இனிப்பு இல்லையென்றால்...!

எனது சகோதரருக்கு 63 வயதாகிறது. கடந்த ஒரு வருடமாக அவருக்கு சில சமயங்களில் கால் மரத்தது மாதிரி ஆகிவிடுகிறது. இடது கால் சுண்டு விரலில் சில சமயங்களில் "விண்விண்' என வலி தோன்றுகிறது
இனிப்பு இல்லையென்றால்...!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
எனது சகோதரருக்கு 63 வயதாகிறது. கடந்த ஒரு வருடமாக அவருக்கு சில சமயங்களில் கால் மரத்தது மாதிரி ஆகிவிடுகிறது. இடது கால் சுண்டு விரலில் சில சமயங்களில் "விண்விண்' என வலி தோன்றுகிறது. இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை விட்டு விட்டு தோன்றுகிறது. அதனால் அவரால் சரியாகத் தூங்கக் கூட முடியவில்லை. அவரின் ரத்தத்தில் சர்க்கரை அளவு சாப்பிட்ட பின் 180 உள்ளது. டாக்டர் பரிசோதித்து பார்த்துவிட்டு பெரிபரல் நியூரோபதி (PHERIPHERAL NEUROPATHY) பிரச்னை உள்ளது என்று கூறுகிறார். ஆயுர்வேதத்தில் இதற்கு என்ன சிகிச்சை வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது?
- ரவி, திருச்சி.
"வாதம் வினா சூலம்'" என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அதாவது, வாதமில்லாமல் வலியில்லை என்று அதற்கு அர்த்தம் கூறலாம். சர்க்கரை உபாதையில் கட்டுப்படுத்த வேண்டிய இனிப்புச் சுவையினால், உடல் பல நன்மைகளை இழக்கின்றன. அதில் பொதிந்துள்ள, நிலம் மற்றும் நீரின் தன்மையானது நரம்பு மண்டலங்களில் வாயுவின் சேட்டையான வாயு மற்றும் ஆகாய பூதங்களைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. இனிப்பின் வரவு உடலில் குறையத் தொடங்குவதால், அவை துள்ளிக் குதித்து, மகிழ்ச்சியுடன் நரம்பு மண்டலங்களைப் பாடாய்படுத்தத் தொடங்குகின்றன. அதன் விளைவே, நரம்புகளில் "விண்விண்' என்று வலி தோன்றுவதும், அவற்றின் வலுவை இழக்கச் செய்து, மரத்துப் போகச் செய்வதையும் ஏற்படுத்துகிறது. இதை மனதிற் கொண்டே, ஆயுர்வேதம், நெய், மாமிசக் கொழுப்பு, மஜ்ஜை மற்றும் தைலம் போன்றவற்றை உள்ளுக்குச் சாப்பிட்டு, உடலைத் திடப்படுத்தி, அதன் பிறகு சற்று ஓய்வெடுக்கச் செய்து, மறுபடியும் பால், நெய்ப்பான பொருட்கள் கலந்த கஞ்சி வகைகள், மாமிச சூப்புகள், பால்சாதம், எள்ளும் உளுந்தும் அரிசியும் கலந்த உணவையும், சிறிது புளிப்பு, உப்புச் சுவை சேர்த்த நெய்ப்புப் பொருட்களைக் கொண்டு "வஸ்தி' எனும் ஆசனவாய் வழியாக செலுத்தப்படும் எனிமா முறையையும், வாயுவை அகற்றக் கூடியவையும் உடலை புஷ்டிப் படுத்தும் உணவு வகைகளையும் பரிந்துரை செய்கின்றன. இவற்றின் மூலம், நரம்பு மண்டலங்களுக்குத் தேவையான, ஊட்டமிழந்த தன்மையானது திரும்புகிறது.
இவற்றின் மூலம் சர்க்கரையின் அளவு உடலில் கூடாதோ? அவையனைத்தும் உடலில் தங்கிவிட்டால் கொழுப்பு உடலில் சேர்ந்து அடைத்துக் கொள்ளாதோ? போன்ற சந்தேகங்கள் தோன்றலாம். அந்த சந்தேகத்தைத் தவிர்க்க, மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளனைத்தும் ஆரம்பம் மட்டுமே என்றும், அதன் பிறகு உடலில் நன்றாக மூலிகைத் தைலங்களைத் தடவி, நன்கு வியர்வை வரும்படியான சிகிச்சைகளைக் கையாள வேண்டும் என்றும் ஆயுர்வேத நூல்களில் கூறப்படுகிறது. எதற்காக வியர்வையை ஏற்படுத்த வேண்டும்? முன் குறிப்பிட்ட நெய்ப்பினால், உடலில் பரவியிருக்கக் கூடிய தேவையற்ற வாயுதோஷத்தில் இந்த நெய்ப்பானது சேர்ந்து, அதை உருட்டி தன் உள்ளே வைத்துக் கொள்ளத் தொடங்கும். சூடான வியர்வை சிகிச்சையினால், நெய்ப்புடன் வாயுவும் உருகி, குடலுக்குக் கொண்டு வரப்படுகிறது. அதன் பிறகு, குடலைச் சுத்தப்படுத்தும் வாந்தி சிகிச்சையினாலும், பேதி சிகிச்சையினாலும், வஸ்தி சிகிச்சையினாலும் வாயு முழுவதுமாக, உடலிலிருந்து வெளியேற்றப்படுவதால், நாடி நரம்புகள், குடல், உட்புறக் குழாய்கள், ரத்தம் முதலிய கேந்திரங்கள், எலும்புகள், தசை நார்கள் போன்ற பகுதிகள் அனைத்தும் துடைத்துவிட்ட கண்ணாடி போல பளிச்சிடத் தொடங்குகின்றன! மனிதர்களை மறுபடியும் இளமைப்படுத்தும் இந்த சிகிச்சை முறைகள் அனைத்தும், நம் இந்திய தேசத்தில் பண்டைய காலங்களில் மிகவும் பிரசித்து பெற்று ஆரோக்கியத்தைத் தக்க வைத்திருந்தன. நோயை, உள்ளே அழுத்தி வைப்பதை விட, அந்த நோய்க்குக் காரணமாகிய பொருளை வெளியேற்றுவதில் ஆயுர்வேதம் காட்டிய முனைப்பை தற்சமயம் வந்துள்ள மருத்துவங்களில் ஏனோ காணப்படுவதில்லை. அதனால் தான், நோய்கள் மாறாமல், என்றென்றும் மருந்துகளைச் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
அதனால், உங்கள் சகோதரருக்கு, மேற்குறிப்பிட்ட சிகிச்சைகளைச் செய்து கொள்ளும் அளவிற்கு உடலில் வலுவுள்ளதா? அல்லது வெறும் "தாரா' எனப்படும் உடலெங்கும் மூலிகைத் தைலங்களை இளஞ்சூடாக, மேலிருந்து ஊற்றி அதன் பிறகு, வியர்வையை வரவழைக்கும் முறைகளைச் செய்து, வஸ்தி சிகிச்சை மட்டும் செய்து வாயுவை நரம்புகளிலிருந்து நீக்க வேண்டுமா? போன்றவற்றை ஆயுர்வேத மருந்துவரிடமிருந்து நாடி பரீட்சை செய்து, நன்கு கேட்டறிந்து செய்து கொள்வதே அதிக நலம் தரும். நராயணதைலம், சஹசராதி தைலம், மஹாமாஷ தைலம் போன்ற சில தைலங்களில் ஒன்றிரண்டை சூடாக்கி மரத்துப் போன பகுதிகளில் நன்கு தேய்த்து பிடித்துவிடுவதும் வெந்நீர் ஒத்தடம் மூலம் அப்பகுதிகளில் ஒத்தி எடுப்பதும் வீட்டிலேயே செய்து கொள்ளக் கூடிய எளிய சிகிச்சை முறையாகும்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com