Enable Javscript for better performance
திரைக்கதிர்- Dinamani

சுடச்சுட

  
  nayan

  • நயன்தாரா ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் "மூக்குத்தி அம்மன்' படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்கிறார். இதற்காக தீவிர விரதம் மேற்கொண்டு வருகிறார். அடுத்து அவரது நடிப்பில் "நெற்றிக்கண்' படம் உருவாகிறது. 
  இந்தப் படத்தை அவரது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். இந்தப் படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார். இவர் சித்தார்த், ஆண்ட்ரியா நடித்த "அவள்' படத்தை இயக்கியவர். கொரியா படமான "பிளைண்ட்' படத்தைத் தழுவி "நெற்றிக்கண்' உருவாகிறது. பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் வழக்கு ஒன்றினை விசாரித்து வருகிறார்.
  திடீரென விபத்தில் சிக்கும் அவர் பார்வையை இழக்கிறார். தொடர்ந்து அந்த வழக்கை அவர் எப்படி முடிக்கிறார் என்பதை விறுவிறுப்பாகச் சொல்லும் க்ரைம் திரில்லர் படமாக உருவாகிறது. இதே படம் ஹிந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது. நயன்தாரா வேடத்தில் சோனம் கபூர் நடிக்கிறார்.

  • 2007-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான "யமதொங்கா' படத்தை இயக்கியிருந்தார் எஸ்.எஸ் ராஜமெளலி.
  ஜுனியர் என்.டி.ஆர் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் குஷ்பு, ப்ரியாமணி , மம்தா மோகன்தாஸ், ரம்பா உள்ளிட்டோர் நடித்தனர்.
  கதை விஜயேந்திர பிரசாத். மரகதமணி இசையமைத்திருந்தார். கே.கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இவர்கள் அனைவரும் "நான் ஈ' , "பாகுபலி' , "பாகுபலி2' ஆகிய படங்களில் பணியாற்றிய வெற்றிக் கூட்டணி. பூலோகம் மற்றும் எமலோகத்தை கதைக்களமாகக் கொண்டு தெலுங்கில் மிகப்பெரிய அளவில் ஹிட்டான இப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் வெளியாகிறது. 
  ஏ.ஆர்.கே. ராஜராஜா தமிழில் வசனங்களை எழுதியுள்ளார். இயக்குநர் எஸ்.எஸ் ராஜ மெளலி இதுவரைக்கும் 11 படங்கள் இயக்கியுள்ளார். 5 படங்கள் ரீமேக்காகவும்,2 படங்கள் மொழி மாற்றம் செய்தும், 3 படங்கள் எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்திலும் வெளியானது. தமிழில் வெளிவராத ஒரே படம் " யமதொங்கா'. தற்பொழுது தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. ஜெயகீர்த்தி, ரேவதி மேகவண்ணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். 

  • வாய்ப்புக் குறைந்தால் புதிய பட வாய்ப்புகளை பெற கவர்ச்சிப் படங்கள் வெளியிட்டு கவனத்தைக் கவர்வது நடிகைகளின் வழக்கம். அப்படியும் வாய்ப்புக் கிடைக்காவிட்டால், அடுத்து காதல், கல்யாணம் என செட்டிலாகப் பார்ப்பார்கள். தென்னிந்திய மொழிகளில் நடித்துக்கொண்டிருந்த ரகுல் ப்ரீத் சிங் பட வாய்ப்புகள் குறைந்ததும் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டார். ஆனால் வாய்ப்புகள் எட்டாக்கனியாகவே உள்ளன. ஆனால் திருமணம் பற்றி சிந்திக்காமல் மாற்றி யோசித்திருக்கிறார்.
  தனது தொழிலை விரிவுபடுத்தி உள்ளார். ஒரு தொழில் அதிபராக தன்னை மாற்றிக் கொண்டிருக்கும் ரகுல், ஆந்திராவில் உடற்பயிற்சிக்கூடம் திறந்து நடத்தி வருகிறார். மும்பையில் ஒரு கிளை வைத்திருக்கிறார். இந்த நிலையில் தனது தொழிலை விரிவுபடுத்தும் வகையில் பெங்களூரில் உடற்பயிற்சிக் கூடத்தைத் தொடங்குகிறார். இதற்காக ரூ. 6 கோடி செலவில் ஆடம்பர கட்டடம் ஒன்றை வாங்கியிருக்கிறார். சென்னையிலும் தனது தொழிலை விரிவுப்படுத்த உள்ளாராம். 

  * மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையைத் தழுவி உருவாகி வரும் படம் "தலைவி'. ஏ.எல்.விஜய் எழுதி இயக்குகிறார். ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். முன்னதாக ஜெயலலிதா போன்ற தோற்றத்துக்காக ஹாலிவுட் கலைஞர்கள் நவீன பாணியைக் கையாண்டு கங்கனாவுக்கு மேக் அப் அணிவித்தனர். அதில் ஜெயலலிதா தோற்றம் கங்கனாவுக்குப் பொருந்தி வந்தது. இந்தநிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. ஜெயலலிதா தனது முதல்படமான "வெண்ணிற ஆடை' படத்தில் நடித்த பாடல் காட்சிக்கு நடனம் ஆடியது போன்று கங்கனா நடனம் ஆடும் காட்சியும், பின்னர் பிரசார மேடையில் நின்றபடி தொண்டர்களுக்கு வணக்கம் சொல்வது போன்ற வீடியோ காட்சியும் வெளியாகியுள்ளது. அதில் ஜெயலலிதாபோன்றே நடனம் ஆடுவது, கைகளை உயர்த்தி தொண்டர்களின் வரவேற்பை ஏற்பது, வணக்கம் சொல்வது போன்ற மேனரிசத்துடன் கங்கனா நடித்திருக்கிறார். 

  • தமிழ் சினிமாவில் படத்தொகுப்பாளராக தனி இடம் பெற்றவர் ஏ.மோகன். தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகங்களைக் கொண்ட இவர். "தனி மனிதன்' என்ற புத்தகம் எழுதியுள்ளார். அவரது மனைவி வரலட்சுமி மோகன், திருக்குறள் போதிக்கும் அறம் மற்ற இலக்கியங்களிலும் இருப்பதை ஆராய்ந்து, "வேலியற்ற வேதம்' என்ற நூல் எழுதியுள்ளார். இந்த இரு நூல்கள் வெளியீட்டு விழாவை நடத்த அவர்களது மகன்கள் இயக்குநர் ராஜாவும், நடிகர் ரவியும் முடிவு செய்துள்ளனர். ஜெயம் ரவி பேசும் போது... "நடிகனாக, இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தவர் என் அப்பா. படத்தொகுப்பாளராக மாறி விட்டார். இப்போது அவரது கனவை எனது அண்ணன் மோகன் ராஜாவும், நானும் நிறைவேற்றி இருக்கிறோம். அப்பா எழுதிய "தனி மனிதன்', அம்மா வரலட்சுமி மோகன் எழுதிய "வேலியற்ற வேதம்' ஆகிய புத்தகங்களை, சென்னை வாணி மஹால் அரங்கில், வரும் டிசம்பர் 3-ஆம் தேதி வெளியிடுகிறோம்'' என்று தெரிவித்தார். 
  ஜி.அசோக்


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai