பனிக்கால பாதுகாப்பு!
By DIN | Published On : 28th January 2019 11:25 AM | Last Updated : 28th January 2019 11:25 AM | அ+அ அ- |

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
எனக்குப் பனி வாடை காரணமாக தசைப்பிடிப்பு, முழங்கால் மூட்டுப்பிடிப்பு, இடுப்பு கழுத்து விலாபிடிப்பு, தசை இறுக்கம், தோல் வெடிப்பு (விரல் நுனி) ஏற்பட்டு அவதிப்படுகிறேன். இது எதனால்? எப்படி குணப்படுத்துவது?
-வரலக்ஷ்மி, ஓசூர்.
சார்ங்கதரர் என்ற வைத்தியத் தொகுப்பு நூலாசிரியர், "கார்த்திகையின் கடைசி எட்டு நாட்களும் மார்கழியின் முதல் எட்டு நாட்களும் யமனின் தெற்றிப் பற்கள்' என்று குறிப்பிடுகிறார். இதில் மிதமான உணவை ஏற்பவன் வாழ்வான் என்பதே இதன் பொருள். "யமனின் பிடியில் அகப்படாதிருக்க உணவை மிதமாகக் கொள்க' என்றும் குறிப்பிடுகிறார்.
மழை நின்றதும் மாறி வந்துள்ள பனி இவ்வாண்டு தமிழகத்தில் மிகக் கடுமையாக இருக்கிறது. பருவமாற்றத்திற்கேற்ப செரிமான இயந்திரங்கள் தம்மைச் சீரமைத்துக் கொள்ள சிறிது இடைவேளை தேவை. அப்போது இரைப்பையிலும் குடலிலும் அழற்சி ஏற்படாமல், அடைசல் ஏற்படாமல் பாதுகாப்பது முக்கியம். இந்தப் பாதுகாப்பை மார்கழியைப் பின் தொடரும் தை மாதத்திலும் கடைப்பிடிப்பது அவசியமாகிறது.
புதுநெல் சாகுபடியாகி கைக்கு வரும் நாட்கள். அதையே உணவாக்க, அது குடலில் அழற்சிதரும். பனிவாடை காரணமாக, நீங்கள் குறிப்பிடுவது போல, தசை இறுக்கமும், மூட்டுகளில் பிடிப்பும், தோல் வெடிப்பும் ஏற்படுகின்றன. இஷ்டப்படி தசைகளை இயக்க முடியாதபடி ஒருபிடிப்பும் இறுக்கமும் இந்த மாதத்தின் கோளாறு. உள்ளுறுப்புகளிலும் வெளியுறுப்புகளிலும் ஏற்படும் மந்தமான இயக்கத்தைப் போக்க, சுறுசுறுப்பை ஊட்ட, மூட்டுகளுக்குத் தேவையான சூட்டையும் நெகிழ்வையும் தர உணவு, உடை, நடைமுறைகளைச் சீரமைப்பது அவசியம்.
இரவில் பயன்படுத்தும் கம்பளிப்போர்வை, பனியால் ஏற்படும் தோல்வறட்சி இவை உடலின் உட்சூட்டை அதிகப்படுத்தும். ஜீரண கோசத்தில் இந்தச் சூடு சூழ்ந்து பசியை அதிகமாகத் தூண்டும். ஆனால் தசை இயக்கம் மந்தமாவதால் ஜீரணப்பணி தாமதமாகும். இப்படி எதிரிடையான இரு இயக்கங்கள் ஜீரணப் பைகளுக்கு அழற்சியை ஏற்படுத்தக் காரணமாகலாம். ஆகவே எளிதில் ஜீரணிக்கும் உணவை மிதமாகக் காலமறிந்து உட்கொள்வதில் கவனம் தேவை. கிழங்கு, அதிகம் எண்ணெய் கலந்த உணவுப்பண்டம், கனமான உணவு இவற்றை மிகக் குறைந்த அளவில் கொள்வதே மிக நல்லது.
குளிரால் ஏற்பட்ட தசைகளின் இறுக்கத்தைத் தளர்த்த வெந்நீரில் குளிப்பதே சிறந்தது. நமக்குப் பிடிக்கும் - ஆனால் ஒத்துக் கொள்ளாதது என்று சில உண்டு. அந்த வரிசையில் ஒன்று - பனிக்காலத்தின் வெயில். அதிலும் காலை இளம் வெயிலில் காய்வது இதமாயிருப்பதாகத் தோன்றும் ஆனால், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் - தலையில் பித்தவேகம் ஏறி நெற்றியில் முணுமுணுக்கும் தலைவலி, பின்மண்டையில் இறுக்கம், தலைக்கனம், தோல்வறட்சி, அரிப்பு, சொரி, சிரங்கு, உணவில் வெறுப்பு, உட்குளிர் என்ற வரிசை. சூடுதேவையாயின் கம்பளி போன்ற கதகதப்பான உடையும் கணப்பும் தான் உதவும்.
ஈரக்கசிவற்ற அழுக்கற்ற படுக்கை, வீட்டினுள் வெறுங்கால்களுடன் நடப்பதைத் தவிர்த்து, வீட்டினுள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய எளிய காலணி, சுக்குத் தட்டிப்போட்டுக் காய்ச்சிய வெந்நீரை மட்டுமே குடிக்கப் பயன் படுத்துதல், உணவில் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளை சீராகச் சேர்த்தல், கடுகுத்தூளையும் அரிசி மாவையும் கலந்து தண்ணீர் விட்டுத் தளர்த்திச் சூடாக்கி, தசை இறுக்கம், பிடிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் சிறிது நேரம் பூசி வைத்திருத்தல், தோல் வெடிப்புகளில், தேங்காயை மிக்ஸியில் அரைத்துப் பிழிந்து வரும் பாலைப் பூசுதல் போன்ற எளிய கைவைத்திய முறைகளால், உங்களுடைய உபாதைகளைக் குணப்படுத்திக் கொள்ளலாம். ஆயுர்வேத மருத்துவமனைகளில் செய்யப்படும் "தைலதாரா' எனும் எண்ணெய் ஊற்றுதல் முறையும், "நாடீஸ்வேதம்' எனும் மூலிகை நீராவிக் குளியலும் தை மாதத்திற்கான சிறந்த சிகிச்சை முறைகளாகும்.
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
(தொடரும்)