இன்வால்வ்மெண்ட்

சந்தோஷ் எம்.டி. ரூமிலிருந்து தலையைத் தொங்கப் போட்டபடி வெளியே வந்தான்.
இன்வால்வ்மெண்ட்

சந்தோஷ் எம்.டி. ரூமிலிருந்து தலையைத் தொங்கப் போட்டபடி வெளியே வந்தான். அவனை எம்.டி. ரொம்பவே கடிந்திருக்க வேண்டும். முகம் வாடிப்போய் உடம்பெல்லாம் வேர்த்துப் போயிருந்தது. அவன் தன் சீட்டுக்குப் போய் உட்கார்ந்ததும், அருகில் மெல்ல வந்து நின்றாள் புவனா. அவன், அவளை என்ன என்பது போல ஏறிட்டுப் பார்த்தான்.
"வா... டீ சாப்பிட்டிட்டு வரலாம்'' என்றாள் புவனா.
"இல்லை... எனக்கு வேண்டாம்... மனசு சரியில்லை, நான் வரலை'' என்றான்.
"ஏய், சும்மா பிகு பண்ணாதே. நீ இப்போ கண்டிப்பா "டீ' சாப்பிட்டே ஆகணும். வா உனக்காக இல்லாவிட்டாலும் எனக்காகவாவது வா''
அவனால் மறுக்க முடியவில்லை. எழுந்து அவள் பின்னாலேயே போனான். கேண்டினில் ஆள் இல்லாத டேபிளாய் தேடி உட்கார்ந்து, டீ ஆர்டர் பண்ணிவிட்டுக் காத்திருந்தார்கள். அவன் எதுவும் பேசாமல் மௌனமாய் பேனாவை எடுத்து டேபிளில் தாயைக் கட்டை உருட்டுவது போல உருட்டிக் கொண்டிருந்தான். அவள்தான் மௌனம் கலைத்தாள்.
"என்ன உம்முனு இருக்கே ? எம்டி ஏன் திட்டினார் சொல்...''
"அடுத்த வாரம் எர்ணாகுளம் போகணுமாம். நான் போகப் போறதில்லை''
"ஏன்?''
".................'' அவன் பதில் சொல்லவில்லை.
"போயேன். கம்பெனி செலவுல போய்ட்டு வர வேண்டியதுதானே? எர்ணாகுளம் லேகூனெல்லாம் ரசிச்சுட்டு அப்படியே கொச்சியை ஒரு ரவுண்டு அடிச்சுட்டு ஜாலியா வரலாமில்லே?''
"இல்லை... என்னால முடியாது. எனக்குப் பிடிக்கலைனா வேற யாரையாவது எம்.டி அனுப்ப வேண்டியதுதானே? அதென்ன என்னையே குறி வைக்கறது?''
"இதுக்குத்தான் திட்டினாரா?''
"ம்ம்...''
"ஒரு கம்பெனில வேலை பார்க்கிறோம், சம்பளம் தர்றான். சம்பளம் கொடுக்குறவன் சொன்ன வேலையைச் செய்ய வேண்டியதுதானே நம்ம கடமை?''
"இதோ பார் புவனா, அவர் ரொம்பவே என்னை அவமானப் படுத்திட்டார். மனசு தாங்கலை. என்னைக் கொஞ்சம் தனியா விடு''
"இத பாருப்பா... உன்னை யாரும் கைல பிடிச்சு வைக்கலை.... ஏதோ சக ஊழியனாச்சே... ஒண்ணா படிச்சவனாச்சேன்னு அனுசரணையா உன் பிரச்னை என்னன்னுதான் நான் கேட்டேன். அது சரி, அப்படி என்ன உன்னை அவமானப்படுத்தினார்?''
"இப்ப வேண்டாம். அப்புறமா சொல்றேன். நான் கொஞ்சம் தனியா இருக்கணும். விடு என்னை''
அவள் பதிலைக் கூடக் கேட்காமல், விருட்டென்று எழுந்து சென்று டீ க்கு காசைக் கொடுத்துவிட்டு தன் சீட்டுக்குப் போய்விட்டான்.
புவனா நினைத்தாள், " என்னதான் கூட படித்தவனானாலும், தான் அவமானப்படுத்தப்பட்டதை வெளியில் சொல்ல எப்படி மனசு வரும்? சரி, சரி அவனாய்ச் சொன்னால் பார்ப்போம்' என்று நினைத்தபடியே அவளும் தன் சீட்டுக்குப் போனாள்.
மாலை ஐந்து மணி தாண்டிவிட்டது. வேலை முடித்து எல்லோரும் வீட்டுக்குக் கிளம்பத் தயாரானார்கள். ஆனால், சந்தோஷ் மட்டும் இன்னமும் எதையோ கிளறிக் கொண்டிருந்தான்.
"நீ கிளம்பலை?'' புவனா கேட்டாள்.
"இல்லை... மனசு சரியில்லை... நீ போ நான் அப்புறமா வரேன்'' அவன் முகம் இன்னமும் வாடித்தான் இருந்தது.
"எம்.டி. அப்படி எதுக்குத் திட்டியிருப்பார்? பதவியில் இருப்பவர்களுக்கே தலையில் கொம்பு முளைச்சிருக்கறதாதான் நெனைப்பு. யாராவது எதாவது தப்புச் செஞ்சிருந்தா அதைப் பக்குவமா சொல்லித் திருத்த வேண்டியதுதானே? பொறக்கும்போதே எம்டியா பொறந்துட்டதா நெனைப்பு. அனுபவத்தாலேதானே எல்லாரும் எதையும் கத்துக்க முடியும்? அது புரியாமல்...' " புவனா மனசுக்குள் எம்டியைக் கறுவினாள்.
பிறகு சில நிமிடங்களில் அமைதியாகி, சந்தோஷைப் பார்த்து, "சந்தோஷ் போதும் வா. வீட்டுக்குக் கிளம்பலாம். மீதி வேலையை நாளைக்குப் பார்த்துக்கலாம்''
" அவனைக் கிளப்பிக் கொண்டு தன் டூவிலரில் ஏற்றிக் கொண்டு பறந்தாள். ஒரு கிலோ மீட்டர் தள்ளிப்போய், ரோட்டோரம் ஓர் ஓரமாய் வண்டியை ஸ்லோ பண்ணினாள். எதையோ பார்த்தவள் அருகில் வண்டியைக் கொண்டு போனாள்.
லேசாய் பசித்தது, ஏதாவது சாப்பிடலாம் போல இருந்தது. சின்ன குழந்தைகள் கட்டி விளையாடும் மணல் கோபுரம் போல, பெரிய கோபுரமாய் பிளாஸ்டிக் கவரில் பானி பூரிகளைக் குவித்து வைத்து நின்றிருந்தான் இருபது வயதுள்ள வட இந்திய இளைஞன் ஒருவன். டூ வீலரை, அவனருகில் கொண்டு போய் நிறுத்தினாள்.
"பானி பூரி சாப்பிடலாமா சந்தோஷ்?'' என்றாள் புவனா. அவன் "சரி' என்று தலையாட்டிவிட்டு, அவனே பானி பூரிக் காரனிடம் நெருங்கி, "ஒரு பிளேட் எவ்ளோப்பா?'' என்றான்.
"ஆறு பூரி பத்து ரூவா அண்ணா'' என்று சொல்லிவிட்டு, வட்ட வடிவ அட்டைக் கிண்ணத்தில் "சரசர'வென இருவருக்கும் பரிமாற ஆரம்பித்தான்.
பசிக்கு நன்றாக இருந்தது. எதையோ யோசித்தபடி, சாப்பிட்டுக் கொண்டிருந்தவனிடம், "நல்லா இருக்காண்ணா?'' என்றான் அந்த வட இந்திய இளைஞன். புவனா அமைதியாய் பானி பூரியை சாப்பிட்டுக் கொண்டே சந்தோஷ் சாப்பிடுவதை ரசித்துக் கொண்டிருந்தாள்.
"ம்ம்..... ஆமா, இவ்ளோ நல்லாத் தமிழ் பேசறயே, உனக்கு எந்த ஊர்? இங்க வந்து, எவ்ளோ நாளாச்சு?'' என்றான்
சந்தோஷ்.
"உத்தரபிரதேசம், வந்து ரெண்டு வருஷம் ஆச்சு அண்ணா... அம்மா அப்பா ஊர்ல இருக்காங்க, நான் இங்கே, அண்ணா வீட்ல இருக்கேன். பேசிப் பேசி, தமிழ் பழகீட்டேன் இன்னொரு பிளேட் தரட்டுமாண்ணா?'' என்று சொல்லிவிட்டு புவனா பக்கம் திரும்பி, "அக்கா உங்களுக்கு..?'' என்றான்.
அவன் கேட்டது, சந்தோஷின் காதில் விழவில்லை.
மாறாக, காலையில் நடந்தது நினைவில் நிழலாடியது.
"ஏம்ப்பா, சந்தோஷ், நீ இங்க வேலைக்குச் சேர்ந்து எவ்வளவு வருஷமாச்சு? நம்ம, அண்டை மாநிலம் தானே கேரளா? எத்தனை முறை, உன்னை வியாபார விஷயமா அங்கே அனுப்பி இருக்கோம்?... நீயும் போய்ட்டு, போய்ட்டு வரே... ஈசி லாங்க்வேஜ் மலையாளம். அதைக் கூடக் கத்துக்கிட்டு, மலையாளத்துல பேச இன்னமும் உன்னால முடியலையே? கேரளாவுக்கு எப்ப போகச் சொன்னாலும், தயங்குறே. நார்த் இண்டியா போகச் சொன்னா என்ன பண்ணுவயோ? உன்ன வச்சு எப்படி பிசினஸ டெவலப் பண்றது சொல்லு?, எதுலயும் ஒரு "இன்ட்ரஸ்ட்', "இன்வால்வ்மெண்ட்' இருக்க வேண்டாமா? பத்து பதினைஞ்சு வயசுப் பசங்கல்லாம் எத்தனை லாங்க்வேஜ் பேசறானுக உனக்கு முப்பது வயசாகப் போகுது. நீ இன்னும் இப்படி இருக்கேயே? உன்னை வச்சிட்டு என்ன செய்யறது? என்று அவனை எம்.டி. காலையில் கடிந்து கொண்டது அவன் நினைவில் ஓடியது.
"உண்மைதான், வட இந்தியாவின், எங்கோ ஒரு மூலையிலிருந்து வந்த இளைஞன், இரண்டு வருஷத்துக்குள் தமிழைக் கற்றுக் கொண்டு, உச்சரிப்பு பிறழாமல் அழகாய் பேச எது காரணம்? நினைத்துப் பார்க்க, அவனுக்கு ஓர் உண்மை விளங்கியது. எதையும் கற்றுக் கொள்ள, எதுதேவை?. இன்வால்வ்மெண்ட். அதைப் புரிந்து கொள்ளாதவனாக இத்தனை ஆண்டுகளைத் தொலைத்து விட்டோமே என்று நினைக்கையில் அவனுக்கே மிகவும் வெட்கமாகப்பட்டது. அவமானங்கள் காயங்கள் அல்ல... அவை நம்மைப் பக்குவப்படுத்தும் படிக்கட்டுகள். இத்தனை அழகாய்த் தமிழ் பேச அவன் எத்தனை அவமானங்களைச் சந்தித்திருப்பான்? அவன் அசிங்கப்பட்டு, அவமானமாய் எண்ணி பின் வாங்கித் திரும்பி இருந்தால்? இப்படி சரளமாய் பேசும் அளவு அனுபவம் பெற்றிருக்க முடியுமா? தனியாய்த் தொழில் செய்யும் அளவுக்கு வளர்ந்துதான் இருக்க முடியுமா? நம்மை எம்.டி. திட்டியதை ஏன் அவமானமாய் நினைக்க வேண்டும்? கூடாது. அந்த அவமானத்தையே வெற்றிக்கான படிக்கட்டாக்க மாற்றுவேன்' மனதுள் உறுதியாய் நினைத்துக் கொண்டு, மௌனமாய் புவனா பக்கம் திரும்பி, "புவனா, நான் எர்ணா குளம் போகப் போறேன்'' என்றான்.
அவன் மன மாற்றத்திற்கான காரணம் புரியாவிட்டாலும், மன வலியை மறந்து அவன் மீண்டது அவளுக்கு ஆறுதலாய்ப்பட்டது. மன நிறைவோடு வண்டியைக் கிளப்பி இருவரும் பயணிக்க பானி பூரிக்காரன் அடுத்த கஸ்டமரை கவனிக்கத் தொடங்கினான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com