேசத்தையும் கொடுத்தது. அதன் பிறகு காங்கிரஸ் கூட்டங்கள் மளமளவென்று நடக்க ஆரம்பித்தன. காங்கிரசிற்குப் புதிய பலம் ஏற்பட்டது. பல இடங்களில் தலைவர் ம.பொ.சியும் நானும் தாக்கப்பட்டோம். எங்கள் கூட்டங்களில் புகுந்து திராவிடக் கழகத்தினர் கலாட்டா செய்து பார்த்தார்கள். காங்கிரஸ் தொண்டர்களும் சளைக்கவில்லை.
     அவர்களும் பதிலடி கொடுத்தார்கள். பட்டுக்கோட்டையில் நானும் திரு. ம.பொ.சி.அவர்களும் பேசிவிட்டுத் திரும்பும்போது இரவு 12 மணி அளவில் ஒரு வெறி பிடித்த கூட்டம் ஊருக்கு வெளியே மறைந்து நின்று எங்களைக் கொல்லக் காத்திருந்தார்கள்.
     நாங்கள் வந்த காரை அடித்து நொறுக்கினார்கள். டிரைவர் ரொம்ப தைரியசாலி. காமராஜ் தேர்ந்தெடுத்துக் கொடுத்த டிரைவர் ஏழுமலையல்லவா? அதனால் அடி, உதை, வெட்டு, குத்து, இவற்றிற்கு மத்தியில் எங்களைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தார். இப்படி தலைவர் ம.பொ.சி அவர்களும் நானும் எவ்வளவோ செய்து வந்திருக்கிறோம். இன்னும் செய்து கொண்டிருக்கிறோம்.
     தலைவர் ம.பொ.சி. அவர்களைப் பற்றி நான் தனியாக ஒரு நூல் எழுதினால்தான் என் மனதில் இருக்கும் அனைத்தையும் நான் கூற முடியும். ஆனால் சுருக்கமாக ஒரு விஷயத்தை நான் சொல்ல வேண்டும். நான் பழகிய வரையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் சிறந்த காந்தியவாதி. மற்ற எல்லாவற்றையும் விட ஒழுக்க சீலர்.
     ஒருநாள் ராஜாஜி அவர்களுடனும் ம.பொ.சி அவர்களுடனும் மிக நெருங்கிப் பழகியிருக்கிறேன். பல நாட்கள் தொடர்ந்து கூடவே இருந்திருக்கிறேன். நான் அறிந்தவரை தமிழகத்தில் சிறந்த தலைவர்களில் ராஜாஜியும், ம.பொ.சியும் தெய்வீகப் பிறவிகள்.
     மந்திரிப் பதவி
     1952-இல் ராஜாஜி இரண்டாவது முறையாகத் தமிழ்நாட்டுக்கு முதல் மந்திரியாகப் பதவியேற்ற நாள், அன்று பலர் வந்து ராஜாஜியைப் பார்த்து "மந்திரிப் பதவி வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்.
     நானும் சிலம்புச் செல்வர் ம.பொ.சியும் ராஜாஜி அருகில் உட்கார்ந்திருந்தோம்.
     டாக்டர் சுப்பராயன் வந்தார். அவர் வந்ததும் ராஜாஜி, "பாருங்கள் டாக்டர், எல்லோரும் வந்து மந்திரி வேலை வேண்டுமென்று கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். சிலர்தான் மந்திரி வேலையே வேண்டாமென்றிருப்பவர்கள். என் கஷ்டம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது,'' என்று கூறினார். சிறிது நேரத்தில் சுப்பராயன் எழுந்து போய்விட்டார். அவர் போனதும் ராஜாஜி, ம.பொ.சியிடம் "பார்த்தீர்களா, டாக்டரும் மந்திரி வேலைக்குத்தான் வந்தார். சமாளித்து விட்டேன்'' என்றார்.
     "தங்களிடம் அன்புள்ளவர்களை ஏமாற்றலாமா?'' என்றார் ம.பொ.சி.
     "அன்புடையவர்களுக்கு அன்புதான் காட்டலாம். எல்லோருக்கும் மந்திரி பதவி தர முடியுமா'' என்றார் ராஜாஜி.
     (தொடரும்)
     
     
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp