திரைக்கதிர்

"கபாலி', "டோனி', "ஆல் இன் ஆல் அழகுராஜா' போன்ற பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே.
திரைக்கதிர்

• "கபாலி', "டோனி', "ஆல் இன் ஆல் அழகுராஜா' போன்ற பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே. ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நடித்து வருகிறார். பிரிட்டிஷ், அமெரிக்க படமாக உருவான, "தி வெட்டிங் கெஸ்ட்' படத்தில் நடித்ததுடன் லைடியா டீன் உருவாக்கும் "வேர்ல்டு வார் 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட் படங்களில் நடித்து வந்தாலும் தான் நினைத்தபடி இன்னும் வெற்றி பெறவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார் ராதிகா ஆப்தே. இதுபற்றி அவர் கூறியுள்ளது... ""நான் நடித்திருக்கும் "தி வெட்டிங் கெஸ்ட்' படம் சமீபத்தில் அமெரிக்காவில் வெளியானது. இதையடுத்து மேலும் சில ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அதற்கான திரைக்கதையைப் படித்து வருகிறேன். புதிய படத்தில் நடிப்பது பற்றி விரைவில் முடிவு செய்வேன். எல்லா மொழிகளிலும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் நடிக்க ஆசைப்படுகிறேன். என்னைப் பொருத்தவரை மற்றவர்கள் வெற்றி என்று எதை நினைக்கிறார்களோ அதிலிருந்து நான் நினைக்கும் வெற்றி மாறுபட்டதாக உள்ளது. இன்று வரை வெற்றி பெற்ற ஹீரோயினாக என்னை நான் உணரவில்லை. என் மனதுக்குள் என்ன நினைத்திருக்கிறேனோ அந்த சாதனையை இன்னும் செய்ய வில்லை. அதற்கான நேரம் வரும்போதுதான் நான் வெற்றி பெற்றதாக உணர்வேன்'' இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

• "பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்' ஹாலிவுட் படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஜானி டெப். ஹாலிவுட்டில் அதிகச் சம்பளம் பெறும் நடிகர்களில் இவரும் ஒருவர். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஜானி டெப்புக்கு 55 வயது ஆகிறது. லோரி அன்னி அல்லிசன் என்பவரை மணந்து 2 வருடத்தில் விவாகரத்து செய்தார். பிறகு ஹாலிவுட் நடிகை அம்பெர் ஹெர்டை மணந்து அவரையும் விவாகரத்து செய்தார். ஜானி டெப் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக அம்பெர் ஹெர்ட் சமீபத்தில் கூறி இருந்தார். இது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அம்பெர் ஹெர்ட் தனது புகழைக் கெடுக்கும் நோக்கில் அவதூறுகளைப் பரப்புகிறார் என்று கூறி அவர் மீது நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் ஜானி டெப். இந்த வழக்கு விசாரணையின் போது, "ஜானி டெப்பை முகத்தில் குத்தி அவரது கைவிரலைத் துண்டித்துள்ளார் அம்பர் ஹெர்ட்' என புகார் தெரிவிக்கப்பட்டது. அதற்கான வீடியோ ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர். இதுகுறித்து ஜானி டெப் கூறும்போது,'அம்பெர் ஹெர்ட்டை நான் அடிக்கவில்லை. அவர்தான் என்னைத் தாக்கினார்' என தெரிவித்திருக்கிறார்.

• திரை வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் சர்ச்சைகளைச் சம்பாதித்து கொண்டே இருப்பவர் இயக்குநர் ராம்கோபால் வர்மா. எது பற்றியும் கவலை கொள்ளாமல் கருத்துக்களை முன் வைத்து சர்ச்சைகளைக் கிளப்புவார். அரசியல்ரீதியாகவும் கருத்து சொல்லி சிக்கிக் கொள்வார். அமிதாப் பச்சன், ரஜினி என திரைத்துறையைச் சேர்ந்த பலரையும் கடுமையாக விமர்சிப்பது என சுட்டுரையில் அதகளம் செய்து வந்தவர் ராம்கோபால் வர்மா. ஒரு காலத்தில் நல்ல சினிமாக்களைக் கொடுப்பதில் மட்டுமே பெயர் பெற்றிருந்த இவர், இப்போது தனது படங்களின் தொடர் தோல்விகளுக்குப் பிறகு மற்றவர்களின் படைப்புகளை விமர்சித்து சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இந்நிலையில் மீண்டும் படம் இயக்கத் திரும்பியவர் லட்சுமியின் என்டிஆர் படத்தை தெலுங்கில் இயக்கினார். அடுத்து "கோப்ரா' என்ற படத்தையும் தெலுங்கில் இயக்குகிறார். இதில் முதல்முறையாக அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். படத்தில் சிபிஐ அதிகாரியாக, பயங்கரமான குற்றவாளியைப் பிடிக்கும் வேடத்தில் நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. டிசம்பர் மாத வெளியீடாகப் படம் திரைக்கு வருகிறது.

• தமிழகத்தின் ஊட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாய் பல்லவி. கோத்தகிரி பகுதியில் பிறந்து வளர்ந்த சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்த "பிரேமம்' படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்துக்கு அங்கு பெரும் வரவேற்பு இருந்தது. இதைத் தொடர்ந்து வந்த வாய்ப்புகளில் நடித்தார். இருந்தாலும், தமிழ் சினிமாவில் முத்திரை பதிக்க வேண்டும் என எண்ணினார். "மாரி 2' படத்தில் நடித்தார். ஆனால் படத்துக்கு வரவேற்பு இல்லை. இதனால் மீண்டும் மலையாளத்துக்குச் சென்றுவிட்டார் சாய் பல்லவி. "அதிரன்' படத்தில் பஹத் பாசிலுடன் நடித்திருக்கிறார். இதில் மனோதத்துவ நிபுணராக பஹத் பாசில் நடிக்கிறார். களரி சண்டை கற்கும் பெண்ணாக சாய் பல்லவி நடித்திருப்பதுடன் களரி சண்டைக்காக அவர் மெனக்கெட்டு அந்த கலையைக் கற்றிருக்கும் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் வெறித்தனமாக களரி சண்டை போடுகிறார் சாய் பல்லவி. ""கேரக்டரை உணர்ந்து அதில் மெய்மறந்து நடிப்பது எனது பாணி. களரி சண்டைக்காக கேமிராவுக்காக நடிப்பதில் விருப்பமில்லை. அப்படி விரும்பும் இயக்குநர்களிடம் நான் பணியாற்றுவது கிடையாது'' என்றார் சாய் பல்லவி.

• "பாகுபலி' படத்தைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் படத்துக்கு "ஆர்ஆர்ஆர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். இதில் இரு கதாநாயகிகளுக்கான இடம் இருந்தது.
அதில் ஓர் இடத்துக்கு அலியாபட் தேர்வானார். இன்னோர் இடத்துக்கு வெளிநாட்டு நடிகை டெய்ஸி ஒப்பந்தமானார். இருவரும் நடிப்பதை உறுதி செய்த நிலையில், அது குறித்த அறிவிப்புகளும் வெளிவந்தன. திடீரென்று டெய்ஸி தவிர்க்க முடியாத காரணத்தால் படத்திலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக மற்றொரு கதாநாயகியை தேடுவதில் இறங்கியுள்ளார் ராஜமௌலி. திரைக்கதை முடிந்து படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், படக்குழுவினருக்கு இது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. நித்யாமேனன், ஷரத்தா கபூர், பரிணிதி சோப்ரா என 3 பேரிடம் பேச்சு நடக்கிறது. இவர்களில் நித்யாமேனனுக்கு போட்டோ ஷூட் முடிந்துள்ளது. அவர் டெய்ஸிக்கு பதிலாக நடிக்கிறாரா அல்லது வேறுபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பதை பட தரப்பு உறுதி செய்யவில்லை. வேறு கதாபாத்திரத்தில் அவர் நடித்தால் டெய்ஸியின் வாய்ப்பு ஷரத்தாவுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


- ஜி.அசோக்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com