44 ஆண்டு கால கனவு: சாதனை வீரர்கள்!

44 ஆண்டு கால கனவு: சாதனை வீரர்கள்!

2019 ஒருநாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.

2019 ஒருநாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.
 லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்களைச் சேர்த்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 15 ரன்களைச் சேர்த்தது. பின்னர் விளையாடிய நியூஸிலாந்தும் 15 ரன்களே எடுத்ததால், சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதையடுத்து, இந்த ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் அதிகமாக விளாசியதன் அடிப்படையில் இங்கிலாந்து வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
 12-ஆவது ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இதில் ரவுண்ட் ராபின் முறையில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடத்தப்பட்டன.
 முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் பலம் வாய்ந்த இந்தியாவை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது. இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
 இறுதிச் சுற்றில் இரு அணிகளும் 241 ரன்களைக் குவித்ததால் ஆட்டம் சமனில் முடிவடைந்தது. பின்னர் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டு அதிலும் இரு அணிகளும் தலா 15 ரன்களைக் குவித்தன. சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால், அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
 44 ஆண்டு கால கனவு:
 இந்த வெற்றி மூலம் 1975 -இல் தொடங்கிய உலகக் கோப்பை சாம்பியன் பட்ட கனவு 44 ஆண்டுகள் கழித்து நனவாகியது. இதனால் இங்கிலாந்து மக்கள் வெற்றி மகிழ்ச்சியில் திளைத்தனர்.
 முக்கிய பங்கு வகித்த வெளிநாட்டு வீரர்கள்:
 இங்கிலாந்தில் பல்வேறு வெளிநாட்டு மக்கள் குடியேறி வசித்து வருகின்றனர். அதன் ஒருநாள் அணியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சிறப்பாக ஆடி, இந்த உலகக் கோப்பை வெல்ல பெரும் காரணமாக இருந்தனர்.
 கேப்டன் இயான் மோர்கன் (32):
 கடந்த 2015 உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றோடு வெளியேற்றப்பட்டது இங்கிலாந்து. அதன் பின் கடந்த 4 ஆண்டுகள் ஒருநாள் ஆட்டத்துக்கு மட்டுமே மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டு அணி கட்டமைக்கப்பட்டது. அதிரடி வீரரான இயான் மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் உலகின் நம்பர் ஒன் ஒருநாள் அணியாக மாறியது இங்கிலாந்து.
 அயர்லாந்தைச் சேர்ந்தவரான மோர்கன் டப்ளினில் பிறந்தவர். முதலில் அந்த அணிக்காகவே ஆடினார். பின்னர் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்து, அதிலும் இடம் பெற்றார். 2 நாடுகளின் அணியில் ஆடிய 4-ஆவது வீரர் என்ற பெருமை இவர் வசம் உள்ளது. 21 வயதில் 2007 உலகக் கோப்பையில் அயர்லாந்து அணிக்காக ஆடினார். 2011 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியில் இடம் பெற்றார்.
 மொத்தம் 232 ஆட்டங்களில் மொத்தம் 7348 ரன்களை விளாசியுள்ளார். இதில் 13 சதங்கள், 46 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சம் 148 ஆகும்.
 பென் ஸ்டோக்ஸ் (28):
 இறுதி ஆட்டத்தில் 84 ரன்கள் விளாசி இங்கிலாந்து கோப்பை வெல்ல முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். பல்வேறு முக்கிய தருணங்களில் வெற்றிக்கு வித்திட்டவர். எனினும் 2016 டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் மே.இ.தீவுகளுக்கு எதிராக கடைசி ஓவர் வீசிய ஸ்டோக்ஸ் அதில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை வாரி வழங்கினார். அதில் மே.இ.தீவுகள் உலகக் கோப்பையை வென்றது.
 இதனால் அதிகம் விமர்சிக்கப்பட்டார் பென் ஸ்டோக்ஸ். ஆனால் ஒருநாள் உலகக் கோப்பையில் அபாரமாக ஆடி தனது அணியை பட்டம் வெல்லச் செய்தார்.
 இவரும் இங்கிலாந்தில் பிறந்தவரல்ல. நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் பிறந்தவர். 12 வயதில் குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடியேறினார். ஸ்டோக்ஸின் தந்தை நியூஸிலாந்து ரக்பி அணியிலும், தாயார் கிரிக்கெட் அணியிலும் விளையாடினர். அதே நேரத்தில் 2011 முதல் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார் ஸ்டோக்ஸ்.
 ஐபிஎல் போட்டியிலும் ஆடி வரும் அவர், கடந்த 2017 சீசனில் புணே அணியில் அதிக தொகையாக ரூ.14.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
 இறுதி ஆட்டத்தில் அவரது ஆட்டத்திறமை பாராட்டிய கேப்டன் மோர்கன், மனித சக்திக்கு அப்பாற்பட்டவர் ஸ்டோக்ஸ் என பாராட்டினார். 11 ஆட்டங்களில் 5 அரைசதங்களுடன் மொத்தம் 465 ரன்களை குவித்துள்ளார் ஸ்டோக்ஸ்.
 ஜோப்ரா ஆர்ச்சர் (24):
 மே.இ.தீவுகளின் பார்படோஸ் நகரில் கடந்த 1995-இல் பிறந்தவர் ஜோப்ரா ஆர்ச்சர். தந்தை இங்கிலாந்து நாட்டவர், தாயார் மே.இ.தீவுகளைச் சேர்ந்தவர். இளம் வயதில் மே.இ.தீவுகளின் ஜூனியர் அணியில் ஆடி வந்தார் ஆர்ச்சர். பின்னர் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்த அவர், தேசிய அணியில் இடம் பெற முயற்சித்தார். 7 ஆண்டுகள் இங்கிலாந்தில் வசித்திருக்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால் ஆர்ச்சருக்காக அந்த விதியை 3 ஆண்டுகளாக தளர்த்தியது இசிபி. வாரியத்தின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் 3 மாதங்களுக்கு முன்பு தான் அணியில் சேர்க்கப்பட்டார்.
 எதிரணிகளை நிலைகுலையச் செய்யும் வகையில் அதிக வேகமாக பந்துவீசுவதில் வல்லவர். இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 21 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் அவர். மொத்தம் 14 ஒருநாள் ஆட்டங்களில் 23 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் ஆர்ச்சர்.
 சமயங்களில் ஆல் ரவுண்டர் பணியையும் திறம்பட செய்கிறார் ஆர்ச்சர்.
 ஜேஸன் ராய் (28):
 இங்கிலாந்து அணியில் அதிரடி தொடக்க வீரராகத் திகழ்பவர் ஜேஸன் ராய். இவரும் இங்கிலாந்தில் பிறந்தவர் அல்ல.
 தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் 1990-இல் பிறந்தவர். 10 வயதாகும் போது, ராயின் குடும்பம் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தது. தொடர்ந்து அங்கேயே தங்கி விட்ட ஜேஸன் ராய், கவுண்டி போட்டிகளில் சிறப்பாக ஆடி அதன் மூலம் இங்கிலாந்து அணியில் இடம் பெற்றார். 2015-இல் அயர்லாந்துக்கு எதிராக ஒருநாள் ஆட்டத்தில் இடம் பெற்றார். இதுவரை 83 ஆட்டங்களில் மொத்தம் 3381 ரன்களைச் சேர்த்துள்ள ராய், 9 சதங்கள், 18 அரைசதங்களையும் அடித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 180 ஆகும்.
 இந்த உலகக் கோப்பையில் பேர்ஸ்டோவுடன் இணைந்து அதிக முறை 100 ரன்களுக்கு மேல் இணையாக பெற்றுத் தந்தவர். மேலும் 8 ஆட்டங்களில் 1 சதம், 4 அரைசதத்துடன் 443 ரன்களைச் சேர்த்துள்ளார்.
 டாம் கர்ரன் (24):
 தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் 1995-இல் பிறந்தவர் டாம் கர்ரன் . முன்னாள் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரரான கெவின் கர்ரனின் மகன் டாம். இவரது சகோதரர்கள் சாம், பென்னும் கிரிக்கெட் வீரர்கள் ஆவர்.
 ஆல் ரவுண்டரான டாம் கடந்த 2017-இல் மே.இ.தீவுகளுக்கு எதிராக ஒருநாள் ஆட்டங்களில் அறிமுகமானார். 17 ஒருநாள் ஆட்டங்களில் மொத்தம் 178 ரன்களையும், பந்துவீச்சில் விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு 5/35 ஆகும்.
 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்றாலும் ஓர் ஆட்டத்தில் கூட களமிறக்கப்படவில்லை டாம்.
 மொயின் அலி, ஆதில் ரஷீத் கான் உள்ளிட்ட இருவரும் இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்தாலும், அவர்கள் இருவரும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இருவரது தந்தையரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். மொயின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியும் 75 ரன்களையும் சேர்த்தார். அதே நேரத்தில் ஆதில் ரஷீத் 10 ஆட்டங்களில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
 இங்கிலாந்தில் குடியேறி சிறப்பாக ஆடி அதன் 44 ஆண்டுகள் கனவை நனவாக்கியதில் மேற்கண்ட வெளிநாட்டு வீரர்களுக்கும் அபார பங்குள்ளது.
 சுர்ஜித்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com