இளம் தலைமுறையின் கைகளில் நாட்டுப்புறக் கலை!

தமிழக மக்களின் வாழ்வில் திரைப்படம், தொலைக்காட்சிகளில் வரும் தொடர்கள் அனைத்தும் முக்கியமான அங்கமாக மாறிவிட்டன. மேலும் இணைய வளர்ச்சியின் காரணமாக, செல்லிடப்பேசிகளில் உள்ள
இளம் தலைமுறையின் கைகளில் நாட்டுப்புறக் கலை!

தமிழக மக்களின் வாழ்வில் திரைப்படம், தொலைக்காட்சிகளில் வரும் தொடர்கள் அனைத்தும் முக்கியமான அங்கமாக மாறிவிட்டன. மேலும் இணைய வளர்ச்சியின் காரணமாக, செல்லிடப்பேசிகளில் உள்ள "டிக் டாக்' உள்ளிட்ட செயலிகள் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டன.
 இத்தகைய சூழலில், நமது நாட்டுப்புறக்கலைகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இக்கலைகளைத் தொழிலாகக் கொண்ட ஏராளமான கலைஞர்கள் கட்டட வேலை, ஆடை உற்பத்தி தொழிற்சாலை என மாற்று வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். இதனால் தமிழகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே முழுநேர நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளனர்.
 இந்நிலையில், நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கும் வகையில் மதுரையில் "முத்தமிழ் நாட்டுப்புறக் கலை மேம்பாட்டு மையம்' என்ற பெயரில் ஒரு கலைக்குழு செயல்பட்டு வருகிறது. எம்ஏ., பிஎட்., எம்பில் முடித்த சிவகங்கையைச் சேர்ந்த இளைஞரான ஞானவேல் (26), நாட்டுப்புறக் கலைகள் மீதான ஆர்வம் காரணமாக, பட்டதாரி இளைஞர்களை ஒருங்கிணைத்து இம் மையத்தை நடத்தி வருகிறார்.
 இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
 "மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்துக் கொண்டிருந்தபோது, ஆய்வுக் கட்டுரைக்காக தென்மாவட்டங்களில் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களைச் சந்தித்தேன். அப்போது பல கலைஞர்கள் தங்களுக்கான வாழ்வாதாரம் மக்களின் சினிமா மோகத்தால் பறிபோய்விட்டதே என்று கூட கவலைப்படவில்லை. மாறாக, சினிமா பாடல்களுக்கு நடனமாடும் நிலை இன்றைய நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வந்துவிட்டதே என்று கண்ணீர் விட்டனர். அப்போது தான் எனக்கு ஒன்று தோன்றியது, "நாட்டுபுறக் கலைஞர்களை பற்றி ஆய்வேட்டில் எழுதி பட்டம் பெற்றால் போதுமா? அழிவின் விளிம்பில் உள்ள கலையை மீட்டெடுக்க நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும்' என முடிவெடுத்தேன். பின்னர், நாட்டுப்புறவியல் குறித்து நிறைய கற்றுக் கொண்டேன். பிள்ளையார்நத்தத்தைச் சேர்ந்த கிராமிய கலைமணி பட்டம் பெற்ற பிச்சைமணி என்ற நாட்டுப்புறக் கலைஞரிடம் முறையாகப் பயிற்சி பெற்றேன். அதையடுத்து கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களுக்கு தொழில்முறைக் கலைஞர்களை ஒன்றிணைத்து நிகழ்ச்சிகள் நடத்தி வந்தேன். அதில் கிடைக்கும் வருவாய் போதுமானதாக இல்லை என்பதால் தொழில்முறைக் கலைஞர்களை அடுத்தடுத்து ஒன்றிணைக்க முடியவில்லை. நான் தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தேன். அதன்மூலம் பல இளைஞர்கள் என்னிடம் கலையைக் கற்கவும், குழுவில் இணையவும் ஆர்வம் காட்டினர். தற்போது எனது குழுவில் பட்டதாரி இளைஞர்கள் 15 பேர் உள்ளனர். அவர்களைக் கொண்டு, தைப் பொங்கல் உள்ளிட்ட தமிழர் விழாக்களில் எங்கள் நிகழ்ச்சியை அரங்கேற்றினோம். மேலும் அதற்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாக, தமிழகத்தில் உள்ள அரசு விவசாயக் கல்லூரிகள், தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் இருந்து எங்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இக்குழுவில் உள்ளவர்களில் சிலர் பட்டம் பெற்றவர்கள், சிலர் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர். மேலும் முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் உள்ள இளைஞர் கூட இக்குழுவில் உள்ளார். எங்களுக்குப் போதிய வருவாய் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் கடந்த 3 ஆண்டுகளாக ஆர்வமுள்ளவர்களுக்கு இலவசப் பயிற்சியும் அளித்து வருகிறோம். நாங்கள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடுபவர்கள் இல்லை.
 பெரும்பாலும் நான் களஆய்வில் சேகரித்த நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுகிறோம். கிராமியப் பாடல்களில் தாலாட்டு, உழவு, நடவு, காதல், கும்மி, பக்தி, ஒப்பாரி, எனப் பல வகைகள் உண்டு. நடனத்தில் பறை, காவடி, கரகம், கருப்பசாமி ஆட்டம், ஒயில், குறவன் குறத்தி, காளி ஆட்டம் எனப் பல வகைகள் உண்டு. இதன் வடிவம் மாறாமல் அடுத்த தலைமுறைக்கும் இக்கலையை கொண்டு செல்வதுதான் எங்கள் நோக்கம். அடுத்த ஆண்டு தைப் பொங்கலுக்கு அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் உள்ள தமிழ் அமைப்புகள் எங்களை அழைத்துள்ளனர். நாட்டுப்புறக் கலையை அனைவரும் ரசிக்கிறார்கள், அதை அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இளைய தலைமுறையின் கையில் தான் உள்ளது.
 தமிழக அரசு மற்றும் கலைப்பண்பாட்டுத் துறைக்கு அதிகாரிகளாக எங்களைப் போன்ற நாட்டுப்புறக் கலையை கற்றுத்தேர்ந்த பட்டதாரிகளை நியமித்தால், கலையை வளர்க்கும் பணியிலும், கலைஞர்களைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடுவோம்'' என்றார்.
 மு.கார்த்திக்.
 படங்கள்: ப. விஜயகுமார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com