பேல்பூரி

என்னைத் தேடி  நீ வந்தால்.. உன்னைத் தேடி உலகமே  வரும்.
பேல்பூரி

கண்டது

(சிதம்பரத்திலுள்ள நூலகம் ஒன்றில்) 

என்னைத் தேடி  நீ வந்தால்..
 உன்னைத் தேடி உலகமே  வரும்.

  - நூலகம்
மு.சுந்தரம், தேனி.

(தஞ்சை  மாவட்டம்  திருப்பனந்தாள்  அருகே  உள்ள ஒரு
கிராமத்தின் பெயர்)

சிற்றிடையாள்  நல்லூர்

வீர.செல்வம், பந்தநல்லூர்.

(பட்டுக்கோட்டை  - அறந்தாங்கி சாலையில்  ஆவணத்தான் கோட்டையில் உள்ள ஓர்  உணவகம்)

 மண்பானை  உணவகம்

 ப.விஸ்வநாதன், கீரமங்கலம். 

(திருச்சி சாலையில்  ஒரு வாகனத்தின்  பின்புறத்தில்)

தொடர்ந்து வா  பயமில்லை
தொட்டுவிடாதே  பணமில்லை

கே.விஸ்வநாதன், கோயமுத்தூர். 

கேட்டது

(திண்டுக்கல்  தெற்கு ரத வீதியில் உள்ள டீ கடையில்  இரு நண்பர்கள்)

""மாப்பிள்ளே  உலகமே  ஒரு நாடகமேடை
அதில் நாம் எல்லாம்  நடிகர்கள்...''
""மச்சான்  அப்ப நயன்தாராவோட 
நடிக்க வாய்ப்பு இருக்கா...''
""உங்க வீட்டுக்காரம்மாகிட்ட கேட்டுச் சொல்றேன்''
""நமக்குள்ள  எதுக்குப் பிரச்னை...
மாஸ்டர்  நல்லா சூடா ரெண்டு டீ போடுங்க!''

எஸ்.வேல் அரவிந்த்,  திண்டுக்கல். 

(ராமநாதபுரம்  ரயிலில்  இரு நண்பர்கள்)

 ""நீ சிகரெட்  பிடிப்பியா?''
""இல்லை''
"" நீ தண்ணி அடிப்பியா?''
"" இல்லை''
"" வெரிகுட் ... இப்படித்தான்  இருக்கணும்''
""ஆனா,  அடிக்கடி பொய்  சொல்லுவேன்'' 

ஆ.சுகந்தன்,  தருமபுரி.

யோசிக்கிறாங்கப்பா!


 ஆடம்பரமா வாழ்றதுக்கு  கூட
 அதிகமா  போராட வேண்டியதில்லை!
ஆனால்...
 நிம்மதியா  வாழ்றதுக்கு
 சாகும்வரை 
போராட  வேண்டியிருக்கு!
துரை.ஏ.இரமணன்,  துறையூர். 

மைக்ரோ கதை

ஓர் ஊரில்  துறவி  ஒருவர்  இருந்தார்  அவர்  எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்தார்  தன்னைக் காண வருபவர்களிடம்  கலகலப்பாகப் பேசினார்.

சிரித்த  முகத்துடன்  காட்சி அளித்தார்.  அவருடைய   90-ஆவது பிறந்தாள் விழா சீரும் சிறப்புமாகக்  கொண்டாட  ஏற்பாடு  செய்யப்பட்டது.  பல ஊர்களில் இருந்தும்  அவருடைய சீடர்கள்  விழாவிற்கு  வந்து இருந்தனர்.

 சீடர்களில் ஒருவர்,  ""துறவியாரே!  உங்களுடன்   பல ஆண்டுகள்  பழகும் பேறு பெற்றுள்ளேன்.  நீங்கள்  சோகத்தில்  இருந்து  நான் பார்த்த தேயில்லை. எப்பொழுதும்  மகிழ்ச்சியாகவே  இருக்கிறீர்கள்.  எப்படி  உங்களால்   இப்படி இருக்க முடிகிறது'' என்று கேட்டான். 

அதற்கு, துறவி  சிரித்துக் கொண்டே  ""அதில்  ஒன்றும்  பெரிய ரகசியம் இல்லை. நான்  இளைஞனாக இருந்த போதே  சொர்க்கத்திற்குப் போவதும் நரகத்திற்குப் போவதும்  என் கையில்தான் இருக்கிறது  என்று கண்டுபிடித்தேன். அதனால்  என்னையே  கேள்வி கேட்டுக் கொண்டேன். சொர்க்கம் செல்லவே விரும்புகிறேன் என்று முடிவு  செய்தேன்.  அதற்கு ஏற்ப நல்ல  செயல்களையே செய்தேன்.  நான் எப்போதும்  மகிழ்ச்சியாக இருப்பதற்கு இதுதான்  காரணம்''  என்று  விளக்கினார்.

அ. ராஜா  ரஹ்மான், கம்பம். 


எஸ்.எம்.எஸ்.

பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்டா
 அது "பொண்டாட்டி'!
பதிலே  இல்லாத கேள்வி கேட்டா
அது "குழந்தை'!

 ஆர். ஜனனி  ரமணன், ராசிபுரம். 


அப்படீங்களா!


உலகில் உள்ள மொத்த  சிலந்திகளின் கூட்டமும்  ஒன்றுசேர்ந்து   செயல்பட்டால்  பன்னிரண்டு  மாதத்தில்  மனித  இனத்தையே  அவைகளால் தின்று  தீர்த்துவிட முடியும்  என்று தெரிவித்துள்ளனர். 

சிலந்திகள்  தொடர்பாக  ஆய்வு  மேற்கொண்டுள்ள  விஞ்ஞானிகள் தற்போது வெளியிட்ட  இந்த பகீர்  தகவல்  மனித இனத்திற்கே  சவாலாக  அமைந்துள்ளது.
தற்போது  வரை பெரும்பாலான  சிலந்திகள்  பூச்சிகளையே  உணவாக உட்கொள்ளுகின்றன.  ஆனால் சில காட்டுவகை   சிலந்திகள்  பல்லிகள், பறவைகள்  மற்றும் சிறிய வகை பாலூட்டிகளையும் உணவாக   எடுத்துக் கொள்கின்றன.

சிலந்திகள்  குறித்து  ஆய்வு  மேற்கொண்ட விஞ்ஞானிகள்  வெளியிட்ட தகவலில், உலகில்  உள்ள மொத்த சிலந்தி வகைகளும்  உண்ணும்  உணவின் மொத்த எடையானது, மொத்த மனித இனத்தின்  எடையைவிடவும் அதிகமாகும்.

பூமியில்  உள்ள மொத்த  சிலந்தி  வகைகளும்  ஆண்டுக்கு  சுமார்  440.9இல் இருந்து  881.8 மில்லியன்  டன் உணவு  உட்கொள்கின்றனவாம்.

உலகில் வசிக்கும்  மொத்த  இளைஞர்களின் உடல்  எடையே  316.3  மில்லியன் டன் தான்.  அவ்வாறிருக்க, சிலந்திகள்  ஓராண்டில் எடுத்துக் கொள்ளும் உணவின்  எடை இதைவிட  அதிகம்  என ஆய்வாளர்கள்  குறிப்பிடுகின்றனர். மேலும், ஒட்டு  மொத்த  மனித  இனத்தையே  ஓராண்டில் தின்று முடித்தாலும், உணவின்றி  பல எண்ணிக்கையிலான  சிலந்திகள்  அவதியுறும்  எனவும்  கூறுகின்றனர்.
கே.கே., சென்னை-115.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com