பிரதமர்  ஆன பத்திரிகையாளர்!

போரிஸ் ஜான்சன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தவர். பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார். அரசியலில் பங்கேற்று நாடாளுமன்ற உறுப்பினர்,
பிரதமர்  ஆன பத்திரிகையாளர்!


போரிஸ் ஜான்சன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தவர். பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார். அரசியலில் பங்கேற்று நாடாளுமன்ற உறுப்பினர், லண்டன் மேயர், இங்கிலாந்து அரசின் வெளியுறவுச் செயலர் என பயணித்து  தற்போது  போரிஸ் இங்கிலாந்தின் பிரதமராகிவிட்டார்.  விமர்சனங்களும் சர்ச்சைகளும் அவருடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் நிழலாகத் தொடர்ந்திருக்கின்றன.    

பத்திரிகையாளராக இருந்த போதும் சரி... அரசியல்வாதியாக மாறியபோதிலும் சரி... நட்பு,   விமர்சகர் வட்டங்களில்  போரிஸ் "குழப்பவாதி... ஒழுங்கற்றவர்..' என்று பெயர்    ஈட்டியுள்ளார். "போரிஸ் தனது கருத்துகளை விமர்சனங்களை அடிக்கடி மாற்றிக்  கொள்வார்' என்ற  நிரந்தரக் குற்றச்சாட்டும்   உண்டு. பலவகை விமர்சனங்கள் அவரை   நோக்கி பாய்ந்து கொண்டிருந்தாலும் அரசியலில் அவரது முன்னேற்றம் தடை படவில்லை. லண்டன்  நகரின்   மேயராக   எட்டு ஆண்டுகள் இருந்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

அரசியலில்  போரிஸ் ஜான்சன் செய்த பரபரப்புகள்  மக்களுக்குப் பிடித்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.  இல்லையென்றால்  பலத்த விமர்சனங்களுக்கிடையிலும்  போரிஸ்  அரசியலில் முன்னேறியிருக்க முடியாது. அமெரிக்க, இங்கிலாந்து நாட்டின்  குடியுரிமையைப் பெற்றிருந்த போரிஸ், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால்தான் அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்தார்.  அதிரடி  அரசியலைக்  கையாண்ட போரிஸ் இன்னொரு  அதிரடி அமெரிக்க  அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பராக இருப்பதில் வியப்பில்லையே!  இந்திய பிரதமர்  மோடியை  முன்னரே  தெரியும் என்பதால்  இந்தியா-இங்கிலாந்து நட்புறவு பலப்படும்.   

போரிஸ் ஜான்சன் தனது முதல் இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்ததைத் தொடர்ந்து   கேரி சைமண்ட்ஸ் என்ற பெண் தோழியுடன் வாழ்ந்து வருகிறார். போரிசுக்கு ஐம்பத்தைந்து  வயதாகிறது. பிரதமர் பதவி ஏற்ற இரண்டு நாட்களுக்கு முன்  போரிஸ் வீட்டில் பெரிய களேபரம். போரிஸýக்கும்   கேரிக்கும்  சண்டை. கண்ணாடி  பொருள்கள் உடையும் சத்தம் பலமாகக் கேட்கவே, அக்கம் பக்கத்தவர்கள் போலீசை அழைக்க ... களேபரம் அமைதியானது. காலையில் அக்கம்பக்கத்தவர்கள் போரிûஸ ஒரு மாதிரியாகப்   பார்க்க,    "நேற்று இரவு ஒன்றுமே நடக்காத' மாதிரி  போரிஸ்  சிரித்துக் கொண்டே அவர்களைக் கடந்து போனாராம்..! 

"இந்தியாவின் மருமகன் நான்'  என்று பெருமையாகச்  சொல்லி வந்தார். போரிஸ் அவரது  இரண்டாம் மனைவி மெரினா வீலர்,  இந்திய வம்சாவளியில் வந்தவர். இங்கிலாந்தில் பள்ளியில் படிக்கும் போதே போரிஸýக்கு மெரினாவைத் தெரியும்.  வளர்ந்து மீண்டும் ப்ரஸ்ஸல்சில்  இருவரும் பணி புரிந்து கொண்டிருந்த போது சந்திக்கவே... அது காதலில் தொடங்கி 1993-இல் திருமணத்தில் முடிந்தது. போரிஸ்-மெரினா  தம்பதிக்கு நான்கு குழந்தைகள். மெரினாவின் உறவினர்களைச் சந்திக்க  போரிஸ் டில்லி,  மும்பாய்க்கு பல முறை வந்து சென்றுள்ளார்.   

மெரினா  பிரபல எழுத்தாளர்  குஷ்வந்த் சிங்கிற்கு மகள் முறை . மெரினாவின் தாய், தீப் சிங். குஷ்வந்த் சிங்கின் இளைய சகோதரர் தல்ஜித் சிங்கின் மனைவி. இந்த காரணங்களால்தான்  போரிஸ்  தன்னை "இந்தியாவின் மருமகன்'  என்று அழைத்துக் கொண்டார்.   

தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிலரை போரிஸ் இணைத்துக் கொண்டுள்ளார்.  பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது போன்ற  முக்கிய விஷயங்களில்  முடிவெடுக்கும்   இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக  பொறுப்பேற்றிருப்பவர்   இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி படேல்.  இவரது பூர்வீகம்   குஜராத்.    பிரீத்தியின்  பெற்றோர்,  வேலை தேடி இங்கிலாந்து வந்தவர்கள்.  47 வயதாகும்  ப்ரீத்தி, 2010  -இலிருந்து இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகச்  செயல்படுகிறார். போரிஸ் ஜான்சனின்  தேர்தல் பிரசாரத்தில் முக்கியப் பங்கு வகித்ததினால் பிரீத்தி  மீண்டும் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.  

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகனான  ரிஷி சுனக், இந்திய வம்சாவளி அமைச்சர். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருந்த போது  நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதாவை  ரிஷி சந்தித்தார்.  இருவரும் 2009-இல் திருமணம் செய்துகொண்டனர்.   தனது மாமனாரைப் போலவே ரிஷியும் பிசினஸ்ஸில் பிசி. அதே சமயம் இங்கிலாந்தின் முக்கியக் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின்  தீவிர இடைநிலைத் தலைவர். கட்சிக்கு அவர் தன் பங்களிப்பின் காரணமாக  2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு  வெற்றி பெற்றார். 

ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான "பிரெக்ஸிட்' ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவைப் பெற முடியாததால், தெரசா மே இங்கிலாந்தின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.  இந்தப் பிரச்னையைப்  பதவியேற்ற மூன்று மாதத்திற்குள்  போரிஸ் தீர்க்க வேண்டும்... போரிஸ் இந்த முயற்சியில்  வெற்றி பெறுவாரா? இங்கிலாந்து மட்டுமல்ல... உலகமே  எதிர்பார்க்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com