சொன்னால் நம்பமாட்டீர்கள் ! - 16

மகாத்மாஜி கடைசியாகச் சென்னைக்கு வந்திருந்தபோது அவரிடம் ராஜாஜி என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.
சொன்னால் நம்பமாட்டீர்கள் ! - 16

தமிழ் ஹரிஜன்

மகாத்மாஜி கடைசியாகச் சென்னைக்கு வந்திருந்தபோது அவரிடம் ராஜாஜி என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். ""பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் பகல் 12 மணிக்கு மக்களால் பகிரங்கமாகச் சிறையை உடைத்து விடுதலை செய்யப்பட்ட முதல் ஆள் இவர்'' என்று கூறினார்.

மகாத்மாஜி ""எந்த ஊரில் நடந்தது?'' என்றார்.

""திருவாடானையில்'' என்றேன் நான் சுருக்கமாக.

""இவர் இப்போது சிறந்த தமிழ்ப் புத்தகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தங்கள் "ஹரிஜன்' பத்திரிகையைத் தமிழில் வெளியிட விரும்புகிறார்'' என்று ராஜாஜி சொன்னார்.

காந்திஜி சிரித்துக்கொண்டு ""அச்சா அச்சா!'' என்று சொல்லி ""நஷ்டம் வராமல் நடத்துவாயா?'' என்று கேட்டார்.

அதற்கு ராஜாஜி, ""இவரும் உங்களைப் போல வைசிய சமூகத்தைச் சேர்ந்தவர்தான். அதனால் அதைப்பற்றிக் கவலை வேண்டாம்'' என்றார். உடனே மகாத்மாஜி ""அச்சா'' என்று கூறி இப்போதே, "தமிழ் ஹரிஜன்' துவக்க விழா நடத்தி விடலாமே, எனக்கு 10 நிமிஷம் ஓய்விருக்கிறதே?'' என்றார். எனக்குக் கையும் காலும் ஓடவில்லை.

ராஜாஜி தலைமையில் காந்திஜியே "தமிழ் ஹரிஜன்' பத்திரிகையைத் துவக்கும் முதல் நடவடிக்கையாக, "தமிழ் ஹரிஜன்' என்று தமிழில் எழுதித் துவக்கி வைத்தார். நான் அதைப் பக்தியுடன் பெற்றுக்கொண்டு நன்றி கூறினேன். எப்படி நன்றி கூறினேன் என்று நினைக்கிறீர்கள். காந்தியடிகளின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்து அவர் பாதத்தைக் கண்ணில் ஒற்றிக்கொண்டேன். அதன் பின்னர் "தமிழ் ஹரிஜன்' பத்திரிகையைத் துவக்கினேன். சிறந்த தேசபக்தரும்--அறிஞருமான திரு. பொ. திருகூட சுந்தரம் பிள்ளை அவர்கள் "தமிழ் ஹரிஜன்'  பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார். காந்திஜி அமரராகும் வரை அந்தப் பத்திரிகையை விடாமல் நடத்தினேன். மகாத்மாஜி என்னை சென்னையில் சந்தித்த மறுவாரம் "ஹரிஜன்' பத்திரிகையில் என்னைப் பற்றி கீழ்க்கண்டவாறு ஒரு குறிப்பு எழுதினார்:

"ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் நடத்துவதற்கு ஓர் இளைஞரை ஸ்ரீ ராஜாஜி சென்னை இந்தி பிரசார சபையில் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த இளைஞர் பெயர் "சின்ன அண்ணாமலை' என்று ராஜாஜி சொன்னார்.

அதன் பின் ஸ்ரீ சின்ன அண்ணாமலையைப் பற்றி ஸ்ரீ சத்யநாராயணா மூலம் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.

சுதந்திரப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றவரென்றும், குறிப்பாக 1942 ஆகஸ்ட் போராட்டத்தில் இவர் இருந்த திருவாடானைச் சிறையை உடைத்து, மக்கள் இவரை விடுதலை செய்தனர் என்றும் அறிந்து ஆச்சரியமடைந்தேன்.

அந்தப் போராட்டத்தில் பல பேர் உயிர் இழந்தனரென்றும் ஸ்ரீ சின்ன அண்ணாமலை கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிர் தப்பியவர் என்றும் கேள்விப்பட்டேன். இப்படிப்பட்ட இளைஞர்களை நினைத்துப் பெருமை அடைகிறேன்.

ஸ்ரீ ராஜாஜி சாதாரணமாக யாரையும் சிபாரிசு செய்யமாட்டார். ஸ்ரீ சின்ன அண்ணாமலையைச் சிபாரிசு செய்திருப்பது ஒன்றே அவர் ரொம்பப் பொருத்தமானவர் என்பதில் சந்தேகமில்லை. எனவே "ஹரிஜன்' பத்திரிகையைத் தமிழில் நடத்த ஸ்ரீ சின்ன அண்ணாமலைக்கு நான் அனுமதி வழங்கி என் வாழ்த்துதலையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்'.

-எம்.கே. காந்தி

கல்கி தந்த கார்!

கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சென்னையில் அடையாறு பங்களாவில் வசித்து வந்தார். நான் தினமும் மாலை 4 மணிக்கு அவரைப் பார்க்கப் போவேன். இருவரும் பல விஷயங்களைப் பற்றிப் பேசுவோம். பின்னர் விடை பெற்றுக் கொண்டு நான் வீட்டிற்குச் செல்வது வழக்கம். சில சமயம் இரவு 8 மணி கூட ஆகும்.

ஒரு நாள் இரவு 10 மணி ஆகிவிட்டது. கல்கியிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன். மாடியிலிருந்தபடியே அவர் நான் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார். கேட் அருகில் நான் சென்றதும், என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, ""கார் எங்கே?'' என்று கேட்டார்.

""காரா? கார் ஏது'' என்றேன்.

""சரி இங்கே வாங்கோ,'' என்றார். மீண்டும் மாடிக்குப் போனேன்.

""தினமும் மாம்பலத்திலிருந்து எப்படி வருகிறீர்கள்?'' என்றார்.

""பஸ் மூலம்தான். லஸ் வந்து பஸ் மாறி அடையாறு வருவேன்'' என்றேன்.

""ஓகோ அப்படியா?'' என்று கேட்டுவிட்டுத் தன் மைத்துனனைக் கூப்பிட்டு என்னைக் காரில் வீட்டுக்குக் கொண்டுபோய் விடும்படி சொன்னார். மறுநாள் வழக்கம் போல் நான் கல்கி அவர்கள் வீட்டுக்குப் போனேன். போனதும் கல்கி என்னைப் பார்த்து, ""உங்களுக்கு கார் ஓட்டத் தெரியுமா?'' என்றார்.

""ஓட்டுவேன்'' என்றேன்.

""சரி கீழே வாங்கோ'' என்று என்னைக் கூட்டிக் கொண்டு கீழே வந்தார். அங்கு ஒரு "போர்டு ஆங்கிலியா' கார் நின்று கொண்டிருந்தது.

""இதை ஓட்டுங்கள் பார்க்கலாம்,'' என்று கூறி அவரும் முன் சீட்டில் உட்கார்ந்துகொண்டார். நான் காரை ஓட்டினேன். பீச்ரோடு வழியாக கார் சென்றது.

""பேஷ் பேஷ்! பிரமாதமாக ஓட்டுகிறீர்களே'' என்று கூறி ராயப்பேட்டை கபாலி பெட்ரோல் பங்கில் நிறையப் பெட்ரோல் போடச் சொல்லி அவர் கணக்கில் கையெழுத்துப் போட்டார். பிறகு அவர் வீட்டுக்குப் போனோம். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு நான் விடைபெற்றேன்.

சொன்னால் நம்பமாட்டீர்கள். கல்கி என் கையில் மேற்படி கார் சாவியையும், ஆர்.சி. புத்தகத்தையும் கொடுத்து ""இந்தக் காரை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், உங்களுக்குத்தான் வாங்கியிருக்கிறது'' என்றார்.

""எனக்கு எதுக்குக் கார், மேலும் இதற்குக் கொடுக்கக்கூடிய பணமும் என்னிடம் இல்லையே,'' என்றேன்.

கல்கி சிரித்துக்கொண்டே, ""பணத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். காருக்குக் கொடுக்க வேண்டிய பணம் பூராவும் கொடுத்தாயிற்று. நீங்கள் தினமும் என்னைப் பார்க்க வரவேண்டியிருக்கிறது. எனக்கும் அன்றாடம் உங்களைப் பார்க்காவிட்டால் என்னவோ போலிருக்கிறது. என் ஆப்த நண்பராகிய நீங்கள் பஸ்ஸிலும் நடையிலும் என்னைப் பார்க்க வருவதை நான் தெரிந்துகொண்டும் சும்மா இருந்தால் அந்த நட்பு உண்மை நட்பு ஆகாது. ஆகவேதான் இந்த ஏற்பாடு. நம் நட்பின் அடையாளமாக இந்தக் கார் உங்களையும் என்னையும் தினமும் சேர்த்து வைக்கும்'' என்று சொன்னார்.

சொல்லும்போதே அவர் கண்களில் நீர் பனித்தது. என் கண்களோ குளமாயின.
கல்கியின் நட்பு எனக்கு அவர் கடைசிக்காலம் வரையில் சிரஞ்சீவியாக இருந்து வந்தது. என்றைக்கும் என்னிடம் ஒரே மாதிரியாக "தாயன்பு' காட்டி வந்த பேரறிவாளர் அவர்.

என் தாய் இறந்தபோதுகூட எனக்கு அழுகை பொங்கி வரவில்லை. ஆனால் காந்திஜி இறந்த போதும் கல்கி இறந்தபோதும்தான் நான் விக்கி, விக்கி அழுதேன். ஏனெனில் காந்திஜிதான் என்னைத் தேசபக்தனாக்கினார், கல்கி என்னை உயர்த்தி உலகுக்குக் காட்டினார்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com