ஆழ்மனதில் பாசிட்டிவ் விதைகள்!

"BE POSITVE" என்று எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால் இவர் சொல்லும்போது அது வித்தியாசமானதாக மாறிவிடுகிறது.
ஆழ்மனதில் பாசிட்டிவ் விதைகள்!

"BE POSITVE" என்று எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால் இவர் சொல்லும்போது அது வித்தியாசமானதாக மாறிவிடுகிறது. "நெஞ்சை நிமிர்த்து, தோளை உயர்த்து' என்றுதான் வழக்கமான சுயமுன்னேற்ற நூல்கள் நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றன. சுயமுன்னேற்றப் பேச்சாளர்களும் மனதை மேம்படுத்துவதைப் பற்றித்தான் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் "பணத்தை ஈர்ப்பதற்கான' ரகசியங்களை மனதுக்குச் சொல்லிக் கொடுக்கிறார் இவர். 
http://www.bpositive.org.in என்ற இணையதளத்தின் மூலம் இவர் வழங்கிவரும் தன்னம்பிக்கை வீடியோக்களை இதுவரை உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். 
வீடியோக்களைப் பார்த்த பலர், தனிப்பட்ட முறையில் அவர்களுடைய பிரச்னைகளைச் சொல்லி நேரில் இவரைச் சந்திப்பதும் உண்டு. போனில் பேசியும் ஆலோசனை பெறுவதும் உண்டு. 
இளம் வயதினரான ஏ.எல்.சூர்யா, சோர்ந்து கிடக்கும் மனதை, உற்சாகமானதாக மாற்றும் கலையில் வல்லவராக இருக்கிறார். அதனால்தான் இவர் நடத்தும் பயிற்சி முகாம்களில் நிறையப் பேர் பங்கேற்கின்றனர். 
கேரளாவில் உள்ள ஆலப்புழை அருகே ஓடிக் கொண்டிருக்கும் படகில் இவர் நடத்திய ஆழ்மனது பயிற்சி வகுப்புகளில் பலர் கலந்து கொண்டனர். அதுபோல பாண்டிச்சேரியில் கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள லீ பாண்டி ரிசார்ட்ஸ்- இல் இவர் நடத்திய வகுப்புகளில் பலர், தங்களுடைய சோர்ந்து போன மனதைத் தொலைக்க வந்திருக்கிறார்கள்.
இத்தனைக்கும் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்தும் சூர்யா, முறைப்படி உளவியல் பயின்றவர் அல்ல. அப்படியானால் இது எப்படி சாத்தியமாயிற்று அவருக்கு? என்ற வினாவுடன் அவரை அணுகினோம். 
"இந்த உலகம் பண உலகம். பணம் சம்பாதித்தால்தான் ஒவ்வொருவரும் இங்கே வாழ முடியும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒருவர் ஆசைப்பட்டால் போதாது. பணம் சம்பாதிப்பதற்கு முதலில் மனதளவில்அவர் தயாராக வேண்டும். அதிலும் குறிப்பாக ஆழ்மனதில் அவர் தயாராக வேண்டும். அதற்கான பயிற்சிகளையே நான் அளித்து வருகிறேன். 
பள்ளிப் படிப்பு முடித்தவுடன் பி.டெக் படித்து ஓர் என்ஜினியராக வேண்டும் என்ற கனவுடன்தான் என் இளமைக்காலம் தொடங்கியது. ஆனால், என்னால் படிக்க முடியவில்லை. தேர்வில் தோல்வி. பி.டெக் படிக்க முடியவில்லை, ஏஎம்ஐஇ - ஆவது படிக்கலாம் என்று முயற்சி செய்தால் அதிலும் தோல்வி. கடுமையான மன உளைச்சலுடன் திரிந்தேன். மனஉளைச்சலில் இருந்து மீள நிறைய உளவியல் புத்தகங்களைப் படித்தேன். சித்தர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் தெளிவானேன். நானே என்னைத் தெளிவாக்கிக் கொண்டேன். அதுவே உளவியல்ரீதியான பயிற்சி வகுப்புகளை எடுக்கும் அளவுக்கு என்னைத் தகுதிப்படுத்திவிட்டது. 

தீபாவளி வாழ்த்துச் சொல்லும் ஒரு வீடியோவைத் தயாரித்து Money making secrets என்ற தலைப்பில் யூ ட்யூப்- இல் 4 ஆண்டுகளுக்கு முன்பு போட்டேன். "நரகாசுரனை அழித்ததற்குத்தான் தீபாவளி, நமது மனதிலுள்ள எதிர்மறையான சிந்தனைகளை இந்த தீபாவளி நாளில் நாம் அழிக்க வேண்டும்' என்ற கருத்தை அதில் பதிவு செய்தேன். நான் எதிர்பார்க்காத அளவுக்கு அந்த வீடியோவுக்கு வரவேற்பு இருந்தது. அது எனக்கு உற்சாகத்தைத் தந்தது. தொடர்ந்து பணம் சம்பாதிப்பதற்கு உகந்த விதத்தில் ஆழ்மனதை மாற்றி அமைக்கும் பயிற்சிகளை அந்த வீடியோக்களில் நான் அளித்தேன். இதுவரை 200 வீடியோக்கள் வெளிவந்திருக்கின்றன. 
இந்த வீடியோக்களை உலகம் முழுவதும் பலர் பார்த்திருக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்தெல்லாம், குறிப்பாக பிரிட்டன், ஸ்ரீலங்கா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து பலர் என்னுடன் பேசினார்கள். சிலர் அங்கிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்து இரண்டு, மூன்று நாட்கள் இங்கேயே தங்கி ஆலோசனைகள் பெற்றனர். 
இங்குள்ள பலரும் தனிப்பட்ட முறையில் என்னைச் சந்தித்து உளவியல் ஆலோசனைகள் பெற்றனர். உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். சென்னையில் உள்ள ஒரு பேராசிரியரிடமிருந்து ரூ.30 லட்சத்தை சிலர் ஏமாற்றிவிட்டனர். மிகுந்த மன உளைச்சலுடன், வாழ்க்கையில் கடும் வெறுப்புணர்வுடன் இருந்த அவர் என்னைச் சந்தித்தார். அவருடைய ஆழ்மனதில் பாசிட்டிவ் சிந்தனைகளை விதைத்தேன். இப்போது அவர் மொழிகளைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகி மாதம் ரூ.2 இலட்சம் வரை சம்பாதிக்கிறார். 
இவையெல்லாம் எனக்கு என் மேலேயே அதிக நம்பிக்கை ஏற்பட வழி வகுத்தன. அதன் பிறகு, பலர் பங்கேற்கும் "ஆழ்மனது பயிற்சி வகுப்பு'களை நடத்தத் தொடங்கினேன்.
இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற பலர், மிகுந்த உற்சாகத்துடன் தன்னம்பிக்கையுடன் செல்கிறார்கள். பெண்களும் பங்கேற்கிறார்கள். 
இந்த பயிற்சி வகுப்புகளில் முதலில் சிறிது நேரம் உடற்பயிற்சிகளைச் செய்வார்கள். வகுப்பு என்றால் ஒருவர் பேசுவது, பலர் கேட்பது என்பது மாதிரி இருக்காது. கலந்துரையாடல் போல இருக்கும். மனதில் புத்துணர்வை அவை ஏற்படுத்தும். ஆடல், பாடல்கள் கூட இருக்கும். நிறைய செய்முறைப் பயிற்சிகள் இருக்கும்.
உதாரணமாக, "நீங்கள் இப்போது கோடீஸ்வரர் ஆகிவிட்டீர்கள். அந்தப் பணத்தை நீங்கள் என்ன செய்வீர்கள்?'' என்று கற்பனை செய்யச் சொல்வேன். இம்மாதிரியான பயிற்சிகளினால் ஒருவர் என்னவாக ஆக வேண்டும் என்று விரும்பினாரோ, அதுவாகவே ஆகிவிடுகிறார். அப்படி ஆன பிறகு என்ன செய்வாரோ, அதை இப்போதே செய்யத் தொடங்குகிறார். அதுவே ஆழ்மனதில் நன்கு பதிந்து, அவருடைய வாழ்க்கை நடைமுறையும் அதுவாக ஆகிவிடுகிறது. 
இந்த பயிற்சி வகுப்புகளை இயற்கை எழில் பொங்கும் இடங்களில் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். ஒருவர் அன்றாட வாழ்க்கைச் சக்கரத்தில் மாட்டிக் கொண்டு விடுபட முடியாமல் மனதளவில் திணறிக் கொண்டிருப்பார். அவரை அதிலிருந்து விடுவித்து வித்தியாசமான சூழலில் அவரை இருக்க வைக்கிறோம். புதிய இடம், புதிய காட்சிகள், புதிய மன உணர்வுகள் என புதிய சூழலில் அவருடைய ஆழ்மனதில் பாசிட்டிவ் சிந்தனைகளை விதைப்பது எளிதாகிவிடுகிறது. 
ஆலப்புழையில் படகிலேயே நடந்த பயிற்சி வகுப்பு அது போன்ற ஒன்றுதான். படகிலேயே நல்ல வசதியான அறைகள் இருக்கின்றன. நல்ல உணவு வசதி உள்ளது. படகின் மேல்புறத்தில் உள்ள ஹால் போன்ற அரங்கில் வகுப்புகள் நடைபெற்றன. இத்தனைக்கும் படகு ஓர் இடத்தில் நிறுத்தி வைக்கப்படவில்லை. அது சென்று கொண்டே இருந்தது. அதில் பங்கேற்ற அனைவருக்கும் வித்தியாசமான அனுபவங்களைத் தந்தது. அதுபோலத்தான் பாண்டிச்சேரியில் நடந்த வகுப்பும். கடற்கரையோரமாக அமைந்த அந்த ரிசார்ட்ஸில் நீச்சல்குளம் உட்பட பல உயர் வசதிகள் இருந்தன'' என்றார். 
ஏ.எல்.சூர்யா இதுவரை 6 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் 5 மனதில் பாசிட்டிவ் எண்ணங்களை விதைப்பவை. "அனிதா, பத்மா, பிருந்தா' என்ற நாவல் ஆறாவது நூல். திரைப்படத்துறையில் இளைஞர்கள் நுழைந்து வெற்றி பெறுவதே நாவலின் கதை. அந்த நாவலை இப்போது திரைப்படமாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் ஏ.எல்.சூர்யா.
- ந.ஜீவா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com