உடல் சூட்டைத் தணிக்க!

என் வயது 78. அம்மியில் மிளகாய் அரைத்தால் எரிவது போல், என் கை, உள்ளங்கை, உள்ளங்கால் எல்லாம் மாறி மாறி எரிகின்றன.
உடல் சூட்டைத் தணிக்க!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
என் வயது 78. அம்மியில் மிளகாய் அரைத்தால் எரிவது போல், என் கை, உள்ளங்கை, உள்ளங்கால் எல்லாம் மாறி மாறி எரிகின்றன. ஏசி ஒத்துக் கொள்ளவில்லை. உடல் சூட்டினால் நான் படும் அவஸ்தை சொல்லில் அடங்காது. இரவில் தூங்க முடியவில்லை. பகல் வேளையில் மிக சோர்வாக உள்ளது. அர்ஷோகல்வம் எனும் ஆயுர்வேத பொடி மருந்து சாப்பிட்டதில் மலச்சிக்கல் நீங்கிவிட்டாலும், உடற் சூடு முழுவதும் தணியவில்லை. அடுத்த கோடை வருவதற்குள் இதிலிருந்து விடுபட வழி என்ன? தினமும் மூன்று மணி நேரம் X , XI, XII படிக்கும் மாணவ மாணவியருக்கு Tuition எடுக்கிறேன்.
- ஓ.சாந்தா , திருச்சி.
பித்தம் வினா தாஹ: என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
அதாவது பித்தமில்லாமல் சூடு ஏற்படுவதில்லை என்று அதற்கு அர்த்தம் கூறலாம். பித்த தேகவாகு கொண்டவர்களாக நீங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. துவர்ப்பும், கசப்பும், இனிப்பும் மிக்க உணவு, உங்களுக்கு அதிகம் நல்லது. காரமும், சூடும் தவிர்க்கப்பட வேண்டியவை. உப்பும் புளிப்பும் மிகவும் மிதமாயிருந்தால் நலம். நெல்லிக்காய், சர்க்கரை அல்லது வெல்லம் சேர்ந்த புளித்த பழச்சாறுகள், கசப்பும் துவர்ப்பும் புளிப்பும் மிக்க நாரத்தை, மாதுளை போன்ற பழங்கள், கரும்புச் சாறு, சர்க்கரை கலந்து இனிக்கும் கடைந்த மோர், நெய், வெண்ணெய், இனிக்கும் தயிர், புளிக்காத இனிக்கும் பழங்கள் போன்றவற்றை நீங்கள் தேர்வு செய்து சாப்பிடக் கூடிய நல்ல உணவுப் பொருட்கள். 
மேலும் முருங்கைக்கீரை, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, புளியாரை கீரை, கோவக்காய், தூதுவளை, வல்லாரை, சிறுகீரை, பூசணிக்காய், பரங்கிக்காய், கத்தரி, முருங்கைக் காய், மெதுபாகல், கொம்புப்பாகல், வெள்ளரிப்பிஞ்சு, புடலங்காய், பீர்க்கு, அவரை, வாழைக்கச்சல், சர்க்கரைவள்ளி, வெங்காயம், வாழைத்தண்டு, வாழைப்பூ, சுண்டைவற்றல், மணத்தக்காளிவற்றல், நாரத்தை, மாவடு, மிளகு, இஞ்சி, எலுமிச்சை முதலியவற்றால் ஆன ஊறுகாய்கள் நல்லவை. 
உடற்சூட்டைத் தணிப்பதில் பசு நெய் மிகவும் சிறந்தது. சிறிய அளவில் சுமார் பத்து மி.லி. என்ற கணக்கில் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். எரிச்சல் அதிகம் உணரக் கூடிய பகுதிகளில் நெய்யை மெலிதாகத் தடவி சிறிது நேரம் ஊறிய பிறகு, துடைத்துவிடலாம். நீங்கள் மூதாட்டியாக இருப்பதால், பெரிய அளவில் இல்லாமல், சிறிது அளவில் மலமிளக்கும் இனிப்பு, கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை கொண்ட மருந்துகளால், பித்த சூட்டை வெளியேற்றலாம். கடுக்காய் தோல் சிறந்த உதாரணம். அதன் தூளை சுமார் பத்து கிராம் எடுத்து, 150 மி.லி. சூடான பாலுடன், காலையில் உண்ட சிற்றுண்டி செரித்து மதியம் பசி எடுக்கும் வேளையில் சாப்பிட, இரண்டு மூன்று முறை பேதியாகி, பித்தத்திலுள்ள சூடு எனும் தன்மை குறைந்துவிடும். 
கழுத்தில் முத்து, பவளம், ஸ்படிகம் போன்ற மணிகளை மாலையாக அணிந்து கொள்வதால் உடற்சூடானது கட்டுக்குள் இருக்கும். சிவப்பு, வெண்ணிற தாமரை மலர்கள், வாழைப்பூவினுடைய இளம் இதழ்கள், முல்லைப் பூ போன்றவை அணிந்து உடற்சூட்டை நம் முன்னோர் குறைத்துக் கொண்டனர், ரோஜா பன்னீர் விட்டரைத்த தூயகட்டை சந்தனத்தை நெற்றியில் இட்டுக் கொள்வதையும், முடிந்தால் உடலில் மெலிதாகப் பூசிக் கொள்வதையும் நீங்கள் செய்தால், உடற்சூடு தணிய வாய்ப்பிருக்கிறது. மனதிற்கு இன்பம் தரும் பாட்டு, இசை ஆகியவற்றைக் கேட்பதும், தன் விருப்பமறிந்து பழகக் கூடிய சம வயதைக் கொண்ட நண்பர்களுடன் பேசி மகிழ்ச்சியுடன் நேரத்தைக் கழிப்பதும் மழலைச் சொற்களைக் கேட்டு இன்பமடைவதும், இரவில் நிலவின் கதிர்களும், தென்றல் காற்றும் உடலில் படும்படி சிறிது நேரம் உலாத்துவதும், நறுமணம் தரக்கூடிய மலர்கள் நிறைந்த பூங்காக்களில் சிறிது நேரம் அமர்ந்திருப்பதையும் நீங்கள் செய்ய முடிந்தால், உங்கள் பிரச்னையைத் தீர்க்க உதவிடக் கூடும். மண் பானையில், வெட்டிவேர், விளாமிச்சைவேர், கரும்புவேர், சந்தனசிராத்தூள் போட்டு ஊற வைத்த தண்ணீரை, சிறிது சிறிதாக பருகுவதும் நல்லதே.
உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் ஹிமசாகர தைலம், சந்தனாதி தைலம், அமிருதாதி தைலம், சந்தனபலாலாக்ஷôதி தைலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தலைக்குத் தேய்த்து அரை முக்கால் மணி நேரம் ஊற வைத்துக் குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்வதையும், வாஸாகுடூச்யாதி, திராக்க்ஷôதி, விதார்யாதி போன்ற கஷாய மருந்துகளையும், சதாவரீகுலம், சியவனபிராசம் போன்ற லேஹிய மருந்துகளையும், அமிருதபிராசம், தாத்ரியாதி போன்ற நெய் மருந்துகளையும் மருந்துவர் ஆலோசனைப்படி சாப்பிட்டு நீங்கள் பயனடையலாம். வயோதிகத்தில் உங்களுக்குத் தேவையான அன்பும் அரவணைப்பும், மகிழ்ச்சி தரும் செயல்களுமே சிறந்த டானிக்காக மாறி உடற்சூட்டைத் தணித்துத் தரும் சிறந்த உபாயங்களாகும்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com