ஒரு முன்னாள் காதல் கதை

""யாரு சுடலையாடெ?'' -முகத்தைக் கூர்ந்து பார்த்தபடி  கேட்டார் அந்தப் பெரியவர்.
ஒரு முன்னாள் காதல் கதை

""யாரு சுடலையாடெ?'' -முகத்தைக் கூர்ந்து பார்த்தபடி  கேட்டார் அந்தப் பெரியவர்.
""ஆமா...''
""அட பாவி பயலே... இப்டியா, ஒரேயடியாவா ஊரை மறந்து போவ? கொடைக்கு கூட வரமாட்டேங்கியெ?''
சுடலை புன்னகைத்தான். அந்தப் பெரிய மீசையைக் கொண்ட வயதானவர் கேட்டார், ""என்னைய யாருன்னு தெரியுதா?'' என்று.
""தெரியாம இருக்குமா? சுப்பையா மாமால்லா?'' என்றதும் அவர் சிரித்துக் கொண்டார். தோளில் கிடந்த துண்டை எடுத்து தலையில் கட்டினார்.
""ரயில்ல உக்காந்திருக்கும்போதே, சொடலையாதாம் இருக்கும்னு நெனச்சென். இருந்தாலும் கொஞ்சம் புடிபடலை பாத்துக்கெ. வயசாயிட்டுல்லா?''
""ஆங்...''
""நாங்கள்லாம் சொந்த பந்தம் இல்லயாடா ஊருல? ஒரு நல்லது பொல்லதுக்கு கூட வரலைன்னா, பெறவு என்னடெ மனுஷன் நீ? இங்க யாருதாம் தப்பு பண்ணல? எல்லாரும் யோக்கியனாவா இருக்காம்? கொலைகாரப் பயலுவோளே ஒண்ணுமே நடக்காத மாதிரி அலைஞ்சுட்டு இருக்கானுவோ. நீ என்ன பண்ணிட்ட, ஊரு ஒலகத்துல பண்ணாத தப்பை?''
சுடலை எதுவும் பேசவில்லை வியர்வையை ஊற்றென வடிய வைத்துக் கொண்டிருந்தது, கோடை. ஆடாமல் அசையாமல் சிலை மாதிரி நின்று கொண்டிருந்தன மரங்கள். இந்த வெயிலிலும் எதையோ தேடிப் பறந்து கொண்டிருந்தன பறவைகள். செங்கோட்டை செல்லும் ரயிலில் இறங்கி, ஊரை விட்டுத் தனியாக இருக்கும் ஸ்டேஷனில் இருந்து நடக்கத் தொடங்கினார்கள். சுடலைக்கு முன்னே சுப்பையா மாமாவும் சுடிதார் அணிந்த இரண்டு இளம் பெண்களும் ஒரு வயதான  பெண்ணும் சென்று கொண்டிருக்கிறார்கள்.
தலையில் இறங்கும் சூட்டின் தகதகப்புக்கு ஒரு கர்சிப்பை அதில் போட்டுக் கொண்டான் சுடலை. செம்மண்தரை தாண்டி சில அடிகள் வைத்ததுமே, கருங்கல் சாலை.
"எத்தன வருஷமாச்சு?'  என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட சுடலை, தோளில் தொங்கிய பையை சரிபடுத்திவிட்டு நடந்தான். 
""ஒம்மவனுக்கு கல்யாணம்னு சொன்னாவோ?
""ஆமா...''
""நீ ஊருக்கு வரலைன்னாலும் நாங்க நெனச்சுக்கிடுவோம். போன பொங்கலு போட்டியில கூட ஒன் ஞாபகம் வந்துச்சுன்னா பாரென்''
""ம்ம்...''
""இப்பமாது சொந்த பந்தம் தேடுச்சே''
""பத்திரிகை கொடுக்கணும்லா''
""ஆயிரம் இருந்தாலும் இந்த மாதிரி விசேஷத்துல சொந்தம் இல்லாம முடியுமாடா? இன்னா, தேடி வந்துட்டல்லா?''
""ஊருக்கு வந்து இருவது இருவத்தஞ்சு வருஷம் இருக்குமா?
""இருவத்தியேழு வருஷம்''
""ஏ, பாவி பயல. வைராக்கியமா இருந்துட்டியடா...''

சுடலை, ஊரில் கபடி வீரனாக அறியப்பட்டிருந்தான். பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் முக்கியமானதாக இருந்தது கபடி. சின்னப் பயல்கள் செட், வாலிபர்களுக்கான செட், இளைஞர்களுக்கான செட், கொஞ்சம் வயது முதிர்ந்தோர் செட் என கபடி ஆட்டம் பிரிக்கப்பட்டிருந்தது. விளையாட்டும் அந்த வரிசைப்படியே ஆரம்பிக்கும். 

இந்தப் போட்டிகள் நடக்கும் இடம், உள்ளூரில் கொஞ்சம் வசதி படைத்தவரான கருப்பையா வீட்டின் எதிரில். கபடி போட்டியில் பேரார்வம் கொண்டவரான அவர் வீட்டு, மாட்டு வண்டிகள் இலவசமாக நான்கைந்து லோடு ஆற்றுமணலை அடித்திருக்கும். பெருங்கூட்டத்துடன் இருக்கும் அவர் வீட்டுப் பெண்கள், கோலப்பொடியால் வண்ணக்கோலம் போட்டு அழகு படுத்துவார்கள் அந்தப் பகுதியை. மாலையில் டியூப் லைட் வெளிச்சம் பளிச்சென மின்ன, கபடி போட்டி நடக்கும்.

அந்த வீட்டில் ஒருத்தியாக இருந்தாள், பேரழகு எதையும் பெருமளவு கொண்டிராத வள்ளி நாயகி. ஆனாலும் அவளிடம் ஏதோ ஈர்த்தது சுடலைக்கு. யாரையும் எடக்காகப் பேசியே பழக்கம் கொண்ட அவளுக்கும் சுடலைக்கும் காதல் வளர்ந்தது இந்தக் கபடி போட்டிகளின் போது. 

காதல் முளைவிட ஆரம்பித்ததுமே, பொங்கலுக்கு மட்டுமே நடக்கும் கபடி போட்டியை ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறுகளில் விளையாடுவது என்கிற சூழலுக்கு ஊர்க்காரர்களைக் கொண்டு வந்தான், சுடலை. இதற்கு அவனுக்கு உதவி செய்தது, உள்ளூரில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் வள்ளிநாயகியின் அக்காள் கணவர் இசக்கி. அவருக்கும் சுடலைக்கும் வயது வித்தியாசம் தாண்டிய நெருக்கம் ஏற்படுவதற்கு காரணம், பீடி.

""வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பவருக்கு என்ன பீடி வேண்டி கெடக்கு?'' என்று பெரிய வீட்டில் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக, யாருக்கும் தெரி யாமல் அவர் பீடி குடித்து வந்தார். ஆனாலும் அரசல் புரசலாக யாராவது போட்டுக் கொடுத்துவிடுகிறார்கள். அதனால் சுடலையை நம்பி அவனை மட்டும் துணைக்கு வைத்துக்கொண்டு பீடி குடித்து வந்தார். சுடலைக்கு புகை பழக்கம் இல்லையென்றாலும் ஒரு கம்பெனிக்காக, அவருடன் அலைவான்.

பாவூர்சத்திரம் மற்றும் கடையத்தில் கபடி அணிகள் இருந்தன. அதை போல நாமும் ஒரு டீமை உருவாக்கலாம் என்றும்; அதற்கு ஒவ்வொரு சனி, ஞாயிறுகளில் கபடி பயிற்சியை நடத்தலாம் என்றும்; அப்படி நன்றாகப் பயிற்சிப் பெற்றால் டோர்னமென்ட்டுகளில் கலந்து கொள்ளலாம் என்றும் சொன்னான் சுடலை. இதை இசக்கியும் அடிக்கடி பெரிய வீட்டில் சொல்ல, ""சரி, ஒரு டீமை உருவாக்குவோம்'' என்றார்கள். 

இதைக் காரணமாக வைத்தே, தினமும் அந்த வீட்டுத் திண்ணைக்கு வந்துவிடுவான் சுடலை. கிராமத்துத் திண்ணைகள், கூடி கதை பேசும் இடமாக மட்டுமல்லாமல், காதல் வளர்க்கும் இடமாகவும் இருந்ததற்கு சுடலையே சாட்சி... 
 இந்தக் காதல் ஒரு பொங்கல் நாளில், வீட்டோடு மாப்பிள்ளை இசக்கிக்குத் தெரிய வந்ததும் பதறினான் சுடலை.

""நாம்லாம் உன் வயசுல ரெண்டு லவ்வு பண்ணுனவன்... இந்த வயசுல இதெல்லாம் இல்லாம எப்படி இருக்க முடியும்? நான் கண்டுக்கிடமாட்டேன். உன் லவ் மேட்டருக்கு  என்ன உதவின்னாலும் நா பண்ணுதம். நீ என் தம்பி மாரில்லா'' என்றான் இசக்கி.

தம்பிகளின் காதலுக்கு எந்த அண்ணன்கள் உதவியிருக்கிறார்கள்? இருந்தாலும் சுடலைக்குத் தெம்பாக இருந்தது.

வள்ளிநாயகிக்கு வீட்டில் மாப்ள பார்க்கத் தொடங்கியிருந்தார்கள். பத்தையில் அவர்கள் உறவினர் ஒருவருக்கு அவளைக் கட்டி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. இசக்கி மூலமாக இதை அறிந்தான் சுடலை.  இப்போது என்ன செய்யலாம் என்கிற யோசனையையும் சுடலைக்கு சொன்னான் இசக்கி.
""பேசாம அவளெ கூட்டிட்டுப் போயி கோயில்ல தாலி கட்டிரு. கெட்டிட்டு தென்காசியில இருக்கெ ஒங்க சின்ன மாமா வீட்டுக்குப் போயிரு. ஒரு ரெண்டு, மூணு நாளு சத்தம் போடாம இருந்தன்னா, பெறவு எங்க மாமனாரு உங்களைத் தேடி வந்து பேசி, ஒரு நல்ல நாள் பாத்து, கல்யாணத்தை பண்ணி வச்சிருவாவோ. என்ன சொல்லுத?'' என்றான் இசக்கி.

 ""கல்யாணம் பண்ணி வைக்கலன்னா?''

 ""பெறவு நா எதுக்கு இருக்கென்?'' என்றான்

இசக்கி சொன்னதை நம்பி காரியத்தில் இறங்கிய சுடலை, ஒரு நாள் அதிகாலையில் வள்ளிநாயகியை அழைத்துக்கொண்டு திருச்செந்தூர் சென்றான். பெருங்கூட்டம் அலைமோதிய செந்தூரில் முருகனை வழிபட்டுவிட்டு அவளுக்கு நேற்று வாங்கி வைத்திருந்த தாலியைக் கட்டினான். ஓடி வந்து உட்கார்ந்து கொண்ட வெட்கத்துடன் இருந்த வள்ளிநாயகிக்கு ஊரில் இப்போது என்ன நடக்கும் என்பதே கவலையாக இருந்தது.

மதியம் வரை திருச்செந்தூரில் சுற்றிவிட்டு, தென்காசியில் இருக்கும் சின்ன மாமா வீட்டுக்கு பஸ் ஏறினார்கள். 

கருப்பையா மிருகமாகியிருந்தார். வீட்டில் எல்லோரையும் திட்டி தீர்த்தார். கடைக்குட்டி என்று செல்லமாக வளர்த்தப் பிள்ளை, இப்படி பண்ணிவிட்டாளே என்கிற நினைப்பே, அவரது ரத்தக் கொதிப்பை அதிகரிக்கச் செய்தது. சுடலையின் அம்மாவிடம், யாராரோ வந்து விசாரித்துவிட்டு போனார்கள். கஷ்டப்பட்டு அவனைப் படிக்க வைத்துக்கொண்டிருந்தால், இப்படியொரு காரியத்தை பண்ணிட்டானே என்று நினைத்தவள், இதற்கு, அவன் கெரகம் சரியில்லாததே காரணம் என நினைத்து, அவனுக்காக சாத்தூர்  மாரியம்மனுக்கு முடிகாணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டாள்.

இரவில் வீட்டுக்குத் திரும்பிய, லாரி கிளீனராக வேலை பார்க்கும் நாராயணன், தென்காசி பேருந்து நிலையத்தில் இவர்கள் இருவரையும் பார்த்ததாகச் சொன்னான். கருப்பையா வீட்டில் வேறு யோசனையே இல்லை. பஸ் ஏறினார்கள் நான்கைந்து பேர்.

தென்காசியில் தனது மாமா வீட்டில், அப்போது அறுத்த வாழை இலையில் காதல் மனைவியோடு சுடலை, சுடு சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த போதுதான் அந்த வீட்டுக்குள் அவர்கள் நுழைந்தார்கள். சாப்பாடு அதற்குமேல் இறங்கவில்லை இருவருக்கும்.

""ஏல, ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நாங்க கல்யாணத்தை பண்ணி வச்சிருக்க மாட்டமா? இப்படி அவசரப்பட்டுட்டேளே...'' என்றார்கள். வள்ளிநாயகிக்குக் கண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது. அப்பாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள்.

""சுடலை நீ வேணும்னா, இங்க ரெண்டு நாளு தங்கிட்டு வா. இவளை மட்டும் கூட்டிட்டுப் போறோம். எல்லாரும் ஒண்ணா போனா, தப்பா பேசுவானுவோ, கேட்டியா? ஒண்ணும் கவலப்படாத, நீ ஒண்ணும் வேற எவனோ கெடயாது. ஒங்க கல்யாணத்தை நா நடத்தி வைய்க்கேன்'' என்றார்  அவள் அப்பா. தலையாட்டினான் சுடலை. 

பிறகு நடந்ததெல்லாம் சினிமாவில் பார்த்தது போல்தான். ஊரில் இருந்து தென்காசிக்கு வந்த அவன் அம்மா, ""எய்யா சொடலை. எங்கயாது ஊரை பார்த்து ஓடிரு. அந்தப் புள்ளைக்கு உள்ளூர்லயே மாப்பிள்ளை பாத்தாச்சு. அஞ்சு நாள்ல கல்யாணம். ஒன்னய கொன்னே போடுவாவோ'' என்று கண்ணீர் விட்டாள்.  வேறு வழியே இல்லை.

பிறகு அவளுக்கு கல்யாணம் நடந்த நாளில், தென்காசியில் இருந்து சென்னைக்கு பஸ் ஏறினான். இனி எக்காரணம் கொண்டும் ஊருக்கு வரக் கூடாது என்று வைராக்கியமாக முடிவு செய்தான். சில முடிவுகளைக் காலம் எடுத்துவிடுகிறது. அது நல்லதாகவோ, கெட்டதாகவோ.

சென்னையில் மோட்டார் நிறுவனம் ஒன்றில் வேலை. அங்கேயே திருமணம். இரண்டு பிள்ளைகள். காலம் வேகமாக ஓட, மூத்தமகனுக்கு இப்போது கல்யாணம். இதோ வந்துவிட்டான், மீண்டும் சொந்த ஊருக்கு.

ஒவ்வொரு வீட்டிலும், ""இப்படி வராம இருந்துட்டியெ...'' என்றே விசாரித்தார்கள். பழைய விஷயம் எதையும் யாரும் கேட்கவில்லை. ஓடி, ஆடிய தெருவில் நடந்தான். அவன் பாதங்களை நன்றாக அறிந்திருந்த செம்மண் தரை, இப்போது இல்லை. ஊர் மாறியிருந்தது. தெருக்கள், சிமெண்ட் சாலையாகி இருந்தன. மரங்களடர்ந்த வீடுகளைக் கொண்ட தெருவில் மரங்களற்ற வீடுகள் அதிகமாக முளைத்திருக்கின்றன. 

ஒவ்வொரு வீடாக விசாரித்தபடி பத்திரிகை கொடுத்துக் கொண்டிருந்தான். அந்த மச்சி வீட்டின் வாசலில் நின்று, ""பழனியண்ணன் வீடுதானெ இது?"" என்று விசாரிக்கப் போனான். வீட்டுக்குள் இருந்து  வள்ளிநாயகி வந்தாள். அவனுக்குத் திடீர் படப்படப்பு. இந்த வீட்டில் அவளை அவன் எதிர்பார்க்கவில்லை. திடீரென்று பழங்காதல் மூளைக்குள் வந்து மின்னல் வெட்டிப் போனது. அவளோடு பழகிய காலம் கண்முன் நின்று காதல் பேசியது. இருந்தாலும் வார்த்தை வரவில்லை. ஆனால், அவள் இயல்பாக இருந்தாள். ""வீட்டுக்குள்ள வாங்க"" என்றாள் புன்னகைத்தபடி. 

""இவ்வளவு வருஷம் கழிச்சாவது ஊருக்கு வரணும்னு தோணுச்செ'' என்று சிரித்துக்கொண்டு கேட்டாள். நிறையப் பேச வேண்டும் என நினைத்தான். பிறகு, ""மவனுக்கு கல்யாணம்...''என்றான் தயக்கமாக. ""கேள்விப்பட்டேன்'' என்ற வள்ளிநாயகி உட்காரச் சொன்னாள்.

சேரில் அமர்ந்து வீட்டைச் சுற்றி பார்வையை விட்டான். பிறகு அவளைப் பார்த்தான். அவளிடம் பெரிய மாற்றம் ஏதுமில்லை. தலைமுடி நரைக்கத் தொடங்கி இருக்கிறது. கண்களில் கண்ணாடி மாட்டியிருக்கிறாள். இது கூட அழகாகத்தான் இருக்கிறது.  சுடலை, தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவள் சிரித்து விட்டு,  வீட்டுக்குள் திரும்பி, ""ஏ லட்சுமி காபி போட்டுக் கொண்டா...'' என்றாள்.

""யாருக்கு?''என்று உள்ளிருந்து கேட்டபடி வந்த லட்சுமி, வள்ளிநாயகியின் சாயலையே கொண்டிருந்தாள். ""இது என்னோட ரெண்டாவது மவா...'' என்று அறிமுகப்படுத்தினாள் சுடலையிடம். தனது மகளாக இருக்க வேண்டியவள் என நினைத்துக் கொண்டான். இது தேவையில்லாத நினைப்புதான். பிறகு அவளிடம் திரும்பிய வள்ளி நாயகி, ""நான் சொல்லியிருக்கம்லா, சுடலைன்னு... இவங்கதான் அவங்க''என்றதும் புரிந்துகொண்ட லட்சுமி, சிரித்துவிட்டுப் போனாள்.

பிறகு சம்பிரதாயங்கள் முடிந்து கிளம்பும்போது வெளியில் அந்தச் சத்தம் கேட்டது.

""நாம்லாம் அந்த காலத்துல ரெண்டு லவ்வு பண்ணுனவன். இந்த வயசுல இதெல்லாம் இல்லாம எப்படி இருக்க முடியும்? உன் லவ் மேட்டருக்கு என்ன உதவின்னாலும் கேளு, நா பண்ணுதம்.  நீ என் தம்பி மாரில்லா...'' என்ற சத்தத்தை கேட்டதும், வாசல் தாண்டி வந்து பார்த்தான்.

ஒரு வாலிபனின் தோளில் கைபோட்டபடி நின்றிருந்தான், வீட்டோட மாப்பிள்ளை இசக்கி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com