மனதில் ஆயிரமாயிரம் நதிகள்!

"ஆச்சாரமான இல்லத்து அடுப்படியில் பணி செய்ய ஆள் தேவை' என்று பிரபலமான நாளிதழ் ஒன்றில் விளம்பரப்படுத்தியிருந்தார் நரசிம்மன்.  
மனதில் ஆயிரமாயிரம் நதிகள்!


"ஆச்சாரமான இல்லத்து அடுப்படியில் பணி செய்ய ஆள் தேவை' என்று பிரபலமான நாளிதழ் ஒன்றில் விளம்பரப்படுத்தியிருந்தார் நரசிம்மன்.  

""எதுக்கு இப்படி தலய வளச்சி மூக்கு தொடுறாப் போலான வார்த்தை விவரிப்பு? அதுவும் பத்திரிகையில...   சமையல் வேலைக்கு ஆள் தேவைனு போட்டிருந்தா சுலபமாப் புரிஞ்சிருக்குமே!  அடுப்படியில பணினதும் என்ன பணியோ ஏது பணியோனு ரொம்ப யோசிக்கப் போறாங்க. தேவையா இது?'' என்று தன் அங்கலாய்ப்பை புத்தகம் புரட்டிக் கொண்டிருந்த நரசிம்மனிடம் கொட்டித் தீர்த்தாள் லட்சுமி.

""பின்ன...வக்கீல் வீடுனு நம்ம முத்திரை அந்த விளம்பரத்துல தெரிய வேணாமா?'' வலது பக்க உதடு மெல்ல பின்வாங்கியபடியே சொன்னார் நரசிம்மன்.  

அவரது பதிலைக் கேட்டு சற்றே வதைந்தாலும் பதிலுக்கு பதில் உரைப்பதில் குறை வைக்கவில்லை லட்சுமியம்மா. அவள் எப்போதும் அப்படித் தான். தன் எண்ணத்தை சக மனிதர்களிடம் கடத்தி விட வேண்டும் என்ற பெருந்துடிப்புக் கொண்டவள்.  

""ம்கும்... இதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல.  அந்த நர்மதா பொண்ணு கல்யாணமாகிப் போயி முழுசா 3 மாசம் முடிஞ்சிருச்சு.  அவ போறதுக்கு ரெண்டு மாசம் முன்னாடியே வேற ஆள பாத்துக்கங்கம்மானு சொல்லிட்டா. கிட்டத்தட்ட 5 மாசமா ஆள் தேடிட்டிருக்கோம்.  நீங்க இப்படியே ஏக்கு மாக்கா வார்த்தை ஜாலம் காட்டி வர்றவங்கள எல்லாம் வழியனுப்பிட்டே இருங்க''

""அட... நான் என்னடி செஞ்சேன்?''

""பின்ன... இசைஞ்சு வர்றவங்ககிட்ட குலம் என்ன, கோத்திரம் என்னனு ரொம்ப அதீதமா கேள்வி கேட்டு கொடைஞ்சா... யாரு வருவா?''  உள்ளே உழன்ற ஆதங்கத்தில் கொஞ்சம் குரலை உயர்த்தியே பேசினாள் லட்சுமி இம்முறை.
""அதுக்கு என்ன பண்றது?  யாரு என்னனு தெரியாம ஒருத்தர வீட்டுக்கு வேலையாளா வெச்சிக்க முடியுமா? அதுவும் பத்து தேய்க்கவோ சலவை செய்யவோ இல்ல... நமக்கு சாப்பாடு செஞ்சி போட. உன்னையும் என்னையும் உக்காத்தி வெச்சி பலகாரம் சுட்டுப் போட.  தெய்வாம்சம் பொருந்திய அடுப்படிய சுத்த பத்தமா பராமரிக்க வேணாமா?  அதது காக்கிரி போக்கிரினு கலைஞ்சு போயிருந்தா எனக்கு சுத்தமா புடிக்காது.  இதோ இப்ப பேப்பர்லயே விளம்பரம் கொடுத்தாச்சு.  யாராவது நல்ல ஆள் தகையறாளானு பாப்போம்''

லட்சுமியிடம் இப்படி சொல்லி விட்டாரேதவிர இவருக்குள்ளும் ஓர் அசூயை குடிகொண்டு விட்டது.  எப்பொழுது தான் நல்லபடியாக ஒரு பெண் சோறு பொங்கிப் போட அமைவாள் என்ற நீள்யோசனை அவருள்ளும் வேரூன்றிவிட்டது.  லட்சுமியின் கைப்பக்குவத்துக்கு முன், வருபவர்கள் எல்லாம் தூசி தான். இருப்பினும் நான்கு வருடங்களுக்கு முன் அவளின் வலது கை, கால் செயலிழப்புக்கு பின் சமையலுக்கு ஆள் வைத்துக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயம்.  இப்போது மெல்ல அவள் தேறிவிட்டாலும்,  மீண்டும் அவள் அடுப்படியிலேயே உழன்று  கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் என்ன?  அதிலும் மனதளவில் அவளும் அந்த பணிகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விட்டாள்.  அதனால் இனியும் அவளை தொந்தரவுப்படுத்த வேண்டாம் என்றே தீவிர தேடுதலில் இறங்கினார் நரசிம்மன்.

அவர் விளம்பரப்படுத்தியது வீணாகிவிடவில்லை.  அன்றிலிருந்து இரண்டு தினங்களுக்கு நேரிலும் தொலைபேசியிலும் எண்ணற்ற விசாரிப்புகள், அழைப்புகள்.  இருபது  நபர்களுக்கு மேல் பார்த்தாயிற்று.  ஒருவர் கூட அவர் மனசுக்கு ஒத்துவரவில்லை.  புடவையை அள்ளி வாரி சுருட்டிக் கொண்டு வந்த அம்மாளைப் பார்த்து, ""இவங்களுக்கு புடவையவே ஒழுங்கா கட்டத் தெரியல. இவங்க எங்க எல்லாத்தியும் பதமா பதவிசா பக்குவமா சமையல் செய்வாங்க?'' என நிராகரித்தார்.  14 வயது பெண் குழந்தை ஒன்று வந்திருந்தது. ""நீயெல்லாம் பள்ளிக்கூடம் போகாம இங்க எங்க வந்தே!  போ... போய் படி'' என விரட்டியடித்தார்.  60 வயது தாண்டிய வயதில் மூன்று பெண்கள் வந்தனர். அதில் இருவருக்கு ஏற்கெனவே கைகள் நடுங்கிய வண்ணம் இருந்தன. அவர்கள் அலுப்புடன் சலிப்பு கலந்து சமையல் செய்வதாக அவர் மனதுக்குள் ஒரு கற்பனை விரிந்தது. பின் அவர்களும் நிராகரிக்கப்பட்டனர்.  இன்னும் நாலு பெண்மணிகள் வந்ததிலிருந்து வாய் ஓயாமல் பேசிய வண்ணம் இருந்தார்கள். நரசிம்மருக்கு எப்பொழுதும் கேட்ட கேள்விக்கு வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு என தேவையான சரியான பதில் வர வேண்டும்.  இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளில் கிட்டத்தட்ட மணிரத்னம் பட வசனம் போல பதில் சொன்னால் போதும்.  சமயத்தில் “"ஆம்', "இல்லை'” என ஒற்றை வார்த்தை பதிலில் கூட நிறுத்திக்கொள்வாள் லட்சுமி, அவரின் குணம் தெரிந்து.  தொலைக்காட்சி பார்க்கும் சில நேரங்களில் அதுவும் கூட தலையாட்டுதல், சைகை மொழி என முடிந்து போவதும் உண்டு.  

இப்படிப்பட்டவருக்கு பக்கம் பக்கமாக ஒப்புவிக்கும் வசன உச்சரிப்புகள் எரிச்சலையே தந்தன.  பத்து நிமிடங்களே தாங்க முடியாதவருக்கு பொழுதன்னிக்கும் இப்படி இருந்தால் எவ்வாறு தோதுபடும்?  அவர்கள் அனைவரையும் ஒரு புன்னகையுடன் வரவேற்று ஏற்றுக்கொள்ள முடியாததாகவே போய்விட்டது.  அவர்களும் சென்று விட லட்சுமி ஒருவித வெறுப்புடன், ""இந்தச் ஜென்மத்துல ஆள் கிடைக்கிறது கஷ்டம். பகவானே!'' என்று அவருக்கு மட்டும் கேட்கும் விதமாக சொல்லி விட்டு கூடத்தை விட்டு அறைக்குள் சென்றாள்.

வந்திருந்தவர்களில் யாரை மறுபரிசீலனை செய்யலாம் என்ற பலமான யோசனையில் அவர் ஆழ்ந்திருக்க... வெளியே கதவருகில் காலடி ஓசை. வரச்சொல்லிப் பார்த்ததில் வேட்டி கட்டிய மனிதர் ஒருவர் பாந்தமாக முன் நின்றார். 

""கேஸ் விஷயமா வந்தீங்களா? முன்வாசல் அறையில ஒக்காருங்க'' என்றார்.

""இல்லை சார்.  விளம்பரம் பார்த்தேன்.  சமையல் வேலைக்கு கேக்க வந்தேன்''  பவ்யமாக சொன்னார் வந்தவர்.  

நெற்றி சுருங்கியது நரசிம்மருக்கு.  ""சமையல் வேலைக்கா?  நீங்களா? தெரியுமா உங்களுக்கு?''

ஒரு சின்னப் புன்னகையை முகத்தில் தவழவிட்ட வேட்டி நபர், ""தெரியுங்கறதால தான சார் வந்திருக்கேன்''

""கல்யாண வீட்டுல வேல பாத்த அனுபவமோ? ரெண்டு பேர் இருக்குற வீட்டுக்கு சிக்கனமா செய்ய வருமா?''

""உங்களுக்கு எப்படி விருப்பமோ... அந்த பக்குவத்துல செஞ்சு கொடுப்பேன் சார்'' என்றதும் மனது "பச்சக்' என அவர் வசம் ஒட்டிக் கொண்டது நரசிம்மருக்கு.  இப்போது இன்னும் தீவிரமாக அவரை கூர்ந்தாய்வு செய்தார் வக்கீல்.கூடிய விரைவில் வழுக்கை விழலாம் என்ற அளவில் தலை.  நெற்றியில் ஒரு விரலால் நீளமாக இடப்பட்ட விபூதிக் கீற்று.  அரைக்கை சட்டை. கனமில்லாத ஜேபி. அதில் ஒரு சின்ன பழைய பட்டன் பேசி மட்டும் இருந்தது. சுத்தமாக வெட்டப்பட்ட நகங்கள்.  இடதுகையில் கட்டை விரலோடு ஒட்டிக்கொண்டிருந்தது ஆறாவது விரல்.

பின்னர் மெதுவாக ஒவ்வொரு கேள்வியிலும் கொக்கி போட்டு இழுக்க இழுக்க அருமையான பதில்களைச் சொல்லி மனதளவில் இன்னும் இன்னும் அவருக்கு நெருக்கமாகிப் போனார்.

குரல் கேட்டு வெளியே வந்த லட்சுமி, "இவரை எப்படி சமையல் செய்ய விடுவது?  அடுப்படியில் நான் போய் வர இருக்க வேண்டுமே!  பிறிதொரு ஆண் இருப்பது எப்போதும் தர்மசங்கடமாகி விடக்கூடும்!  இவர் வேண்டாமே' என்பது போல் பார்வையாலேயே தன் கருத்தை பதிவிட்டாள்.  

""நர்மதா இருக்கும் போது நானும் இந்த வீட்டில் தானே இருந்தேன்.  நீ ஏன் எதற்கெல்லாமோ முடிச்சு போடுகிறாய்.  மனதுக்கு நிறைவாய் தெரிகிறார்.  வைத்துக் கொள்வோம்.  சரிபட்டால் தொடரட்டும்.  இல்லையென்றால் போகச் சொல்லி விடலாம்'' என்றார்.  லட்சுமியும் தேடி களைத்த நிலையில் சம்மதம் தெரிவித்துவிட்டாள்.  

அன்றிலிருந்து அடுக்களை அமர்க்களப்பட்டது.  ராஜாராம் வந்த நேரம் வெளிநாட்டிலிருந்து பிள்ளைகளும் பேரக் குழந்தைகளும் விடுமுறைக்கு வர, சலிக்காது விதவிதமான பலகாரங்களையும் சேர்த்து அசத்தினார்.  சாம்பார், குழம்பு, பொரியல், கூட்டு, ரசம், அவியல், வறுவல் என அத்தனையிலும் ஒரு தனி ருசி. லட்சுமி சமையலறை பக்கமே ஒதுங்குவதில்லை.  மளிகை சாமான்களின் தேவைகளைச் சொல்லி வாங்கி வந்து அடுக்கி வைப்பது வரை அத்தனையும் ராஜாராமே நேர்த்தியாகக் கையாண்டார்.  இரவு நரசிம்மன் வர காலதாமதமானாலும் இருந்து அவருக்கான மூன்று சப்பாத்திகளைச் சுட்டுக் கொடுத்த பிறகே நகர்வார்.  

இதில் வேடிக்கை என்னவெனில் சமையல் வேலையில் மட்டும் ராஜாராம் நரசிம்மரை கவரவில்லை.  தன்னை வழக்குரீதியாகப் பார்க்க வரும் அத்தனை நபர்களையும் அருமையாக வரவேற்று அமர வைப்பார்.  கிடைக்கும் வரவேற்பிலேயே குளிர்ந்து போவார்கள் அவர்கள்.  மாலை நேரங்களில் வரும் இரண்டு ஜுனியர்களுக்கு இவரால் பல வேலைகள் மிச்சம்.

யார் யாருக்கு என்ன பிரச்னை என்பது வரை ராஜாராமுக்கு அத்துப்படி...  நரசிம்மருக்கு காப்பி ஆற்றிக் கொடுத்தபடியே அவர்கள் சொல்வதற்கும் செவி சாய்த்திருப்பார்.  பின் அவர்கள் சென்றது முதல் ""ஐயா... இந்த விஷயம் இப்படி இருந்திருக்கலாமில்ல,  அதையும் சேர்த்து விசாரிங்க'' என்று இவருக்கே சமயத்தில் ஆலோசனை சொல்வார்.

அவரது புத்திக் கூர்மையைக் கவனித்த நரசிம்மர். ""ராஜாராம்...சும்மா தானே இருக்க, இப்படி வா... இங்க வந்து உக்காரு'' என்று வம்படியாக ஜூனியர்களுடன் அறைக்குள் அமர வைத்து விடுவார்.  ஏனெனில் ராஜாராம் சொல்லும் யோசனைகள் வித்தியாசமாக வேறு கோணத்தில் இருக்கும். எதிர்பாராத வேறு ஒரு நிலையிலிருந்து யோசித்திருப்பார்.  அந்த வழியாகச் சென்று அதன் வேர் பிடித்து பிரச்னைகளை எல்லாம் அலசி ஆராயும் போது முடிவு சுலபமாக கைக்கு எட்டிவிடும்.  அவருடைய சமயோஜித புத்தி இவருக்கு ரொம்பப் பிடிக்கும்.  

""ராஜாராம்... நீ மட்டும் படிச்சிருந்தா வாழ்க்கையில எங்கயோ போயிருப்ப'' என்பார்.

ராஜாராம் உடனே சிந்தனையில் ஆழ்ந்துவிடுவார்.  சில நேரங்களில் அவரை இயல்புக்கு கொண்டு வர ரொம்பவே மெனக்கெடுவார் நரசிம்மன்.

ராஜாராமுக்கென தனியறையை பின்கட்டிலேயே ஒதுக்கிக் கொடுத்திருந்தபடியால் நரசிம்மன் தூங்கப் போவது வரை அவரும் உடனிருப்பார்.  வழக்கு குறித்து சில வேளைகளில் இரவு நேரங்களில் குறிப்பெடுக்க வேண்டியிருக்கும்.  அப்போதெல்லாம் ராஜாராமும் டீ போட்டுக் கொடுத்து பேச்சுத்துணைக்கு உடனிருப்பார். 

ஓர் ஆணை சமையல் வேலைக்கு வைத்துக் கொள்வது உகந்ததா இல்லையா என்ற பெருங்குழப்பத்திற்கு பின்பே ராஜாராமை வேலைக்கு அமர்த்தினார். ஆனால் அது இப்பொழுது எத்தனை உபயோகமாக போயிருக்கிறது.  இதே பெண்ணாக இருந்திருந்தால் லட்சுமியுடன் மட்டுமே அந்த பணிப்பெண்ணின் பரிவர்த்தனைகள் அத்தனையும் அடங்கிப் போயிருக்கும்.  ஓர் ஆணாக இருந்தபடியால் வீட்டில் எப்போதும் ஒரு நண்பருடன் இருப்பது போன்ற செளகர்யம். 

அதிலும் கூப்பிட கொள்ள லாகவமாக தன் வயதை விட பத்து வயது குறைந்த, ஐம்பது வயதைக் கடந்து பொறுப்பு கூடிய ஒரு நிலையில் ராஜாராம் கிடைத்தது தம் குடும்பத்துக்கு கிடைக்கப் பெற்ற நல்ல பாக்கியம் என்றே கருதினார் நரசிம்மன்.

இரண்டு வருடங்கள் போனது தெரியவில்லை.  போகப் போக வழக்குக்காக வந்த சில பஞ்சாயத்துக்களை ராஜாராமே முடித்து வைத்த சம்பவங்களும் நடந்தன.  விவாகரத்துக்காக தன்னிடம் வந்த இரு வழக்குகளில் கணவன் மனைவி இருவரையும் அழைத்து சுமூகமாகப் பேசி முடித்து சேர்த்து வைத்த பெருமையும் ராஜாராமுக்கு கூடியது.  இதனால் அவரின் ஜூனியர்களுடன் சின்ன பிணக்கு கூட வந்து நீங்கியது.  அந்த நேரங்களில் லட்சுமியும் உடனிருந்தாள்.  பின் அவற்றை நரசிம்மனிடம் இப்படி விவரித்தாள்.  

""ராஜாராமுக்கு நிறைய விஷய ஞானம் இருக்கு.  குடும்பத்துல எப்படி விட்டுக் கொடுத்துப் பிரச்னைகளைச் சமாளிக்கலாம்னு அழகா எடுத்துச் சொன்னார். பிரிஞ்சிருந்ததுங்களும் எப்படியோ அதையெல்லாம் கேட்டுக்குச்சிங்க. நமக்கும் ரெண்டு குடும்பத்த சேத்து வெச்ச புண்ணியம் அவரால.  ஆனா பாவம்!  அவருக்குத் தான் பொண்டாட்டி சின்ன வயசுலயே தவறிப் போயிட்டிருக்கு.  பாவம்!''  சொல்லிவிட்டு பலமாக "உச்' கொட்டினாள் லட்சுமி.

சற்றே உடல் நலம் குன்றிப் போயிருந்த ஒரு அதிகாலை நேரத்தில், "தனக்கு இறப்பு நேரிட்டால் தன் இரு பிள்ளைகளும் வெளி நாட்டிலிருந்து வருவதற்குள் அத்தனை ஈமக்காரியங்களையும் நீ தான் கவனிக்க வேண்டும்' என ராஜாராமிடம் ஒரு கட்டத்தில் உடைந்து போய் சொன்னார் நரசிம்மன்.  ராஜாராமுக்கும் தனக்கும் ஏதோ பூர்வஜென்ம தொடர்பு இருக்க வேண்டும் என பலமாக நம்பத் தொடங்கினார் நரசிம்மன்.

மழைத் தூறல் பிசுபிசுத்த ஒரு புதன்கிழமை மாலை வேளையில் ஆட்டோவில் வந்திறங்கினர் அந்த இரு பெண்கள்.  பார்க்க தாயும் மகளுமாக தெரிந்தனர். 

""வக்கீல் சாரைப் பாக்கணும்''”

ராஜாராம் உள்ளே ஏதோ வேலையாக இருக்க, லட்சுமி அவர்களிடத்தில் அறையைக் காண்பித்து உள்ளே அமரச் செய்தாள்.  அவர்கள் இருவரின் முகத்திலும் துளியும் பொலிவு இல்லை.  இருண்ட வீட்டுக்குள் வசிப்பவர்கள் போல் முகம் களையிழந்து இருந்தது.  கைகளில் வெளுத்துப் போன கவரிங் வளையல்கள்.  தாலியை மட்டுமே சுமந்திருந்த கழுத்து.  முதியவள் அப்படியே தலைமுடியை அள்ளி கொண்டை போட்டிருந்தாள்.  இளவயதாளுக்கு நல்ல நீண்ட கூந்தல்.

இருவரும் அறையில் இருந்த பானையிலிருந்து தண்ணீரைப் பிடித்துப் பருகினர்.  இவர்கள் அதிர்ஷ்டம் அன்று பார்த்து ஒருவரும் இல்லை.  வழக்கமாக "ஜே ஜே' வென கூட்டம் இருக்கும் நேரம்.

நரசிம்மன் உள்ளே சென்றது தான் தாமதம், இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தங்கள் கதையை ஒப்புவித்துக் கொண்டிருந்தனர்.  வாழ்க்கையே வழக்காகிப் போன விசித்திரத்தை வார்த்தைகளால் விவரித்துக் கொண்டிருந்தனர்.  ஒலித்துக் கொண்டிருந்த லலிதா சகஸ்ர மாலையைத் தாண்டி அந்த முதியவளின் விசும்பல் உள்ளே கேட்டது.  என்ன பிரச்னையாக இருக்கும் என ராஜாராமுக்கு உள்ளே ஆர்வம் உந்தித் தள்ளியது.  அன்றைக்குப் பார்த்து அவருக்கு அத்தனை வேலைகள். எப்பொழுதும் வீட்டுக்கு வந்து சுட்டித்தனம் செய்யும் எதிர்வீட்டு வாண்டின் பிறந்த நாளுக்காக பால் கொழுக்கட்டை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.  ஆனாலும் அந்த அறைக்குச் செல்ல வேண்டும் என்ற ஏதோ ஒரு ஈர்ப்பு உள்ளுக்குள் சுழற்றியடித்தபடியே இருந்தது. 

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்,  பெரிய சொத்து பிரச்னை போல. பத்திரம், கையெழுத்து என அவ்வப்போது காதினுள் விழுந்து வைத்தது. நரசிம்மன் அவர்கள் இருவருக்கும் காப்பி எடுத்து வர  அடுப்படியில் இருக்கும் ராஜாராமுக்கு கேட்கும்விதமாக பெருங்குரலில் சத்தமிட்டார்.  குட்டிப் போட்ட பூனைகள் போல் கூடவே சுற்றிக் கொண்டிருக்கும் ஜூனியர் பிள்ளைகளுக்கு தவிர்த்து, வழக்குக்காக வருபவர்களுக்கு தண்ணீரைத் தவிர வேறு எதையும் குடிக்கக் கொடுக்க வக்கீல் என்றும் பணித்தது இல்லை. அது இல்லாது இப்படி நடக்குமானால் அது வருஷத்துக்கு ஒரு தரம் என்பதாக மட்டுமே இருக்கும். ஒன்று மிகவும் வேண்டப்பட்டவர்களுக்குத் தான் காப்பி கிடைக்கும் அல்லது நொந்து நூலாய் போனவர்களுக்கு என ஏற்கெனவே ராஜாராம் யூகித்திருந்தார்.
நல்ல பில்டர் காப்பியை மூன்று டம்ளர்களில் ஊற்றி கொண்டு போனார் ராஜாராம்.  மணம் அறையை நிறைத்தது.  முதலில் நரசிம்மருக்கு கொடுத்து விட்டு இரு பெண்கள் பக்கம் தட்டை நீட்டினார்.  அந்த முதியவளை கண்டதும் இவரின் கைகள் நடுக்கத்துக்கு உள்ளானது.  அந்த முதியவளும் ராஜாராமை வெறித்து வெறித்துப் பார்த்தாள்.  ஏதோ ஒரு பதற்றம் உந்தித் தள்ள குபீரென பூத்த வியர்வையுடன் ராஜாராம் வெளியே அகன்றார். முதியவள் கை கால் அசைக்காது பிரக்ஞை இன்றி அமர்ந்திருந்தாள்.  பின் சுதாரித்து தன் மகளிடம் குசுகுசுவென எதையோ காதினுள் போட்டாள்.  அதைக் கேட்டதும் இளையவள் வாய் மீது இரு கைகளையும் கொண்டு  சென்று நிறுத்தி கண்கள் விரித்து ஆச்சரியம் காட்டினாள்.  அவர்கள் எதிரில் வைத்த காப்பி வைத்தபடி இருந்தது. 

நரசிம்மனுக்கு நடப்பதை சரியாக யூகிக்க முடியவில்லை. "இவர்கள் யார்? எதற்காக ராஜாராமைப் பார்த்ததும் இப்படி ஆச்சரியப்பட்டார்கள்.  ராஜாராம் ஏன் இவர்களைப் பார்த்து அடித்தோம் பிடித்தோம் என ஓட வேண்டும்!'  அனைவருக்குள்ளும் குழப்ப ரேகைகள்.

அந்த முதியவள் சுய நினைவுக்கு வந்து கட்டிப் போன தன் குரலில் மெல்ல வக்கீலிடம், "அ...ஐயா... யார் இவரு?  இங்க என்ன பண்றாரு?'' என்றாள்.  

""அவரா... என் வீட்டுல சமையல் வேலை செய்யறாரு. ஏன்? உங்களுக்கு அவர தெரியுமா?''

""ம்...அவர் பேரு?''

""ராஜாராம். சொல்லுங்க... அவர உங்களுக்கு தெரியுமா?''

""அது வந்து... இல்லைங்கைய்யா, எங்களுக்கு தெரிஞ்ச நபர் ஒருத்தரு.  பேரு வளையாபதி.  அவரை மாதிரியே தெரிஞ்சது.  அதான் கேட்டேன்.  ஆனா நீங்க அவர் பேரு ராஜாராம்னு சொல்றீங்களே. அப்ப இவர் அவர் இல்ல.''

""ஓ...அப்படியா சேதி.  சரி சரி, காப்பி எடுத்துக்கோங்க!''

இளவயதாள் தன் தாயை குழப்பத்துடன் பார்க்க இருவரும் காப்பி பருகியதும் வெளியேறினார்கள்.

அந்த நிமிடத்திலிருந்து ராஜாராம் வீட்டிற்குள் இயல்பாக இல்லை என்பதை எடை போட்டு விட்டார் நரசிம்மன்.  இது அவரின் மூளைக்குள் எங்கோ இடித்தது.  அடுத்த ஒரு வாரத்தில் வீட்டுக்கு முன்கட்டில் உள்ள வக்கீல் அறை பக்கமே அவர் ஒதுங்கவில்லை.  சமையல் கட்டுண்டு தன் அறையுண்டு என முடங்கிப் போனார் ராஜாராம்.  அவரின் இந்த மாற்றம் நரசிம்மரை இருப்புக் கொள்ள விடவில்லை. 

தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே எழுந்து பூஜை புனஸ்காரங்கள் முடித்து தொலைக்காட்சியில் ஒரு கண்ணும் யாருடைய வரவையோ எதிர்பார்த்து வாசல் நோக்கி மற்றொரு கண்ணையும் வைத்து காத்திருந்தார். 

புதன் அன்று பேசிப் போன அந்த இரு பெண்களும் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள்.  வெளியே பெரிய இரும்பு கதவு திறக்கப்படும் ஓசை கேட்டது.

பூரிக்கு மாவு பிசைந்துக் கொண்டிருந்த ராஜாராம் சமையலறை ஜன்னலிலிருந்து வெளி வாசலை எட்டிப் பார்த்தார்.  அங்கே தேவகியும் மதிவதனியும் வந்து  கொண்டிருந்தனர். நாலு அடி எடுத்து வைத்த லட்சுமியும் “""இவங்க...அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்து போனாங்களே... அந்த பொம்மனாட்டிங்க தான?  இன்னிக்கு வரச்சொல்லி இருந்தீங்களா?'' என கணவரை பார்த்தபடி இழுத்தார். 

""ஆமாம்... அவங்களுக்கு சொந்தமான ஒரு பொருள் நம்ம வீட்டுல இருக்கு. அத கொண்டு போக வந்திருக்காங்க''

வக்கீல் ஐயா அனைத்து விஷயங்களும் அறிந்து வைத்து பேசுகிறார் என ராஜாராமுக்கு விளங்கிவிட்டது.  கைகளை கழுவிக் கொண்டு கூடத்துக்கு பெயர்ந்தார்.  லட்சுமி விளங்காமல் விழித்தாள்.  அனைவரும் கூடத்தின்  நான்கு மூலைகளில் நின்று கொண்டிருந்தனர்.  நரசிம்மன் மட்டும் தெற்கு மூலையில் கிடந்த சோபாவில் அமர்ந்திருந்தார். ராஜாராமை பார்த்தார்.

""ராஜாராம்...இவங்க உன் குடும்பம்.  நீ இல்லாது அவங்க பட்ட துன்பம் கொஞ்சம் நஞ்சமில்ல.  நீ விட்டுட்டுப் போனதால உன்னோட மூத்த குடும்ப உறுப்பினர்கள் அவங்களுக்கு சேர வேண்டிய நியாயமான சொத்தை பிரிச்சுக் கொடுக்க முன்வரல.  ஏமாத்திட்டாங்க.  இந்த ரெண்டு பெண்களும் இப்ப நிராதரவா நிக்குறாங்க.  அவங்களுக்கு உன்னோட பதில் என்ன?'' மிக இயல்பாக கேட்டார் வக்கீல் சின்ன மெளனத்திற்குப் பிறகு பேசத் தொடங்கினார் ராஜாராம்:

""நானும் தேவகியும் காதலிச்சி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.  ஒரு அஞ்சு வருஷம் எல்லாம் சுமூகமாத்தான் போச்சு.  அப்ப எல்லாம் எனக்கு ரொம்ப பிடிவாதம் ஜாஸ்தி.  நான் பிடிச்ச முயலுக்கு மூனே காலுன்னு வீராப்பா திரிவேன்.  குடும்பத்துக்குள்ளயும் அந்த மாதிரியே எக்கி உருண்டதுல எனக்கும் தேவகிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் போச்சு.  இப்ப இவ்வளவு பக்குவமா வேல செய்யுறேன்னு சொல்றீங்களே... ஆனா அப்ப இந்த மாதிரி சின்னச் சின்ன உதவிகள் பொண்டாட்டி புள்ளைகளுக்கு செய்யாம சலம்பிட்டு திரிஞ்சேன். காதல் திருமணம் செஞ்சதால குடும்பமும் ஆதரவு தரல,  வீட்டுலயும் என் பிடிவாதத்தால நிம்மதி இல்ல.  அதான் நண்பர்களோட... வீட்ல சொல்லாம கொள்ளாம மும்பைக்கு வேலைக்கு கிளம்பிட்டேன்.  ஒரு வருஷத்துல திரும்பி வரணும்னு தான் இருந்தேன்.  எதிர்பாராத சூழ் நிலையில் 3 வருஷம் ஜெயிலுக்குப் போக வேண்டியதாப் போச்சு.  அப்புறம் ஊருக்கு வந்து இவங்கள தேடிப் பார்த்தேன்.  ஊருல எங்கயும் காணல.  சுத்தி இருந்த யாருக்கும் இவங்களோட விவரம் தெரியல. 

ஓடிப் போனவன் ஓடிப் போனவனாவே காலத்துக்கும் அமைஞ்சு போச்சேனு கஷ்டப்பட்டேன்.  அப்புறம் பல இடங்கள்ல வேலை பார்த்து இதோ கடைசியா உங்க வீட்ல இப்ப இருக்கேன்.  விட்டுக்கொடுத்தல் இல்லாது போனதால தான் என் வாழ்க்கை இப்படி திசை மாறிப் போச்சு.  இவங்கள அன்னைக்கு பாத்த போதே உண்மையச் சொல்லி அரவணைச்சுக்கணும்னு தான் பாத்தேன்.  ஆனா உங்க கிட்ட பொண்டாட்டி குடும்பம்னு எதுவும் இல்லன்னு பொய் சொன்னது உறுத்துச்சு. அதுவும் இல்லாம இவ்வளவு வருஷத்துக்கு அப்புறம் இப்படியே இருந்திடலாம்னும்  பேசாம இருந்திட்டேன்'' 

லட்சுமி வலது தாடையில் வலது கையை இருத்தி ஆச்சர்யமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.  தேவகியும் மதிவதனியும் குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார்கள்.  ராஜாராமின் கண்களிலும் ஈரப்பசை. 

""ஐயா... நான் ஒண்டிக்கட்ட தானனு எதையும் சேத்துக்கூட வெக்கல.  எந்த சொத்து சுகமும் எங்கிட்ட இல்ல.  என்னால பெருசா எந்த ஒரு உதவியும் செய்யக்கூட முடியாது''

""ராஜாராம் ஒரு மனுஷனுக்கு உண்மையான சொத்து எது தெரியுமா? காசு பணமோ, மூளையோ, மூளைக்குள்ள சேத்து வெச்சிருக்குற அறிவோ இல்ல... மனசு முழுக்க வெச்சிருக்க அன்பு, பிறத்தியார் சொல்றத நிதானிச்சி கேக்குற காது... அப்புறம் அவங்களுக்கு உதவி செய்யுற கைகள்.  இதெல்லாம் உங்கிட்ட இப்ப இருக்கு.  நீ தான் அவங்களுக்கு பெரிய சொத்து''

""இல்லைங்கய்யா...''

""இனி ஒரு வார்த்த பேசாத ராஜாராம்.  இங்க வந்த பலபேருக்கு அறிவுரை சொன்னவன் நீ.  அதால நான் ஒன்னும் உனக்கு பெருசா சொல்றதுக்கில்ல. இதுவரை நடந்ததை யோசிக்கறத விட இனி எப்படி நடக்கணும்னு யோசிக்கறவங்க தான் வாழத் தெரிஞ்சவங்க.  நீ இனிமே இருக்க வேண்டியது அவங்களோட தான்.  உனக்கு ஒரு நல்ல குடும்பம் அமையாம போயிடுச்சேன்னு நான் பல நாள் வருத்தப்பட்டிருக்கேன்.  அதுக்கு இனி அவசியம் இல்ல.  விட்டுப் போன பந்தத்தோட இணையுற நாள் வந்தாச்சு.  இனிமே நீ அவங்க கூடத்தான் வாழனும்.  போயிட்டு வா ராஜாராம்.  சீக்கிரமே உன் பொண்ணுக்கு நல்ல வரன் பாரு.  அவளுக்கு திருமண பரிசா உன்னோட பூர்வீக சொத்தை நான் வாங்கித் தரேன். சந்தோஷமா போயிட்டு வா.''

அந்தப் பெண்களின் பக்கம் திரும்பியவர், ""இங்க பாருங்கம்மா... அவரைப் பத்தி குற்றம் சொல்ல ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.  ஆனா மன்னிக்கவும், மறக்கவும் ஒரே காரணம் தான் தேவைப்படும்.  அது அன்பு. பரிபூரண அன்போட அவரோட வாழுங்க'' பிரியாவிடை பெற்றது ராஜாராமின் குடும்பம்.

""ஏங்க..."ஆச்சாரமான இல்லத்து அடுப்படியில் பணி செய்ய ஆள் தேவை'ன் னு பழையபடி இன்னைக்கே பத்திரிகையில விளம்பரம் கொடுங்க.  ஆனா ஒரு ஆண் தான் தேவைனு அழுத்தமா தெரிவிச்சிடுங்க'  சொல்லிவிட்டு அறைக்குள் சென்று விட்டாள் லட்சுமி கண்கலங்கியவாறே!  நல்ல சகோதரனை திடீரென இழந்த உளவியல் தவிப்பு.  பாவம் அவள்!

தற்போது நரசிம்மனுக்கும் தனிமை தேவைப்பட்டது.  ராஜாராமின் நினைவுகளை மனதுக்குள் அசை போட. மனதில் ஆயிரமாயிரம் நதிகள் பாய்ந்த உணர்வு!

தினமணி சிவசங்கரி  சிறுகதைப் போட்டியில்
ஆறுதல் பரிசு ரூ.5,000 பெற்ற கதை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com