மணிவிழாப் பரிசு

சுந்தரமூர்த்திக்கு இன்று மணிவிழா. காலையிலேயே வீட்டிலேயே உருவாக்கி இருந்த திருமண மேடையில் அவர் அவருடைய மனைவி ரங்கநாயகிக்கு மறுபடியும் தாலிகட்டி,
மணிவிழாப் பரிசு

சுந்தரமூர்த்திக்கு இன்று மணிவிழா. காலையிலேயே வீட்டிலேயே உருவாக்கி இருந்த திருமண மேடையில் அவர் அவருடைய மனைவி ரங்கநாயகிக்கு மறுபடியும் தாலிகட்டி, அதன் பின்னான திருமண சம்பிரதாயங்களும் எல்லாம் ஒன்று விடாமல் சிரிப்பும் கும்மாளமுமாய் நடந்தேறி இருந்தன.
 சுந்தரமூர்த்தியின் மாடிவீடு விளக்குகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிலும் அவருடைய பிரத்யேகமான படுக்கை அறை முதலிரவு அறைக்கான அத்தனை லட்சணங்களுடன் தயாராகிக் கொண்டிருந்தது. அதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த ரங்கநாயகியை அவள் வயதுப் பெண்களும் சில பாட்டிகளும் கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தனர்.
 இரவு ஏழரை மணி இருக்கும். காவல்காரன் முனியாண்டி இரண்டு வெள்ளைக்காரர்களை அழைத்துக் கொண்டு வந்து சுந்தரமூர்த்தியின் முன் நிறுத்தினான். அவர்களில் ஆண் ஒருவரும் பெண் ஒருத்தியும் இருந்தார்கள். அவர்கள் முதுகில் ஆளுக்கொரு மூட்டையைச் சுமந்து கொண்டிருந்தார்கள்.
 வெள்ளைத் தோலில் செவ்வரியோடிய இரத்தநாளங்கள் தெரிகிற சிவப்பில் இருந்தார்கள். தோற்றத்திலிருந்து வயதை அவரால் அனுமானிக்க முடியவில்லை. அவர்களும் ஐம்பது வயதைக் கடந்தவர்களாக இருப்பார்கள் என்று தோன்றியது.
 "இவங்க வழிதவறி வந்துட்டாங்க போலருக்குய்யா. அநேகமா திகைப்பூண்டு எதையாச்சும் மிதிச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். மதி மயங்கிப் போய் எங்க இருக்கோம்னே நெகா தெரியாம நம்ம தோட்டத்துலயே சுத்திக்கிட்டு இருந்தாங்க. அதான் நான் இவங்கள இங்க கூட்டிக்கிட்டு வந்தேன்'' என்றான்.
 "நீ மாடிக்குப் போயி ரங்கநாயகி இருப்பா. அவளக் கூட்டிக்கிட்டு வா. அவளுக்குத்தான் இங்கிலீஸ் பேசத் தெரியும். அவள் இவங்ககிட்டப் பேசி என்ன ஏதுன்னு விசாரிப்பா'' என்றார் சுந்தரமூர்த்தி.
 "அய்யா, இவங்க ரெண்டு பேத்துல அந்த வெள்ளைக்காரப் பொம்பள நல்லா தமிழ் பேசுதுய்யா. ஆனா நம்ம பக்கத்து தமிழ் போல இல்லாம, பாடப் புத்தகத்துல இருக்குற சுத்தமான தமிழப் பேசுதுய்யா. வேணுமின்ன நீங்களே பேசிப் பாருங்களேன்'' என்றான் முனியாண்டி சிரித்துக் கொண்டே.
 "ஹாய் ஐயாம் டொனால்டு'' என்று வெள்ளைக்காரன் அவரிடம் கை கொடுத்தான்.
 "என்னுடைய பெயர் கேத்லீன்'' என்றாள் வெள்ளைக்காரப் பெண்.
 முனியாண்டி ரங்கநாயகியை அழைத்துக் கொண்டு வரவும், சுந்தரமூர்த்தி வெள்ளைக்காரர்களை அவளிடம் காட்டி, "இவங்களக் கொஞ்சம் விசாரிச்சு அவங்களுக்கு வேணுங்குறதச் செஞ்சு குடு நாயகி'' என்று சொல்லிவிட்டு வேகமாகக் கிளம்பிப் போனார்.
 ரங்கநாயகி வெள்ளைக்காரப் பெண்ணிடம், "ஹலோ'' என்று சொல்லிக் கை கொடுக்கவும், "அவள் வணக்கம்'' என்று சுத்தமான தமிழில் சொல்லி கை
 குவித்து வணங்கினாள். ரங்கநாயகிக்கு ஆச்சர்யமாக இருந்தது.
 வெள்ளைக்காரர்களை வீட்டிற்குள் அழைத்துப் போய் கூடத்தில் இருந்த சோபாவில் உட்காரச் சொன்னாள். "பாப்பா'' என்று வீட்டுக்குள் பார்த்துக் குரல் கொடுக்கவும், ஒரு சிறுமி ஓடி வந்து, "என்ன பாட்டி'' என்றாள் எரிச்சலுடன். வெள்ளைக்காரர்களைப் பார்த்ததும் ஆச்சர்யப்பட்டுப் போய், "இவங்க யாரு பாட்டி'' என்றாள் சிறுமி அவர்களைக் கண் கொட்டாமல் பார்த்தபடி.
 "இவங்க நம்மளோட விருந்தினர்கள். இவங்களுக்கு முதல்ல குடிக்கத் தண்ணி கொண்டு வந்து குடு பார்க்கலாம்'' என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தாள். சிறுமி ஆளுக்கொரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கவும் இருவரும் ஆர்வமாய் வாங்கி "மளக் மளக்'கென்று முழுவதையும் குடித்தார்கள்.
 "சூடாக வேறு ஏதாவது காஃபி அல்லது டீ குடிக்கிறீர்களா?'' என்று அவர்களிடம் கேட்டாள் ரங்கநாயகி.
 "பிளாக் டீ கிடைக்குமா?'' என்றான் வெள்ளைக்
 காரன் ஆங்கிலத்தில்.
 ரங்கநாயகியின் மருமகள் சுக்குக் காஃபி போட்டுக் கொண்டு வந்து மூவருக்கும் பரிமாறினாள். அவளுக்கும்
 வெள்ளைக்காரர்களை ரங்கநாயகி அறிமுகப்படுத்தி வைத்தாள்.
 "நீங்கள் தயாரித்திருக்கும் சுக்கு காஃபி மிகவும் சுவையாக இருக்கிறது'' என்று வெள்ளைக்காரப் பெண் தமிழில் சொன்னதை ஆச்சர்யமாகப் பார்த்தபடி அவள் கிளம்பிப் போனாள்.
 அவள் போனதும் ரங்கநாயகி, "எதற்கு இந்த கிராமத்திற்கு வந்திருக்கிறீர்கள்? என்று தெரிந்து கொள்ளலாமா?'' என்றாள் வெள்ளைக்காரப் பெண்ணிடம்.
 "இவனுடைய பெயர் டொனால்டு. என்னுடைய பெயர் கேத்லீன். நாங்கள் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இருவருக்கும் சென்ற வருஷம் தான் கல்யாணமானது. அவன் தாவரவியல் ஆராய்ச்சியாளன். நான் தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் முக்கியமாக அவர்களின் திருமண வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சியில் இருக்கிறேன். அதற்காகவே தமிழர்களுடன் பேசி விவரங்களை வாங்குவதற்காகவே தமிழைக் கற்றுக் கொண்டேன். நான் சரியாகத் தமிழ் பேசுகிறேனா?'' என்றாள் வெள்ளைக்காரப் பெண்.
 "அற்புதமாகப் பேசுகிறீர்கள். வெள்ளைக்காரர்களின் வாயிலிருந்து இத்தனை அழகான தமிழைக் கேட்க எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது'' என்ற ரங்கநாயகி, "உங்களின் கணவருக்குத் தமிழ் தெரியுமா?'' என்று கேட்டாள்.
 "அவனுக்கு தமிழில் உரையாடல் நிகழ்த்தத் தெரியாது. ஆனால் கொஞ்சம் கொஞ்சம் புரிந்து கொள்வான்'' என்ற கேத்லீன் தொடர்ந்து சொல்லத் தொடங்கினாள்.
 "நாங்கள் ஒவ்வொரு வருஷமும் ஒன்பது மாதங்கள் வேலை செய்து பணம் சேமிப்போம். கடைசி மூன்று மாதங்களில் இந்தியா போன்ற தேசங்களுக்கு சுற்றுலா கிளம்பி விடுவோம். சுற்றுலாவில் எங்களின் ஆராய்ச்சி சம்பந்தமான விவரங்களைச் சேகரிப்போம். அதன்படி டொனால்டுக்காக பகலெல்லாம் காடுகளில் அலைந்து புதிய புதிய தாவரங்களின் விவரங்களைத் திரட்டுவோம். சாயங்காலமானால் என்னுடைய ஆராய்ச்சிக்காக அருகிலுள்ள கிராமங்களுக்குத் திரும்பி அங்கிருக்கும் மனிதர்களுடன் பேசி அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும், திருமண உறவுகள் பற்றியும் தகவல்கள் திரட்டிவிட்டு அருகிலிருக்கும் ஹோட்டலுக்குப் போய்த் தங்கிக் கொள்வோம்.
 ஆனால் இன்றைக்கு பக்கத்தில் உள்ள காடுகளில் அலைந்து கொண்டிருந்த போது வித்தியாசமான தாவரங்கள் நிறையவே கண்ணில் பட்டன. ஒவ்வொரு காடாக அலைந்து கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இருட்டி விட்டது. இங்கிருந்து பக்கத்தில் தங்கும் அறை கிடைக்கக் கூடிய ஹோட்டல் இருக்கிற ஊர்இருக்கிறதா? அங்கு போவதற்கு பேருந்து வசதி இருக்கிறதா ?'' என்றாள்.
 "ஹோட்டல் இருக்கிறது. இப்பொழுது அங்கு போக பஸ் வசதி எதுவும் இல்லை. எங்களுடைய வாகனத்தில் உங்களை அங்கே அனுப்பி வைக்க முடியும். ஆனால் நீங்கள் விரும்பினால் இன்றைக்கு எங்களுடைய விருந்தினர்களாக எங்களுடனேயே தங்கிக் கொள்ளலாம்'' என்று சொல்லி அவளின் முகம் பார்த்தாள் ரங்கநாயகி.
 "மிகவும் சந்தோஷம். நீங்கள் மிகவும் கரிசனம் மிகுந்தவர்களாக இருக்கிறீர்கள்'' என்றாள் கேத்லீன். டொனால்டும் அதை ஆமோதித்து சிரித்துக் கொண்டான்.
 "உங்கள் வீட்டில் எதுவும் முக்கியமான கொண்டாட்டமா?'' என்றாள் கேத்லீன். "ஆமாம்; இன்று எங்களுக்கு மணிவிழா'' என்று சொல்லி வெட்கப்பட்டாள் ரங்கநாயகி.
 "மணிவிழா என்றால்'' என்றவள் தன்னுடைய தோள் பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து அதற்கான அர்த்தத்தைத் தேடத் தொடங்கினாள் கேத்லீன்.
 "மணிவிழா என்றால் அறுபது வயதாகிவிட்டதைக் கொண்டாடும் ஒரு விழா...."
 உங்களைப் பார்த்தால் அறுபது வயதானதாகத் தெரியவில்லையே... மிகவும் இளமையாக இருக்கிறீர்களே'' என்றான் ஆங்கிலத்தில் டொனால்டு சிரித்துக் கொண்டே.
 "எனக்கு நாற்பத்தெட்டு வயதுதான் ஆகிறது. என்னுடைய கணவருக்குத் தான் இன்றைக்கு அறுபது வயது தொடக்கம்'' என்று சொல்லி ரங்கநாயகியும் சிரித்தாள்.
 "ஏன் இவ்வளவு வயது வித்தியாசம்? இருவரின் ரசனை மட்டமும் வேறு வேறாக இருக்குமே ?'' என்று கேட்டாள் கேத்லீன்.
 "ரசனை என்ன ரசனை, புருஷன் சொல்வதைப் பின்பற்றி வாழ்வது தான் எங்கள் பெண்களின் வழக்கம்? மேலும் வயது வித்தியாசம் ஓரளவிற்கு அதிகமாக இருப்பது தான் நல்லது''
 "வயதானதால் தாக்கும் நோய்களுக்கு இருவரும் ஒரே வயதில் இருந்தால் இருவருமே ஒரே நேரத்தில் நோய்வாய்ப்பட வாய்ப்பிருக்கிறதே... ஆனால் வயது வித்தியாசம் அதிகமிருந்தால் கணவன் நோய்வாய்ப்படும் போது மனைவியால் அவரைக் கவனித்துக் கொள்ள முடியுமே... அதை எல்லாம் கவனத்தில் கொண்டு தான் முன்னோர்கள் ஆணுக்கும் பெண்ணிற்கும் அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து வைக்கிறார்கள்'' என்று விரிவான விளக்கம் கொடுத்தாள் ரங்கநாயகி.
 "மிகச் சரியான காரணமாகத்தான் இருக்கிறது'' என்று சிலாகித்தான் டொனால்டு.
 "ஆனால் பெண்களுக்கும் வயதாகுமே... அவர்கள் நோயில் விழுந்தால் யார் பராமரிப்பது? அப்போது ஆண்கள் இறந்து போயிருப்பார்கள்; அல்லது மிகவும் தளர்ந்து போயிருப்பார்களே?'' என்றாள் கேத்லீன்.
 "அவர்களின் குழந்தைகள் வளர்ந்து விட்டிருப்பார்களே; அவர்கள் அம்மாவைக் கவனித்துக் கொள்ள மாட்டார்களா ?'' என்று சொல்லவும் கேத்லீனும் சமாதானமானாள்.
 "அப்படியென்றால் உங்களுக்கு அறுபது வயதாகும் போது அதையும் இப்படி ஒரு விழா எடுத்துக் கொண்டாடுவீர்களா?'' என்றாள் கேத்லீன்.
 "இல்லை; அதைக் கொண்டாடும் வழக்கம் இங்கு இல்லை''
 "ஏன், பெண்கள் அறுபது வயதை எட்டுவது அப்படி ஒன்றும் பெரிய விஷயமில்லையா?'' என்றான் டொனால்டு.
 "அப்படி இல்லை. எதையும் கொண்டாடும் மனநிலையில் அவர்கள் இருக்க மாட்டார்கள்'' என்று ஒரு மழுப்பலான பதிலைச் சொன்னாள் ரங்கநாயகி ஒரு குற்ற உணர்ச்சியுடன்.
 "மிஸ்டர் சுந்தரமூர்த்தி உங்களுடைய எத்தனையாவது கணவர்?'' என்றான் டொனால்டு திடீரென்று. பதறிப் போனாள் ரங்கநாயகி.
 "அய்யய்யோ... அவர் தான் என்னுடைய முதலும் கடைசியுமான கணவர். இங்கெல்லாம் பெண்கள் ஒரே கணவருடன் தான் வாழ்வார்கள். வாழ்வோ சாவோ ஒருத்தனுடன் தான். புருஷன் இறந்து போனால் கூட பெரும்பாலான எங்கள் பெண்கள் மறு கல்யாணம் செய்து கொள்ள மாட்டார்கள். அதுதான் எங்களுடைய கலாசாரம்'' என்றாள் ரங்கநாயகி பெருமை பொங்க.
 "மனைவியை இழந்த கணவர்கள்?'' என்றாள்
 கேத்லீன் கிண்டலாக.
 "இங்கும் பெரும்பாலான ஆண்கள் ஒரே மனைவியுடன் தான் வாழ்ந்து மடிந்து போகிறார்கள். நாற்பத்தைந்து ஐம்பது வயதுகளில் மனைவிகளை இழக்கும் எத்தனையோ ஆண்கள் அதற்கப்புறம் கல்யாணம் செய்து கொள்ளாமல் குழந்தைகளுக்காக வாழ்வதை நான் நிறையவே பார்த்திருக்கிறேன்'' என்றாள் ரங்கநாயகி.
 முனியாண்டி மூன்று கேரியரில் சாப்பாடு கொண்டு வந்து வைத்து விட்டு விடைபெற்றான். "
 "சாப்பிட்டு விடலாம். தரையில் உட்கார்ந்து கொள்வீர்களா? அல்லது மேஜை நாற்காலிகள் போடச் சொல்லட்டுமா?'' என்றாள் ரங்கநாயகி.
 "வேண்டாம்; தரையிலேயே உட்கார்ந்து கொள்ளலாம்'' என்று கேத்லீன் சொல்லவும், ரங்கநாயகி மருமகளை அழைத்தாள். அவள் அவர்கள் மூவரும் உட்கார்ந்து கொள்வதற்கு ஜமுக்காளம் ஒன்றைக் கொண்டு வந்து விரித்து, அதில் அவர்களை உட்காரச் சொல்லிப் பரிமாறினாள். அவர்கள் இருவரும் உணவை ரசித்துச் சாப்பிட்டார்கள்.
 நாங்கள் எந்த ஊருக்குப் போனாலும் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது'' என்று பாராட்டினான் டொனால்டு.
 "உங்களின் வாழ்க்கை முறை எங்களுக்கு ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. டொனால்டு எனக்கு மூன்றாவது கணவன். முதல் கணவன் இறந்து போனான். இரண்டாவது கணவனை நான் விவாகரத்து செய்து விட்டேன். டொனால்டுக்கு நான் இரண்டாவது மனைவி. அவனுடைய முதல் மனைவியும் அவனை விட்டு விலகிப் போய் விட்டாள்.
 டொனால்டை நான் திருமணம் செய்து கொள்ளும் போது அவனுக்கு நாற்பத்தெட்டு வயது. எனக்கு ஐம்பத்தி ஒன்று. இந்த வயதில் இருவரும் எங்களின் இணைகளை விவாகரத்து செய்துவிட்டு புதிதாய் திருமணம் செய்து கொண்டோம். யோசித்துப் பார்த்தால் நகைப்பாகத் தான் இருக்கிறது. இப்போதைக்கு இருவரும் சந்தோஷமாகத் தான் இருப்பதாக உணர்கிறோம்; இல்லையா டொனால்டு?'' என்று சொல்லி அவள் டொனால்டைப் பார்த்தாள்.
 அவனும், "எஸ்... எஸ்... எக்ஸாக்ட்லி'' என்று மலர்ந்தான்.
 "கோபித்துக் கொள்ளாதீர்கள். உங்களின் ஐம்பதோரு வயதில் அதுவும் உங்களை விட மூன்று வயது குறைந்தவரைத் திருமணம் செய்து கொண்டு உங்களது வாழ்க்கைமுறை எப்படி இருக்கிறது?'' என்றாள் ரங்கநாயகி.
 " ரசனைகளை, அறிவை, காதலை... என்று பகிர்ந்து கொள்வதற்கு நிறைய இருப்பதாக நினைக்கிறோம். வெறும் உடல்ரீதியான தொடர்புக்கு மட்டுமே திருமணம் என்று நினைக்கவில்லை'' " என்று சிரித்தாள் கேத்லீன்.
 "அதற்காக ஆணும் பெண்ணும் மாற்றி மாற்றித் திருமணம் செய்து கொள்வது சரியாக இல்லையே?''
 "ஆனால் குடும்ப அமைப்புகள் ஏன் இத்தனை இறுக்கமாய்? கொஞ்சம் நெகிழ்வுத் தன்மை இருந்தால் நல்லது தானே?'' என்றாள் கேத்லீன்.
 "இப்பொழுதெல்லாம் எங்களின் குடும்ப அமைப்புகள் அத்தனை இறுக்கமானதாய் இருக்கவில்லை. நிறைய நெகிழ்வுத் தன்மையுடன் தான் இருக்கின்றன''
 "நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். உங்களின் சமூகத்திலும் விவாகரத்துகள் நிறையவே நடப்பதை நான் சேகரித்த தரவுகளில் இருந்து அறிந்து கொள்கிறேன். இது குடும்ப அமைப்புகள் நெகிழ்ந்ததின் அறிகுறிதானோ என்னவோ'' என்றாள் கேத்லீன்.
 "படித்த பெண்கள் அவர்களும் வேலைக்குப் போய் சுயமாக நிற்க முடிவதால் அவர்கள் மிக எளிதாக விவாகரத்துக்குத் தயாராகி விடுகிறார்கள். அவர்களில் சிலர் மறுகல்யாணமும் பண்ணிக் கொள்கிறார்கள்''
 என்றாள் ரங்கநாயகி வருத்தம் தோய்ந்த குரலுடன்.
 "சமூகத்தில் விவாகரத்துகள் பெருகுவது வரம் என்று நினைக்கிறீர்களா, அல்லது சாபம் என்று நினைக்கிறீர்களா?'' என்றாள் கேத்லீன் சிரித்துக் கொண்டே.
 "சமூகம் அழிவை நோக்கிப் பயணப்படுகிறதாகத் தான் நான் நினைக்கிறேன்'' என்றாள் ரங்கநாயகி
 கோபத்துடன். "
 "நீங்கள் சொல்வதே சரியாக இருக்கலாம். இது உங்களின் வாழ்க்கை. நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. ஆனால் உங்களுடன் விவாதித்ததில் என்னுடைய ஆராய்ச்சிக்கு நிறைய விஷயங்கள் கிடைத்திருக்கின்றன. நான் இதை உடனேயே எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் காலையில் எல்லாவற்றையும் மறந்தாலும் மறந்து விடுவேன்'' என்ற கேத்லீன் தோள் பையிலிருந்து பேனாவும் குறிப்பேடும் எடுத்து எழுதத் தொடங்கினாள்.
 ரங்கநாயகி அவர்களை பக்கத்து அறைக்கு அழைத்துப் போய் அவர்களை அங்கே தங்கிக் கொள்ளச் சொல்லிவிட்டு, அவள் மாடி அறைக்குப் போனாள்.
 "பால் கொண்டு போறீங்களா அத்தை?'' என்று மறுமகள் வந்து சீண்டவும், "அடச்சீ போடீ'' என்று அதீதமாய் வெட்கப் பட்டுக்கொண்டு, உள்ளே போய் அலங்கரிக்கப் பட்டிருந்த கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டாள்.
 ரங்கநாயகி அவளின் திருமண வாழ்வை அசை போடத் தொடங்கினாள். சுந்தரமூர்த்தியுடன் அவள் சுமார் முப்பது வருஷங்கள் வாழ்ந்திருக்கிறாள்.
 ரங்கநாயகி எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்ததும் அவள் ப்ளஸ் டூவில் சேரவும் அதன் பின்பும் ஓவியக் கல்லூரியில் போய்ச் சேர்ந்து படிக்கவுமான நிறையக் கனவுகள் வைத்திருந்தாள். அவளுக்கு ஓவியம் வரையத் தெரியும். பார்க்கிற காட்சிகளையும் மனிதர்களையும் அப்படியே வரைந்து விடுவாள். கல்லூரிக்குப் போனால் அங்கு அவளுடைய ஓவியத் திறமை கூர் தீட்டப்படும் என்று நம்பினாள்.
 ஆனால் அவளுடைய குடும்பம் அதை அனுமதிக்கவில்லை.
 "இன்னும் ரெண்டு மூனு வருஷத்துல கல்யாணம் பண்ணி வச்சுடுவோம்; இப்பப் போயி எதுக்கு மேற்கொண்டு படிக்கப் போகனும்ங்குற...?'' என்று அம்மா
 சீறினாள்.
 "கல்யாணம் பண்ணிக் கொள்வது வரைக்குமாவது படிக்கிறேனே'' என்று அழுது அழிச்சாட்டியம் பண்ணி டீச்சர் டிரையினிங்கில் போய் சேர்ந்து கொண்டாள். படித்து முடித்ததும் பக்கத்து டவுனில் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளியில் போய் வேலையிலும் சேர்ந்து கொண்டாள்.
 ஒரே ஒரு வருஷம் மட்டுமே வேலை பார்த்தாள். சிறு குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருவது அவளுக்கு அத்தனை சந்தோஷம் தருவதாய் இருந்தது. ஆனால் அவளின் பதினெட்டு வயதில் மாப்பிள்ளை தகைந்து சுந்தரமூர்த்தி வந்து பரிசம் போட்டு விட்டுப் போகவும் வேலைக்குப் போகக் கூடாது என்று வீட்டில் நிறுத்தி விட்டார்கள்.
 அவளின் தோழிகளுக்கு பத்திரிகைகள் கொடுப்பதற்காக அவளாகவே கொஞ்சம் பத்திரிகைகள் அச்சடித்துக் கொண்டிருந்தாள். அதில் அவளின் படிப்பையும் போட்டிருந்தாள். அப்பா அவளின் பத்திரிகையை மாப்பிள்ளை
 வீட்டில் காட்டி அனுமதி வாங்க வேண்டுமென்றார்.
 "நான் என் ப்ரண்ட்சுகளுக்குக் குடுக்குறதுக்காக இங்கிலீசுல அடிச்சிருக்கேன். அதை எதுக்குப்பா அவங்ககிட்டப் போய்க் காண்பிக்கணும்?'' என்று சண்டை போட்டாள் ரங்கநாயகி.
 "பொட்டக்கழுத உனக்கு ஒண்ணும் தெரியாது. பேசாமக் கெட. நாளப் பின்ன பேச்சு எதுவும் வந்திடக் கூடாது'' என்று அவளை அதட்டிவிட்டு பத்திரிகையோடு கிளம்பிப்போனார். திரும்பி வந்தவர் பத்திரிகைகளை எல்லாம் அவளின் கண்ணிற்கு முன்னால் சுக்கல் சுக்கலாகக் கிழித்துப் போட்டார்.
 "உனக்கு என்ன திமிர் இருந்தா உன் பேருக்குப் பின்னால நீ படிச்ச படிப்பப் போட்டுருப்ப. மாப்பிள்ளை ஒண்ணும் படிக்கலைங்குறது ஊருக்கெல்லாம் தெரியணுமா? அது அவங்களுக்கு எவ்வளவு பெரிய அவமரியாதையா இருக்கும்'' என்று எகிறிக் குதித்தார்.
 "அவர் ஒண்ணும் படிக்கலைங்குறது நிஜம் தான அப்பா?''
 "அவர் ஏன்டி படிக்கனும்? சுத்துப்பட்டி எட்டு கிராமங்களுக்கும் அவங்களோடது தான். தலைக்கட்டுக் குடும்பம். நிலம் நீச்சு, தோட்டம் தொறவுன்னு முக்காவாசி கிராமமே அவங்களோடது தான். எட்டுப்பட்டிக் கிராமமும் அவங்க நெலத்துல தான் வேலை செஞ்சு பொழைக்குறாங்க. அதைப் பண்ணையம் பார்க்கவே அவங்களுக்கு ஆள் போதல. இதுல அவரு படிச்சிட்டு எங்க வேலைக்குப் போகப் போறாரு''
 மாப்பிளை வீட்டிலிருந்தே நிறையப் பத்திரிகைகள் குடுத்து அனுப்பியிருந்தார்கள். அதைத்தான் அவள் அவளின் தோழிகளுக்கும் கொடுக்க வேண்டி இருந்தது.
 திருமணம் முடிந்த அன்று முதலிரவு என்றார்கள். ரங்கநாயகி புருஷனுக்காகக் காத்திருந்து பார்த்துவிட்டு தூங்கிப் போனாள். எப்போது வந்தார் என்றே தெரியவில்லை. நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தவளை அவருக்காகத் திருப்பினார்.
 அடுத்த நாள் அவருடைய அண்ணிகளும் ஊர்ப் பெண்களும் கிராமத்தின் குடி தண்ணீர்க் கிணற்றிற்கு அவளை வழி நடத்திப் போனார்கள். கை நிறைய வெற்றிலைகளைக் கொடுத்து உள்ளே வீசச் சொன்னார்கள். மூன்று வெற்றிலைகளை மட்டும் வீசினாள் ரங்கநாயகி. மூன்றுமே தண்ணீரில் மல்லாக்க விழுந்து கிடந்தன.
 "அய்யய்யோ நாயகிக்கு மூனுமே பொட்டப் புள்ளையா இல்ல பொறக்கப் போகுது. அப்படிப் பொறந்தா அண்ணன் இவளத் தள்ளி வச்சுட்டு இன்னொருத்தியக் கல்யாணம் பண்ணிக்குவாரே?'' என்று ஒருத்தி பீதியைக் கிளப்பினாள். குடும்பத்தின் மூத்த மகனுக்கு அப்படித்தான் அடுத்தடுத்துப் பிறந்த மூன்று பிள்ளைகளும் பெண் குழந்தைகளாகவே போய்விட அவருக்கு இரண்டாவது ஒருத்தியையும் கல்யாணம் செய்து வைத்திருந்தார்கள். எப்படி காலம் தள்ளப் போகிறோமோ என்று அவளுக்கு மலைப்பாக இருந்தது.
 கல்யாணமாகி பதினைந்து நாள் கடந்திருக்கும். சுந்தரமூர்த்தி ஒற்றை மாட்டுக் கூட்டு வண்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பினார். "
 "உன் புருஷன் எங்க போறாகன்னு தெரியுமா?'' என்றாள் அவளைப் போல் இந்த வீட்டிற்கு வாழ வந்திருக்கும் நடுவுள்ளவரின் மனைவி சிரித்துக் கொண்டே.
 ரங்கநாயகி "தெரியாது' என்று தலை அசைக்கவும், "தெரிஞ்சுக்கோ; இன்னும் ரெண்டு மூனு நாள் கழிச்சுத்தான் திரும்பி வருவாக'' என்றாள் சர்வசாதாரணமாக. ரங்கநாயகிக்கு குமட்டிக் கொண்டு வந்தது.
 உடனேயே ஊருக்குக் கிளம்பிப் போய் அம்மாவைக் கட்டிக் கொண்டு கதறி, "ஊரறிய அவரு கூத்தியா வீட்டுக்குப் போறாரும்மா. குடும்பமே அதை வேடிக்கை பார்த்துக்கிட்டு பெருமையா சொல்றாங்கம்மா'' என்றாள்.
 அம்மாவோ, "பெரிய வீடுன்னா, அப்படி இப்படின்னு தான் இருக்கும். கண்டும் காணாம இருப்பியா, அதைப் போயி பிராதா எடுத்துக்கிட்டு இங்க வந்துருக்கவ'' என்று ரங்கநாயகியைத் தான் திட்டினாள். அடுத்த நாளே அப்பா அவளை புருஷன் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்தார்.
 ஆறேழு நாட்களுக்கு அப்புறம் தான் புருஷனை தனிமையில் சந்திக்க வாய்த்தது. "உங்களுக்கு நான் என்ன குறை வச்சேங்க?'' என்று அவரிடம் நியாயம் கேட்டாள். "
 "இவ ஒருத்தி. அது ஒரு கெளரவம்டி. அவ்வளவு தான்'' என்று மிகச் சாதாரணமாகச் சொல்லி முடித்துக் கொண்டார்.
 ரங்கநாயகிக்கு ஆயாசமாக இருந்தது. சுந்தரமூர்த்தியின் கூடப் பிறந்த சகோதரர்கள். அவர்களின் மனைவியர்கள்; குழந்தைகள். வாழாவெட்டியாய் வீட்டோடு வந்து தங்கியிருக்கும் அவரின் தங்கை. புருஷனைப் பறி கொடுத்துவிட்டிருக்கும் அவருடைய அக்காள். அவர்களின் குழந்தைகள். சுந்தர மூர்த்தியின் அப்பா, அம்மாக்கள், இப்பவோ அப்பவோ என்று இழுத்துக் கொண்டிருக்கும் தாத்தா, பாட்டிகள்.... என்று எப்போதும் வீடு நிறைய ஆட்கள் இருந்தார்கள். பெண்கள் எல்லோரும் எப்போதும் ஓய்வு ஒழிச்சலின்றி சமைத்துக் கொண்டு ஆக்குபொறையே கதி என்று கிடக்க வேண்டி இருந்தது.
 புருஷனைக் கூட அடிக்கடி பார்க்க முடிவதில்லை. அப்படியே பார்த்தாலும் பகலில் அவனுடன் பேசக்கூடாது என்று அவருடைய அண்ணன் மனைவிகள் எல்லாம் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
 ரங்கநாயகிக்கு அரசு பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்ததும் சந்தோஷப்பட்டாள். அன்றைக்கு இரவு அவன் படுக்கைக்கு வரும் வரைக்கும் விழித்திருந்து விஷயத்தைச் சொல்லவும், "வேலைக்கா, இந்த வீட்டுப் பொண்டுகள் அவங்களா வீட்டு வாசப்படியத் தாண்டி எங்கயும் போக எங்க அய்யா சம்மதிக்க மாட்டார்'' என்றார்.
 "அவரு ஏங்க சம்மதிக்கனும்? உங்க சம்மதம் போதுங்க. எனக்கு குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தர்றது ரொம்பப் புடிக்குங்க'' என்று கெஞ்சினாள்.
 "கத்துக் குடுக்க ஆசையா இருந்தால் வீட்டுல இருக்குற புள்ளைங்கள எல்லாம் உட்காரவச்சு பாடம் நடத்து. அய்யா சொல்ல மீறி இங்க யாரும் எதுவும் பேச மாட்டோம்'' என்று தீர்மானமாய்ச் சொல்லி
 அவளின் ஆசைகளைக் கருக்கி கடந்து போனார்.
 அவ்வளவு தான். ரங்கநாயகி மனசளவில் சுருண்டு போனாள். தனக்கு வாய்த்தது இவ்வளவு தான் என்று தனக்குக் கிடைத்ததை மட்டும் வைத்து சந்தோஷப்படப் பழகிக் கொண்டாள்.
 அவளுடைய வாழ்வில் அவளுக்கு நடந்த ஒரே நல்ல விஷயம் அடுத்தடுத்து அவள் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தது தான். அதிலும் அவளுடைய பங்களிப்பு என்று எதுவும் இல்லை. தற்செயலானது தான். ஆனால் மொத்த குடும்பமும் அவளை அதற்காகத் தலையில் வைத்துக் கொண்டாடியது.
 ரங்கநாயகி தன்னுடைய வாழ்க்கையை ரீவைண்ட் பண்ணி யோசித்துப் பார்த்தபோது கேத்லீன் சரியாகத்தான் சொல்லி இருக்கிறாளோ என்று தோன்றியது.
 "உங்களை மாதிரியான பெண்களுக்கு சுயகெளரவமே குறச்சல் தான்; இல்லையா?'' - கேத்லீனின் குரல் ரங்கநாயகியின் காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.
 சுந்தரமூர்த்தி இன்றைக்கு ஆச்சர்யமாக சீக்கிரமே படுக்கைக்கு வந்தார். வந்ததும் அவளுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு "நாயகி, முழிச்சிருக்கியா, தூங்கீட்டியா?'' என்றார்.
 "சொல்லுங்க; முழிச்சுத்தான் இருக்கேன்'' என்றபடி எழுந்து உட்கார்ந்தாள்.
 "இன்னைக்கு நான் ரொ.....ம்.....ப..... சந்தோஷமா இருக்கேன். முப்பது வருஷம் உன்கூட நான் வாழ்ந்துருக்கேன். இதுவரைக்கும் நீ என்கிட்ட அது வேணும் இது வேணுமின்னு எதுவுமே கேட்டதே இல்ல. இன்னைக்கு ஏதாவது கேளும்மா; குடுக்குறேன்'' என்றார் உற்சாகமாய்.
 "எது கேட்டாலும் குடுப்பீங்களா?'' என்றாள் ரங்கநாயகியும் சிரித்துக் கொண்டே.
 "எது கேட்டாலும், அது உலகத்துல எந்த மூலையில கெடச்சாலும் வாங்கிவந்து உன் காலடியில போடுறேன்டி'' என்றார்.
 "அப்படின்னா, எனக்கு விவாகரத்து குடுங்க. மிச்ச வாழ்க்கைய தனியா, சுதந்திரமா ஏதாவது ஸ்கூலுல போய் டீச்சரா வேலை பார்த்து சந்தோஷமா வாழ்ந்துக்கிறேன்'' என்று ரங்கநாயகி சொன்னதைக் கேட்டதும் ஒருவித அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தபடி ஸ்தம்பித்து நின்றார் சுந்தரமூர்த்தி.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com