வார்த்தை ஜாலம்

ராகவி உடல் மட்டும் சுவரில் சாய்ந்திருக்க, உயிர் மொத்தமாக உறைந்து போயிருந்தது.
வார்த்தை ஜாலம்

ராகவி உடல் மட்டும் சுவரில் சாய்ந்திருக்க, உயிர் மொத்தமாக உறைந்து போயிருந்தது. ராகவியையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தன் உயிரை அந்த விபத்துக்கு கொடுத்த அவள் கணவன் லோகேஷ், எதிரே உயிரற்றுக் கிடந்தான். அவள் பாதி பிணமாக மாறியிருந்தாள். அவளின் கண்களும் வறண்டு போய் கிடந்தன.
''இப்படி சும்மா கிடந்தா எப்படியா, இன்னிக்காவது சவத்தை சீக்கிரமா எடுக்க வேண்டாமா? இரண்டு நாளாவா வீட்டில வெச்சிருப்பாங்க?''
''இருய்யா அவன் தங்கச்சிங்க ரெண்டு பேரும் வர வேண்டாமா? சின்ன வயசிலேர்ந்து அவங்களுக்காகவே வாழ்ந்தவன். அவங்க பார்க்காம அவன் கட்டை வேகுமா?''
''ஆக்ஸிடன்ட் ஆன உடம்பு. போதாகுறைக்கு போஸ்ட்மார்டம் என்ற பெயரில் கூறுபோட்டு, துணியை சுத்தி கொடுத்திருக்காங்க. வேளையோட ஆக வேண்டியத பார்க்கிறது தான் நல்லது''
''சரி, பொழுது சாயறதுக்குள்ள வந்தா பார்ப்போம். இல்லைனா, நீ சொல்றபடி தகனம் பண்ற வேலைய ஆரம்பிக்க வேண்டியதுதான்''
இழவு வீட்டில் சொந்தபந்தங்களின் பேச்சுக்குரல் ஒலித்துக் கொண்டிருக்க, ஓட்டமும் நடையுமாய் முதல் தங்கை வேம்பு உள்ளே நுழைந்தாள். அண்ணனின் சவத்திற்கு முன்பு அமர்ந்து பத்து நிமிடங்கள் ஒப்பாரி வைத்தாள்.
ஒப்பாரிக்கு நடுவே வேம்புவின் பார்வை அவள் அண்ணி ராகவியின் மேல் விழுந்தது, அவள் எந்த சலனமும் இல்லாமல் உட்கார்ந்திருந்தாள்.
''அடிப்பாவி அந்நியாயமாக என் அண்ணனை சாக விட்டிட்டியே. இனி எங்களுக்கு சொந்தம்னு சொல்லிக்க யாரு இருக்கா? இப்ப உனக்கு சந்தோஷமா? இப்ப திருப்தியா நீ நிம்மதியா இரு'' என்று மூக்கை சிந்தினாள்.
"எந்த கஷ்டத்திலும் பெண்கள் கணவன் தன்னோடு இருக்கதான் ஆசைபடுவாங்க. நானா என் கணவன் செத்ததை பார்த்து சந்தோஷபடப் போறேன்' - ஏற்கெனவே வேதனையில் இருந்த ராகவியின் நெஞ்சை அந்த வார்த்தை ஈட்டியால் குத்த கதறி அழ ஆரம்பித்தாள்.
சொந்தபந்தங்கள் அனைவரும் வேம்புவை ஏச ஆரம்பிக்க, அவள் கணவன் அவளை வெளியே கூட்டிச் சென்றான்.
கொஞ்ச நேரத்தில் லோகேஷின் இரண்டாவது தங்கை மது காரில் வந்து இறங்கினாள். 
''எங்களைப் பெத்த பொண்ணாகப் பார்த்துக்கிட்ட உங்களுக்கா அண்ணி இந்த நிலைமை? அந்த கடவுளுக்கு கூட கண் இல்லையா ?'' என்று ஓவென்று ஒப்பாரி வைத்தாள். புண்பட்டு கிடந்த ராகவியின் மனசுக்கு அது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
இரண்டு தங்கைகளும் வந்த சேர்ந்துவிட்டதால் தகன வேலைகள் நடந்தேறின. 
சுடுகாட்டிற்கு போய் வந்த சுட்டோடு கடன்காரர்கள் இரு மாப்பிள்ளைகள் முன்பும் தங்கள் கடனுக்காக வாதிட்டுக் கொண்டிருந்தனர். லோகுவின் முதலாளி எல்லா கடன்களையும் தானே அடைப்பதாகவும், தன் கடனுக்கும் இதற்கும் சேர்த்து இந்த வீட்டை எழுதி கொடுக்க வேண்டுமென கூறினார். வீட்டை விற்றால் அவ்வளவு தொகை தேறாது என்று தெரிந்தும், தன்னிடம் உண்மையாக உழைத்த லோகுவிற்காக உதவ முன் வந்து புண்ணியத்தை கட்டிக் கொண்டார்.
கடன் பிரச்னை ஒரு வழியாக தீர்ந்தாலும் ராகவியின் பிரச்னை தலைதூக்கியது. மூன்று வயது கை குழந்தையுடன் ராகவி என்ன செய்வாள் என்று பேச்சு திசை மாறியது.
''அய்யா... உங்க பாக்டரியில் வேலை போட்டு தந்துட்டு... இந்த வீட்டை குறைஞ்ச வாடகைக்கு கொடுத்தீங்கன்ன அந்த பொண்ணு பொழைச்சிட்டு போகும்'' - லோகுவின் முதலாளியிடம் எல்லோரும் கோரிக்கையை முன் வைத்தனர்.
''எனக்கு சம்மதம் தான்ய்யா. வீட்டு வாடகை கூட வேண்டாம். ஆனா, அந்த புள்ளைக்கு முப்பது வயசுதான் ஆகுது. இந்த ஊரு இளசுலேர்ந்து பல்லு போன பெரிசு வரைக்கும் சும்மாவா இருப்பீங்க? தனியா இருக்கிற அந்த புள்ளைக்கிட்ட எதுவும் கலாட்டா பண்ண மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்''
''அப்ப அந்த பொண்ணோட தம்பி கூட இருக்கட்டுமே?''
''அந்த குடிகாரபயலா இந்த புள்ளைய ஒழுங்காவச்சிருப்பான்?''
வீட்டின் உள்ளே சுவரில் சாய்ந்திருந்த ராகவி திரும்பி தன் கணவனின் புகைப்படத்தைப் பார்த்தாள்.
''இப்படி என் சுமையை ஊர் பஞ்சாயத்திடம் விட்டுட்டு நீங்க நிம்மதியா தூங்குறீங்களா? இதற்கு நானே இறந்திருந்தா கூட சந்தோஷப்பட்டிருப்பேன்'' என அவள் கண்கள் கேட்டன. நேரடியாக சண்டை போட்டபோது கூட மெளனமாக இருந்த லோகுவா பதில் சொல்ல போகிறான், அவன் கண்ணாடி ஃபிரேமுக்குள் இருந்த லேசாக சிரித்தான்.
லோகுவின் முதலாளி மூச்சை இழுத்துவிட்டுட்டு பேச ஆரம்பித்தார்.
""லோகு கடைசி வரைக்கும் தன் தங்கைகளுக்காகவே வாழ்ந்தவன். இவ்வளவு கடன் கூட அவன் தங்கைகள் கல்யாணத்துக்கு வாங்கிய கடன்தான். அதனால்..''
""புரியுதுங்க ஐயா'' லோகுவின் தங்கை மது பேச ஆரம்பித்தாள்.
''அண்ணியை என் கூடவே அழைச்சிட்டு போய் வெச்சுக்கிறேன். எங்க அண்ணனுக்காக இது கூட செய்யலைனா எப்படி?''
முதலாளி வேம்புவைப் பார்த்தார்.
''எனக்கும் சம்மதம். வசதியில வேணும்னா குறைஞ்சவங்களா இருக்கலாம். ஆனா, நான் குடிக்கிற கஞ்சில எங்க அண்ணிக்கும், அண்ணன் பையனுக்கும் ஊத்தாமலா போயிடுவோம்.'' - வேம்பு பதிலளித்தாள்.
லோகுவின் முதலாளி ராகவியை அழைத்தார்.
''அம்மா ராகவி. லோகுவின் இரண்டு தங்கைகளும் உன்னை தன்னோட வச்சிக்க சம்மதிச்சிட்டாங்க. ஆனா, யார் கூட தங்கணும்னு முடிவு நீ தான் எடுக்கணும்.'' 
ராகவி தலையை ஆட்டினாள். கூட்டம் கலைந்தது.
மது அண்ணியின் அருகில் அமர்ந்தாள். 
''அண்ணி உங்களை நான் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. யார் கூட இருந்தாலும் எனக்கு சம்மதம்தான். இப்ப கூட வேண்டாம்... நல்லா யோசிச்சு நாளைக்கு உன் முடிவைச் சொல்லு''
மதுவுடன் செல்வதா, இல்லை வேம்புவுடன் செல்வதா. முடிவு, இப்போது ராகவியின் கையில். இங்கேயே தனியா இருக்கலாமா என்று கூட யோசித்தாள். முதலாளி சொன்னது போல் இந்த ஊர் பெரிய மனிதர்களின் கந்தர்வ கணைகளை எதிர்த்து நம்மால் இங்கு இருக்க முடியாது என ஒதுக்கினாள். நல்லதோ கெட்டதோ நாத்தனாருடன் செல்வது என முடிவு எடுத்தாள்.
வேம்பு - படிக்காதவள்.கெட்டவள் ஒன்றும் இல்லை. ஆனால், வெடுக்கென்று பேசுபவள். அவளின் வார்த்தைகள் எத்தனையோ தடவை ராகவியைக் காயப்படுத்தியிருக்கின்றன. அதானால்தான் கடவுள் தரித்திர வாழ்க்கையை தந்து மலடியாக வைத்திருக்கிறான். ஆனால் ஏனோ, லோகுவிற்கு இவள் மேல்தான் பாசம் அதிகம்.
மது - நன்கு படித்தவள். அவள் பேச்சில் நாகரிகம் இருக்கும். மற்றவர்கள் மனதைப் புரிந்து கொண்டு நடக்கதெரிந்தவள். அதனால்தான் நல்ல உத்தியோகத்தில் இருக்கும் கணவன் கிடைத்தார். இவளும் வேலைக்கு போகிறாள். மணிமணியாக இரண்டு குழந்தைகள். நல்ல சந்தோஷமான வாழ்க்கை.
வேம்புவுடன் போனால் தினமும் அவளின் வார்த்தைகளில் பொசுங்க வேண்டியிருக்கும். மதுதான் நம்மை நன்றாக கவனித்துக் கொள்ளுவாள். வசதி நிறைந்த வீடு. அங்கு நமக்கு எந்தக் குறையும் இருக்காது. காலை வரை பொறுக்க வேண்டியதில்லை. இப்போதே நம் முடிவை சொல்லிவிடலாம். மதுவின் அறையை நோக்கி நடந்தாள்.
கதவைத் தட்ட சென்றவளுக்கு உள்ளிருந்து மதுவும் அவள் கணவனும் பேசிக்கொண்டிருப்பது கேட்க 
அப்படியே நின்றாள்.
''ஏண்டி. பிச்சைகாரனுக்கு பத்து பைசா போட கூட நூறு முறை யோசிப்ப. இப்ப என்ன உன் அண்ணன் குடும்பத்துமேல திடீர் பாசம்?''
""பாசம் இல்லைங்க வேஷம். இரண்டு பேரும் வேலைக்கு போறோம். அதனால துணி துவைக்க, பாத்திரம் தேய்க்க, வீட்டை பெருக்கன்னு மாசம் வேலைகாரிங்களுக்கு மட்டும் சுளையா ஆயிரம் ரூவா அழ வேண்டியிருக்கு. அது மட்டுமா? வந்தவுடன் சூடா காபி கொடுக்கணும், தீபாவளி பொங்கலுக்கு துணி. இன்னும் எவ்வளவோ இருக்கு. ஆனா அண்ணி வந்தா, சோற்றை போட்டுட்டு அத்தனை வேலையும் வாங்கிடமாட்டேன்''
''சம்பளம் இல்லாத வேலைக்காரின்னு சொல்லு.''
''கரெக்ட்''
ராகவி அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். நல்லவள் என்று நம்பிய இவள், இவ்வளவு மோசமாக இருப்பாள் என்று எதிர்ப்பார்க்கவில்லை. உள்ளம் உறைந்தவளாய் அங்கிருந்து நகர்ந்தவளை, வேம்புவின் அறையில் இருந்து வந்த பேச்சுக்குரல் நிறுத்தியது. நல்லவள் என்று நம்பிய இவளே இப்படி என்றால், வேம்புவை பற்றி கேட்கவா வேண்டும். என்ன பேசுகிறாள் என்ற கேட்க தோன்ற, காதுகளை கூர்மையாக்கிக் கொண்டு அறை வாசலில் நின்றாள்.
''ஏ...புள்ள எனக்கு மட்டும் ஆசையில்லையா என்ன. நாமளே குடிக்கிறது கஞ்சி. அத ஊத்தி அவங்களையும் கஷ்டப்படுத்தனமா?''
''உனக்கு என்னய்யா வேண்டும் மூன்று வேளை சுடு சோறுதான. நானும் வேலைக்கு போறேன். புள்ளகுட்டி இல்லாத வீட்டிற்கு என்ன கிடக்குதுன்னு கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு கம்முன்னு கிடந்தேன். எங்க அண்ணியும், மருமகனையும் காப்பாற்ற வேலைக்குப் போகிறதா முடிவு பண்ணிட்டேன். இத்தன நாளா என் வயித்தில புள்ளைய குடுக்கலையேன்னு கஷ்டபட்டேன். ஆனா, எங்க அண்ணன் குடும்பத்தை காப்பாற்றதான் கடவுள் அப்படி செய்திருக்கான்னு இப்ப சந்தோஷப்படறேன்.'' மூச்சுவிடாமல் பேசி முடித்தாள்.
''எம்புள்ள... மனசில இம்புட்டு பாசம் வெச்சிருக்க. வந்தவுடனே உங்க அண்ணிய கேட்காத கேள்வி கேட்ட?''
''எனக்கு என்னய்யா கேக்கணும்னு ஆசையா என்ன? கட்டின புருஷன் செத்து கிடக்கும் போது அழுவாம உட்கார்ந்திருந்தா ஊர் செனம் கண்,காது வெச்சி அவங்கள தப்பா பேச மாட்டாங்களா. அதான் அழ வைக்க அப்படிப் பேசினேன்.''
''இப்படி செஞ்சதினால உனக்கு கெட்ட பேரே தவிர, 
நீ நல்லது நினைச்சுது யாருக்கு புரிய போகுது?''
''எனக்கு நல்லதுன்னு பட்டது செஞ்சேன். நல்லபேர் வாங்க பேசற வார்த்தை ஜாலம் எல்லாம் எனக்கு தெரியாது''
ராகவிக்கு இப்போது கணவன் இறந்ததைக் காட்டிலும் அதிகமாக அழத் தோன்றியது. தனக்கென்று இருந்த தட்டுமுட்டு சாமான்களை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்... ஏழ்மையும் அன்பும் நிறைந்த வேம்புவின் வீட்டிற்கு 
கிளம்புவதற்காக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com