Enable Javscript for better performance
எனது முதல் சந்திப்பு 2- Dinamani

சுடச்சுட

  
  ka1

  ராஜாஜி
   1920-ஆம் ஆண்டு ஒத்துழையாமைப் பிரசாரம் செய்வதற்காக ராஜாஜியும், டாக்டர் ராஜனும் தமிழ் நாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்தார்கள். தென்காசிக்கும் அவர்கள் வர வேண்டும் என்று டாக்டர் ராஜனுக்கு நான் கடிதம் எழுதினேன். அவர்கள் வர ஒப்புக் கொண்டு வந்தார்கள். ரயில்வே ஸ்டேஷனில் வரவேற்புக் கொடுத்தோம். அது முடிந்ததும் "சொக்கலிங்கம் யார்?' என்று டாக்டர் ராஜன் கேட்டு என்னை அறிந்து கொண்டதும் ராஜாஜிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அன்று தான் முதன் முதலாக ராஜாஜியைச் சந்தித்தேன்.
   அன்று இரவு தென்காசியில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் கூடியது. பெரிய பிரசங்க மேடையும், அதன் மீது பந்தலும் அலங்காரங்களும் செய்திருந்தோம். ராஜாஜியும், டாக்டர் ராஜனும் பிரசங்கம் செய்தார்கள். ராஜாஜி மாகாண காங்கிரஸ் தலைவரான படியால் காங்கிரஸ் ஆட்சியில் அவர் மாகாண கவர்னருக்குச் சமானம் என்பது என்னுடைய மனத்தில் அக்காலத்தில் தோன்றியது. மகாத்மாவுக்கு அடுத்தபடியாக ராஜாஜி மீது எனக்கு மதிப்பு ஏற்பட்டது.
   இன்றும் ராஜாஜி மீது எனக்குள்ள மதிப்பு அப்படியே தான் இருக்கிறது. ஆனால் ஒரு விஷயம், "நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் வேறொன்று நினைக்கிறது' என்ற பழமொழி என் விஷயத்தில் பலித்துவிட்டது. அவர் மீதுள்ள மதிப்பு எனக்குக் குறையவில்லை. என்றாலும் பல கிளர்ச்சிகளில் அவருக்கு எதிராக இருந்திருக்கிறேன். இந்த முரண்பாட்டினால் எனக்கு அவர் மீது மதிப்பு உண்டு என்று சொல்லுவதை நம்புவதற்குப் பலருக்குக் கஷ்டமாய் இருக்கலாம். ஆனால் நான் சொல்லுவது தான் உண்மை. ராஜாஜி 1923- ஆம் ஆண்டு சட்டசபை பிரவேசத்தை எதிர்த்ததை நான் பலமாய்க் கண்டித்திருக்கிறேன். குருகுலப் போராட்டக் காலத்தில் அவரைப் பலமாய்க் கண்டித்திருக்கிறேன். ஆனால் 1937- ஆம் ஆண்டு அவர் முதல் மந்திரியாய் வந்ததும் அவரைப் பூரணமாய் ஆதரித்தேன். அவருக்கு விரோதமாக அச்சமயத்தில் கிளம்பிய சோஷலிஸ்டுகளை (கம்யூனிஸ்ட்கள் தான் அச்சமயம் சோஷலிஸ்டுகள் என்ற பெயரோடு இருந்தார்கள்) எதிர்த்து ஊர் ஊராய்ப்பிரசங்கம் செய்திருக்கிறேன்.
   அதற்காக என் மீது கோபம் கொண்ட சோஷலிஸ்ட்கள் தினமணி காரியாலயத்தில் வேலை நிறுத்தம் செய்யத் தூண்டினார்கள். அது பலிக்கவில்லை. ராஜாஜி கொண்டு வந்த கட்டாய ஹிந்தியை நான் தீவிரமாய் ஆதரித்தேன்; இன்றும் ஆதரிக்கிறேன். ஹிந்தியை கற்பதால் தமிழ் கெட்டுவிடும் என்று சொல்லுவதில் உண்மை கிடையாது என்பதுதான் என்னுடைய தீவிரமான கருத்து. ராஜாஜி ஏற்படுத்திய கட்டாய ஹிந்தியை கவர்னர் ஆட்சிக் காலத்தில் ரத்துச் செய்யாமல் இருந்திருந்தால் இன்று தமிழரின் நிலைமை எவ்வளவோ மேன்மையாய் இருக்கும். தலைமை சர்க்காரின் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் ஹிந்தியில் கேள்வி கேட்பார்களே என்று தமிழர்கள் மலைத்து நிற்க வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்நாட்டுத் தேசிய பாஷையாக ஹிந்தி வந்துதான் ஆக வேண்டும். இதை முன்யோசனையோடு ராஜாஜி செய்தார். இந்த யோசனையைத் தமிழர்கள் எதிர்க்கிற வரையில் அதனால் தமிழ்நாட்டுக்குத் தான் நஷ்டம்.
   சேலத்தில் ராஜாஜி பிரபல கிரிமினல் வக்கீலாய்ப் பிரகாசித்தவர். அதனால் ஏற்பட்ட அனுபவங்களும் அவற்றால் ஏற்பட்ட சுபாவங்களும் அவர் உடம்பில் ஊறிப் போய் விட்டன. ஒரு விஷயத்தில் தீர்மானம் கொண்டுவிட்டால் அப்புறம் அவரை அதிலிருந்து அசைக்கவே முடியாது. குலத் தொழில் பயிற்சித் திட்டத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். முதல் மந்திரி வேலையை விட்டுவிடத் தயாராய் இருந்தாரே ஒழிய, அந்த அரை நேரப் பள்ளித் திட்டத்தை வாபஸ் வாங்க அவர் தயாராயில்லை.
   கிரிமினல் வழக்குகளில் திடீரென்று பாயின்டுகளைக் கிளப்பிப் பழக்கப்பட்ட ராஜாஜி ராஜீய விஷயங்களிலும் திடீர் திடீரென்று கருத்துகளை வெளியிட்டு மக்களைப் பிரமிக்க வைப்பதில் ரொம்ப ஆர்வம் கொண்டவர். ஜில்லா, மதுவிலக்கு, மதுரை மீனாட்சியம்மன் கோயில் பிரவேசம், பாகிஸ்தான் கட்சியை ஒப்புக் கொண்டது, பாதி நேர கல்வித் திட்டம் இவையெல்லாம் அந்த ரகத்தில் வெளியானவைதான். பாதி நேரக் கல்வித் திட்டத்தை சட்டசபை காங்கிரஸ் கூட்டத்தில் முதலில் அவர் பிரேரித்திருப்பாரானால் ஆட்சேபணை இல்லாமல் அது நிறைவேறி இருக்கும். ஆனால் அப்படிச் செய்ய அவரது திடீர் வெடிகுண்டு சுபாவம் இடம் கொடுக்கவில்லை.
   அதனால் கல்வி மந்திரிக்குக் கூட அதை சொல்லாமல் ரகசியமாய் வைத்திருந்து திடீரென்று ஒரு பொது கூட்டத்தில் வெளியிட்டார். அப்படி வெளியிட்ட போதாவது உண்மையான காரணத்தைச் சொல்லி இருக்கக்கூடாதா? நாட்டில் எல்லாச் சிறுவர்களுக்கும் கல்வி போதிப்பதென்றால் போதுமான பள்ளிக்கூடங்கள் இல்லை. இருக்கிற பள்ளிகளில் பாதி நேரம் ஒரு கூட்டம். மறு பாதி நேரம் மற்றொரு கூட்டமாக முறை வைத்துக் சொல்லிக் கொடுப்பதென்றால் தான் அரசியல் சட்டப்படி பத்து வருஷங்களுக்குள் எல்லா குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்க்க முடியும். இது தான் உண்மையான காரணம். இதைச் சொல்ல ராஜாஜிக்கு இஷ்டமில்லை. சொல்லியிருந்தால் எதிர்ப்பே இருந்திருக்காது. அதைச் சொல்லாதது மட்டுமல்ல, பாதி நேரத்தில் குலக் கல்வியைச் சொல்லிக் கொடுக்கப் போவதாக வேறு கூறி வைத்தார்.
   இருக்கிற ஜாதிச் சண்டைகள், துவேஷங்களுக்கிடையில் ராஜாஜியின் குலக் கல்வித் திட்டம் பிரமாதமான எதிர்ப்பைக் கிளப்பி விட்டது. முதல் மந்திரி பதவியிலிருந்து அவரை விரட்ட விரும்பியவர்களுக்கு அந்தக் கிளர்ச்சி பெரிய ஆயுதமாக உபயோகப்பட்டது.
   பிரபல கிரிமினல் வக்கீலாய் இருந்த பழைய வாசனையை மற்றொரு விஷயத்திலும் காணலாம். எந்தப் பொதுக்கூட்டமாய் இருந்தாலும் சரி, அது எதற்காகக் கூட்டப்பட்டதோ அதற்கு நேர் விரோதமாய்ப் பேசுவார். அல்லது தமக்கு முந்தியவர் என்ன பேசினாரோ அதை மறுக்கிறவிதத்தில் பேசுவார். கிரிமினல் வழக்குகளில் எதிர்க்கட்சி சொல்லுவதற்கு விரோதமாகப் பாயின்டுகளை எடுத்து வீசி வீசி ஏற்பட்ட பழக்கம் ராஜீய விஷயங்களிலும் அவரை விடவில்லை.
   கூட்டாகப் பலருடன் சேர்ந்து அபிப்ராயங்களை விவாதித்து, விட்டுக் கொடுத்து வேலை செய்வது ராஜாஜியால் முடியாது. தாம் சொல்லுவதை ஆட்சேபணையில்லாமல் மற்றவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற மனோபாவ முள்ளவர். இதனால் தாசாதிதாசனாக இருந்தாலொழிய ராஜாஜியிடம் யாரும் பழக முடியாது. ஜனநாயகம் என்பதிலோ, மற்றவர்களுக்கும் புத்தி உண்டு என்பதிலோ அவருக்கு அவ்வளவு நம்பிக்கை கிடையாது.
   அதனால் எப்பொழுதுமே அவருக்குக் காங்கிரஸ் கட்சியில் கீழிடங்களில் ஆதரவோ கிடையாது. மேலிடத்தாரின் ஆதரவைக் கொண்டே காரியங்களை நடத்துவார். மேலிடத்தார்தான் எவ்வளவு தூரம் ஆதரவு கொடுக்க முடியும்?ஆகவே, மேலிடத்தார் ஆதரவின் எல்லையைத் தாண்டியதும் அடுத்தபடியாக ராஜாஜி தோல்வியையே அடைய வேண்டி இருக்கும்.
   1946- ஆம் ஆண்டிலேயே மகாத்மாவே விரும்பியும் அவருக்கு முதல் மந்திரி பதவி கிடைக்காமல் போனதற்கும், ஜவாஹர்லால் நேருவே விரும்பியும் அவருக்குக் குடியரசு பிரஸிடென்ட் பதவி கிடைக்காமல் போனதற்கும், ஜவாஹர்லாலின் ஆதரவு இருந்தும் 1951-இல் அவர் முதல் மந்திரி பதவியிலிருந்து விலக நேரிட்டதற்கும் மேலே சொல்லிய குணங்களே காரணம்.
   1942 -ஆம் ஆண்டு ராமநாதபுரம் ஜில்லா திருவாடனை பகுதியில் போலீஸ் அட்டூழியம் அதிமாக இருந்ததால் அதை கவர்னரிடம் தெரிவிப்பதற்கு ராஜாஜியைப் பார்க்கும்படி ஒரு நண்பர் எனக்கு எழுதி இருந்தார். அதன்படி ராஜாஜியைப் பார்த்தேன். ஆகஸ்டு புரட்சியை ஒப்புக் கொள்ளாமல் அவர் காங்கிரசிலிருந்து விலகியிருந்த காலம். என்றாலும், தம்மால் கூடிய உதவிகளைச் செய்து வந்தார். குலசேகரபட்டணம் கொலை வழக்கிலும் அப்பீல் விஷயமாக அவரைப் பார்த்தேன். அவரால் சாத்தியமான உதவிகளைச் செய்தார். "ஆகஸ்ட் புரட்சிக்கும் தமிழ்நாட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்று பல காங்கிரஸ்காரர்களை கையெழுத்தோடு அறிக்கை வெளியிட்டால் என்ன?'' என்று என்னிடம் கேட்டார்.
   அவர் யோசனைக்கு எந்தக் காங்கிரஸ்காரரும் ஆதரவு கொடுக்க முன் வரவில்லை. 1944 -ஆம் ஆண்டு தினசரி பத்திரிகையை ஆரம்பிப்பதற்காக இந்திய சர்க்காரிடம் நான் அனுமதி கோரி இருந்தேன். அச்சமயமும் "ஆகஸ்ட் புரட்சியை எதிர்ப்பதற்காகப் பத்திரிகை ஆரம்பிப்பதாகச் சொல்லு, அனுமதி வாங்கித் தருகிறேன்'' என்று ராஜாஜி கூறினார். "அம்மாதிரி சொல்லி அனுமதி வாங்கிப் பத்திரிகை நடத்துவதை நான் விரும்பவில்லை'' என்று பதில் சொன்னேன். ஒரு காரியத்தை எடுத்தால் பிடிவாதமாக அதைப்பற்றிப் பேசிக்கொண்டே இருப்பது ராஜாஜியின் சுபாவம் என்பதைக் காட்டுவதற்காகவே இந்த உதாரணங்களைச் சொல்லுகிறேன்.
   1946- ஆம் ஆண்டு அவர் முதல் மந்திரியாக வரக்கூடாது என்ற கிளர்ச்சியில் நானும் சம்பந்தப்பட்டிருந்தேன். 1942 - ஆம் ஆண்டு நெருக்கடியான கட்டத்தில் காங்கிரசிலிருந்து விலகிப் போனவர், காங்கிரசோடு பிரிட்டிஷ் சர்க்கார் சமரசம் பேச ஆரம்பித்தவுடன் மேலிடத்தாரின் தயவால் மீண்டும் காங்கிரசுக்குள் வந்து சேர்ந்தது எல்லாக் காங்கிரஸ்காரருக்குமே கோபத்தை உண்டு பண்ணியது. இங்கே ஸ்தலத்திலுள்ள காங்கிரஸ்காரர்களுடன் அவர் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் காங்கிரசுக்குள் வந்திருந்தால் அவருக்கு அவ்வளவு எதிர்ப்பு தோன்றி இருக்காது.
   அவர் அப்படிச் செய்யாமல் காங்கிரஸ் பிரஸிடென்ட் மெளலானா அபுல்கலாம் ஆஸாத்திடமிருந்து அனுமதி வாங்கினார். இங்குள்ள காங்கிரஸ்காரர்கள் மீது அவருக்கு அவ்வளவு அலட்சியம். அதனால் ஸ்தல காங்கிரஸ்காரர்களும் அவரிடம் அலட்சியம் காட்டினார்கள். கிளர்ச்சி தீவிரமாய் நடந்தாலும், அவர் விரும்புகிற வேளைகளில் நான் அவரைப் போய் பார்ப்பதுண்டு. அம்மாதிரி ஒரு சமயம் பேசிக்கொண்டிருந்த போது என்னுடைய அபிப்பிராயத்தைக் கேட்டார். நான் பின் வருமாறு சொன்னேன்:
   ""காங்கிரஸ்காரர்களுக்கு உங்கள் மீதுள்ள கோபத்திற்கு ஒரு போக்குக் காட்டி ஆக வேண்டும். மேலிடத்தாரின் ஆதரவைக் கொண்டு நீங்கள் மீண்டும் முதல் மந்திரியாக வந்துவிட்டால், அது தங்களுக்குத் தோல்வி என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதைச் சமாளிக்க எனக்குத் தோன்றுவது ஒரே வழிதான்; சட்டசபை ராஜீயத்திலிருந்து விலகிக் கொள்ளுவதாக ஓர் அறிக்கை வெளியிட்டு விட்டு விலகிக் கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் உங்களை எதிர்ப்பவர்களின் ஆத்திரம் அதோடு போய்விடும். பின்னால் மந்திரிசபை அமைக்கிற சமயத்தில் உங்களை எல்லாரும் வருந்தி அழைப்பார்கள். ஏனெனில் பிரகாசத்திற்கு மெஜாரிட்டி ஆதரவு இருக்காது.''
   இதைப் பற்றி கொஞ்ச நேரம் ராஜாஜி விவாதித்தார். ஒரு மணி நேரத்தில் அவர் ரயில் ஏறி வெளியூர் போக வேண்டி இருந்தது. அதனால் அவருடைய கட்சியைச் சேர்ந்த ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு அறிக்கையைத் தயாரித்து அவரிடம் காட்டும்படியும், அவர் சம்மதித்தால் வெளியிட்டு விடும்படியும் சொன்னார். இந்த யோசனை எனக்குத் திருப்தியாய்ப்படவில்லை.
   ஏனெனில் தலைவர் சம்மதித்தாலும் சீடர்கள் சம்மதிக்க மாட்டார்கள். அது தான் உலக வழக்கம். ஆகவே ராஜாஜி சொல்லிய சீடரை நான் பார்க்கவே இல்லை. மேலும் நான் சொல்லிய வழியை அவர் ஒப்புக்கொண்டிருந்தால் சீடரைப் பார்க்கும்படி என்னிடம் அவர் சொல்லி இருக்கவும் மாட்டார். அதனால்தான் வெளியூரில் இருந்து அவர் திரும்பிய பின்பு இதைப்பற்றி என்னிடம் அவர் பேசவும் இல்லை. ஆனால் அந்த சமயத்தில் அவர் வழியில் அவர் நடந்திருந்தால் 1946-இல் அவரே முதல் மந்திரியாய் வந்திருப்பார் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. ராஜாஜி செய்கிற காரியங்கள் சில சமயங்களில் மக்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம், என்றாலும் அவர் தமிழ்நாட்டிற்குச் சிங்கத்தைப் போல நின்று பலமும் பெருமையும் கொடுக்கக் கூடியவர்.
   அவருடைய செய்கைகள் நல்லவைகளாக இருந்தாலும், அவர் அவற்றிற்காகக் கையாளும் முறைகளும், பேசும் பேச்சுக்களும் அவற்றிற்கு எதிர்ப்பை உண்டு பண்ணி விடுகின்றன. அவருக்கு உடலும் மனமும் தெம்பாய் இருக்க வேண்டுமானால், அதற்கு வழி ஒன்றே ஒன்றுதான். அதாவது, அவர் முதல் மந்திரியாய் இருக்க வேண்டும். அவருடைய மனோ நிலைமைக்கு அது ஒன்றுதான் அவருக்கு சிறந்த டானிக்!


   (தொடரும்)
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai