வந்த களைப்பு தீர..!

 "ரிடையர் ஆகி பத்து வருஷம் ஆகியும் மனுஷன் வீடு தங்குவது இல்லை. சதா சர்வகாலமும் நண்பர்களைக் காண்பதற்காக சென்று விடுகிறார்... இல்லாவிட்டால் ஏதாவது கூட்டம்...
வந்த களைப்பு தீர..!

மாலதி கணவரின் வருகைக்காக காத்திருந்தாள்.
 "ரிடையர் ஆகி பத்து வருஷம் ஆகியும் மனுஷன் வீடு தங்குவது இல்லை. சதா சர்வகாலமும் நண்பர்களைக் காண்பதற்காக சென்று விடுகிறார்... இல்லாவிட்டால் ஏதாவது கூட்டம்... இரவு பத்து மணிக்கு மேல்தான் வீட்டைப் பற்றிய நினைப்பு... எவ்வளவு சொல்லியும் கேட்பதே இல்லை... அலைந்தால் உடம்பு என்னத்திற்கு ஆகும்?... அறுபது வயதில் பணி ஓய்வை எதற்குத் தருகிறார்கள்?.... அதை அமல்படுத்தியவர்கள் எதுவுமே தெரியாதவர்களா?... வயது ஆக ஆகத்தானே உடலில் வலு குறையும்... நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து ஊரில் வரும் எந்த வியாதியும் முதலில் உடலினுள் வந்து புகுந்து கொள்ளும்... எது சொன்னாலும் செவிடன் காதில் ஊதின சங்குதான்...' மாலதி அலுத்துக்கொண்டாள்!
 அழைப்பு மணி அடித்தது. கதவைத் திறந்ததும் சீனிவாசன் உள்ளே வந்தார்.
 ""மனைவி சொல்வது நல்லதாகவே இருந்தாலும் கேட்கக்கூடாது என்று நண்பர்கள் உங்களுக்கு உருஏற்றியிருக்கிறார்களா? நீங்கள் மட்டும் இப்படியா?... இல்லை எல்லோருமே உங்களைப் போலத்தானா? '' " கணவர் வந்ததும் வராததுமாக மாலதி பொறுக்க முடியாமல் வார்த்தைகளை கொட்டினாள்.
 ""எதற்கு அவர்களையெல்லாம் இப்பொழுது இழுக்கிறாய்? எனக்குப் பிடித்த விஷயத்தில் என்னை ஈடுபடுத்திக் கொள்கிறேன்... அவ்வளவுதான்''" சீனிவாசன் அமைதியாகச் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
 "உடம்பிற்கு வந்தால் யார் துணைக்கு இருக்கிறார்கள்?'' "
 "ஏன் உனக்கு நான்... எனக்கு நீ...''
 "அது நீங்கள் வீட்டிற்குள் இருக்கும் போதுதானே? வெளியே போய்விட்டால் நீங்களும் தனி... நானும் அனாதை மாதிரி தானே?'' "
 "பயந்து சாகாதே... பயப்படுவதால் உடல் கெடும்''"
 "ஆமாம்... வருகிற உடம்பு உங்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு வரும் என்கிற நினைப்பு போலும்''"
 "இப்படி கவலையை மூட்டை கட்டிக் கொண்டே போனால் முதலில் பி.பி. அப்புறம் ஹை பி.பி... அதே போல் முதலில் சுகர்... அப்புறம் ஹை சுகர்... இப்படி எல்லாமே சார்ட் போட்டு நம்மை ஆட்டிப் படைக்கும்''"
 "உங்க கிட்ட பேசி பயனெதுவும் இல்லை... சாப்பிடலாம்... மணி ஏகமா ஆகிவிட்டது''"
 இருவரும் சாப்பிட உட்கார்ந்தனர்.
 "பொண்ணு போன் பண்ணினா.'' ""பையனுக்கு வேலை கிடைக்காததைப் பற்றி குறைப்பட்டுக்கொண்டாள்''"
 "உன் பொண்ணு உன்னைப் போலவே தானே இருப்பா... பேரன் படிச்சு முடிச்சு மூணு மாசம் கூட முழுசா ஆகலே... அதற்குள்ளே வேலை கிடைக்கவில்லையே என்கிற கவலைகள்... குறைகள்... ஆதங்கம்..
 அப்பப்பா!''
 "பெத்தவளுக்கு மனசு பதை பதைக்காதா? ஆம்பிளை பையன்... உத்தியோகம் புருஷ லட்சணம் இல்லையா?... அதான் புலம்பறா''"
 "எல்லாம் கிடைக்கும் எதெது எப்போது கிடைக்கும் என்றிருக்கிறதோ அதது அப்போது கிடைக்கும். கவலைப்பட்டால் ஆகுமா?''"
 "மனசுல கிருஷ்ண பகவான் என்கிற நினைப்பிலதான் பேச்செல்லாம் மனுஷனா பொறந்தவா கவலையே படாம இருந்து விட முடியுமா?''"
 சாப்பிட்டு முடித்தவுடன் சீனிவாசன் வெற்றிலைப் பெட்டியை வைத்துக்கொண்டு உட்கார்ந்தார்.
 "அப்பாவிடமிருந்து வழிவழியாக இந்தப் பழக்கத்தை கற்றுக்கொண்டு விட்டீர்கள். காலையில் காபி சாப்பிட்டவுடன் அப்புறம் டிபன் சாப்பிட்டவுடன் மத்தியானம் சாப்பிட்டவுடன் மாலை டீ சாப்பிட்டவுடன் இரவு சாப்பிட்டவுடன் என்று குறைந்தது ஐந்து தடவைகள்''"
 "இப்பழக்கத்தினால் உடம்பிற்கு இயற்கையாக சுண்ணாம்புச் சத்து கிடைப்பது பற்றிதான் எல்லோரும் சிலாகித்துப் பேசுகிறார்கள். ஆனால் எனக்கு இப்பழக்கத்தினால் சுகர் வருவதில்லை என்று நம்புகிறேன். சுகர் எனக்கில்லை அப்பாவுக்கு இல்லை. தாத்தாவுக்கும் இல்லை. எல்லோரும் வெற்றிலை போடுபவர்கள். எனது நட்பு வட்டாரத்திலும் நிறைப் பேர்கள் வெற்றிலை போடுபவர்களே... அவர்களுக்கும் சுகர் இல்லை''"
 "நானும் இருவேளை போடுகிறேன். எனக்கும் சுகர் இல்லை... ஒரு வேளை நீங்க நினைப்பது கூட சரியாக இருக்கலாம்... சரி, விஷயத்திற்கு வருகிறேன். நானும் ஒரு வருஷமா உங்களை துளைத்தெடுக்கிறேன். சிங்கர்குடியில் இருக்கிற ஜோசியரைப் பார்த்து வரலாமென்று... ரிடையர் ஆன பிறகு நிம்மதியா போய் வரலாமென்று சொன்னீர்கள். ரிடையர் ஆகியே ஆறுமாசமாகிவிட்டது. இன்னும் போய்ப் பார்த்த பாட்டைக் காணோம்''
 "புலம்பாதே மாலதி!.... போய்ட்டு வரலாம்... எப்பப் போகலாம் என்பதை மட்டும் தீர்மானித்துச் சொல்''"
 "வருகிற ஞாயிறன்று ஏகாதசி நல் நாள் தான் அன்றைக்கே போய் வரலாமே''"
 "சரி கிளம்பி விடலாம். அவ்வளவு தானே?''"
 "அவர் ஜோசியர் மட்டுமில்லை மகான்களைப்
 போல அருளாசிகள் வழங்குகிறாராம்... அவ்வளவும் பலிக்கிறது என்கிறார்கள்''"
 "நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்''"
 "ஜாதகக் கட்டங்களை வைத்து பலாபலன்களை பார்ப்பதோடு நாம் அவரைச் சந்திக்கும் நேரத்தை ஆதாரமாகக் கொண்டு சோழிகளை உருட்டி பிரசன்னம் ஆரூடம் மூலமும் பலாபலன்களை சொல்லுகிறாராம். மற்றவர்களைப் போல அடாவடித் தனமா அவ்வளவு இவ்வளவு என பணம் கறப்பதில்லையாம். ஆசிரம பராமரிப்புச் செலவுகளுக்கு அவரவர்கள் விருப்பப்படி உண்டியலில் போட்டால் போதும் என்கிறார்கள். பெரிய பெரிய பணக்காரர்கள் எல்லாம் கொண்டு போய் கொட்டுகிறார்களாம்... ஆசிரமத்தில் வேளா வேளைக்கு பிரசாதம், பால், பழச்சாறுகள்... அன்னதானம் கிடைக்கிறது என்கிறார்கள். ஏழைகள், திருமணத்திற்கு புடவை, வேஷ்டி, மாங்கல்ய உதவிகள் என தர்ம காரியங்களுக்கு அளவே இல்லையாம்."
 ஜோசியர் பழுத்த சிவப் பழம் திரேகம் தங்க நிறம். அப்படியொரு தேஜஸ் சாத்வீகமான குரல் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். வாராவாரம் டி.வியிலே காண்பிக்கிறார்கள்.. எப்பொழுது போகப்போகிறோம் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் உங்க மனசுல போகலாம் என்று உத்தரவு ஆயிருக்கு. போய் நம்ம பொண்ணோட மனக்குறையைச் சொல்லி கேட்கணுங்க... அதோடு நம்மைப் பற்றியும் கேட்கணும்'' மாலதி ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.
 "நம்மைப் பற்றி என்ன கேட்கப்போறே?''"
 "ஏன் எத்தனையோ இருக்கே... ஆயுள் பலம்... ஆரோக்கிய பலம்...''"
 சீனிவாசன் சிரித்துக்கொண்டே , "சரி... சரி... ஆக்டிங் டிரைவரை போட்டுக்கொண்டு நம்ம காரையே எடுத்துப் போய் வரலாம். சரி தானே?''
 மாலதியின் முகம் மலர்ந்தது.
 காரில் பயணிக்கும் போது ஜோசியரைப் பற்றிய பல தகவல்களை சொல்லிக் கொண்டே வந்தாள். அவையெல்லாம் சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், சங்கடஹரசதுர்த்தி, ஆகிய நாட்களில் மாலதி கோயிலுக்குச் செல்லும் போது அவளுடைய ஆலய சிநேகிதிகள் கூறியவை. அவரவர்களுக்கு அனுபவப்பூர்வமாக நடந்தது என்று சொல்லப்பட்டவை. அதனால்தான் மாலதிக்கு எப்படியும் ஜோசியரைப் பார்த்து வரவேண்டுமென்கிற தவிப்பு விஸ்வரூபமெடுத்தது!
 "கூட்டம் அதிகமாயிருந்தால் அவரைப் பார்த்துவிட்டு திரும்ப இரவு வெகு நேரமாகிவிடுமே... ஏகாதசி வேறு. எதையும் எங்கும் இஷ்டம் போல் வாங்கிச் சாப்பிட முடியாது... கொடுத்து வைத்தால் ஆசிரமத்தில் தரும் பிரசாதத்தை சாப்பிட்டு விடலாம்... பகவான் என்ன நினைக்கிறாரோ எது எப்படியோ போகிற காரியம் நல்ல படியாக நடந்தேற வேண்டும்... பகவானே!'' என்கிற வேண்டுதலோடு கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தாள் மாலதி.
 "எந்நேரமானாலும் பரவாயில்லை.. ஜோசியரை பார்த்துவிட்டுத்தான் திரும்ப வேண்டும்... பிரசன்னமும் பார்க்க வேண்டும். பேரனுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்க அருளாசி பெற வேண்டும்'' திரும்ப திரும்ப தியானம் கலைந்தது.
 "மாலதி இன்று நாம் அவரைப் பார்க்க வேண்டும் என்பதும், அவர் நம்முடைய நோக்கத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதும் நடக்க வேண்டியிருந்தால் அது நிச்சயமாக நடக்கும்... எதற்கு டென்ஷனாகி பதட்டத்தோடு இருக்கிறாய்?''" என்று சீனிவாசன் அமைதியாகக் கூறியதும் மாலதி கணவரை விநோதமாகப் பார்த்தாள்
 "நல்ல விதமாகப் பேசுங்கள்... உங்கள் வாயால் அஸ்து கொட்டினால் அது அபசகுணமாகிவிடும்''" மாலதி கோபமாகக்கூறினாள்.
 சீனிவாசன் சிரித்துக் கொண்டார்!
 ஆயிற்று. ஒரு வழியாக சிங்கர்குடி வந்து சேர்ந்தனர். ஆசிரமம் அமைந்திருந்த இடம் மிகவும் விஸ்தாரமாக இருந்தது. நான்கைந்து ஏக்கர் நிலப்பரப்பு இருக்கலாம். நல்ல பசுமையாகக் காட்சியளித்தது. ஆசிரமம் நடுநாயகமாக இருந்தது. அதைச் சுற்றி நந்தவனம். விதவித வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்கி காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. ஆங்காங்கே வளர்த்துவிட்ட பெரிய பெரிய மரங்கள். நிழல் பரப்பி நின்றன. நிறைய சிறுசிறு ஓலைக்குடில்கள், எல்லா திசைகளிலும் நன்கு பராமரிக்கப்பட்ட பச்சைப் புல் தரை, மனதுக்கும் கண்களுக்கும் ரம்யமாக இருந்தது.
 மாலதியும் சீனிவாசனும் மெதுவாக நடந்து ஆசிரமக் கட்டடத்தினுள் நுழைந்தனர். ஏ.சி செய்யப்பட்ட பெரிய ஹால்! அடிக்கும் வெயிலுக்கு அந்த ஹால் அப்பாடா என்றிருந்தது. ஹாலில் கூட்டமே இல்லை. எதனால் கூட்டம் இல்லை என்பது அவர்களுக்குப் புதிராக இருந்தது.
 இரண்டு ஆசிரமத்து இளைஞர்கள் நெருங்கி வந்து அவர்களை விசாரித்தனர்.
 "ஜோசியரைப் பார்க்க தென் சென்னையிலிருந்து வருகிறோம்... எப்போது அவரைப் பார்க்கலாம்?''" மாலதி மிகவும் பவ்யமாக தாழ்ந்த குரலில் கேட்டாள்.
 "போன் செய்துவிட்டு வரக்கூடாதோ?.... இன்று சர்வ ஏகாதசி தினம். ஜோசியர் பூரண விரதம்... பச்சைத்தண்ணி கூட பல்லில் படாத உபவாசம்... அதோடு மெüனி விரதமும் கூட... ஆன்மிக அன்பர்களை நாளை மாலை நான்கு மணிக்கு மேல் தான் தரிசிப்பார். காலையில் ஒரு தொலைக்காட்சி பேட்டி. நீங்கள் நாளை பிற்பகல் செüகரியப்படி வந்து தரிசிக்கலாம்''" அவன் பேசப் பேச மாலதிக்கு மயக்கம் வந்தது.
 அந்த இளைஞர்களிடம் சீனிவாசன்.. ""வெயிலில் வந்து களைப்புத் தீர கொஞ்ச நேரம் தங்கி சிரமப் பரிகாரம் செய்து கொண்டு கிளம்பலாமா?'' என்றார்
 ""தாராளமாக அதோ அந்தப் பானையில் வெட்டிவேர் விளாமுச்சி வேர் போட்ட குளிர்ந்த நீர் இருக்கிறது. எடுத்துப் பருகலாம்... இன்று ஏகாதசி என்பதால் ஆசிரமத்தில் அன்னதானம், பிரசாத விநியோகம் எதுவும் கிடையாது...இந்த ஹாலின் மேற்குப் பகுதியில் பாத்ரூம், டாய்லெட் வசதியிருக்கு, உபயோகப்படுத்திக்கொள்ளலாம்''"
 "வந்ததற்கு ஜோசியரின் பூஜை அறையையாவது தரிசிக்கலாமா?''" மாலதி ஏக்கமாகக் கேட்டாள்.
 "இன்று ஜோசியரின் தரிசனம் கிடையாது என்பதால் எதையும் ஆன்மிக அன்பர்கள் பார்க்க முடியாது''"
 இன்னொரு இளைஞன் தரையில் புதைக்கப்பட்டிருந்த பெரிய உண்டியலைக் காண்பித்து,"அதோ உள்ள உண்டியலில் நீங்கள் விருப்பப்பட்டால் ஏதாவது பொருளதவி செய்து விட்டுப் போகலாம்'' என்றான்.
 சீனிவாசன் ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை சட்டையின் உள்பையிலிருந்து கையில் எடுத்துக்கொண்டு மாலதியின் கரத்தை பிடித்தவாறே உண்டியலை நோக்கி
 நடந்தார்.
 மாலதி முகத்தில் சுரத்தில்லை!
 "அன்று ஜோசியரின் தரிசனம் கிடைக்காமல் போனதற்கு கணவர் தான் காரணம்..' என்று சீனிவாசன் மீது மாலதிக்கு கோபம் கோபமாக வந்தது!
  சாய்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com