ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: துத்தி எனும் ஒரு மூலவலி நிவாரணி!

என் வயது 65. இரண்டு வருடங்களுக்கு முன் மூலம் ஆப்ரேஷன் செய்து கொண்டேன்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: துத்தி எனும் ஒரு மூலவலி நிவாரணி!

என் வயது 65. இரண்டு வருடங்களுக்கு முன் மூலம் ஆப்ரேஷன் செய்து கொண்டேன். மலத்துவாரத்தில்இருந்த புண்ணை சரி செய்து மலத்துவாரத்தையும் கொஞ்சம் பெரிது செய்து இருப்பதாக டாக்டர் சொன்னார். இரண்டு வருடகாலமாகப் பிரச்னை  ஏதுமில்லை. தற்சமயம் 6 மாத காலமாக ஆசனவாயில் கடும் வலி ஏற்படுகிறது. வலி நிவாரணி மாத்திரைகள் தற்காலிகமாகத்தான் வலியைப் போக்குகின்றன. துத்தி தழையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுகிறேன். இந்தத் தழையின் மருத்துவகுணங்கள் எவை? வலியை எப்படிக் குறைப்பது? 

பி. இளங்கோவன்,  ஈரோடு.

துத்தி ஓர் அற்புதமான மூலவலி நிவாரணியாக குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிடுவது போல, மோருடன் கலந்து குடிப்பதை விட, துத்தி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, மூலம், பவுத்திரம், ஆசனவாய் கடுப்பு ஆகியவற்றின் மீது வைத்துக் கட்ட குணமதிகம். அல்லது இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, ஒத்தடம் கொடுத்து பொறுக்கும் சூட்டில் வைத்துக் கட்டுவதும், இலைகளுடன் பயத்தம் பருப்பு, துவரம் பருப்பு கலந்து சமையல் செய்து சாப்பிட்டாலும் ஆசனவாய் வலி நன்கு குணமடையும்.

துத்தி பற்றிய சில அறிய தகவல்கள்: 

தாவரவியல் பெயர் - Abutilon indicum 
சமஸ்கிருதம் - அதிபலா
வளரியல்பு - குறுஞ்செடி

தாவரவிளக்கம்: இதய வடிவமான இலைகளையும், பொன் மஞ்சள் நிறமான சிறு பூக்களையும், தோடு வடிவமான காய்களையும் கொண்ட தாவரம், 2 மீ வரை உயரமானவை. தாவரம் முழுவதும் மென்மையான உரோமங்கள் உண்டு. இவை நமது தோலில் பட்டால் அரிப்பு ஏற்படும். இலைகள் அடிபாகம் மெழுகு பூசியது போன்று காணப்படும், சில நேரங்களில் 3 மடல்களாகப் பிரிந்திருக்கும், தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் களைச்செடியாக வளர்கின்றன. கடற்கரையோரங்கள், சமவெளிகளில் அடர்ந்து காணப்படும். இலை, பூ, விதை, வேர், பட்டை ஆகியவை மருந்துவப் பயன் கொண்டவை. பசும் துத்தி, பெருந்துத்தி, பணியாரத் துத்தி, கருந்துத்தி, நிலத்துத்தி என்னும் பலவகைகளும் உண்டு.

மருத்துவப் பயன்கள் 

மற்றும் மருந்து முறைகள்: தாவரம், பொதுவாக இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இலை, அழற்சியைப் போக்கும், மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றைக் குணமாக்கும். நோய் நீக்கி உடலைத் தேற்றும், கருமேகம், உடல் சூடு போன்றவற்றைக் குணமாக்கும், சிறுநீரைப் பெருக்கும், பூ, ரத்தப்போக்கை அடக்கும், இருமலைக் குறைக்கும், ஆண்மையைப் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும். விதை, இனிப்புச் சுவையுடையது. சிறுநீர் எரிச்சல், ஆசனக்கடுப்பு, வெள்ளைப்படுதல், கரும்புள்ளி, போன்றவற்றைக் குணமாக்கும்.

புண்கள் குணமாக:   இலைச்சாற்றுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும். 

கட்டிகள் உடைய:   இலைச்சாற்றைப் பச்சரிசி மாவுடன் கலந்து, கிண்டி, கட்டிகளின் மீது வைத்துக் கட்ட வேண்டும்.

வெள்ளைப்படுதல் குணமாக:  துத்தி இலைகளை நெய்யில் துவட்டி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். அல்லது இலையை காரமில்லாமல் பொரியலாகச் செய்து சாதத்துடன் பிசைந்து, 40 முதல் 120 நாட்கள் வரை சாப்பிட வேண்டும். இந்தக் காலத்தில், புளி, காரம், மாமிசம் நீக்கிய உணவைச் சாப்பிட வேண்டும், புகைப்பிடித்தல் கூடாது. 

இரத்த வாந்தி கட்டுப்பட:  20 மி.லி. பூச்சாற்றுடன், சிறிதளவு கற்கண்டு சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

உடல்சூடு குணமாக:  பூக்களை உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு தூள், ஒரு டம்ளர் பாலில் கலந்து இரவில் மட்டும் குடித்து வர வேண்டும்.

மேகநோய் குணமாக:   துத்தி விதைச்சூரணம் ஒரு தேக்கரண்டி, கற்கண்டு ஒரு தேக்கரண்டி தேனில் கலந்து உட்கொள்ள வேண்டும்.

உடல்வலி குணமாக:   இலைகளை கொதிநீரில் போட்டு வேக வைத்து, அந்த நீரில் துணியை தோய்த்துப் பிழிந்து, வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.  பெருங்காயம், விளக்கெண்ணெய் மற்றும் பூண்டின் கலவை கொண்டு தயாரிக்கப்படும் ஹிங்குதிரிகுண தைலம் எனும் ஆயுர்வேத மருந்தை, இரும்புக் கரண்டியில் சூடாக்கி, வெது வெதுப்பாக ஆசனவாயில் தடவி வருவதன் வழியாகவும், ஆசனவாயைச் சுற்றியுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள வலியைக் குணப்படுத்தலாம்.

வெள்ளை வெங்காயத்தையோ, சிறிய சாம்பார் வெங்காயத்தையோ நறுக்கி, விளக்கெண்ணெய்யில் வதக்கி, காலை இரவு உணவிற்கு முன் சாப்பிடுவதனாலும், அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்டுள்ள ஆசனவாய் வலியை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.

குக்குலு திக்தகம் எனும் நெய் மருந்தை சுமார் 15 - 20 மி.லி. நீராவியில் உருக்கி, காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு மாதம் - ஒன்றரை மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வலியைக் குணப்படுத்தலாம்.

சிரிவில்வாதி கஷாயம், துஸ்பர்ஸகாதி கஷாயம் போன்றவற்றில் ஒன்றை உடல் நிலைக்குத் தக்கபடி தேர்ந்தெடுத்து, சிட்டிகை இந்துப்பு கலந்து, அதில் சுகுமாரம் எனும் நெய் மருந்தை 10 மி.லி. அளவுடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதும் மூலம் சம்பந்தப்பட்ட வலி, ஆசனவாய்க் கடுப்பு போன்றவற்றைக் குணப்படுத்தக் கூடியதே.

SITZ BATH எனப்படும் மூலிகை வலி நிவாரணிகளைக் கொண்டு வெது வெதுப்பாக கஷாயம் காய்ச்சி, அதில் சிட்டிகை உப்பு கலந்து அதனுள் ஆசனவாய் நன்கு மூழ்கும்படி சுமார் 15 - 30 நிமிடங்கள் அமர்ந்திருக்கும் சிகிச்சை முறையாலும் உங்கள் பிரச்சனை தீர வாய்ப்பிருக்கிறது.  

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com