கண்தானத்தில் 5

தானத்தில் சிறந்தது கண் தானம் எனக்கூறலாம். இந்தியாவில் கண்தானம் செய்வதில் குஜராத் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாமிடத்திலும் உள்ளது. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது
கண்தானத்தில் 5

உலக சாதனை விருது!
 தானத்தில் சிறந்தது கண் தானம் எனக்கூறலாம். இந்தியாவில் கண்தானம் செய்வதில் குஜராத் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாமிடத்திலும் உள்ளது. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. சிவகாசி தொழில் நகர் அரிமா சங்கத்தின் பட்டயத்தலைவரும், விருதுநகர் மாவட்ட கண்தானத் தலைவருமான ஜெ.கணேஷ் கண்தானத்தில் 5 உலக சாதனை விருதுபெற்றுள்ளார். அவரிடம் பேசியதிலிருந்து...
 ""நான் அரிமா சங்கத்தில் 1996 -ஆம்ஆண்டு உறுப்பினராகச் சேர்ந்தேன். பொதுவாக இது போன்ற சங்கங்கள் மக்களுக்கு பல சேவைகளைச் செய்து வருகின்றன. ஆனால் நான் ஏதாவது வித்தியாசமாக மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 2006-ஆம் ஆண்டு முதல் சங்கம் மூலம் கண்தான விழிப்புணர்வு முகாம்களை நடத்தத் தொடங்கினேன். 2008 -ஆம் ஆண்டு முதல் கல்லூரி வளாகத்தினுள் சென்று கண்தான விழிப்புணர்வு முகாம்களை நடத்தினேன். இதுவரை தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி என 1,134 பள்ளி மற்றும் கல்லூரிகளில் கண்தான விழிப்புணர்வு முகாம்களை நடத்தி இருக்கிறேன்.
 இதன்மூலம் இதுவரை 4,027 ஜோடி கண்களைத் தானமாகப் பெற்றுள்ளேன். தமிழகத்தில் காரைக்குடியில் கல்லூரியில் விழிப்புணர்வு முகாம் நடத்தினேன். அதன் பிறகு அங்குள்ள மாணவர்கள், என்னுடைய செல்பேசியில் தொடர்பு கொண்டு, "ஒருவர் இறந்துவிட்டார். அவரது கண்களை தானமாக வழங்க குடும்பத்தார் விருப்பப்படுகிறார்கள்' எனத் தகவல் அளிப்பார்கள். நான் உடனடியாக அருகில் உள்ள கண் மருத்துவமனைக்குத் தெரிவிப்பேன். அங்குள்ள மருத்துவர்கள் சென்று கண்களைத் தானமாகப் பெற்று வருவார்கள். இப்படி, தமிழகம் முழுவதும் உள்ள கண்மருத்துவமனைகளிடம் தொடர்பு கொண்டு அந்தந்தப் பகுதியில் கண்தானத்தைப் பெற்று வருகிறேன். ஒருவர் இறந்து விட்டால் 6 மணி நேரத்திற்குள் கண்களைத் தானமாகப் பெற வேண்டும். கண்களைத் தானமாக பெற்ற பின்னர் அவற்றை சுமார் இரண்டு மணி நேரத்திற்குள் கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
 தொடக்க காலத்தில் ஒரு ஜோடிகண்களை இருவருக்கு மட்டுமே பொருத்த இயலும். தற்போது உள்ள புதிய தொழில் நுட்ப வளர்ச்சியால் ஒரு ஜோடி கண்களை நான்கு பேருக்கு பொருத்தலாம்.திருக்குறளைப் போல இரண்டு அடிகளில் 1,330 கண்தான விழிப்பு வாசகங்கள் அமைத்து, கண்தான விழிப்புணர்வு முழக்கங்கள் என்ற பெயரில் புத்தகம் வெளியிட்டு, அதனைத் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளின் நூலகத்திற்கும் அனுப்பியுள்ளேன். திரைப்பட நடிகர்கள், நடிகைகள் கண்தான விழிப்புணர்வு குறித்து பேசியதை குறுந்தகடாக வெளியிட்டுள்ளேன். கண்தான விழிப்புணர்வு முகாம் நிறைவில், கண்நலன் காப்போம் மற்றும் கண்தானம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்குவேன்.

கண்களைப் பாதுகாக்க, நல்ல வெளிச்சத்தில் அமர்ந்து டி.வி பார்க்க வேண்டும். கணினியில் வேலை செய்யும்போது குறைந்த பட்சம் 50 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும். இந்தியாவில் சுமார் 3.60 கோடி பேர் கண்பார்வையற்றவர்களாக உள்ளார்கள். கண்ணாடி அணிந்தவர்கள், கண்புரை நோய் உள்ளவர்கள், இரத்த அழுத்த நேயாளிகள், ஆஸ்துமா மற்றும் நீரழிவு உள்ளவர்களும் கண்களைத் தானமாக வழங்கலாம்'' என்றார் கணேஷ்.
 இவர் தமிழக முன்னாள் ஆளுநர் ரோசையாவிடம் "பசுமை இந்தியா' என்ற தங்கப்பதக்கம் மற்றும் 233 விருதுகளும் பெற்றுள்ளார். பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு 6 டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன.
 5 முறை உலக சாதனை விருது பெற்றுள்ளார். அனைவரும் கண்தானத்தில் முனைப்புடன் செயல்பட்டு, பார்வையற்றவர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்க பாடுபட வேண்டும்.
 - ச.பாலசுந்தரராஜ்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com