சுடச்சுட

  
  kadhir14

  புது வருடம் பிறந்துள்ள நிலையில் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுக்குச் செயல் வடிவம் கொடுத்து செய்ய விரும்புகிறேன். அது மருந்தானாலும் சரி, செயலானாலும் சரி. அவற்றை விளக்கிட முடியுமா? 

  -மணிமாறன், ராமேஸ்வரம்.

  வாக்படர் மற்றும் சரகர் எனும் முனிவர்களால் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஆயுர்வேத நூல்களின் பல கருத்துக்களும் இன்றளவிலும் போற்றத்தக்கவையாகவே இருக்கின்றன. நடைமுறை சாத்தியமாகவும் உள்ளன. அந்நூல்களிலிருந்து சில உயர்வான உபதேசங்கள்:

  பிறர் தம்முடன் பேசுவதை எதிர்பாராமல் தானே முதலில் பேச்சைத் தொடங்குவாய். இனிய முகத்துடன் உரிய நேரத்தில் இதமாயும் அளவுடனும் இனியதாயும் பேசுவாய். 

  மனமும் புலன்களும் உனக்கு அடங்கிச் செயலாற்றட்டும். பிறரது வளர்ச்சிக்குக் காரணமான சாதனங்களைத் தான் பெறவில்லையே... அதனைப் பெறவேண்டும் என்று பொறாமைப் படாதே. பிறரது வளர்ச்சியைக் கண்டு பொருமாதே. வரவிருப்பதைப் பற்றிய கவலையும் கிலியும் தேவையற்றது. செய்யத்தகாததைச் செய்வதில் கூச்சமும், எதனையும் ஆழ்ந்து சிந்திப்பதும் சிறப்பு தரும்.

  உடற்பயிற்சி, கிண்டல் பேச்சு, சொற்பொழிவு, வழிநடை, உடலுறவு, கண்விழிப்பு முதலியவற்றில் எத்தனை பழக்கப்பட்டிருந்தாலும் அறிவாளி அவ்வப்போதுள்ள உடல் நிலையை நன்கு கவனித்து, அவற்றைத் தன் அளவிற்கு மீறி கையாளமாட்டான். இவற்றையும் இவற்றைப் போன்றவற்றையும்  அளவிற்கு மீறிக் கையாள்பவன் வலிமையிழந்து திடீரென அழிவிற்கு உட்படுவான்.

  தினமும் இரண்டு வேளைகளிலும் குளிக்க வேண்டும். குளித்த பிறகு முன் உடுத்திய ஆடையை மறுபடிகட்டிக் கொள்ளாதே. நாக்கு, மூக்கு, காது, கண், வாய், மலவாய், சிறுநீர் வாயென ஒன்பது மலத்துவாரங்கள் - அழுக்கு சேருமிடங்கள். நடையால் கால்களிலும் அழுக்கு சேரும். இவற்றை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள். அழுக்கற்ற ஆடை அணி. உடல் நாற்றமகல மணப் பொருளைப் பூசிக்கொள். தோற்றத்தை அழகாக வைத்துக் கொள்.
   எவரையும் தனக்கு எதிரி என்றோ, எவருக்கும் தான் எதிரி என்றோ பிரகடனப்படுத்தாதே. தனக்கு ஏற்பட்ட அவமதிப்பை வெளிப்படுத்தாதே. தனது எஜமானன் தன்னிடம் பிரியமாக இல்லையென வெளிப்படையாகக் கூறாதே. வேறொருவர் இதனைப் பயன்படுத்தி எஜமானனுக்கு மேலும் வெறுப்பேற்படச் செய்யக் கூடும்.

  தன்னிடம் உதவி எதிர்பார்த்து வருபவரை வெறுங்கையுடன் அனுப்பாதே. அவர்களை அவமதிக்காதே. கொடுஞ்சொல் சொல்லாதே. எவரையும் முழுவதுமாக நம்புவதோ, சிறிது கூட நம்பாதிருப்பதோ நல்லதல்ல.
   எல்லா உயிரிடத்திடமும் அன்புடன் பழகு. ஆபத்தான  சூழ்நிலையில்  வருந்துபவர்களுக்கு உதவு. கோபவசப்பட்டு குமுறுபவர்களைச் சமாதானப்படுத்து. பயந்தவர்களுக்கு ஆறுதல் கூறு. சொன்ன சொல்லைக் காப்பாற்று. அமைதியை முக்கியமாக்கிக்கொள். பொறுமையின்மையைத் தவிர்த்துவிடு.

  வாயை மூடிக்கொள்ளாமல் தும்மவோ, சிரிக்கவோ,  கொட்டாவி விடவோ கூடாது. மூக்கை அடிக்கடி நோண்டக் கூடாது. கை, கால் முதலிய உறுப்புகளை இயற்கைக்கு மாறான வழிகளில் உபயோகிக்கக் கூடாது.

  அறம், பொருள், இன்பம் என்ற மூன்றுக்கும் பயன்படாத  எந்தச் செயலையும் தொடங்காதே. இம் மூன்றில் எதனையும் புறக்கணிக்காதே. எல்லா நடைமுறைகளிலும் நடு நிலையைப் பின்பற்று. அதிக ஈடுபாட்டையோ வெறுப்பையோ காட்டாதே.

  காது, கண் முதலிய பொறிகளுக்குத் தேவையானவற்றை மிகவும் குறைத்தளித்து அடக்குவதோ, அளவுக்கு மீறி அளித்து அதிகமாக மகிழச் செய்வதோ தவறு.

  மக்களின் கருத்தறிந்து அவர்களை திருப்திப்படுத்துவதில் தேர்ந்தவனாக இரு. எவர் எவர் எப்படி எப்படி மகிழ்வரோ அப்படி அவர்களுக்கு அனுகூலமாகப் பழகு.

  இறைவனை வழிபடும் போது வேறொரு பணியில் மனத்தைச் செலுத்தாதே. மழையில் நனைந்து கொண்டு ஓடாதே. பிறரைத் துன்புறுத்திப் பணம் சேர்க்காதே.  

  உடலில் பேச்சு மனம் இவை களைப்படையும் முன்பே  இவற்றின் பணிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். பிரயாணம் செய்யும் போது தனக்கு எதிரே அடிக்கும் காற்று, கடும் வெயில், புழுதி, பனிமூட்டம், பேய்க்காற்று இவற்றைத் தவிர்க்கலாம்.

  மேற்குறிப்பட்டவை சில உதாரணங்களே. அவர்கள் மேலும் நிறைய நல் உபதேசங்களை நம் நன்மைக்காக அளித்துள்ளனர். புத்தாண்டில் இவற்றைக் கடைபிடிக்க நீங்கள் தீர்மானித்துவிட்டீர்கள் தானே?
  (தொடரும்)

  பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
  ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
  நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
  செல் : 94444 41771
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai