சுடச்சுட

  
  AYUL

  ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
  ஆங்கில மருந்துகளைப் போல அல்லாமல் ஆயுர்வேத மருந்துகள் சாப்பிடும் போது மட்டும் எதற்காக நிறைய உணவு மற்றும் செயல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன? மன மகிழ்ச்சி தரும் உணவு வகைகளைச் சாப்பிட்டுக் கொண்டே மருந்துகளையும் சாப்பிட்டால் நோய் குணமடையாதா?
   -சங்கரன், திண்டுக்கல்.
   "என் செளகர்யம் போல விரும்பியதைச் சாப்பிடுவேன். நீங்கள் மருந்து கொடுத்து என் உடல் தொல்லையைக் குணப்படுத்துங்கள்' என்று நீங்கள் கேட்பது புரிகிறது. மருந்தைக் கொடுத்தால், நோய்க்கும் மருந்துக்கும் மட்டுமே சண்டை நடக்க வேண்டுமே தவிர, மருந்துக்கும் உணவுக்கும் சண்டையை ஏற்படுத்துவது தவறு. மேலும், உணவு, சாப்பிடப்பட்ட மருந்துக்குத் துணை நின்று நோய்க்கு எதிராக நிற்க வேண்டுமே தவிர, கட்சி மாறி உடல் உபாதைக்கு ஓட்டுப் போட்டுவிட்டால், ஐந்தாண்டுகளல்ல, பத்து ஆண்டுகள் ஆனாலும் நோய் மாறாது. உதாரணத்திற்கு, உடல் பருமனாக உள்ளவர்கள் உடல் இளைக்க மருந்து மற்றும் செயல்களைச் செய்து கொண்டே, புலால் உணவு- எண்ணெய்யில் பொரித்தது, நொறுக்குத்தீனி சாப்பிடுவது, பகலில் படுத்து உறங்துவது, சோம்பேறித்தனமான சுகம் தரும் இன்ப வாழ்வு அனுபவிப்பது போன்றவற்றால், உடல் மேலும் பருத்துவிடுமே தவிர, குறைய வாய்ப்பேயில்லை.
   கோதுமையை வறுத்து தண்ணீர் விட்டு கஞ்சி போலக் காய்ச்சி வடிகட்டி, ஆறிய அந்த கஞ்சியில் தேன் கலந்து காலையில் சாப்பிட, உடல் இளைக்கும் என்கிறார் சரகர் எனும் முனிவர். அவர் சொல்வதைக் கேட்காமல், உடலை இளைக்கச் செய்யும் வராதி கஷாயத்தை தேனுடன் காலையில் சாப்பிட்ட பிறகு, மாவுப்பொருட்களாகிய இட்லி, தோசை, வடை அல்லது வெண்பொங்கல், சர்க்கரைப்பொங்கல் என்றெல்லாம் சாப்பிட்டால் வேலைக்கு ஆகுமா?
   மேலும் சில உதாரணங்கள்:
   கார்ப்போகரிசி எனும் விதையைக் கஞ்சியாகக் காய்ச்சி வடிகட்டி, காலையில் சாப்பிட, உடலில் உள்ள விஷ சேர்க்கையானது நீங்கி விடுகிறது. ஆனால், எந்த உணவால் விஷம் ஏற்பட்டதோ, அதைத் தொடரும் பட்சத்தில் இந்தக் கஞ்சி வேலை செய்வதில்லை.
   கறுப்பு எள்ளைக் கஞ்சியாக்கி, அதில் பசு நெய்யும் உப்பும் சேர்த்துச் சாப்பிட, குடல், நுரையீரல், கல்லீரல், மூட்டுகள் ஆகிய பகுதிகளுக்குத் தேவையான எண்ணெய்ப் பசையானது கிடைத்துவிடும். கொலஸ்ட்ரால் அதிகமாகிவிடுமோ என்று பயந்து கொண்டு சிறிதும் நெய்ப்பே தராத உணவு வகைகளைத் தரும் குதிரை வாலி, பார்லி, சாமை, சோளம் போன்றவற்றை உணவாக்கிச் சாப்பிடுபவர்களுக்கு வரப் பிரசாதமாக அமையும் இந்தக் கஞ்சியுடன், வறட்சி ஏற்படுத்தும் இவ்வகை உணவுகளைத் தடை செய்து எள்ளுக்கஞ்சியை உணவாகக் கொள்ள, மூட்டுகளில் ஏற்படும் உராயும் சத்தம், உள்ளுறுப்புகளின் உரசிக்கொள்ளும் நிலை மாறி நன்மையை ஏற்படுத்தும்.
   நெருஞ்சி விதையையும், கன்டங்கத்திரியையும் வேகவைத்த நீரை கரும்புச்சாறுடன் கலந்து சாப்பிட, சிறுநீரகங்களிலிருந்து உற்பத்தியாகும் சிறுநீரின் அளவு கூடி வெளியேறத் தொடங்கும். அதன் உற்பத்தியைத் தடுத்துவிட்ட காரசாரமான உணவு வகைகளை நிறுத்தி நீரை சுரந்துவிடும் தன்மையுடைய வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், புடலங்காய், சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றை உணவாகக் கொள்ள, மருத்துடன் உறவாடி நன்மையைத் தரும்.
   தொண்டையைச் சார்ந்த உபாதைகள் பலவற்றையும் உருவாக்கும் ஐஸ்கிரீம், மிகச்சூடான காபி, டீ சாப்பிடுதல், அதிகப் பேச்சு, பாட்டு பாடுதல், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடம் எடுப்பதற்காக குரலை உயர்த்திப் பேச வேண்டிய நிர்பந்தம், தயிர், ஊறுகாய், இனிப்பு அதிகம் சாப்பிடுதல், தைராய்டுகட்டி- அதனால் ஏற்படும் தைராய்டு சுரப்பிகளின் கெடுதல்கள் போன்ற நிலையில், இவ்வகை உணவு- செயல் போன்றவற்றை நிறுத்தி, பார்லியுடன் நெய், நல்லெண்ணெய், திப்பிலி மற்றும் நெல்லிக்காய் சேர்த்துக் காய்ச்சிய கஞ்சி சாப்பிட, நல்ல பயன் தரும். அதைவிடுத்து, தொண்டைக்கு கெடுதலைத் தரும் உணவையும் சாப்பிடுவேன், நீங்கள் தரும் மருந்தும் வேலை செய்ய வேண்டும் என்றால் அது ஒரு போதும் சாத்தியமில்லை.
   ஆக, உணவும்- மருந்தும் நட்புப் பாராட்டி, நோய்க்கு எதிராகக் கூட்டணி சேர்ந்து முத்திரை பதித்தால் வெற்றி உறுதி. மனம் எனும் ஆட்சி பீடத்தில் அமர, ஆரோக்கியத்தை நிலை நாட்ட, உணவும் மருந்தும் துணை நிற்கட்டும்.
   (தொடரும்)
   பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
   ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
   நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
   செல் : 94444 41771
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai