Enable Javscript for better performance
வித்தியாசமான பூங்கா!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    வித்தியாசமான பூங்கா!

    By   |   Published On : 28th January 2019 11:13 AM  |   Last Updated : 28th January 2019 11:13 AM  |  அ+அ அ-  |  

    SWING_MERRY-GO-ROUND_MUSICALTOY

    எந்த ஒரு பூங்காவிற்கு செல்லும் போது என்ன பார்க்கிறோம்? குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள். ஊஞ்சல் விளையாடுவார்கள். சறுக்குப் பலகையில் சறுக்கி மகிழ்வார்கள். ஏணிகளில் ஏறி இறங்குவார்கள். அதே சமயம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் யாருமே அந்தப் பொதுப் பூங்காவில் இருக்க மாட்டார்கள். கண்களில் படமாட்டார்கள். காரணம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் விளையாடும் அல்லது பொழுது போக்க வசதிகள் அந்தப் பூங்காக்களில் இருக்காது. பிறகெப்படி மாற்றுத் திறனாளி குழந்தைகள் பூங்காவிற்கு கொண்டு வரப்படுவார்கள்? அப்படியே இருந்தாலும் சக்கர நாற்காலியில் இருக்கும் குழந்தைகள், பார்வை, கேட்கும் குறைபாடு உள்ள குழந்தைகள் விளையாடும் வகையில் பூங்காவின் வடிவமைப்பும் சரி... வசதிகளும் பொருத்தமாக அமைந்திருப்பதில்லை. அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் கருத்தில் கொண்டு அவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு பூங்காவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
     சென்னை மாநகராட்சி இந்த திட்டத்திற்காக ஒன்றரைக் கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. "கிலிகிலி' அமைப்பைச் சேர்ந்த கவிதா கிருஷ்ணமூர்த்தி, "சிட்டி வொர்க்ஸ்' என்ற கட்டடக்கலை நிறுவனத்துடன் இணைந்து இந்த பூங்காவை உருவாக்கியுள்ளார். சென்னை சாந்தோமின் 4-வது ட்ரஸ்ட் லிங்க் சாலையில் சுமார் 1,529 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த சிறப்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவின் சிறப்பம்சம் கண்ணைக் கவரும் பிரகாசமான வண்ணக் கலவைகளுடன் குழந்தைகள் தொட்டு உணரும்படியான சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களை பார்த்ததும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அந்த ஓவியங்களைத் தொட முயலும். குழந்தைகள் தொட்டு உணர வேண்டும் என்பதற்காக சிப்பிகள், வளையல்கள், டயர்கள், சைக்கிள் சக்கரங்கள் சுவர்களில் பொருத்தப்பட்டுள்ளன. கான்கிரீட், மரம், நார், கூழாங்கற்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடக்க இயலாத, சக்கர நாற்காலியில் அமர்ந்து செல்லும் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏதுவான ஊஞ்சல்களை மறக்காமல் செய்து வைத்துள்ளார்கள். எல்லா வகை மாற்றுத் திறனாளி குழந்தைகள் அமர்ந்து சுற்ற பொருத்தமான ராட்டினமும் பூங்காவில் உண்டு.
     இந்த "மாதிரி பூங்கா' குறித்து "கிலிகிலி' அமைப்பைச் சேர்ந்த கவிதா கூறுவது:
     ""பூங்கா குழந்தைகளுக்குத் தேவையான ஒன்று. அதுபோல மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் அவர்களுக்குப் பொருத்தமான பூங்காக்கள் தேவை. இந்த பூங்காவைத் திட்டமிடும்முன், குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பிசியோதெரபிஸ்டுகள், மாற்றுத்திறனாளிகள் துறையைச் சேர்ந்தவர்கள் பலரிடம் பலமுறை கலந்து ஆலோசித்தோம். அவர்கள் சொல்லும் தகவல்கள், யோசனைகளைக் குறித்துக் கொண்டோம். அவற்றின் அடிப்படையில் இந்தப் பூங்காவினை வடிவமைத்திருக்கிறோம். பூங்காவில் ஓடி விளையாடும் குழந்தை தப்பித் தவறி கீழே விழுந்தாலும் காயம் பெரிதாக ஏற்படாத வகையில் தரையை அமைத்திருக்கிறோம்.
     "கவனக் குறைவு குறைபாடு' உள்ள குழந்தைகள் சறுக்கி விளையாட பொருத்தமான சறுக்குப் பலகையை உருவாக்கியிருக்கிறோம். "பூங்காவில் மாற்றுத் திறனாளிகளையும், அவர்கள் அழைத்து வரும் பெற்றோர்களையும் அதிசயிக்க வைக்கும் விதத்தில் கைகளை ஈரமாக்கி தேய்த்தால் அதிர்வை உண்டாக்கும் விதத்தில் கல் ஒன்றினை பொருத்தியிருக்கிறோம். ஆரோவில்லைச் சேர்ந்த சிறுவர்கள் இணைந்து உருவாக்கிய கல் இது. யாராவது கடந்து செல்லும் போது அல்லது காற்று வீசும் போது இசையை வெளிப்படுத்தும் பொம்மைகளை பூங்காவில் நிறுத்தியுள்ளோம்'' என்கிறார் கவிதா.
     இந்தியாவில் மிகப் பெரிய நகரங்களான டில்லி, கொல்கத்தா, மும்பை நகரங்களில் கூட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான பூங்கா இல்லை. பெங்களூருவில் மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கென்று செயல்படும் மூன்று பூங்காக்கள் உள்ளன. மங்களூரு, நாக்பூரிலும் தலா ஒரு பூங்கா இருக்கிறது. இந்த பட்டியலில் இப்போது சென்னையும் இடம் பிடித்திருக்கிறது.
     -சுதந்திரன்
     
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp