காலை உணவாக தயிர் சாப்பிடலாமா?

நெல்லை சிறிது நனைத்து உலர்த்தி வறுத்து லேசாக இடிக்கத் தட்டையாகி அவலாகிறது. உமி நீக்கிய அவலைத் தயிரில் ஊறவைத்துச் சாப்பிட, செரிமானத்தில் தாமதம் ஏற்படலாம்.
காலை உணவாக தயிர் சாப்பிடலாமா?

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
என் வயது 79. உடல் எடை 51 கிலோ. காலை உணவாக தயிருடன் அவல் சாப்பிடுகிறேன். மதியம் உணவு, மாலையில் காபி, இரவில் சிற்றுண்டியுடன் தயிர் சாதம் சாப்பிடுகிறேன். காலையில் தயிருடன் அவல் சாப்பிடுவது சரியா?
 - ய. குருமூர்த்தி, கதிர மங்கலம்.
 நெல்லை சிறிது நனைத்து உலர்த்தி வறுத்து லேசாக இடிக்கத் தட்டையாகி அவலாகிறது. உமி நீக்கிய அவலைத் தயிரில் ஊறவைத்துச் சாப்பிட, செரிமானத்தில் தாமதம் ஏற்படலாம். அதற்குக் காரணம் அவலும் தயிரும் கனமான உணவுப் பொருட்களாகும். அதைக் காலையில் சாப்பிடும் நீங்கள், அடுத்த மதிய உணவை 12 மணிக்குத் தான் சாப்பிடுவதாகத் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இவற்றிற்கான இடைப்பட்ட நேரம் அதிகமிருப்பதால், தயிர் மற்றும் அவலை நீங்கள் சாப்பிடுவதில் தவறேதுமில்லை. சுமார் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை தயிரில் அவலை ஊறவைத்துச் சாப்பிட்டால், செரிமான கேந்திரங்களுக்கு அதிக உழைப்பைத் தராமல் சற்று எளிதாகச் செரிக்கக் கூடும். அதனால் இவ்விஷயத்தை நீங்கள் நினைவில் கொள்வது நல்லது.
 உடலுக்கு நல்ல வலுவை ஊட்டக் கூடிய காலை உணவைத் தான் நீங்கள் சாப்பிடுகிறீர்கள். சிலருக்குப் பசியின் தன்மை குறைவாக இருக்கும். அவர்கள், காலை உணவாகத் தயிரில் ஊறவைத்த அவலைச் சாப்பிட்டால், நெஞ்சில் கோழையை உருவாக்குவதுடன். குடலில் வாயுவின் சேட்டையையும் அதிகப்படுத்தும். அதனால், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு, அதன் தன்மையை அறிந்த பிறகே, தொடரலாமா அல்லது நிறுத்திவிடலாமா? என்பதைப் பற்றித் தீர்மானிக்க வேண்டும்.
 அவலை வேறு சில வழிகளிலும் பயன்படுத்தி நம் முன்னோர் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொண்டனர். அது பற்றிய சிறிய விவரம் - அவலை, சுத்தமான வெல்லத்துடன் சாப்பிட மலம் சிறுநீர் தடை நீங்கும். உமி நீக்கிய அவலை தயிரில் ஊறவைத்தும் வெல்லத்துடனும் சாப்பிடலாம். குழைய வேகவைத்த அவலைத் தயிருடன் சீதபேதி வயிற்றுக் கடுப்பு நோய்களில் கொடுக்கலாம். சிறு குழந்தைகளுக்கு அவலை வேகவைத்து வடித்த நீரை பேதி, குடல்வலி, சீதபேதி, கடுப்பு முதலியவற்றில் கொடுக்க வேதனை குறையும். களைப்பு நீங்கும். பாலும் நெய்யும் சேர்த்துச் சாப்பிடப் பலம் உண்டாகும். தயிரில் கலந்துண்ண அகோரப்பசி தணியும். மோரில் கரைத்து உண்ண வீக்கமும் எரிவும் விலகும். புளிப்புச்சாறு கலந்துண்ண பித்த நோய் நீங்கும். தனித்துச் சுவைத்துச் சாப்பிட்டு மேல் நீர் பருகக் கூடாது. அதனால் வயிறு வாயுவால் இறுகி வலி ஏற்படும். அரிசி அன்னத்தை விட அவலால் உடல் வலு அதிகம் உண்டாகும்.
 இரவில் சிற்றுண்டியுடன் தயிர் சாதம் சாப்பிடுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
 இரவில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது. அதற்குக் காரணம் - இரவில் முன் பகுதியில் பகலின் வெப்பம் திடீரெனக் குறைந்து இரவில் குளிர்ச்சி தலைகாட்டுவதால் சூட்டால் இளகி நிற்பவை திடீரென இறுக முற்படும். கபக் கசிவுள்ள நுரையீரல் போன்றவற்றில் இந்தத் தடிப்பு தயிரின் சில்லிப்பாலும் தடிப்பாலும் கனமானத் தன்மையாலும் அதிகப்பட்டு சீரணக்குறைவு, மூச்சுத்திணறல் முதலியவற்றை ஏற்படுத்தலாம். குழாய் அடைப்பால் ஏற்படும் சோகை, காமாலை, தோல்நோய், ரத்தக்குழாய்களில் கொதிப்பு முதலியவை தயிரை இரவில் அதிகம் சாப்பிடுவதால் எளிதில் விரிவடைகின்றன.
 தயிரை இரவில் உபயோகிக்க நேரிட்டால், தனித்துத் தயிர் சாப்பிடுவதானால் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். தயிரிலுள்ள தடிப்பு நீங்கத் துவர்ப்புடன் சீரகம், பெருங்காயம், இந்துப்பு சேர்ப்பது நல்லது. தயிர் ஒத்துக் கொள்ளாதவர் கூட இரவில் பயத்தம் பருப்புக் கஞ்சியும், பகலில் சர்க்கரையும் அந்தி வேளை, விடியற்காலை வேளைகளில் நெல்லிக்காய், உப்பு, சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.
 குளிர்ந்த தேசம், குளிர்ந்த காலம், இவைகளில் புளித்த தயிர் நல்லதல்ல. பொதுவாகக் குளிர் மிகுந்த சூழ்நிலைகளில் தயிர் சீக்கிரம் புளிப்பதில்லை. கடுங்கோடையிலும், சூடான பகுதிகளிலும் பகலிலும் தயிர் சீக்கிரம் புளித்து விடும். புளித்த தயிர், ஊறுகாய்கள் தயாரிக்க, மோர் குழம்பு , மோர் கூட்டு போன்ற புளி உதவியின்றி தயாரிக்கப் பெறும் உணவுத் துணைகளுக்கு ஏற்றது.
 இரவில் திரிபலா மாத்திரை இரண்டு சாப்பிட்டும் மலச்சிக்கல் நீங்கவில்லை என்று கூறிப்பிட்டுள்ளீர்கள். குடலில் வழுவழுப்புத் தன்மை வாயுவினுடைய சீற்றத்தினால் வயோதிகத்தில் பாதிக்கப்படும் என்பதால் மலை வாழைப்பழத்தை ஒன்றிரண்டு சிறிது உருக்கிய நெய்யுடனோ அல்லது சிறிது விளக்கெண்ணெய்யுடனோ தோய்த்து இரவு உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாக சாப்பிடுவதால் உங்களுடைய குடல் வழுவழுப்படைந்து மலச்சிக்கல் பிரச்சனைத் தீர வாய்பிருக்கிறது.
 (தொடரும்)
 பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
 நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
 செல் : 94444 41771
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com