சுடச்சுட

  
  KADHIR16

  திருச்சி விமான நிலையம் எதிர்புறத்தில் லூப்ரா மாற்றுத்திறனாளிகள் சேவை மையத்தை நிறுவி கடந்த 32 ஆண்டுகளாக அதை நிர்வகித்து  வருகிறார் இரு கண்களையும் இழந்த பா.தாமஸ்.  இவர் அந்த சேவை மையத்திற்கு  "லூப்ரா சேவை மையம்' எனப் பெயரிட்டுள்ளார். மூளை வளர்ச்சி குன்றியவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள், ஆதரவற்ற சிறார்கள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 187 பேருக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறது இம்மையம்.

  இவர்களுக்கான மருத்துவச் செலவுகள் செய்தல், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், பார்வையற்றவர்களுக்கு திருமணங்கள் செய்து வைத்தல், ஆதரவற்ற முதியோர்கள் மரணமடைந்து விட்டால் அவரவர்களது மத வழக்கப்படி நல்லடக்கம் செய்தல்  என தாமஸின் சேவைப் பட்டியல் நீள்கிறது. இவை தவிர திருச்சி அருகேயுள்ள 13 கிராமங்களைத் தத்தெடுத்து அக்கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு இரவுநேர பாடவகுப்புகள் நடத்தியும் வருகிறார்.  இவ்வமைப்புக்கு  பொருளாதார வசதி என்ன? அதற்கும் ஒரு குழு வைத்திருக்கிறார்.

  பார்வையற்ற 17 இசைக்கலைஞர்களைக் கொண்டு "ராஜபார்வை' என்ற இசைக்குழுவை தொடங்கியிருப்பதாகவும்,  அந்தக் குழு ஊர், ஊராகச் சென்று பாடுவதில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் இச்சேவைகளை மனநிறைவோடு செய்து வருவதாகவும் தெரிவித்த அவரிடம் தொடர்ந்து பேசினோம்..

  ""எனக்கு 7 வயதிருக்கும் போது கண்களில் வலி ஏற்பட்டது. வலி நிவாரணி என நினைத்து பச்சிலையை கசக்கி கண்களில் விட்டேன். அதோடு கண்பார்வை பறிபோனது. சின்னஞ்சிறு வயதிலேயே கண்களிலிருந்து இரு விழிகளையும் எடுத்தாக வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. கூலித்தொழிலாளியாக இருந்த என் அப்பா என்னைப் பிச்சை எடுக்க வைத்தார். அந்த நேரத்தில் சிறுவனாக இருந்த என்னை பென்ஸ் என்ற கிறிஸ்தவ பாதிரியாரால் நடத்தப்பட்ட கருணை இல்லத்தில் சேர்த்து எனக்கு இசைக்கருவிகளை இசைக்க கற்றுக் கொடுத்தார். 8 வயது முதல் 22 வயது வரை இசை கற்றுக் கொண்டேன்.

  நான் பிச்சை எடுத்தது போல வேறு எந்த மாற்றுத்திறனாளியும் பிச்சை எடுக்கக் கூடாது என்பதற்காக  லூப்ரா சேவை  மையத்தை மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவே தொடங்கினேன். எனக்குத் தெரிந்த இசையை  என் மையத்திலிருந்த பார்வையில்லாத சிலருக்கும் கற்றுக் கொடுத்து ஓர்  இசைக்குழுவையும் உருவாக்கினேன். தற்போது எங்கள் இசைக்குழுவில் 17பேர் உள்ளனர். தமிழகம் முழுவதும் சென்று இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறோம். நடிகர் கமல் பார்வையற்றவராக நடித்த படம் "ராஜபார்வை' என்பதாகும். பார்வையற்ற எங்கள் இசைக்குழுவுக்கும் "ராஜபார்வை' என்றே பெயர் வைத்தேன்.

  ஒரு முறை திருச்செந்தூரில் கச்சேரி நடத்திக் கொண்டிருந்த போது கோயில் கடற்கரையோரத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் 4 வயதுள்ள ஓர் ஆண் குழந்தை ஒன்று கிடந்ததாகவும், அதை    வளர்க்க முடியுமா? என்று எங்களிடம் கொடுத்தார்கள்.   கண்பார்வை இல்லாத அந்தக் குழந்தையின் கழுத்து நிற்காமல் ஆடிக் கொண்டே இருந்தது. ஆட்டிஸம் என்ற நோயால் பாதிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்ட அந்தக் குழந்தையை போலீஸார் எங்களிடம் கொடுத்து வளர்க்கச் சொன்ன போது, அதை சுகமான சுமையாக ஏற்றுக் கொண்டு எடுத்து வந்து வளர்த்தோம். திருச்செந்தூரில் கிடைத்த அந்தக் குழந்தைக்கு செந்தில்நாதன் என்றே பெயரும் வைத்தோம்.

  குழந்தைக்கு வயது ஆக, ஆக பல திறமைகள் இருப்பது தெரிய வந்தது. ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ்,மலையாளம் என 5 மொழிகளில் பாடும் திறமை இருந்தது. இவற்றில் எந்த ஒரு மொழியின்  பாடலையும் ஒரே ஒரு முறை கேட்டால் அதை அப்படியே, அதே ராகத்துடன் மனப்பாடமே செய்யாமல் பாடும் அசாத்திய திறமையுடைய  குழந்தையாக அது இருந்தது. இப்போது செந்தில்நாதனுக்கு வயது 18. இப்போதும் கழுத்து ஆடிக்கொண்டே தான் இருக்கிறது. 

  எங்கள் இசைக்குழு மூலம் வரும் வருமானத்தில் ஆதரவற்ற முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உடல் நலமில்லாமல் உயிரிழந்து விட்டால் அவர்களை அவரவர் மதவழக்கப்படி இதுவரை 100க்கும் மேற்பட்டோரை நல்லடக்கம் செய்திருக்கிறோம். பார்வையற்ற 122 ஜோடிகளுக்கு சொந்த செலவில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறோம். திருச்சி அருகேயுள்ள 13 கிராமங்களில் வசிக்கும் 700 குழந்தைகளுக்கு இரவு நேர பாடவகுப்புகளை இலவசமாக நடத்தி வருகிறோம். இதற்காக மட்டுமே ஒவ்வொரு மாதமும்  ரூ.20 ஆயிரம்   செலவாகிறது. பார்வையற்றவர்களை ஊக்குவிக்க கிரிக்கெட் மற்றும் கபடி போட்டிகளையும் நடத்தி வருகிறோம்.

  பொதுவாக மூளை வளர்ச்சிகுன்றிய குழந்தைகளை வளர்க்க பெற்றோர்கள் சிரமப்படுவதால் அவர்களை வெளியூர்களுக்கு கார்களில் அழைத்து வந்து ஈவு,இரக்கமே இல்லாமல் தனியாக இறக்கி விட்டு,விட்டு போய் விடுகிறார்கள். ஏனெனில் மூளை வளர்ச்சியில்லாத குழந்தைகள் வீட்டில் யாரும் பெண் எடுக்க மாட்டார்கள். அதையும் மீறி பெண் எடுத்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தையும் மூளை வளர்ச்சியில்லாத குழந்தைகளாக பிறந்து விடும் என்ற பயமே அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதையே நாங்கள் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு மூளை வளர்ச்சி இல்லாதவர்களையும் எங்கள் மையத்தில் சேர்த்துக் கொண்டு அவர்களின் நலனுக்காகவே இசைக்குழுவை நடத்தி வருகிறோம்.

  கோயில் திருவிழாக்கள்,பிறந்த நாள், திருமண நாள் நிகழ்ச்சிகளுக்கு எங்கள் இசைக்குழு பாடி அதில் கிடைக்கும் வருமானத்திலும்,  முன்னோர்களின் நினைவு நாட்களுக்கு மையத்தில் உள்ளவர்களுக்கு  உணவு தரும் சில உயர்ந்த உள்ளங்களாலும் எங்கள் மையத்தின் சேவைகள் தொடர்கின்றன'' என்றார் பா.தாமஸ்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai