குடி... கல்லீரலைக் கெடுக்கும்! 

உணவை உடல் ஏற்க வேண்டுமானால் அதற்கு ஒரு ரசாயனசாலை தேவைப்படுகிறது.
குடி... கல்லீரலைக் கெடுக்கும்! 

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
நான் சில நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டேன். தொடர்ந்து குடித்து வந்ததால் என் கல்லீரல் கெட்டுவிட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டார்கள். மேலும் குடித்தால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்கிறார்கள். கல்லீரல் அத்தனை முக்கிய உறுப்பா? அது இல்லாமல் வாழ முடியாதா?
- ராஜசேகர், நெல்லூர்.
உணவை உடல் ஏற்க வேண்டுமானால் அதற்கு ஒரு ரசாயனசாலை தேவைப்படுகிறது. அந்த ரசாயனசாலையில் பல இயந்திரங்கள் தொடர்ந்து வேலை செய்கின்றன. அவற்றின் உதவியால்தான் நாம் உண்ணும் உணவுகள் பிரிக்கப்பட்டு, மாற்றப்பட்டு, உடலின் தேவைக்குத் தகுந்த மாதிரி அங்கீகரிக்கப்படுகின்றன. இப்பணியைச் செவ்வனே நடைபெறுவதற்கு கல்லீரல் மிகப்பெரிய பங்கை ஆற்றுகிறது. 
உடலுக்குத் தேவையான கொழுப்பு, இனிப்புச் சத்துகள், புரதம், விட்டமின் சத்துகளை சேர்த்து வைத்திருக்கும் கல்லீரல், ஒரு கஜானாவிற்குச் சமமானது என்றே கூறலாம். எந்தெந்த சமயத்தில் உடல் போஷாக்கிற்கு எந்த ஜீவசத்து வேண்டுமோ, அவை கல்லீரலிருந்து அளிக்கப்பட்டு, ரத்த ஓட்டத்தின் மூலமாக தேவைப்படும் இடங்களுக்கு அவை கொண்டு போகப்படுகின்றன.
உணவுப் பொருட்களிலிருக்கும் கொழுப்பு பொருட்களை ஜீரணம் செய்ய பித்தம் (BILE) தேவை. அது கல்லீரலிலிருந்து தான் உண்டாகிறது. உணவைச் செரிக்க அநேக திரவாம்சங்கள் தேவைப்படுகின்றன. இவை ஈரலிலிருந்து தான் உண்டாகின்றன. உணவு ஜீரணமானவுடன் அச்சத்து இந்த உறுப்பின் மூலமாகத் தான் போக வேண்டும். அப்பொழுது இந்த உறுப்பு, விஷத்தன்மை உள்ளவற்றையும், தேவைப்படாதவற்றையும் தன்னிடத்திலேயே வடிகட்டி வைத்துக் கொள்ளுகிறது. இந்த ஏற்பாட்டினால் தான் நாம் சில விஷங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளுகிறோம். உடலுக்குத் தேவைப்படாத மருந்து வகைகளையும் இது தடுத்து பயனற்றவையாகச் செய்துவிடுகிறது. கல்லீரலில் இருக்கின்ற ரத்தக் குழாய்களின் உள்புறம் ஒருவிதமான ஜீவ அணுக்களால் (CELLS) மெழுகப்பட்டிருக்கின்றது. இந்த ஜீவ அணுக்கள் தான், விஷத்தன்மையுள்ள கிருமிகளையும் மற்றும் வேண்டாத பொருள்களையும் பிடித்து இழுத்து ஜீரணித்து விடுகின்றன. இவற்றுக்கு குப்ஃபெர் ஜீவ அணுக்கள் என்று பெயர். ஜெர்மன் தேசத்திலிருந்து உடல்கூற்று விஞ்ஞானியாகிய காரல் வில்ஹெம் குப்ஃபெர் (Karal Wilhelm Kupffer) என்பவரால் இந்த ஜீவ அணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த ஈரலால் உண்டாக்கப்படுகிற அநேக வஸ்துக்களில் கம்மா குளோபிலின் (Gumma Globulin) என்பதும் ஒன்று. இது தேகத்திற்கு முக்கியமானது. பலவிதமான பெருவாரி நோய்களிலிருந்தும் தொத்து வியாதிகளிலிருந்தும் இது மனிதனைப் பாதுகாக்கிறது. இது உடலில் இருக்கும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது. அதிக நாட்கள் பட்டினியாக இருக்கும்போது நமது தசைகளிலிருக்கிற புரதத்தை உடல் உபயோகப்படுத்துகிறது. அதனால் தான் மனிதன் இளைத்து விடுகிறான். அதே போன்று கல்லீரலிலும் புரதம் , கொழுப்பு, இனிப்புச் சத்து முதலிய போஷகப் பொருள்களை சேகரித்து வைத்து உடலுக்குத் தேவைப்படும் போது வெளிப்படுத்துகிறது.
உடலுக்கு வேண்டாத பொருள்களைச் சேகரித்துக் கழிவுப் பித்தத்தின் மூலமாக வெளியேற்றுகிறது. ரக்தத்திலிருக்கும் செந்நிற ரத்த அணுக்கள் அதிக நாள் வாழ்வதில்லை. அவை அதி சீக்கிரமாக அழிவடைகின்றன. அவை வெளியேற்றப்பட வேண்டும். அழிந்தவற்றைக் கல்லீரல் சேகரித்து கழிவுப் பித்தத்தின் மூலம் குடலுக்குள் தள்ளி, பிறகு வெளியே செலுத்துகிறது. அப்பொழுது அவ்வணுக்கள் சிவப்பிலிருந்து பச்சையாக மாற்றப்படுகின்றன. கொழுப்பு வஸ்துகளை நேரடியாக இப்பித்தம் ஜீரணிக்காவிட்டாலும், கொழுப்பை இப்பித்தம் சிறு திவலைகளாக மாற்றிப் பிறகு இதர திரவங்களால் ஜீரணமாகும் படி செய்கிறது.
நமது தேகத்தில் காயம் ஏற்பட்டால் ரத்தம் வெளியேறுகிறது. சிறிது காலத்தில் அந்த ரத்தம் உறைந்து அதிக ரத்தம் போகாமல் பாதுகாக்கிறது. அதற்கு முக்கியமாக வேண்டியது விட்டமின் "கே' என்னும் பொருள். இதை நமது ஆகாரத்திலிருந்து சிறிது சிறிதாகச் சேகரித்து வைத்துக் கொள்கிறது. தேவைப்பட்டபோது இந்த விட்டமின் "கே' யை ஈரல் மாற்றி அமைத்து ப்ரோ திராம்பின் (Pro thrombin) என்பதாக வெளியேற்றுகிறது. இந்த வஸ்து ரத்தம் உறைவதற்கு அதிக முக்கியமானது.
ஆக, கல்லீரல் உடலுக்கு ஓர் இன்றியமையாத உறுப்பாகும். அதை நீங்கள் குடித்துப் பாழாக்கியதை அறிய மிகவும் வருத்தமளிக்கிறது. கல்லீரலை வலுப்படுத்தும் நிறைய ஆயுர்வேத மருந்துகள் உள்ளன. அது சம்பந்தமாக மருத்துவர்களை நேரடியாக அணுகவும். 
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
செல் : 94444 41771
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com