திரைக் கதிர்

கபாலி', "காலா' படங்களில் பழைய ரஜினியைப் பார்க்க முடியவில்லை என்கிற குறை "பேட்ட' படத்தில் நீங்கியது.
திரைக் கதிர்

• கபாலி', "காலா' படங்களில் பழைய ரஜினியைப் பார்க்க முடியவில்லை என்கிற குறை "பேட்ட' படத்தில் நீங்கியது.
ரஜினியின் துள்ளலான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் "தர்பார்' படத்தில் போலீஸ் அதிகாரியாக வேடமேற்றிருக்கிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. மும்பை புறப்படுவதற்கு முன்பாக ரஜினிகாந்தை அவசரமாகச் சந்தித்தார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். ஏற்கெனவே "படையப்பா', "முத்து', "லிங்கா' படங்களை ரஜினியை வைத்து இயக்கியுள்ள ரவிகுமார் மீண்டும் அவருக்காக புது திரைக்கதை தயாரித்திருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு பிறகு ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டிலேயே தொடங்கப்பட உள்ளதாம். இதையடுத்து வினோத் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவிருக்கிறார் ரஜினி. மேலும் "பேட்ட' இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படமொன்றிலும் நடிக்க தலை அசைத்திருக்கிறார். 2019- 2020 என 2 வருட கால்ஷீட்டை இப்போதே ரஜினி ஒதுக்கி வைத்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

• சாய்பல்லவி தமிழில் இயக்குநர் விஜய்க்கு முன்னுரிமை தருவதாக கோலிவுட்டில் பேச்சு உள்ளது. பலரும் தமிழ் படத்தில் நடிக்க கேட்டு சாய் பல்லவியை அணுகியபோது விஜய் இயக்கிய "தியா' படத்திற்குதான் முதலில் ஒப்புதல் தந்து நடித்தார். அதுவே சாய்பல்லவி தமிழில் நடித்த அறிமுகப் படமாகவும் அமைந்தது. ரொம்பவே அமைதியானவர் சாய்பல்லவி என்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள் "மாரி 2' படத்தில் தனுஷை மிஞ்சும் அளவுக்கு, "ரவுடி பேபி..' பாடலுக்கு அவர் போட்ட குத்தாட்டம் அசர வைத்தது. விஜய் அடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கைச் சரித்திர படத்தை, "தலைவி' என்ற பெயரில் இயக்குகிறார். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அவருக்கு கோடிகளில் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இதே படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சு நடத்தியிருக்கிறாராம் விஜய். அவரும் தனது இஷ்ட இயக்குநர் என்பதால் நடிக்க பச்சை கொடி காட்டியிருக்கிறாராம்.

• இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் படங்கள் எப்போதுமே ரசிகர்களின் கவனத்துக்குள்ளாகும். அவர் பேசுகிற அரசியல், சமூக புரிதல், மனிதம் என எல்லாவற்றிலுமே நிறைகளே இருக்கும். சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சியையும் பெரு மலர்ச்சியையும் ஏற்படுத்தும். விவாதங்களை தோற்றுவிக்கும்.
"இயற்கை', "ஈ', "பேராண்மை', "புறம்போக்கு' என அவரது எல்லாப் படங்களிலுமே இது நிகழ்ந்திருக்கின்றன.
"புறம்போக்கு' படத்துக்குப் பின் நீண்ட கதை விவாதங்களில் இருந்து வந்த எஸ். பி.ஜனநாதன் இப்போது தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த வரிசையில் இவர் அடுத்து இயக்கும் படத்துக்கு "லாபம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை செவன் சி எஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. ஜெகபதிபாபு கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். "பருத்திவீரன்', "இரண்டாம் உலகம்' , "தனி ஒருவன்' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
டி.இமான் இசை அமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

• சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த இனியாவுக்கு, "வாகை சூட வா' படம் நல்ல திருப்பு முனையை அமைத்து தந்தது. அந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோரின் பாராட்டுதல்களையும் பெற்றார். ஆனாலும் ஏனோ படங்கள் இல்லை. தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது தமிழில் ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் சாய் கிருஷ்ணா இயக்கத்தில் "காபி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைப் பற்றி அவர் பேசுகையில், "ஏழ்மை நிலையிலிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், மிக இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்து விடுகிறாள். வாழ்வின் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, சமாளித்து, லட்சியத்துடன் தனது கனவை நனவாக்க முயலும் போதும், பொறுப்புணர்ச்சியுடன் தனது தம்பியை நன்கு படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்குகிறாள். நான் இதில் சத்யபாமா என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறேன். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூரில் நடைபெற்று வருகிறது'' என்று கூறியுள்ளார்.
- ஜி.அசோக்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com